31.3.05

தமிழனின் பறப்பு முயற்சிகள்

யாழ்ப்பாணத்தில் நவாலி வட்டுக்கோட்டை இணையுமிடத்தில் களையோடை அம்மன் கோவில் என்கிற ஒரு சின்ன அம்மன் கோவில் இருக்கிறது. எனது ஊரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் அந்த அம்மன் கோவிலைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் எனது கண் அங்கே அந்தக் கோவில் வளாகத்தில் நின்ற ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய ரக விமானத்தை நோக்கும்.

ஆம். அது பறப்பதற்கு முயற்சி செய்து பலன் தராது விட்ட ஒரு சிறிய விமானம்.

85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்களாம்.

யாழ்ப்பாணத்தையும் வலிகாமம் மேற்கையும் இணைக்கும் கல்லுண்டாய் வெளி ஒரு நீள் வீதி. அதிகம் பாவனைக்குள்ளாகாத அந்த வீதி ஒரு விமான ஓடுபாதைக்கு உரிய ஆகக் குறைந்த தகுதிகளை கொண்டிருந்தது. வெளிநாட்டு வீதிகளில் சோறு போட்டு சாப்பிடலாம் என்றால், சோறும் போட்டு சொதியும் விட்டு சாப்பிடக் கூடியதான (அவ்வளவு குழிகள்) யாழ்ப்பாண வீதிகளில் கல்லுண்டாய் வீதி ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

அந்த வீதியினை நம்பித் தானாம் விமானங்கள் கட்டப்பட்டன.

அவ்வகையான விமானங்கள் இரண்டடியோ நாலடியோ மேலெழுந்ததோடு தங்கள் பணியை முடித்துக் கொண்டு விட்டன. பிறகு களையோடை அம்மன் கோவில் போன்ற இடங்களில் ஏதாவது மரத்தில் பறந்து கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட சாத்தியமாகாத விடயமாகவே அது அனைவர் மனதிலும் தங்கி விட்டது.

94 என்று நினைக்கின்றேன். கோண்டாவில் பகுதி ஒன்றில் புலிகள் முகாமில் ஹெலிகொப்ரர் ஒன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாதாரண பொதுமக்கள் அறியக் கூடியதாக அதன் கட்டமைப்புக்கள் நடந்தன. அது என்ன, எதற்கு என அறிந்து கொள்ளாமலே புலிகள் விமானம் செய்கிறார்கள் செய்தி உலவத்தொடங்கி சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

அது புலிகள் பலாலி இராணுவ தளத்தில் உள்நுழைந்து ஹெலிகொப்ரர் ஒன்றை அழித்த தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாக சொன்னார்கள்.

மீண்டும் 98 இல் இந்தக் கதை சூடு பிடிக்க தொடங்கியது. இலங்கை இராணுவம் தன் ரேடாரில் தெரிகிறது, சத்தம் கேட்கிறது என கதையைக் கிளப்பியது.

முத்தாய்ப்பாக 98 மாவீரர் தினத்தில் புலிகள் தம்மிடமுள்ள விமானப் படை குறித்து பிரகடனம் செய்தனர். மாவீரர் துயிலும் இல்லமொன்றில் விமானம் ஒன்று மலர் தூவியதாக கொழும்பில் அப்போதைய தினமுரசு செய்தி வெளியிட்டது.

வானமேறினான் தமிழன் என்ற கருத்துப்பட புதுவை இரத்தினதுரையின் ஒரு பெருமிதக் கவியை வாசித்த நினைவும் இருக்கிறது.

அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் அப்போதே அரசு செய்யத்தொடங்கி விட்டது. அரச மையங்கள் மீது விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. 98 இலேயே அது பற்றி அறிந்து கொண்டு அதற்கான ஆயத்தங்களையும் செய்து விட்டு மீண்டும் இப்போது 2005 இல் இலங்கை அரசு புலிகளின் விமானங்கள் குறித்து கத்துவதற்கான காரணம் வெளிநாடுகளிடம் புலிகளை போட்டுக் கொடுக்கவும் சிங்கள மக்களுக்கு புலிகள் தொடர்பாய் அச்ச உணர்வை ஏற்படுத்தவுமே..

எங்களிடம் விமானப் படை இருப்பது பழைய விடயம் தான் என புலிகளும் கேட்பவர் அனைவருக்கும் சொல்லி வருகிறார்கள்.

98 இல் மாவீரர் தினத்தின் போது விமானப் பிரசன்னத்தை நேரில் பார்த்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் அப்போது சந்தோச மேகங்கள் தலை தடவிப் போனதாம்.

கல்லுண்டாய் வெளியில் ஓடித் திரிந்து எவ்வளவு முயன்றும் மேலேற முடியாமல் போன பறப்பு முயற்சிகள் தொடர்பாக சில தகவல்களும் படங்களும் பதியும் எண்ணமிருக்கிறது.

இப்போது எந்தக் காரணமும் அற்று இந்த தலைப்புக்கு பொருத்தமாய்..(ஒரு தமிழனின் பறப்பு முயற்சிகள்) ஒரு படம் போடப் போறன்.

இதிலை பறக்கிறதுக்கு முயற்சி செய்யிறது நான் தான்.

Image hosted by Photobucket.com

30.3.05

ஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்

படிப்பு முடிஞ்சோ அல்லது வேலை முடிஞ்சோ வரேக்கை Tram எடுத்துத் தான் வாறனான். Tram நிறுத்தத்திலை ஒரு ஐஞ்சு பத்து நிமிசம் நிக்க வேண்டியிருக்கும். அந்த நிறுத்தத்துக்கு பக்கத்திலை ஒரு வட இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு.

இங்கை என்ரை இடத்திலை இலங்கைத் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் குறைவு. இல்லையெண்டே சொல்லலாம். வியட்னாம், சீன கடைகள் தான் கூட. அதுவும் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் நான் ஒஸ்ரேலியால இருக்கிறனோ இல்லாட்டி சீனாவில இருக்கிறனோ எண்டு சந்தேகமா இருக்கும்.

எனக்கு கொஞ்சம் எண்டாலும் தெரிஞ்ச, அறிஞ்ச சாப்பாடு ஏதும் வேணுமெண்டா இப்பிடியான இந்திய சாப்பாட்டு கடையளுக்குத் தான் போறனான். (எனக்கு சப்பாத்தி, பூரி எண்டால் நல்லா பிடிக்கும்.) அதுவும் நல்ல உறைப்புச் சாப்பாட்டுக்கு இந்திய கடைகளுக்குத் தான் போகவேணும். (எங்களுக்கு உறைப்பு இல்லாட்டி நாக்கு செத்துப் போயிடுமே!)

அப்ப, இப்பிடி Tram இற்கு நிக்கிற நேரம் பக்கத்திலை இருக்கிற அந்த இந்தியக் கடைக்கு போய் ஏதாவது இனிப்பு வகைகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நிப்பன். (கள்ளத்தீனி, நொறுக்குத் தீனி) மைசூர் பாகில இருந்து பெயர் தெரியாத எல்லா இனிப்பையும் நாளுக்கு ஒன்றாய் வாங்குவன்.

எந்த இனிப்பெண்டாலும் ஒரு துண்டு, ஒரு டொலர் அங்கை.

முதல் நாள் ஒரு டொலரைக் குடுத்து ஒரு இனிப்பைக் கேட்டன். அங்கை நிண்ட கடைக்காரர் 3 இனிப்பைத் தூக்கி தந்தார். நான் நினைச்சன் மனிசன் மாறித் தருகுதாக்கும் எண்டு நினைச்சக்கொண்டு நான் ஒரு டொலர் தான் தந்தன் எண்டு சொன்னன். அதுக்கு அவர் பரவாயில்லை.. இருக்கட்டும் எண்டு சொன்னார்.
நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மீள் பதிவு
சரியெண்டு வாங்கி கொண்டு வந்திட்டன். (ஒரு வேளை பழுதாப்போயிருக்குமோ எண்டும் நினைச்சன். ஆனால் நல்லாத்தான் இருந்தது.)

உப்பிடி நிறைய நாள் நடந்திட்டுது. நேற்று ஜிலேபி வாங்க ஒரு டொலர் குடுத்தன்.( ஜலேபியை இலங்கையில தேன் குழல் எண்டுறவை.) அவர் ரண்டைத் தூக்கி தந்தார்.

நானும் சிரிச்சுக் கொண்டே நன்றியைச் சொல்லிப்போட்டு தொடர்ந்து இப்படித்தான் ஒண்டு கேட்டால் ரண்டு மூண்டு தாறியள் எண்டு சொன்னன்.
அவரும் சிரிச்சுக் கொண்டு நீங்களும் எங்கடை நாடு தானே.. அது தான், எண்டார்.

ஓஹோ இது தான் விசயமா எண்டு நினைச்சக்கொண்டு வந்து ட்ராமில் ஏறி வாற வழியெல்லாம் யோசிச்சுக் கொண்டு வந்தன்.

சும்மாவே எனக்கு முதலில அறிமுகமாகிற சிங்களப் பெடியள் எந்த இடம் எண்டு கேட்டால் யாப்பாணே என்றோ Jaffna என்றோ சொல்லாமால் வீம்புக்கு யாழ்ப்பாணம் எண்டு அறுத்துறுத்து சொல்லுறனான்.

இப்பிடியிருக்க நேற்று அந்தக் கடைக்காரர் நீங்களும் இந்தியர் தானே என்ற கருத்துப்பட சொன்ன போது, இல்லை நான் சிறீலங்கன் என ஏன் நான் சொல்ல வில்லை? ஏன் நான் சிறீலங்கன் எண்ட தேசியம் எனக்குள் விழித்துக் கொள்ளவில்லை?

இதிலென்ன சந்தேகம்... எல்லாம் அந்த ஒரு டொலர் ஜிலேபிக்காகத் தான் என்று இலகுவாக சொல்லிவிட்டு போனாலும் வேறும் ஏதாவது இருக்கக்கூடும்!

27.3.05

கிட்டண்ணை பூங்காவும் நானும்

என்னை உங்கள் எல்லாருக்கும் காட்டுறதுக்காக ஒரு படம் ஒண்டு போட்டன் தானே! அதிலை ஈழநாதன் நல்லூர் கிட்டு பூங்காவில பாத்த மாதிரி கிடக்கு எண்டு ஒரு பின்னூட்டம் விட அதை வாசிக்க எனக்கு மனசெல்லாம் பின்னுக்குப் போட்டுது.

95 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில வலிகாமம் மேற்கு பக்கமா இலங்கைத் தேசிய ராணுவம் சண்டை பிடிச்சுக்கொண்டு முன்னேறி வந்தது. அதுக்கு முன்னேறிப் பாய்ச்சல் எண்டு அதுக்கு பேர் வைச்சிருந்தவை. (முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.. நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா எண்ட பாட்டு எனக்கு நினைவுக்கு வருது.. முழுக்க எழுதோணும் போல கிடக்கு.. பிறகு ஆரும் குழந்தையள் இதைப் படிச்சு வன்முறையாளர்களானால் எனக்கு ஏன் சோலி)

அந்த நேரம் நிறைய சனமும் செத்துப் போட்டுதுகள். அதுவும் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திலை புக்காரா எண்டொரு பிளேன்.. ஒரே நேரத்திலை எட்டு ரொக்கட்டுக்களை அடிக்க அங்கை இடம் பெயர்ந்து வந்து கொஞ்சம் களைப்பாறிக்கொண்டிருந்த சனத்திலை 200 பேருக்குக் கிட்ட செத்தவை.

உப்பிடி எல்லா இடத்திலையும் அடி! ஒரு மாதிரி ஆமி முன்னுக்கு வந்து இடங்களையெல்லாம் பிடிச்சிட்டுது. நாங்களும் யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ளை வந்து ஒரு சொந்தக்காரர் வீட்டிலை இருந்தம். பிறகு ஒரு ஐஞ்சு நாளிலை ஆமி திரும்பி போட்டுது. புலிகள் தான் அடிச்சு கலைச்சவை.

நாங்களும் ஒரு பத்து நாளில வட்டுக்கோட்டைக்கு போனம். (போற வழியிலை கொஞ்சம் கிட்டப் பாதை நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தைக் கடந்து தான் போகும். நாங்களும் அதாலை தான் போனம். அங்கை கட்டட குவியலுக்குள்ளையிருந்து மீட்க முடியாத உடல்த்துண்டுகளை அப்பிடியே எரிச்சுக் கொண்டிருந்தவை. அந்த நேரம் என்ரை சைக்கிள் காத்துப் போக இறங்கி அடுத்த சைக்கிள் கடை வரையும் உருட்டிக் கொண்டு போனன். அதே மாதிரி இன்னும் கொஞ்சம் பேருக்கு அந்த அந்த இடத்திலை காத்துப் போக அது ஒரு கதையாக கொஞ்சக் காலம் உலாவிச்சு. )

ஊரிலை இருந்தாலும் ஒரு பயமாத்தான் கிடந்தது. அதுவும் நான் சரியான பயந்தாங்கொள்ளி. எங்கையும் பிளேன் அடிச்சா ஒருத்தரும் என்னோடை வர வேண்டாம் எண்டிட்டு தனிய எங்கையாவது வயல்வெளியளுக்குள்ளை ஓடிப் போய் படுத்திருந்து கத்துவன். (ஆக்களோடு எண்டால் கூட்டத்தை கண்டு விட்டு குண்டு போடுவான் எண்டு பயம்.)

சரியெண்டு ஒரு கொஞ்ச நாளுக்குப் பிறகு நாங்கள் ரவுணுக்குள்ளை ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்தம்.
அது யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு கிட்ட, கிட்டு பூங்காவிற்கு பின்னாலை இருக்கிற சேர்ச்சுக்கு பக்கத்திலை ஒரு ஒழுங்கைக்குள்ளை இருந்தது.

அதே மாதிரி யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் அரண்மனை வாயில், யமுனா ஏரி இதெல்லாம் எங்கடை வீட்டுக்கு கிட்டத்தான் இருந்தது. (இவ்வாறாக எனது வாழ்வின் பெரும் பகுதியை (4 மாசம்) ஆண்ட தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்களுடனேயே கழித்திருக்கிறேன் என்பதனை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.)

நாங்கள் வரேக்கை கிட்டு பூங்கா கட்டி ஒரு வருசம் இருக்கும். எனக்கெண்டால் சந்தோசம் தாங்க முடியேல்லை. ராட்டிணத்தை அவ்வளவு நாளும் படங்களிலை தான் பாத்திருக்கிறன். அங்கை தான் நேரை பாத்தன். மனித வலுக் கொண்டு தான் இயங்கினது எண்டாலும் சுப்பர். அது போலத் தான் தொங்குபாலம் ஒண்டு இருந்தது.

அதுவரைக்கும் கலியாண, சாமத்திய வீட்டுச் சடங்கு வீடியோ கசெற்றுக்களிலை சிங்கப்பூரை காட்டேக்கை இப்படியான தொங்கு பாலங்களை சின்னச் சின்ன அருவியளை பாத்திருப்பம். நேரை பாக்கிறம் எண்டால் சந்தோசம் தானே.

அதுவும் அந்த நேரம் நல்லூர்த் திருவிழா நடந்தது. நல்லூர்த் திருவிழா பற்றி யாழ்ப்பாணத்திலை இருந்தவைக்கு சொல்லத் தேவையில்லை. ஐஸ்கிரீம் கடையள், விளையாட்டுச் சாமான் கடைகள் எண்டு சும்மா களைகட்டும். அதோடை விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் (எல்லாருக்கும் இந்தச் சொல்லு விளங்குது தானே) கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்துறது.

உண்மையா உள்ளை போனா ஆசையாத் தான் இருக்கும். ஒரு தனி நாடு எப்பிடிக் கட்டமைக்கப் பட வேணும்.. எப்பிடி வளங்கள் பகிரப் பட வேணும்.. அதின்ரை நிர்வாக அலகுகள் எப்பிடியிருக்கும்.. அதின் பொருளாதார கட்டமைப்பு எப்பிடியிருக்கும்.. எண்டெல்லாம் அங்கை காட்சிகளோடும் தரவுகளோடும் விளங்கப் படுத்துவினம்.

அதே போல புலிகளும் ஆயுதக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கினம் பிறிம்பாக! ஒரு மாசத்துக்கு முதல் நவாலியில குண்டு போட்டு 200 பேரைச் சாகடிச்ச புக்காரா ரக விமானம் ஒன்றை அதே கிழமை புலிகள் சுட்டுவிழுத்தினவை. அந்தப் பிளேனையும் அங்கை காட்சிக்கு வைச்சிருந்தவை. அதை நான் பார்த்தன். (நான் நினைக்கிறன் புலிகளை காரசாரமா விமர்சிக்கிறதுக்கு தகவல்கள் தேடுற ஆட்களுக்கு - அதாவது எப்பிடியாவது கடுமையாத் தாக்கிறது எண்டு முடிவெடுத்த பிறகு அதுக்கு தரவுகள் தேடுறாக்களுக்கு - நான் ஒரு தகவல் வழங்கியிருக்கிறன் எண்டு. அதெப்படி ஆலயங்களிலை ஆயுதக் கண்காட்டி வைக்க முடியும் எண்டு.)

சனமெல்லாம் திருவிழா முடிய அப்பிடியெ திரண்டு கிட்டு பூங்காக்கு வரும். பிறகென்ன நல்லுர்த் திருவிழாக்குப் போனால் கிட்டு பூங்காவிற்குப் போறது எண்டிறதும் ஒரு சம்பிரதாயமாப் போச்சு.

திருவிழா இல்லாத நாட்களிலையும் நான் அங்கை போறனான். அங்கை ஐஸ்கிறீம் வாங்கலாம். அதுக்குத் தான் பின்னேரங்களிலை அங்கை போறனான். (யாழ்ப்பாணத்திலை ஜஸ்கிரீம் சுவை கொஞ்சம் வித்தியாசமாத் தான் உணருகிறன். வேறு யாருக்கும் உந்த எண்ணம் இருக்கோ?)

கிட்டு பூங்கா வாசலில சங்கிலிய மன்னனின் சிலை ஒண்டு இருக்கு. அவர் தான் யாழ்ப்பாணத்தின்ரை கடைசி மன்னன். அதே மாதிரி உள்ளை கேணல் கிட்டுவின் சிலை ஒண்டு இருக்கு. நிறைய பூச்செடிகள், நீரேந்துப் பகுதிகள் எண்டு கனக்க உள்ளை இருக்கும்.

யாழ்ப்பாணத்தைப் பிடிக்கிறதுக்கு ஆமி ஒப்பரேசன் யாழ்தேவி எண்டொரு சண்டையைத் தொடங்கி பிடிக்க முடியாமல் தோத்தது. அந்த சண்டையிலை புலிகள் ஒரு ராணுவ ராங்கியை கைப்பற்றியிருந்தவை. அந்த ராங்கியும் கிட்டு பூங்காவிலை நிண்டது. நான் நினைக்கிறன் அது பழுதாப் போயிருக்க வேணும். (குழந்தையள் விளையாடுற இடத்திலை ராங்கிக்கு என்ன வேலை எண்டு ஆரும் கேட்கப்போகினமோ?)நான் அங்கை தான் ராங்கியை முதலில பார்த்தன்.

மற்றது.. யாழ்ப்பாணத்தாக்கள் கூடுதலா தங்கடை வீட்டில நடக்கிற கலியாண வீடுகள், சாமத்திய வீடுகள் இப்பிடியானதுகளை வீடியோ எடுக்கிற பழக்கம் உள்ளவை. கிட்டத்தட்ட அவையின்ரை கலாச்சாரம் மாதிரி இது. நான் நினைக்கிறன் இது ஏன் வந்ததெண்டால் அவையளில குடும்பத்திலை ஆகக்குறைஞ்சது ஒராளாவது வெளிநாட்டிலை இருக்கிற படியாலை (பெரும்பாலான குடும்பங்களில்) அவையளுக்கு அனுப்பத் தான் எடுக்கினம் எண்டு.

அப்பிடி வீடியோ எடுக்கேக்கை இடைக்கிடை சிங்கப்பூர் மாதிரியான நாடுகளிலை எடுத்த சில வீடியோ காட்சிகளை செருகிறவை. கிட்டு பூங்கா வந்த பிறகு நேரை அங்கேயே போய் எடுக்க தொடங்கி விட்டினம். அதுவும் வீடியோக்கு நல்லாத்தான் இருந்தது.

பேந்தென்ன.. 95 ஒக்ரோபர் இடப்பெயர்வு வந்திட்டுது. அதோடை யாழ்ப்பாணத்திற்கு ஆமியும் வந்திட்டுது. கிட்டு பூங்காவின் ஆயுட்காலம் ஒரு ரண்டு வருசம் தான் இருக்கும். ஆனா அந்தக்கால சிறுவர்களின் மனசுக்கு அது கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்.

யாழ்ப்பாணம் ஆமி பிடிச்சாப்பிறகு அந்தப் பூங்காவை ஆமி சிதைத்து விட்டது. காரணம் அது கிட்டுவின் பேரில இருந்த படியாத்தான் எண்டு நினைக்கிறன். கிட்டுவின் சிலையையும் உடைச்சிட்டினம். அதே மாதிரி முன்னாலிருந்த சங்கிலியனின் சிலையையும் உடைச்சுப் போட்டினம்.

கிட்டுவின் சிலையை உடைச்சதை விடுவம். தங்கடை எதிரியின்ரை ஒரு தளபதி எண்ட சினத்திலை அதை உடைச்சிருக்கலாம். சங்கிலியனின் சிலையை ஏன் உடைச்சவை? அது தமிழரின் மன்னன் எண்ட படியாலை தானே!

இல்லாட்டி சங்கிலியனையும் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி எண்டு நினைச்சினமோ தெரியாது.

25.3.05

ஒஸ்ரேலியாவில் வலைப்பதிவர் சந்திப்பு

ஒரு மூன்றாவது கண் பார்வை!

'குறு' குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாலும் நேரத்திட்டமிடலில் ரொம்பவே சொதப்புகின்ற சயந்தனாலும் இன்று ஒஸ்ரேலியாவில் இடம் பெற்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சரியாகவோ, முறையாகவோ அறிவிக்க இயலவில்லை.

இன்று வெள்ளிக்கிழமையான விடுமுறை நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றது. குறுகிய கால இடைவெளியில் ஒழுங்கு செய்யப் பட்டிருப்பினும் ஒஸ்ரேலியாவில் இருந்து வலைப்பதிகிற இரண்டு மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

சந்திப்பு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரத்தியேக இடத்தில் நடைபெற்றது. மதியத்திற்கு நிறையப் பின்பாக முதலாவதாக வந்து சேர்ந்தார் வசந்தன். வசந்தனின் பக்கம் என்னும் வலைப்பதிவில் தெரியாத, அறியாத பழஞ்சொல்லுகளைப் பற்றி பதிந்து வருபவர் அவர்.

முதலாவதாக வந்து சேர்ந்த வசந்தனின் பின்னர் வருவதற்கு எவருமில்லாததால் சந்திப்பு ஆரம்பமானது.

கொஞ்ச நேரம் பலதும் பத்துமாக பேசிக்கொண்டிருந்த சந்திப்பு 'எழுதுவது என்றால் என்ன' என்ற சயந்தனின் கேள்வியின் பின்னர் சூடு பிடித்தது. அதற்கு வசந்தனின் பதில் திருப்தியாக அமையா விட்டாலும் வசந்தனுக்கு தெரிந்தது அவ்வளவும் தான் என நினைத்த சயந்தன் அடங்கிக் கொண்டார். அதே போல இணையத்தில் இலக்கியம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அவை பெரும்பாலும் அண்மைக்கால பின்னூட்டங்களில் இருக்கிறது என வசந்தன் சொன்னார்.

இடையில் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் பற்றி பேசப் போவதாக சயந்தன் சொல்லி எழுந்தார். கூடவே அவர் சில புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார். அவை ஒஸ்ரேலிய இந்துக் கோவில்களில் பயன் படுத்தப் படுகின்ற தேவார திருவாசக புத்தகங்கள். தமிழ்த் தேவார திருவாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.

அப்பமுப்பளம் என்பது Appamuppalam என எழுதப்பட்டிருந்த அந்த புத்தகங்களை காட்டி மொழி பெயர்ப்புக்களின் அவசியம் பற்றி சயந்தன் பேசினார். தமிழ் தெரியாத குழந்தைகள் எப்படியாவது தேவாரங்களைப் பாடி அருள் பெற வேண்டும் நோக்கில் இவ்வாறான நிறைய மொழி பெயர்ப்புக்கள் பிரெஞ்சில் ஜேர்மனில் எல்லாம் வர வேண்டும் என சயந்தன் சொன்னார்.

ஆனால் இடையில் குறுக்கிட்ட வசந்தன் இவை மொழி பெயர்ப்புகள் இல்லை என்றும் இவை ஒலி பெயர்ப்புக்கள் எனவும் சொன்னார். ஒரு மாதிரியாகப் போய்விட்ட சயந்தன் இவை மொழி பெயர்ப்புக்கான நல்ல ஆரம்பம் என சமாளித்தார்.

வரும் போது வசந்தன் பினாட்டு கொண்டு வந்திருந்தார். வசந்தன் மறந்து போன விடயங்களை, பழக்க வழக்கங்களை, உணவு முறைகளை எழுதுவது மட்டுமல்லாது செயலிலும் காட்டுவார் என்பதற்கு அவர் பினாட்டு கொண்டு வந்தது ஒரு உதாரணம்.

நெடுநாள் திட்டமிடலுடன் தொடங்கியிருந்தால் பினாட்டுப் போலவே குரக்கன் பிட்டு, பருத்தித்துறை வடை, ஆலங்காய் இவற்றை ஏற்பாடு செய்திருக்கலாம் என வசந்தன் கூறினார். (இவை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் தொடர்ச்சியாக வசந்தன் பக்கம் பார்க்கவும். அங்கு தான் வழக்கொழிந்த சொற்கள் எல்லாம் ஆராயப்படுகிறது)

மீண்டும் சந்திப்பு தொடர்ந்தது. சிறுவர் பாடல்கள் பற்றிப் பேசிய வசந்தன் 'கத்தரித்தோட்டத்து மத்தியிலே' என்னும் பாடலை ஒஸ்ரேலியாவில் வாழும் ஒரு சிறுவனைக் கொண்டு பாடி ஒலிப்பதிவு செய்ய எடுத்த முயற்சி பற்றி சொன்னார்.

அப்பாடலை முழுதுமாக ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்து 'கத்தரி' என்றால் என்ன 'வெருளி' என்றால் என்ன என அச் சிறுவனுக்கு விளங்கப்படுத்தி ஒலிப் பதிவை முடித்த போது அது வெள்ளைக் கார குழந்தை பாடியதை விட மோசமாக இருந்தபடியால் அத் திட்டத்தை கைவிட்டு விட்டதாக கவலையுடன் சொன்னார்.

கத்தரித்தோட்டத்து மத்தியில் என்ற பாடலில் 'வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடுது வெள்ளைப்பசு' என்ற வரி வருவதாகவும் அப்பாவி வெள்ளைப் பசுவிற்கு பய உணர்வைத் தருவதும், அச்சத்தை ஊட்டுவதும், அப்பாவி வெள்ளைப் பசுவின் புல்லுத் தின்னும் உரிமையை மறுக்கின்றதுமான இவ்வரிகள் ஒரு விதத்தில் வன்முறையை ஊட்டுகின்றன. ஆகவே இப்பாடல் தடை செய்யப் பட வேண்டும் என சயந்தன் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து வசந்தன் 'ஜாவா' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய பக்கங்களில் இணைக்கக் கூடியதான ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். இச் செயலியை வலைப் பதிவுகளில் இணைப்பதனால் வலைப் பதிவிற்கு வரும் ஒருவர் கண்டிப்பாக பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் அனைவரும் கட்டாயம் பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என வசந்தன் மேலும் சொன்னார்.

ஆனால் பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்க முடியுமென்றால் பதிவினைப் படிக்க முடியாமல் எப்படி பின்னூட்டம் இடுவது என சயந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு வசந்தன் இப்போதெல்லாம் பதிவுகளிற்கும் பின்னூட்டங்களிற்கும் பெரிதும் சம்பந்தமில்லையாதலால் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றார்.

சந்திப்பு தமிழ்மணம் குறித்து திரும்பியது. வலைப் பதிவுகளின் எண்ணிக்கை மகிழ்வடையக் கூடிய அளவிற்கு அதிகரித்திருப்பதனால் ஒரு பதிவினை அனுப்பி விட்டு தமிழ் மணத்திற்கு வந்து பார்த்தால்... அதற்கிடையில் பத்து பதிவுகள் வந்து எழுதிய பதிவினை பின்னுக்கு தள்ளி விடுகிறது.

ஆகக் குறைந்தது இரு மணி நேரத்திற்காவது பதிவு, தமிழ் மண முதற் பக்கத்தில் இருந்தால் போதும் என அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னார்கள். ஆனால் 5 நிமிடமாவது இருப்பதே அதிசயம் என வசந்தன் சொன்னார்.

ஒரு ஆறுதலாக பின்னூட்டம் இடப்பட்ட பதிவுகளின் பட்டியலில், பதிவுகள் வருவது சந்தோசமாக இருக்கிறது என சயந்தன் சொன்னார். இருப்பினும் பின்னூட்டம் எதுவும் இடப்படாதவிடத்து அந்தப் பட்டியலிலிருந்தும் பதிவுகள் ஓடுவதால் வேறு பெயர்களில் வந்து பின்னூட்டங்கள் இட வேண்டிருக்கும் என சந்திப்பில் கலந்து கொண்ட சிலர் தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

இதற்கு ஒரு நல்ல மாற்றாக, பின்னூட்டங்கள் இடப்பட்ட பட்டியலிலிருந்து பதிவுகள் ஓடினால், பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கு நன்றி என ஒரு பின்னூட்டம் இடுவது நல்லது என வசந்தன் சொன்னார்.

இருப்பினும் இது குறித்து ஆகக்குறைந்தது பதியப்பட்ட 25 பதிவுகளையாவது காட்டுவது நல்லது என்ற சந்திப்பில் கலந்த கொண்டவர்களின் கருத்தினை தமிழ்மணம் காசியின் கவனத்திற்கு கொண்டு செல்வது தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக அடுத்த ஒஸ்ரேலிய வலைப்பதிவர் சந்திப்பை சிட்னியில் நடாத்துவது எனவும் அதற்கான ஏற்பாடுகளை (மெல்பேணிலிருந்து சிட்னிக்கான விமான பயண சீட்டு உட்பட) சிட்னியிலிருந்து வலைப்பதியும் வலைபதிவாளர்கள் செய்வார்கள் எனவும் 'இரு' மனதாக முடிவு செய்யப்பட்டது.

சந்திப்புக் குறித்த இன்னுமொரு பதிவு வசந்தனின் பக்கத்தில் வர இருக்கிறது. இரண்டையும் அடுத்தடுத்ததாக படிக்கவும். விருமாண்டி படம் பார்த்தது போல இருக்கும்

24.3.05

ஏன் பெயிலாகிறோம்

ஏன் கல்வி ஒரு மாணவனுக்கு கடுமையாக இருக்கிறது.. ஏன் பலர் பரீட்சைகளில் தோற்கிறார்கள் என்கிற ஒரு ஆய்வு எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் சில சமயம் வந்திருக்கும். வராதவர்களுக்காக அதை இங்கை தாறன்!

முதலில ஒரு வருசத்தில இருக்கிற மொத்த நாட்களில 52 ஞாயிற்றுக் கிழமைகள் வருது. ஒரு மனிசனுக்கு ஓய்வு கட்டாயம் முக்கியம் எண்ட படியாலை அந்த 52 நாளும் படிக்க முடியாது. ஆக மிச்சம் 313 நாள் தான் படிக்க இருக்கு.

கோடை விடுமுறை எண்டு ஒன்று இருக்கு. அது ஒரு 50 நாள். சரியான வெயில். அந்த வெக்கையில கடைசி வரை படிக்க முடியாது. அப்ப இப்ப மிச்சம் 263 நாள் இருக்கு.

டொக்ரர்ஸ் என்ன சொல்லுகினம் எண்டால் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணி நேரத் தூக்கம் அவசியமாம். அப்பிடிப் பார்த்தால் ஒரு வருசத்தில இது 122 நாள்.. இப்ப மிச்சம் இருக்கிறது 141 நாள்.

சரி விளையாட்டு உடம்புக்கு தேவையான ஒரு விசயம். அதுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1 மணித்தியாலம் ஒதுக்கினால் அதிலை ஒரு 15 நாள் வந்திடுது. மிச்சம் இருக்கிறது 126 நாள்.

சாப்பிடுறதுக்கு, குடிக்கிறதுக்கு, கொறிக்கிறதுக்கு எண்டு ஒரு நாளைக்கு 2 மணித்தியாலத்தை ஒதுக்கலாம். அப்பிடிப் பாத்தால் வருசத்தில அதுக்கெண்டு 30 நாள் செலவாகுது. இப்ப மீதியாயிருக்கிறது 96 நாள்.

நாலு மனிசரோடை கதைக்கிறதுக்கு, சிரிக்கிறதுக்கு ஒரு 1 மணித்தியாலத்தை ஒதுக்குவோம். (தனிய இருந்தால் மன அழுத்தம் ஏதாவது வந்திடுமெல்லோ.) அப்ப அதிலை ஒரு 15 நாள் போயிட இப்ப இருக்கிறது 81 நாள்.

ஒரு வருசத்திலை 35 நாள் சோதினை நடக்குது. சோதினை நேரம் படிக்ககூடாது எண்டு பெரிய ஆராய்ச்சியாளர் சொல்லுகினம். அப்ப அதை விட்டால் மீதமா 46 நாள் படிக்கிறதுக்கு இருக்கு.

உந்த காலிறுதி, அரையிறுதி, திருவிழா, தேர் எண்டு 40 நாள் லீவு.. லீவுக்குள்ளை படிக்க வேணும் எண்டால் லீவே விடாமல் இருந்திருக்கலாமே? அதனாலை ஒரு 6 நாள் மிஞ்சுது படிக்கிறதுக்கு.

ஒரு வருத்தம், உடம்பு சரியில்லை எண்டு ஒரு வருசத்திலை ஒரு 3 நாள் ஒதுக்கலாம். (சரியான குறைச்சல் தான். ஆனாலும் படிக்கிற ஆர்வத்திலை சரியா குறைச்சிருக்கு).. ம் ம்.. இப்ப 3 நாள் மிஞ்சுது.

ஒரு கல்யாண வீடு, ஒரு புதுப்படம் இதுகளுக்கு போகாமல் இருக்க முடியுமோ? ஒரு 2 நாளை அதுக்கு ஒதுக்கலாம். (அதுக்கு மேலை முடியாது)..

இப்ப ஒரேயொரு நாள்த்தான் கிடக்குது படிக்கிறதுக்கு.

சரி படிக்கலாம்..

அட.. அந்த ஒரு நாள்த்தானே பிறந்த நாள்!

23.3.05

நான் எப்பிடி இருக்கிறன்!

எனது படத்தை வலைப்பதிவில் வெளியிட வேணும் என்று கோரிய அநேகம் பேரின் வேண்டுகோளை மதித்து (அடி ஆத்தி! அநேகம் பேரா..? அது யாரு? சரி! ஆகக்குறைந்தது எனது விருப்பத்திற்கு ஏற்ப) இந்தப் பதிவு! இதில் ஒரு மார்க்கமாக நின்று கொண்டிருப்பது நான் தான்!

எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள் எண்டு யாரேனும் கேட்டால்..

அப்பிடி யார் எடுத்தது! அதுவா வந்திச்சு!!!

இந்த படத்துக்கு பொருத்தமான கவிதை எழுதுறாக்களுக்கு .... இந்தப் படத்தை Save picture as பண்ணி எடுத்துக்கொள்ளுற உரிமையை தாறன்.

முக்கிய குறிப்பு: நான் கவிதை எழுதச் சொன்னதையோ அல்லது நீங்கள் கவிதை எழுதுவது பற்றியோ பொடிச்சிக்கும் வசந்தனுக்கும் மதியக்காவிற்கும் மூச்சு விட வேண்டாம்.



Image hosted by Photobucket.com

22.3.05

றேடியோக்களின் கதை

'எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!'

'அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்'

'நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்'

'அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி'

இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம் ஆனது கொழும்பில இருக்கிற தனியார் வானொலிகள் மூலம் தான். உப்பிடி மாறி மாறி கோழிச்சண்டை போடுறதை ரசிச்சுக் கேட்கிறதே நல்ல ஒரு பொழுது போக்கு.

தொன்னூற்றெட்டின் துவக்கமாயிருக்க வேணும். அப்ப தான் ஈசல் கணக்கில கொழும்பில தனியார் வானொலிகள் வரத் தொடங்கினது.

யாழ்ப்பாணத்தில இருக்கும் பொழுது இலங்கை வர்த்தக வானொலி கேட்பம். லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு மீராவின் இசையும் கதையும் இப்பிடி நிறைய நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பம். ஆனாலும் ஒலித்துல்லியம் பெரிய அளவில் இருக்காது. இலங்கை வர்த்தக வானொலியை விட தூத்துக்குடி வானொலி நல்ல கிளியர். இரவில எட்டே முக்காலுக்கு மூண்டு பாட்டுப் போடுவினம். கொஞ்சம் புதுப்பாட்டுகள் கேட்க வேணும் எண்ட ஆசையை இந்த வானொலிகள் தான் தீர்த்து வைச்சதுகள்.

ஆரம்பத்தில இரவு ஒரு மணித்தியாலத்துக்கு புலிகளின் குரல் ஒலிபரப்பானது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பான இந்த வானொலியில் இலங்கை மண் எண்டொரு நாடகம் போனது. பொன்.கணேசமூர்த்தி எழுதியிருந்தவர். தொடர்ந்து ஒரு வருசம் போன இந்த நாடகத்தை நான் தொடர்ந்து கேட்டன்.

இராவணன் கதையை மையப்படுத்தி இந்த நாடகம் இருந்தது.

தளிர்கள் எண்டொரு சிறுவர் நிகழ்ச்சி புலிகளின்குரலில போனது. அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமலும், அதே நேரம் வயதானவர்கள் கலந்து கொள்ளுற வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமலும் ரண்டும் கெட்டான் வயசில நான் இருக்கிறனே என்று அப்ப எனக்கு கவலையாயிருக்கும்.

புலிகளின் குரலும் தொடர்ந்த ஒலித்தரத்தில் வராது. அன்ரனாக்கு வயர்கள் கட்டி அதைக் கூரையில் கட்டி அப்பிடி இப்பிடித்தான் அந்த வானொலியைக் கேட்பம். (இப்ப செயற்கைக் கோளுக்காலை புலிகளின் குரலை உலகமெங்கும் கேட்ககூடியதாக இருக்கிறதென்பதை நினைக்க சந்தோசமாயிருக்கிறது.)

பிறகு கொழும்பில வந்தாப் பிறகு யாழ்ப்பாணத்தில கேட்ட வர்த்தக வானொலியும் கேட்கிறதில்லை.

ஒரு கொஞ்சக் காலத்துக்குத் தான்.

பிறகு ஒண்டின் பின் ஒண்டாக வரத்தொடங்கின வானொலிகள். முதலில வந்தது சூரியன் FM. அது வரைக்கும் வானொலிகளில இலக்கணச் சுத்தமாக கதைக்கிறதை கேட்டு வந்த எனக்கு சாதாராண பேச்சு வழக்கில வானொலி கேட்க முடிந்தவுடன ஒரு ஆச்சரியமாயிருந்தது.

அந்த நேரம் இந்த வானொலிகள் தமிழைக் கொலை செய்யப்போகின்றன என்றெல்லாம் கதை வந்திச்சு.

எண்டாலும் சூரியன் FM வந்த பிறகு தான் எனக்கு புதுப் பாட்டுகள் எல்லாம் அறிமுகமானது. CD வேண்டித்தான் பாட்டு கேட்க வேணுமெண்ட தேவையே இல்லாமல் போயிட்டுது.

இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்.

தொலைபேசியில வானொலியோடை பேசி அதை நேரடியாக கேட்கிறதை அந்த வானொலிதான் இலங்கையில அறிமுகப்படுத்தினது. தபால் அட்டையளை அனுப்பிப் போட்டு வருமோ வராதோ எண்டு பாத்தக்கொண்டிருந்த சனத்துக்கு இந்த சிஸ்ரம் பிடிச்சிருக்க வேணும்.

எனக்கும் ஆரம்பத்தில அப்படியான நிகழ்ச்சிகளை கேட்கிறது ஆர்வமாத்தான் இருந்தது. ஆனா கடைசிக்காலத்தில எப்ப பார்த்தாலும் 'ஹலோ யார் பேசுறது. என்ன பாட்டு வேணும். யார் யாருக்காக வேணும்' எண்டு ஒரே இதையே கேட்க வேண்டியிருந்ததாலை புளிச்சு போட்டுது எனக்கு.

இப்பிடி இருக்கேக்கை சக்தி FM எண்டொரு வானொலி வந்திச்சு. எண்டாலும் அது ஆரம்பத்தில தூய தமிழ் பேசித்தான் நிகழ்ச்சிகள் செய்தது. பிறகு போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமலாக்கும் அதுகும் சாதாரண பேச்சு வழக்கில் தொடங்கிச்சு!

அந்த வானொலி வந்த பிறகு தான் ஒரு சூடு பிடிச்சிது. அந்த நேரத்தில வானொலி அறிவிப்பாளர்களுக்கு இலங்கையில ஒரு நட்சத்திர அந்தஸ்து இருந்தது.

'எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி' எண்டு ரஜினி எதுக்கு சொன்னாரோ தெரியேல்ல.. ஆனா சூரியன் அதை அடிக்கடி போடும். எனக்கெண்டா அது ஒரு நாகரீகமில்லாத செயலாத்தான் கிடக்கு.

இதுக்கிடையில ஏற்கனவே அனுங்கிக்கொண்டிருந்த பெரிய கவனிப்பு இல்லாத கலையொலி எண்ட ஒரு வானொலி சுவர்ண ஒலி எண்ட பெயரில பெயர் மாறி கை மாறி தாம் தூம் எண்டு வந்திச்சு.

சிங்கப்பூரிலிருந்து மாலினி எண்டொருவவை அறிவிப்பாளரா கூட்டி வந்தவை. சும்மா கட கட எண்டு கதைக்கிற அவவின்ரை அழகே தனிதான்.

நிறையப் பரிசுகளும் அள்ளி அள்ளி கொடுத்தவை. இளசுகளை மட்டுமே குறிவைச்சு இயங்கினாலும் ஏனோ அவையாள நிண்டு பிடிக்க முடியேல்லை. கொஞ்ச நாளில மீண்டும் புதுப்பொலிவுடன் வருவம் எண்டு நிப்பாட்டினவை தான்.. அவ்வளவும் தான்.

சக்தி வானொலி தாங்கள் தான் தமிழ் வளக்கிறம் எண்டு அடிக்கடி சொல்லும். எனக்கு உண்மையாக் கோபம் வரும். தமிழ் வளக்கிறது எண்டுறது சும்மா தமிழில வணக்கம் சொல்ல வற்புறுத்தவது இல்லை. அல்லது தமிழில கதைக்கிறது மட்டுமில்லை. தமிழோடு இணைஞ்ச இனத்தின் அரசியல் பண்பாடு பொருளாதாரம் அறிவியல் இதெல்லாத்திலையும் முன்னேறுவதற்கான வழி வகைகளைச் செய்யுறது தான்.

இதொண்டையும் செய்யாமல் நாங்கள் தான் தமிழ்க்காவலர்கள் எண்டு யார் சொன்னாலும் எனக்கு கோவம் வருகுது.

செய்திகளைப் பொறுத்த வரை சூரியன் தேடல் மிக்க செய்தியாளர்களை கொண்டிருந்தது. தணிக்கை நடைமுறையிலிருந்த போது அதன் செய்திகளை எல்லோரும் கேட்க விரும்பிச்சினம். (யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் நிமலராஜன் சூரியனின் செய்தியாளராகவும் இருந்தார்.)

மற்றும் படி அந்த ரண்டு ரேடியோவுக்கும் யார் NO.1 என்ற போட்டி இருந்தது. ஒரு பாட்டை போட்டு விட்டு அதை நாங்கள் தான் முதலில போட்டம் எண்டு அவர்கள் அடிபடுறது சின்னப்பிள்ளைகள் அடிபடுறது போல இருக்கும்.

பாட்டுக்களுக்கு இடையில இருந்தாப் போல 'என்னைப் பத்தி உனக்கு தெரியாது.' எண்டு ஒரு வசனம் போகும். அல்லது 'என்னைச் சீண்டாதை. உனக்குத் தான் ஆபத்து' எண்டு ஏதாவது வசனம் போகும். உண்மையில இது மற்ற வானொலிக்குத் தான் சொல்லுப்படும். ஆனால் கேட்டுக்கொண்டிருக்கிற எங்களுக்கு சொல்லுறாங்களோ எண்ட மாதிரி இருக்கும்.

உப்பிடித்தான் ஒருக்கா ஒரு வானொலியிலை தற்போதைய நிலையில் இலங்கையில் கேளிக்கை நிகழ்வுகள் தேவைதானா எண்டு ஒரு கருத்தறியிற நிகழ்ச்சி நடத்தினவை. நேயர்கள் தொலை பேசியில் சொல்ல வேணும். என்ர நண்பன் ஒருத்தன் அழைப்பெடுத்து முதலில உங்கடை இருபத்து நான்கு மணி நேர கேளிக்கைகளை நிப்பாட்டுங்கோ. பிறகு மிச்சத்தை பாக்கலாம் எண்டிருக்கிறான். அதுக்கு அவை நாங்கள் அப்பிடி இல்ல. மற்ற வானொலி தான் அப்பிடி எண்டு சொல்லிச்சினமாம்.

அதே மாதிரி.. ஒருக்கா தொலைபேசியில ஒருவ பாட்டுக் கேட்டவ. அப்ப அங்கை இருந்து ஒருத்தர் உங்களுக்கு திருமணம் ஆகிட்டுதா எண்டு கேட்டவர். அதுக்கு அவ இல்லை எண்டு சொன்னா. பிறகு அவர் அடுத்த கேள்வியா அப்ப எத்தினை பிள்ளையள் எண்டு கேட்டார். அதுக்கு அவ பெரிசா சிரிச்சா. ஏதோ அவர் பகிடி விட்டிட்டார் எண்ட நினைப்பிலை.

உண்மையில அவரிலையும் பிழையில்லை. அவைக்கு அப்பிடி ஒரு ஒழுங்கில கேட்டு கேட்டு பழகிப்போட்டுது.

என்ன செய்ய முடியும்..

19.3.05

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.

தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.

தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன் என்றாலும் (யாழ்ப்பாணத்தில் அவை தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!!) அவற்றில் வரும் பேச்சு மொழி வழக்கு பெரிய அளவில் என்னளவில் கவனத்துக்குரியதாக இருந்திருக்கவில்லை.

(ஆயினும் உண்மையான சென்னைத் தமிழிற்கும் படங்களில் பேசப்படுகின்ற சென்னை சார்ந்த மொழிப் பேச்சு வழக்கிற்கும் என்னால் வித்தியாசம் உணர முடிகிறது. நேரடியாக தமிழக தமிழரோடு பேசும் வேளையில் நாம் பிறிதொரு பேச்சு வழக்கினை உடைய ஒரு நபரோடு பேசுகிறோம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்கிற உணர்வு வருகிறது. ஆனால் திரைப்படங்களில் அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை)

யாழ்ப்பாணத்து தமிழ் என பொது மொழியினூடு பேசினாலும் யாழ்ப்பாணத்திலும் வட்டார வழக்குகள் இருந்தன.

எங்கள் கிராமத்திற்கு அருகிருந்த ஒரு கிராமம்!

முழுதும் வேறுபாடாக கதைப்பார்கள்.

பேசும் போது ஒரு சுருதியில் பேசுவார்கள். (சில வேளை நாம் பேசுவதும் அவர்களுக்கு அப்பிடித்தான் தெரிகிறதோ என்னவோ?)

ஐம்பது சதம் என்பதை அம்பேயம் என்பார்கள். அது எங்களுக்கு சிரிப்பாயிருக்கும். (நாங்கள் அம்பேசம் என்று சொல்வது ஏதோ சரி என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கும்)

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.

வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!

மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.

நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் தமிழக ஊர்களின் பேச்சு வழக்கு மொழியினை அறிந்து கொண்டேன். அப்போதும் அவர்களை நையாண்டி செய்வதற்காகத் தான்.

அவர்கள் ஏதாவது சொன்னால்.. அப்படியா என்று இழுக்க ஓமோம் அப்பிடித்தான் என்பார்கள் அவர்கள்.

(இந்த ஓமோம் என்ற சொல்லை தெனாலியில் ஜெயராம் ஓமம் என்பார்)

எங்கள் பேச்சு வழக்கில் தேனீர் குடிப்பது என்றே பழகி வந்ததால் அவர்கள் அதை சாப்பிடுவதாய்ச் சொல்கின்ற போது அதையும் கிண்டலடிப்பேன்.

தேத்தண்ணி சாப்பிட்டு விட்டு சோறு குடிக்கிறீர்களா?

அவர்களும் ஏதாவது நாம் பேசும் போது திடீரென பேந்தென்ன (பிறகென்ன) என்பார்கள்.

அவர்களிடம் பேசியதும் பழகியதும் எனக்கு இந்தியாவில் பயன்பட்டது.

மண்டபம் முகாமில் எமக்கான பதிவுகள் முடிந்து 'நம்ம ரூம் எங்கேருக்கு சார்" என்று அங்கிருந்த ஒரு அதிகாரியைக் கேட்ட போது அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

நீ ஆல்ரெடி இந்தியாக்கு வந்திருக்கியா?

ஐயோ இது வேறை பிரச்சனையளைக் கொண்டு வந்துவிடும் எண்டதாலை இல்லையில்லை.. இப்பதான் முதல்த்தரம் வாறன் என்று என் வாலைச் சுருட்டிக்கொண்டேன.

ஆனாலும் திருச்சியில் கடைகளில் வலிந்து தமிழக வழக்கில்த்தான் பேசுவேன். (ஒரு பாதுகாப்பிற்குத்தான்.)

அங்கு மாற்றிக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களை திரும்பவும் வழமைக்கு கொண்டு வர எனக்கு சில காலம் எடுத்தது. (உதாரணங்கள்: சேர் (Sir) வோட்டர் (Water) சொறி (Sorry) இவற்றை சார், வாட்டர் சாரி என தமிழகத்திற்கு ஏற்றால்ப்போல மாற்ற வேண்டியிருந்தது.)

இப்பொழுதும் தமிழக வழக்கு என் பேச்சில் அவ்வப்போது இருக்கும். என்னால் அவதானிக்க முடிந்த ஒரு மாற்றம் இது. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கேள்விகளின் இறுதியில் ஓ சேர்த்து முடிப்பார்கள். அதாவது அப்பிடியோ உண்மையோ என்பது போல. ஆனால் எனது வழக்கில் அவை அப்படியா உண்மையா என்றே வந்து விழுகின்றன. இது தமிழக பாதிப்பாகத்தான் இருக்கும்.

மீண்டும் கொழும்பு வந்து பள்ளியில் சேர எங்கேயும் கேட்டிராத இன்னுமொரு வழக்கு கேட்க கிடைத்தது. அது என்னோடு படித்த இஸ்லாமிய நண்பர்களினது. இருக்கிறாரா இருக்கிறாரோ இருக்காரா என்பது போலவே அவர்கள் ஈக்காரா என்பார்கள்.

சதிலீலாவதி படம் பார்த்த காலத்தில் அந்த கோயம்புத்தூர் தமிழ் அப்படியே பற்றிக் கொண்டு விட கொஞ்சக் காலம் அது போலவே நண்பர்களோடு பேசித் திரிந்தேன்.

என்ட்ரா பண்ணுறா அங்க..? ஆ... சாமி கும்பிர்றன் சாமி..

இப்பவும் அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். அது போலத் தான் திருநெல்வேலி வட்டார வழக்கில் ஏலே என்னலே சொல்லுற என்பது போலவும் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறேன்.

தெனாலி வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயம்! கமல் யாழ்ப்பாணத்து தமிழில் பேசுகிறாராம் என்ற போது சந்தோசமாகத் தான் இருந்தது. அதே நேரம் இது புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கான வர்த்தக குறி என்ற எண்ணமும் வராமல் இல்லை.

தெனாலி பார்த்து சிரித்தேன். மற்றும் படி அந்த யாழ்ப்பாணத் தமிழை நான் யாழ்ப்பாணத்தில் கேட்டதே இல்லை. இலங்கை வானொலி நகைச்சுவை நாடகங்களில் கேட்டிருக்கிறேன்.

காற்றுக்கென்ன வேலி என்னும் ஒரு படம். அதில் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லாரும் இலக்கண பாடம் நடாத்தும் தமிழாசான்கள் போல எடுத்திருந்தார்கள்.

கன்னத்தில் முத்தமிட்டாலில் நந்திதாவோடு வருகிற பெண்கள், அம்மாளாச்சி காப்பாத்துவா என்று சொன்ன அந்த முதியவர் இவர்கள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழில் பேச வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றினார்கள்.

நளதமயந்தியில் பேசிய குடிவரவு அதிகாரி மௌலி மிக அழகாக பேசினார்.

ஆக இந்த தமிழ் கேட்பவர்கள் எல்லாம் இதில் தேன் ஒழுகுகிறது, பால் வடிகிறது என்னும் போது இது கொஞ்சம் மிகையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்? பேசும் லயத்திலா? ஒரு வேளை இருக்கலாம். எங்களுக்கும் கோயம்புத்தூர் தமிழ் ஒரு லயத்தில்த் தானே கேட்கிறது.

ஒன்றைச் சொல்ல முடியும்!

இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.

அதாவது "Do you know something? yesterday நான் கோயிலுக்கு போனன். I couldn't Believe it.. என்னா நடந்திச்சின்னா wow.. what a surprise" என்ற மாதிரி..

இப்படி பேசுபவர்கள் குறித்து நான் அடிக்கும் ஒரு கருத்து! அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அதனால்த்தான் அடிக்கடி தமிழ் கலந்து கதைக்கிறார்கள்.

அது போலவே தமிழ் தெரிந்த இன்னொருவரோடு தமிழில் பேசுவது தாழ்வானது என்ற எந்தச் சிக்கலும் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இல்லை.

இலங்கையில் தொடர்ந்து இந்த நிலை சாத்தியப் படக்கூடும். வெளிநாடுகளில் இப்போது பிறந்து வளரத் தொடங்கிவிட்ட இலங்கையைச் சேர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையிலும் இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால் உதட்டைப் பிதுக்கிக் கொள்வேன்.

18.3.05

பாராளுமன்றில் நான்

கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன்.

கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம் என்பது விளங்குகிறது.

இந்த வரை படத்தில் பாருங்கள்.

Image hosted by Photobucket.com

அதன் மையத்தில் இருக்கின்ற சிறிய வட்டத்தில் இருந்த குன்று ஒன்றை வெட்டி எடுத்து அங்கே பாராளுமன்றினை கட்டியிருக்கிறார்கள்.

சூழ இருக்கின்ற பெரிய வட்டங்களும் நீள் கோடுகளும் நகரின் பிரதான வீதிகள்.

சாதாரணமாக உள்ளே அனுமதிக்கிறார்கள். இருப்பினும் உட்செல்லும் வழியூடாக உடல் scan செய்யப் படுகிறது.

உள்ளே பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இடங்களைப் பார்த்தோம்.

இன்னுமொரு பகுதியில் சிறிய திரையரங்கில் பாராளுமன்றம் அமைக்கப்பட்ட வரலாறு கட்டட பணிகள் நடைபெற்ற நாட்கள் என்பவற்றை திரையில் காட்டுகிறார்கள்.

Image hosted by Photobucket.com

பாராளுமன்றிற்கு மேலே சாதாரண தரை போல புல் வளர்க்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும் போது பழைய பாராளுமன்று தெரிகிறது.

பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிய போது அதன் முன்பாக இருக்கின்ற சிறிய நீர்ச் சுனையில் கால் நனைத்தேன். அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் வந்து அதை நிறுத்தச் சொன்னார்.

காவல் அதிகாரிகள் இப்படித் தான். தங்களுடைய அதிகாரங்களை காட்டுகிறார்கள் என்று நினைத்த போது அவர் சொன்னார்.

அந்த நீர் அழுக்காக இருக்கிறதாம். காலில் தொற்றுக்கள் ஏற்பட கூடுமாம்.

ம்!!!!!

என்ன அங்க நிக்கிறது!! போ போ.. படமெல்லாம் எடுக்க கூடாது!! இங்க நிக்க கூடாது!! இப்படியெல்லாம் சொல்லாத இவர்கள் எல்லாம் என்ன காவல் அதிகாரிகள்!!

17.3.05

ஐரோப்பாவின் உயரத்தில்

Jungfraujoch!

தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம்.

இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின.

மீண்டும் jungfraujoch

சுவிற்செர்லான்டில் இருக்கிறது ஐரோப்பாவின் உயரமாகிய இந்த வெள்ளிப் பனிமலை! அதன் உச்சியில் நிற்கின்ற போது உடலும் மனசும் சேர்ந்து இளகிப்போகின்றது.

ஐரோப்பிய குளிர் நாடுகளிலும் வெயில் இப்படி வெட்டி எறிக்கும் என உணர்த்திய ஒரு summer காலத்தில் நான் jungfraujoch போனேன்.


Image hosted by Photobucket.com


குறித்த ஓர் இடம் வரை சாதாரண தொடரூந்தில் பயணித்து பின்னர் விசேடமான தொடரூந்துகள் மூலம் பயணம் தொடர்ந்தது.

மலைகளை சுற்றி சுற்றி ஏறாமல் அவற்றினை உள்ளாக ஊடறுத்து செல்லும் தொடரூந்தின் சில்லுகள் கூடிய உராய்விற்காக பற்சில்லுகளாக அமைக்கப்பட்டிருந்தன.

அவ்வப்போது வண்டியை நிறுத்தி மலையின் உள்ளிருந்து வெளியே பார்க்க விடுகிறார்கள்.

எங்கெங்கு நோக்கினும் வெண்பனி மலைகள் தான்!

பயணத்தின் போதே வண்டி செல்லும் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றினை ஒளிப்படமாக காட்டுகிறார்கள்.

முடிவில் உள்ளாக வந்து வெளியே தலைகாட்டுகிறது தொடரூந்து.
பனிச்சறுக்கு, பார்வையிடும் இடங்கள் என பொழுது போக்கு மையங்களோடு விரிந்தது அந்தப் பனிப்பாலை வனம்!

பனிமாளிகை என்னும் ஓர் இடம்!

பனிக்கட்டியில் செதுக்கப்பட்ட உருவங்களை வைத்துப் பேணுகிறார்கள் அங்கு! நடந்து செல்லும் பாதை கூட பனிப் பளுங்கில் தான் இருந்தது.

Image hosted by Photobucket.com

அந்த இடத்திற்கு வந்து போனதாய் சான்றிதழ் கூட தருகிறார்கள். ஆனால் காசு!

ஏதோ புது உலகில் நிற்பது போன்ற உணர்வு அங்கு நின்ற ஒவ்வொரு கணமும் இருந்தது.

15.3.05

மடத்தனமாய்..

எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு.

இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன.

இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு.

எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும் வெறுப்பே எஞ்சி நிற்கிறது.

தினக்குரல் பத்திரிகையில் வெளிவருகின்ற சிங்கள நாளேடுகளில் இருந்து என்னும் ஒரு பகுதி!

அதனை ஆரம்ப காலங்களிலிருந்தே வாசிப்பது வழமை. தமிழர் போராட்டம் அது சார்ந்த நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள இனவாதப் போக்கு என்ன கருதுகிறது என்பதனை அறிய அந்தப் பகுதி வழியாயிருந்தது.

சிங்கள இனவாத பத்திரிகையில் எழுதுபவர்கள் எதுவும் தெரியாத மடையர்கள் என்கிற கருத்து எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி இப்பொழுது முழுவதுமாக உறுதியாகி விட்டது.

அண்மைக் கால உதாரணங்கள் சிலவற்றைப் பாருங்கள்.

சுனாமியின் தாக்குதலுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தியொன்று கிளம்பியிருந்தது.

அத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது!

எல்லா இனவாத சிங்கள பத்திரிகைகளும் உள்ளிருந்து பார்த்தது போல எழுதத் தொடங்கின.

கருணாவின் தகவலின்படி புலிகளின் தலைவர் இருக்கின்ற இடம் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான இடம் தான். அவர் மீண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவை எழுதின.

புலிகளும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட அந்த இனவாதக் காகிதங்களுக்கு குஷி தாங்க முடியவில்லை. தாம் என்ன நடக்க வேணும் என்று எதிர் பார்க்கிறார்களோ அது நடந்தது போலவே எழுதிக் கிழித்தன.

அந்த மேசைப் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எங்கோ முல்லைத் தீவில் நடந்திருக்க கூடிய சம்பவத்தை பக்கத்தில் நின்று பாத்து எழுதினர்.

சில காலத்தின் பின்னர் சுனாமி மீள் கட்டுமானம் குறித்து புலிகளின் தலைவர் வெளிநாட்டு தமிழ் அறிஞர்களைச் சந்தித்தமை குறித்த செய்தியும் படங்களும் வெளிவந்த போது உண்மையில் அந்தப் பத்திரிகைகள் ஆற்றாமையினால் வெம்பியிருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவே இல்லை!

அந்தப் புகைப்படத்தில் இருப்பது பிரபாகரன் இல்லை. அவர் போலத் தோற்றமுடைய இன்னொருவர். என்று அவை செய்தி எழுதின.

இனி இல்லை என்று சொல்லக்கூடிய மடத்தனத்தில் அந்தச் செய்திக்கு அவை சொல்கின்ற காரண காரியங்கள் இருந்தன.

அதாவது

உண்மையில் பிரபாகரன் இறந்து விட்டார். கிட்டத் தட்ட அவரைப் போல இருக்கின்ற 6 பேரை பொட்டம்மான் தெரிவு செய்து பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து உரு மாற்றியிருக்கிறார். வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் வரும் போது அவர்களோடு எப்படி பேசுவது என்பதை பொட்டம்மான் நெறிப்படுத்துகிறார்.

இதனாலேயே அடிக்கடி பிரபாகரன் மீசையோடும் மீசையற்றும் தோன்றுகிறார். அது தவிர இறந்து போன புலிகளின் தலைவருக்கு கையில் ஒரு பெருவிரல் இல்லை. ஆனால் தற்போதுள்ளவருக்கு அது இருக்கிறது. ஆக மொத்தத்தில் புலிகளின் தலைவர் சுனாமியில் இறந்து விட்டார்.
என அந்த பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இன்று வரைக்கும் அதையே எழுதி வருகின்றன.

உண்மையை சொல்லுங்கள். இது ஒரு மாற்றுக் கருத்து. அதனைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

அண்மையில் கௌசல்யன் கொலை குறித்த ஒரு கற்பனை ஆக்கத்திலும் தலைவர் இப்போது இல்லை. ஆகவே நீ எங்களோடு வந்து இணைந்து விடு என கருணா தரப்பிலிருந்து கௌசல்யனைக் கேட்டதாக எழுதியிருக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கும் மடத்தனமான கருத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இது இரண்டாவது வகை.

---மாற்றுக் கருத்துக்களை காது கொடுத்து கேட்கின்ற அதே வேளை அந்தக் கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களேயாதலால் அவையும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை உணர்ந்து கொள்கின்ற அதே வேளை அந்த கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்தக்களேயாதலால் அவற்றில் உள்ள நியாயத் தன்மையும் உணர்ந்து கொள்ளப் பட வேண்டும்---

நான் சொன்ன வடிகட்டின மடைத்தனமான கருத்துக்களை எழுதி தங்களையும் பேயன்களாக்கி வாசிக்கிறவர்களையும் விசரர் ஆக்க முயற்சிக்கிற பத்திரிகைகளை நினைத்தால் கோபம் வருகிறது.

அதை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்களை நினைத்தால் கவலை வருகிறது.

பின்குறிப்பு: நடப்பது யுத்தம்! இதிலே இவ்வாறான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. புலிகள் மட்டும் இப்படி எழுதியதே இல்லயா என்று யாராவது கேட்டுப் பின்னூட்டம் இடுவார்களோ தெரியவில்லை.

13.3.05

ஞாபகிக்கையில் 1

நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.

அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.

அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!

எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.

'என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்."

அவளுக்குத் தெரியாது!

வீதியின் வளைவுகளில் மறைந்திருந்து அவள் வருகை தெரிய ஓடிப் போய் அப்போது தான் வருவதாய் அவன் உணர்த்துவது அவளுக்கு தெரியாது.

நடக்கின்ற அந்த பத்து மணித்துளிகளில் அவர்கள் அரசியல், குண்டு வெடிப்புக்கள், சினிமாக்கள் என்று பலதும் பத்தும் பேசிக் கொள்வார்கள்.

ஒரு காலை!

நடக்கின்ற வழியில் மழை தூறத் தொடங்கியது!

குடை எடுத்து விரித்தாள் அவள்.

அவன் மேல்த் தூறல்கள் விழத் தொடங்கின

லேசாய் இடித்தது! காலைக் குளிரில் மழையின் குளிர் வேறு! மின்னல் தெறித்தது. தெறிப்பில் அவள் முகம்.... (டேய் கதையைச் சொல்லடா )

'......" பெயர் சொல்லி அழைத்தாள் அவள்.. என் பெயர் இத்தனை அழகா என்று அவன் நினைக்க முன்பாக (ஐயோ.. ஐயோ..) அவள் சொன்னாள்.

'மனசுக்குள்ளை ஒண்டுமில்லாட்டி குடைக்குள்ளை வாங்கோ"

'மனசுக்குள்ளை ஒண்டும் இல்லாட்டி????"

குடைக்குள் போகாமல் மனசுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என உணர்த்தலாமா?

அல்லது மனசுக்குள்ளை கிடக்கிறது மண்ணாங்கட்டி! கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோமா?

ஆயிரம் சிந்தனைகளோடு அவன்!

ஆனால் தூறலடித்த மழை அப்பவே நின்று போனது! மழையாக பொழியாமல்...

அவள் குடையை மடித்து வைத்துக் கொண்டாள்!

உடனடிக்கு நினைவுக்கு வராத மழைக்குப் பொறுப்பான கடவுள் மீது கோபம் வந்தது அவனுக்கு.

நாசமாப் போக!!!

12.3.05

உயிராய்.. உணர்வாய்




பொதுவாவே எனக்கு கொஞ்சம் மென்மையான பாட்டுக்கள் கூடப் பிடிக்கும். துள்ளல் பாட்டுக்களை விட!

போன கிழழை ஒரு பாட்டு ஒண்டு பாக்கவும் கேட்கவும் கிடைச்சது. அதிலை என்ன வித்தியாசம் எண்டால்.. அது ஒரு காதல் பாட்டுத்தான்.. ஆண் குரல் சிங்களத்திலையும் பெண் குரல் தமிழிலையும் இருக்கிறது தான்.

என்னவோ கேட்ட உடனை பிடிச்சிட்டுது எனக்கு. வீட்டிலை இப்ப அது தான் அடிக்கடி போற பாட்டு.

சினிமா பாட்டெண்டால் சொல்லிட்டு விட்டிடலாம். எப்பிடியும் நீங்களும் கேப்பியள். இது கொஞ்சம் வித்தியாசம் தானே.. அது தான் இதிலை ஒலி வடிவிலை இணைச்சிருக்கிறன். எங்கை காணவில்லை எண்டு தேடுறியளோ?

வரும். வரும் என்ரை கதை முடிய பாட்டு வரும். நானும் கொஞ்சம் கதைக்கிறேனே!

பாட்டை பாடியிருக்கிறது சந்துஷ் பார்த்தி மற்றது நிரோஷா.. சிங்களப் பாடகியான நிரோஷா சிறீலங்கால பேசப்படுற ஒரு ஆள். அவ ஏதோ ஒரு தென்னிந்திய தமிழ்ச் சினிமாவிலையும் பாட்டொன்று பாடியிருக்கிறா!

மற்றது இலங்கையிலை சமாதானம் வேண்டி வெண்புறாவை வரச் சொல்லியும் ஒரு பாட்டு அவ பாடினவ. பாட்டு பாடி பத்து வருசமாயிருக்கும். வெண்புறா தான் இன்னும் வரேல்லை.

அதை விடுவம். இந்தப் பாட்டு ஆராலை எனக்கு கிடைச்சது எண்டதை நான் சொல்லாமல் விடேலாது. அப்பிடி விட்டால் நண்பன் எண்ட பேரிலை ஒராள் வந்து உங்களுக்கு நன்றி சொல்லுற பழக்கம் எல்லாம் கிடையாதோ எண்டு பின்னூட்டம் எல்லாம் விடுவார்.

அதனாலை இந்தப் பாட்டை எனக்கு வீடியோ வடிவில் அனுப்பினது சேயோன். அவருக்கு என்ரை நன்றி.

அகலப் பட்டையா பாட்டையா எண்டு தெரியேல்லை. எதுவோ அந்தப் பட்டை வைச்சிருக்கிறாக்கள்.. குடுத்திருக்கிற இந்தச் சுட்டியிலை போய் வீடியோவையும் தரவிறக்கி பாக்கலாம். நல்ல ஒளிப்பதிவு.

சரி. தொடர்ந்து பாட்டைக் கேளுங்கோ!!!

திறந்த வெளிச் சிறை


Image hosted by Photobucket.com


ஏற்கனவே எனது பதிவொன்றில் என்னைக் கவர்ந்த இவ்வொளிப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணத்தின் நிலையை துல்லியமாக இப்படம் உணர்த்துகிறது.

ராணுவ முட்கம்பி வேலிகள், சுருள் கம்பிப் பாதுகாப்பு என்பவற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் குறியீடுகள் என கருதக்கூடிய யாழ் நூல் நிலையம் (இதுவே 81 இல் எரிக்கப்பட்டது) தந்தை செல்வா நினைவுத்தூபி மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் என்பன தெரிகின்றன.

சுற்றி வர ராணுவ வேலி! நடுவில் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைக்கூடமாக!

படப் பதிவு திரு

11.3.05

சுதந்திர வேட்கையும் 800 டொலரும்

மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும்.

பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை.

ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும்.

பொதுவாக அந்த வேலை ஒப்பீட்டளவில் இலகுவானது தான். ஆனால் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக இரவுகளில்!

மொத்தமாக எரிபொருள் நிரம்பும் 30 இயந்திரங்கள் இருக்கின்றன. உள்ளே உட்கார்ந்திருந்து எந்த இயந்திரம் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானிக்க வேண்டும்.

அப்படி பயன்படுத்தியவர்கள் எல்லோரும் உள்ளே வந்து கட்டணம் செலுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஏதாவது சந்தேகத்திற்கிடமானவர்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தால் அவர்களது வாகனத்தின் இலக்கத்தை குறித்துக் கொள்ள வேண்டும். (சந்தேகத்திற்கிடமானவர்களை எப்படி அடையாளம் காண்பது என எனக்கு இன்னமும் தெரியவில்லை)

எரிபொருள் நிரப்பி விட்டு உள்ளே பணம் செலுத்த வருபவர்களிடம் மகிழ்ச்சியாக நாலு வார்த்தை பேசி விட்டு கணணித் திரையில் காட்டப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டணத்தை பணமாகவோ Cards மூலமாகவோ அறவிட்டு விட்டு see ya சொல்லி அனுப்பி விட்டு Next please சொல்ல வேண்டியது தான்.

வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்திலேயே ஒஸ்ரேலியாவில் திருடர்கள் தான் அதிகம் என ஒஸ்ரேலியரான Boss சொல்லி விட்டார். அது என்னை அவதானமாக இருக்க சொல்லிய அறிவுறுத்தல்.

இருப்பினும் குட்டி குட்டியாக தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அந்தப் பெரியயய தவறு நடக்கும் வரை!

ஆரம்பத்தில் 40 டொலர் செலுத்த வந்த ஒருவரின் கடன் அட்டையிலிருந்து இலக்கம் அழுத்துகையில் தவறுதலாக 400 டொலரினை அறவிட அந்த வாடிக்கையாளர் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்.

தவறு என்னுடையது தான் மிகுதி மேலதிக தொகையை பணமாக தந்து விடுகிறேன் என சொல்லியும் அந்த நண்பர் என்னை விடுவதாகவில்லை.

கடந்த வாரத்துக்கு முந்திய வாரத்தின் புதன் கிழமை. அது எனது இரவு வேலை நாள்.

இரவு பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. பொதுவாக 12 மணிக்கு பின்னர் அதிகாலை 4 மணிவரை அமைதியாக இருக்கும். பெரியளவில் யாரும் வர மாட்டார்கள்.

முடிந்த நாளுக்கான வரவு செலவுகளை கணணி முடித்துத் தர எல்லாம் கிட்டத்தட்ட (மிகச் சரியாக எனக்கு ஒரு போதும் அது இருந்ததில்லை) சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு.....

விட்டு..... நான் அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கையை (இரண்டாம் தரம்) வாசிக்க தொடங்கினேன்.

தமிழகத்துடன் இந்தியாவுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தொடர்புகள் அரசியல் வாதிகளின் உதவிகள் என அது ஆர்வமாய்ச் சென்றது.

ஒரு 30 நிமிடம் கழிந்திருக்குமோ?

எதேச்சையாக கணணித்திரையை நோக்கினேன். எரிபொருள் நிரப்பும் இயந்திரங்கள் 27 மற்றும் 29 இலிருந்து மொத்தம் 800 டொலருக்கு டீசல் அடிக்கப்பட்டிருப்பதாக அது சிவத்த எழுத்தில் சொன்னது.

அப்பவே சின்னதாக ஒரு பதட்டம் மனதில் குடி கொண்டு விட்டது.

விழுந்தடித்துக் கொண்டு எழுந்து இயந்திரங்களைப் பார்த்தேன்.

அங்கு எவருமோ எந்த வாகனமுமோ இல்லை.

கடவுளே.. 800 டொலர்!! எப்போதாவது யாராவது இருபதோ முப்பதோ டொலரிற்கு எரிபொருள் நிரப்பி விட்டு பணம் தராமல் ஓடக்கூடும் என்று ஏற்கனவே எண்ணியிருக்கிறேன். ஆனால் அது இப்படி 800 டொலர்களாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.

800 டொலர்களிற்கு டீசல் அடித்துச் செல்வதென்றால் அது சிறிய வாகனமாக இருக்காது. ஏதாவது பார ஊர்தியாகத் தான் இருக்கும். அப்படியான ஒன்று வந்து செல்லும் வரை சுரணை அற்று இருந்திருக்கிறேனே என்று என் மேலே கோபம் வந்தது.

காலை 7 மணிக்கு Boss வந்தார். பொதுவாகவே கலகலப்பாக பேசுபவர். இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் தொண்டை வரள வரள தண்ணி குடித்து குடித்து நடந்ததை விபரித்தேன்.

நித்திரை கொண்டு விட்டதாகத் தான் சொன்னேன். (சுதந்திர வேட்கை! மூச்!)

எவ்வளவு காசு என்று அவர் கேட்கும் வரை இயல்பாகத் தான் இருந்தார். ஒரு வேளை 20 அல்லது 30 ஆக இருக்க கூடும் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

800 டொலர் என்று சொன்னேன்.

மனிசன் தலையிலை கை வைச்சிது. நான் முழிசிக் கொண்டு நிண்டன்.

என்ன செய்யப் போகிறாய்?

எனக்கு எங்கேயிருந்தோ அவசரமாக பதில் வந்தது. என்னிலை தான் பிழை. ஆகவே எனது சம்பளத்திலை இருந்து எடுத்துக் கொள்ளுங்கோ.

எனக்கென்னவோ அப்பிடிச் சொல்வது தான் எனக்கு மரியாதையாகப் பட்டது.

சொல்லி விட்டேனே தவிர மனசுக்குள் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. கண்முழித்து (சுதந்திர வேட்கை படித்து??) உழைத்த சம்பளம். அநியாயமாய்ப் போயிட்டுதே என்ற கவலை.

அதன் பின் கடந்த வாரம் எனக்கு பதில் இன்னுமொருவரை அனுப்பி வைத்து விட்டு நான் வேலைக்கு லீவு போட்டிருந்தேன்.

நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு! boss பேசினார். நீ இன்னும் சம்பளம் எடுக்க வில்லையா?

எனக்கு சம்பளம் வங்கிக் கணக்கிற்கெல்லாம் போவதில்லை. (அதெல்லாம் Tax சம்பந்தப் பட்ட விடயங்கள். கண்டு கொள்ள வேண்டாம்) எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தோமோ அதற்கேற்றவாறு சம்பளம் அங்குள்ள ஒரு இடத்தில் வைக்கப் படும். வாரா வாரம் அதிலிருந்து எடுக்க வேண்டியது தான்.

இல்லை என்றேன் நான்.

சரி நான் வைத்திருக்கிறேன். வந்து எடுத்துக் கொண்டு போ... என்று துண்டித்து விட்டார் அவர்.

ஆஹா...

9.3.05

பதில் தருமா உலகு





தமிழ் மக்களின் மனிதாபிமான அவசர பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதான புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி பகிரங்க பேச்சுக்களுக்கு அரசு தயார்!

இலங்கையில் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க இது சரியான தருணம் அல்ல. புதுடில்லியில் கதிர்காமர் தெரிவிப்பு

இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேசி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் உடனடியாக அரசிலிருந்து விலகுவோம் ஜே வி பி யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எச்சரிக்கை.

சமஷ்டித் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன். சந்திரிகா சபதம்.

மேற்குறித்த செய்திகள் கடந்த சில நாட்களுக்குள் குறித்த இடைவெளிகளில் இலங்கை அரசியல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில செய்திகள்.

மூன்றாம் தர அரசியல் நாகரீகம் பின்பற்றப் படும் நாடுகளில் ஓர் இறுதி முடிவு குறித்து ஆளும் கட்சிகள் எதிர்க் கட்சிகள் எதிரிக்கட்சிகள் என்பவற்றுக்கிடையில் எழும் முரண்கள் தான் இவை என எவரேனும் நினைப்பின் அது தவறு.

இலங்கையை ஆளும் சிறீலங்கா மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கூட்டுக் கட்சியின் பல்வேறு பட்ட தரத்து நிலையிலானவர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு என்னும் பொது விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களே இவை. தெளிவான ஒருமித்த கருத்தேதும் இன்றி ஆளாளுக்கு வாய்க்கு வந்த படி இனப்பிரச்சனை தொடர்பாக செய்தி வெளியிடுகின்ற கேலிக் கூத்தே அது.

இறுதிக் கட்டத்தில் இது தமிழர் தரப்பில் இப்படி ஒரு சந்தேகமாக எழுந்திருக்கிறது. அதாவது நகர்த்தப்படாமல் இழுபட்டுக்கொண்டு போகின்ற சமாதாப் பேச்சுக்களுக்கு காரணம் கேட்கும் உலக நாடுகளுக்கு தமக்கிடையேயான உள் முரண்பாடு தான் காரணம் எனக்கூறி தொடர்ந்தும் இதனை இவ்வாறே இழுத்துச் செல்ல அரசு திட்டமிட்டு முயல்கிறதா என்பதே அது.

இது தவிர ஜே வி பி க்கும் சந்திரிக்கா கட்சிக்கும் இடையிலான இம் முரண்பாடு அடுத்த தேர்தலுக்கான பங்குப் போட்டியின் வெடிப்பாகவும் இருக்க கூடும்.

எதுவாகவேனும் இருக்கட்டும். யுத்தம் வன்முறையானது. அது பயங்கர வாதமானது. அது மனித நேயமற்றது. அதைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம் என புலிகளுக்கு ஆலோசனை விடுத்த சர்வதேச நாடுகள் இப்பொழுது என்ன சொல்லப் போகின்றன என்பதே கேள்வி

கடலின் பசு

பாக்கு நீரிணை கடற்பரப்பு, மன்னார் வளைகுடா மற்றும் ஹவாய்த் தீவுகளில் மட்டுமே வாழ்கின்ற அருகி வருகின்ற ஒரு உயிரினம் இக் கடற்பசு. ஈழக் கடலின் தனித்துவமான பெரிய உயிரினங்களில் ஒன்றான இது Dugong எனப்படுகிறது.

தாவர உண்ணி என்பதனாலேயே அதிகம் பவளப் பாறைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த ஈழத்தின் மேற்குக் கடல் பகுதியில் இவ்வுயிரினம் வாழ்கிறது.

ஆகக் கூடியதாக 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது.

இரண்டு சிறு குறிப்புக்கள்

மன்னாரில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வொன்றில் கண்டு பிடிக்கப் பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்திய கற்கோடரி ஒன்றில் கடற்பசுவின் எலும்பு பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அண்மையில் யாழ்ப்பாண கடற்பரப்பில் இவ்வகை கடற்பசு ஒன்று இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.

பட உதவி திரு


Image hosted by Photobucket.com

8.3.05

ஆமியும் அரிசியும்

இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்திலை ஒரு குறிப்பிட்ட காலத்தில உணவுத் தட்டுப்பாடு இருந்தது. முருங்கைக்காய் கறி, இலைக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக எல்லோரது சமையலிலும் இருக்கும்.

பாணுக்காக அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டியிருக்கும்!
ஆட்டுக்கால் விசுக்கோத்து (பிஸ்கற் என்பதன் சரியான தமிழ் வடிவம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?) என்ற ஒரு வகைப் பாண் அப்ப ரொம்ப பிரபல்யம். கொஞ்சம் பிந்திப் போனாலும் பாண் முடிந்து அந்த ஆட்டுக் கால் விசுக்கோத்துத் தான் கிடைக்கும்.

எனது பெரியப்பா விடிய வெள்ளனவே என்னையும் ஏற்றிக் கொண்டு சைக்கிளில் பறப்பார். சில வேளைகளில் பாண் கிடைக்கும். சில வேளைகளில் ஆட்டுக்கால் விசுக்கோத்துத்தான்.

இதற்கிடையில் பங்கீட்டு அடிப்படையில் இந்திய ராணுவமே உணவு வழங்க தொடங்கியது. அரிசி மா சீனி பருப்பு மற்றும் எண்ணெய் என்பன வழங்கப்பட்டன.

பொதுவாக இள வயதுள்ளவர்கள் இவற்றை வாங்க செல்வதில்லை. வயது போனவர்கள் தான் அதிகம் போவார்கள்.

எப்போதெல்லாம் ஆமி சாமான் குடுக்குதாம் என்று கேள்விப் படுகிறோமோ ( ஒழுங்கு முறையில் வழங்கப்படுவதில்லை.) ரண்டு மூன்று பைகளை எடுத்துக் கொண்டு ஓடுவது தான் எங்களுக்கு வேலை.

அப்ப சிறுவர்கள் தான் ரொம்ப Busy..

யாராவது இளம் வயதுள்ளவர்.. அல்லது கொஞ்சம் வலுவான தோற்றமுள்ளவர் எங்காவது தூர இடங்களுக்கு போவதென்றால் ஒரு சிறுவனையோ சிறுமியையோ தன்னுடன் கூட்டி செல்வார்.

அப்ப தான் ஆமி ஒண்டும் செய்யாது எண்ட ஒரு ஐதீகம்!!!

எங்காவது ஒரு சந்தியில் ஆமி எல்லாரையும் மறிக்கும். எல்லாரும் இறங்கி உருட்டிச் செல்ல வேணும். ஒரு இடத்தில ஒருவர் முகத்தை முழுவதுமாக மறைத்து நிற்பார். அவரைப் பார்த்தவாறு நடந்து செல்ல வேண்டும்.
அவர் இல்லை என்று தலையாட்டினால் மேற்கொண்டு போகலாம். ஆம் என்றால் அவ்வளவும் தான்.

அப்படி தலையாட்டுபவரை தலையாட்டி என்று செல்லமாக கூப்பிடுவோம்.

சந்தியிலை தலையாட்டி நிற்குதாம் வேறை றோட்டாலை போங்கோ இப்படி அடிக்கடி யாராவது சொல்ல கேட்கலாம்.

அந்தத் தலையாட்டி தன்னுடைய எந்த சொந்தப் பிரச்சனையை - அது காணிப் பிரச்சனையோ ,வேலிப் பிரச்சனையோ - மனசில் வைச்சும் தலையாட்டலாம். அப்படி தலையாட்டினால் அதுவே முடிந்த முடிவு.

இவ்வாறான ஒரு அதி நம்பகத்தன்மை வாய்ந்த எதிரிகளைக் கண்டறியும் (கண்டறியாத!!!) முறையினை ராணுவம் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

சிலர் சிறுவர்களை விட குழந்தைகள் இன்னும் பிரயோசனமானவர்கள் என்று கருதி யாருடை குழந்தைகளையாவது தூக்கி செல்வதுமுண்டு.

வெயிலில் குழந்தைகள் அழ கூடிய சீக்கிரம் தங்களை ஆமி விடும் என்கிற ஒரு நம்பிக்கை!

இவ்வாறான ஒரு புறச் சூழ்நிலையில் !!! நானும் ஆமியிடம் சாமான் வாங்க போனேன்.

வழமையாக நானும் பெரியப்பாவும் தான் போவது வழக்கம். சில நேரங்களில் அம்மம்மாவும் வருவா.

வட்டுக் கோட்டைச் சந்தியில் சாமான் குடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட வரிசை

ஒரு ஆமி மா குடுக்கும். (அவர் முழுதும் வெள்ளையாய் நிற்பார்). இன்னொருவர் அரிசி. (இப்பிடி அரிசி எண்டு எழுதும் போது பசிக்கு அரிசி என்ற பதமும் வாய்க்கு அரிசி என்ற பதமும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது.)

நாங்கள் ஒரு ரண்டு மணித்தியாலமா வரிசையில நிற்கிறம். எங்கடை முறை வர இன்னும் நேரமிருக்கு. இதுக் கிடையில எங்கட அம்மம்மா ஆமிக்கு கிட்ட போய் என்னைக் காட்டி சின்னப் பிள்ளையோடு வந்திருக்கிறன். (அப்ப நான் சின்னப் பிள்ளை !) கெதியா விட முடியுமோ எண்டு கேட்டா. அதுக்கு அந்த ஆமி மற்ற எல்லாரையும் காட்டி ஏதோ சொன்னான்.

ம்.. வந்திருந்த முக்கால்வாசிப் பேர் குழந்தைகளோடும் சிறுவர்களோடும் தான் வந்திருந்தவை.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கிட்ட வந்திட்டம். எனக்கு கால் வேறை உளையுது. நான் சிணுங்க பெரியப்பா சினக்கிறார்.

சரியா கிட்ட வராட்டிலும் இண்டைக்கு சாமான் வாங்கிடுவம் எண்டு நம்பிற அளவுக்கு கிட்ட வந்தாச்சு.

திடீரென்று ஒரு ஜீப்பொண்டு வந்து நிண்டது. அதிலை இருந்து பட படவெண்டு குதிச்சினம். எல்லாம் இழுத்துப் பூட்டிச்சினம்.
அந்தக் காம்பிற்கு அடுத்த காம்பில பொடியள் கிரேணைட் எறிஞ்சு ரண்டோ மூண்டு ஆமி செத்துப் போச்சுதாம். அதுவும் இங்கையிருந்து போய்த்தான் எறிஞ்சவங்களாம். எல்லாரையும் உடனை செக் பண்ண தொடங்கினாங்கள்.

சாமான் தருவதை நிப்பாட்டியதாயும் இன்று போய் இனி நாளை வரும் படியும் சொன்னார்கள். (இராம நாட்டிலிருந்து வந்தவர்கள் தானே! இதைச் சொல்லத் தான் நேற்றொருவர் பகிடியாய்ச் சொன்னது நினைவுக்கு வருது. இலங்கைக்குள் நுழைந்த முதல் றோ உளவாளி அனுமர் தானாம்.)

பிறகென்ன.. நான் வெயில் என்று சிணுங்க பெரியப்பா தலையிலை ரண்டு தட்டு தட்டி கூட்டிக் கொண்டு போனார்.

நான் சிணுங்கியதால் தட்டினாரா அல்லது சாமான் தரவில்லை என்று தட்டினாரா என்று தெரியவில்லை.

பிற்குறிப்பு: பலதடவைகள் இப்படி இடை நடுவில் வந்திருக்கிறோம். இப்படி ஏதாவது நடந்திருக்கும். அல்லது சாமான் முடிந்திருக்கும். இருந்தாலும் இன்று போய் இனி நாளை வா என்று சொன்னாலும் நாளை போய் வென்று வந்த சம்பவங்களும் இருக்கிறது.

பெருக்க மரம்

இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.

தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.
பட உதவி தி. தவபாலன்


Image hosted by Photobucket.com

6.3.05

என்னான்றே நீ என்னான்றே

என்னான்றே நீ என்னான்றே
என்னான்றே நீ என்னான்றே

வன்னிக்காட்டு வரிச்ச புலி அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன் - எதிரிக்கு
தண்ணி காட்டும் தலைவன் எங்க அண்ணேன்றேன்
எங்க அண்ணேன்றேன்

ஏ... நெல்லியடி நெத்தியடி
மில்லரடி சொல்லியடி
அண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்

ஆனையிறவு தெரியுமா
அடிச்ச அடி புரியுமா
என்னான்றே நீ என்னான்றே

அன்பில தான் பஞ்சடா
அசராத நெஞ்சடா
அண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்
........................

இது நான் புதுசாக கேட்ட ஒரு புலிகளின் இயக்கப் பாட்டு! அறிவுமதி எழுத பாடியிருப்பவர் தமிழக பின்னணி பாடகி மாலதி.

விடுதலை கானங்களில் இப்பாடல் ரகம் ஒரு புது மாதிரியாக எனக்கு தோன்றுகிறது.

சிலர் தங்களை இப்பாடல் கவரவில்லை என்கிறார்கள். சிலர் அட்டகாசம் என்கிறார்கள்.

எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் பாடியவர் மாலதி என்பதனாலேயோ என்னவோ கூடவே மன்மதராசா பாடலும் நினைவுக்கு வருகிறது.





மேலே பாடல் வரல்லையா ?இந்தச் சுட்டியை அழுத்தி நீங்களும் கேட்டு பாருங்கள். இணைப்பிற்கான நன்றி - தயா ஜிப்ரான் இணையத்தமிழ்