29.8.05

முதலாளியின் அப்பா

என்னுடைய வேலை அனுபவத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தாரா வின் ஒரு பதிவினை பார்த்த பிறகு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அது கட்டாயம் எழுதப்பட்டேயாக வேண்டும் என்ற முடிவினை எட்டியது. அதாகப்பட்டது,

ஒஸ்ரேலியா வர முன்பே அங்கு போனால் ஏதாவது பகுதி நேர வேலை செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது கிடைக்கும் நேரத்தை பயனாக செலவழிக்கலாம் என்பதனால் அல்ல அதுவே கட்டாயமும் என்பதனாலும் ஆகும்.

ஆக இங்கு வந்து ஆரம்பத்தில் அதிகம் யாரையும் அறியாமல், சரியான சாப்பாடு இல்லாமால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அக்காலத்திலும் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதை நான் விடவில்லை. ஆனால் வேலை தரும் நேரத்துக்கு நான் போக வேண்டும் என்ற யதார்த்தை முறித்து எனக்கு வசதிப்படும் நேரங்களிலேயே என்னால் வேலைக்கு போக முடியும் என்பதனால், நிறைய வாய்ப்புக்கள் கைவிட்டுப் போய்க்கொண்டிருந்தன.

இந்த காலத்தில் தான் அந்த அண்ணா எனக்கு அறிமுகமானார். இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு Petrol Station இல் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். பார்க்கும் எவரிடமும் ஏதாவது வேலைக்கு சொல்லி வைத்துக்கொண்டிருந்ததனால் அவரிடமும் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என சொல்லியிருந்தேன்.

பகுதி நேரமாக பலதரப்பட்ட வேலைகள் உதாரணமாக தொழிற்சாலைகளிலோ அல்லது சுத்தீகரிப்பு வேலைகளோ எடுக்கலாம் எனினும் படிக்கும் மாணவர்களுக்கு உடல் அலுப்பு தராத வேலைகளே பொருத்தமாயிருக்கும் என்பதனால் அவ்வாறான ஒரு வேலைக்கு என்னை முயற்சிக்க சொன்னவர் எனது தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி கொண்டார்.

கடந்த வருடம் September மாதத்தில் முதல் வாரம்!

அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

'என்ன மாதிரி வேலை வேணுமோ'

'ஓ.. ஓ..' நான் நாக்கை தொங்கப்பட்ட நாய் மாதிரி பதில் சொன்னன்.

'சரி நான் வேலை செய்யிற Petrol Station க்கு நாளைக்கு மத்தியானம் போல வாரும்'

அந்த Station அதிஷ்ட வசமாக எனது வதிவிடத்துக்கு மிக அருகில் இருந்தது. அடுத்த நாள் மத்தியானம் நான் அங்கு ஆஜர்.

அந்த Station இன் Boss ஒரு ஒஸ்ரேலியர். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

'English எல்லாம் எப்பிடி என்று Boss கேட்டார்.

'அதெல்லாம் சமாளிக்கலாம் என்று நான் சொன்னேன்.

Computer பாவனையஜன' பழக்கம் என்ன மாதிரி என்று கேட்டார்.

'அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று நான் சொன்னன்.

சரி! அவ்வளவும் தான். எனக்கு வேலை கிடைத்து விட்டது. 2 வாரங்கள் பயற்சிக்கு சென்றேன். அதன் பின்னர் எனது கடமை ஆரம்பித்தது.

எனது படிப்பு தவிர்ந்த, எனக்கு வசதிப்பட்ட நேரங்களில் நேரம் ஒதுக்கி தந்தார் அந்த அண்ணா.

எங்களது Station எரிபொருள் தவிர்ந்த உள்ளே உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்கள் எல்லாம் கொண்ட ஒரு கலவைக் கடை.

உணவுப்பொருட்கள் வேலை செய்பவர்களுக்கு இலவசம்! இது மட்டும் போதுமே எங்களுக்கு. பலருக்கு ஒவ்வொரு நாளுக்குமான உணவே கடையில் தான் கழிந்தது. உண்மையைச் சொன்னால் ஒரு கட்டத்தில் அளவு கணக்கு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரை நான் வேலை செய்யும் நாட்களில் கட்டாயமாக ஒரு ஐஸ்கிரீம், ஒரு குளிர்பானம் இன்னும் சில இனிப்பு வகைகள்.. இது தான் எனது மெனு.

வேலை செய்யும் நாள் மட்டும் தான் என்றில்லை. எனக்கு வெலை இல்லாத நாட்களிலும் நான் வீடு வரும் வழியிலேயே கடை இருப்பதனால் உள்ளே சென்று ஏதாவது எடுத்து சாப்பிட்டுக்கொண்டோ குடித்துக் கொண்டோ தான் வருவேன்.

இப்படியிருக்க எங்களது Boss ஒரு நடைமுறை கொண்டு வந்தார். நாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறொம் என்பதை அறிய (அதிகார பூர்வமாக அறிய) ஒவ்வொருவரும் எடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துக்குமான விலைப்பட்டியலை எடுத்து மொத்த தொகையை Station Use Account இல் போட வேண்டும். இது எங்களுக்கு சினத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி பேசாமல் இனி இலவசமாய் எடுப்பதை நிறுத்தி எடுக்கும் பொருட்களுக்கு காசு கொடுப்போமா என்று யோசித்தாலும் பிறகு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தோம்.

எங்களது கடையில் Boss ம் அவரது மனைவியும் மதியம் 1 மணி வரை நிற்பார்கள். மொத்தம் 2 Counter. அதில் ஒன்றில் 1 மணி வரை மனைவி நிற்பார். Boss கணக்கு வழக்குகள் சரி பார்ப்பார்.

அந்த ஒரு மணி வரைதான் அது ஒஸ்ரேலியருக்கு சொந்தமான கடை. அதன் பிறகு அது எங்களது கடை. அங்கு வேலை செய்கின்ற எல்லோருமே இலங்கையர்கள். அங்கு வேலை செய்பவர்கள் மூலமாகவே புதிதாக வருபவர்கள் இணைவதனால் இது தொடர்ந்தும் சாத்தியமாயுள்ளது.

வாரமொருநாள் நான் திங்கட்கிழமைகளில் இரவு வேலை செய்கின்றேன். இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை. மிகச் சரியாய் நேரங்களை பிரித்து செய்வதனால் இலகுவாக செய்ய முடிகிறது. 12 மணிக்கு அந்த நாளுக்கான கணக்கு வழக்குகளை முடித்து 3 மணி வரை வருகின்ற பால் பாண் முதலானவற்றை சரிபார்த்து வைத்தேன் என்றால் 3 மணிக்கு தொலைபேசியோடு ஐக்கியமாகி விடுவேன். இங்கே மூன்று மணியென்பது ஐரோப்பிய நாடுகளில் மாலை 7 மணி. ஆறுதலாக இருந்து கதைப்பதற்கு அவர்களுக்கு ஏற்ற நேரம்.

காலை 5.30 இலிருந்து 7 மணி வரையும் தான் சரியான நெருக்கடியாக இருக்கும். அதையும் முடித்தால்... சரி..

அதே போல வியாழக்கிழமைகளில் மதியம் 12 மணியிலிருந்து இரவு 9 மணி வரை. இருவர் வேலை செய்வோம். அரசியல் பேசி வாழ்க்கை பற்றி பேசி, வந்து போகும் நபர்களை பற்றி புறம் பேசி இப்படிப் போகும் பொழுது..

அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலிருந்து மதியம் 3 மணிவரை. இந்த Shift ஐ நான் விரும்பி எடுத்தேன். குட்ட நெருக்கடியே இருக்காது. தவிர ஞாயிற்றுக் கிழமை Boss ம் மனைவியும் வரமாட்டார்கள். Boss இன் அப்பா தான் வருவார்.

முதியவரான அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தீகரிப்பு வேலைகளில் ஈடுபடுவார். பழகுவதற்கு நல்லவர். கிறீக் நாட்டை சேர்ந்தவர். (ஒஸ்ரேலியாவில் மூன்றிலொரு பங்கினர் கிறீக் மொழி தெரிந்தவர்கள்). தாங்கள் நாடு பற்றி, தாங்கள் ஒஸ்ரேலியா வந்த காலங்கள் பற்றி சொல்லுவார்.

போன ஞாயிற்றுக் கிழமை.. அவர் மதியம் புறப்பட்டார். போகும் போது தான் பெற்றோல் அடிக்க போவதாக கூறினார். சரி அடியுங்கோ.. நான் Station use account இல் போடுறன் என்று சொன்னேன்.

உடனேயே மறுத்த அவர்.. அதெல்லாம் வேண்டாம்.. நான் வந்து காசு தருவன் என்றார். சொன்ன மாதிரியே வந்து காசும் தந்தார்.

வெளிநாடுகளில அவர்கள் தாங்கள் தங்களுடைய செலவுகளை பார்க்கிறார்கள் தான். ஆனாலும் வேலை செய்யும் நாங்களே எடுத்து சாப்பிட்டு விட்டு Station use என்று விட்டு வாறம். இவர் தன்ரை மகன்ரை கடையில வந்து பெற்றோல் அடிச்சிட்டு காசு தந்திட்டு போறார் என்று யோசித்துக் கொண்டிருந்தன்.

அந்த யோசினையோடையே வேலை முடிய ஒரு ஐஸ்கிரீமை எடுத்து Station use க்குள்ளை போட்டுவிட்டு வெளியேறினேன்.

23.8.05

லக்ஸ்மன் கதிர்காம (ர் இல்லை)

போன சனிக்கு முதல் சனிக்கிழமை!

முதல்நாள் வரை பாயாசம் காய்ச்சுவதாக இருந்த எண்ணத்தை கதிர்காமரின் இறப்புச் செய்தி கேட்டு கைவிட்டு விட்டம். ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தது தான் என்றாலும், நாளைக்கு கதிர்காமரின் இறப்பை பாயாசம் காய்ச்சி கொண்டாடினாங்கள் எண்ட பழிச்சொல் வரக்கூடாது பாருங்கோ!

அண்டைக்கு காலமை போல என்னோடை படிக்கிற என்ரை சிங்கள நண்பன் msn இல் Nudge ஒண்டை அனுப்பினான். நான் அப்ப போனில இருந்தன். அவரின்ரை Nudge க்கு பதிலேதும் சொல்லேல்லை.

மச்சான் லக்ஸ்மன் கதிர்காம கொல்லப்பட்டு விட்டார் எண்டான்.

நான் வேணுமெண்டே ஆரெண்டு கேட்டன்.

லக்ஸ்மன் கதிர்காம எண்டு திரும்பவும் அவன் சொன்னான்.

நல்லா குறிச்சுக் கொள்ளுங்கோ! அவன் லக்ஸ்மன் கதிர்காமர் எண்டு சொல்லேல்லை. ர் ஐ விழுங்கிட்டு கதிர்காம எண்டுதான் சொன்னவன்.

நான் அதைத்திருத்தி கடைசி R எழுத்தை Capital எழுத்தில் போட்டு அனுப்பினன்.

அங்கையிருந்து சிரிப்பு குறியொண்டை அவன் அனுப்பினான். கூடவே கதிர்காமர் ஒரு நல்ல மனிசர் எண்ட குறிப்பு வேறு!

சிங்கள மக்கள் கதிர்காமரை எப்படித் தங்களில் ஒருவராக பாக்கிறார்கள் என்பதுக்கும் அவரில எவ்வளவு நேசம் வைத்திருந்தார்கள் எண்டதுக்கும் இது ஒரு உதாரணம் எண்ட கோணத்தில தான் இந்த சம்பவத்தை நான் பாக்கிறன்.

கதிர்மாரை ஆர் கொலை செய்தது?

இது புலிகளின் வேலை இல்லை எண்டு என்னாலை அடிச்சு சொல்ல முடியாது. புலிகளும் புலிகளை ஆதரிக்கும் மக்களும் அவரை ஒரு துரோகியென்ற கண்ணோட்டத்துடன் அல்லது குறித்த ஒரு காலத்தில் போராட்டத்திற்கான ஒரு தடையாக இருந்தவர் என்ற ரீதியில் தான் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், கதிர்காமரை கொல்லுவதற்கு புலிகளுக்கு இருந்த காரணங்களைப்போலவே வேறு சில சக்திகளுக்கும் அவரைக் கொல்வதற்கு காரணங்கள் இருந்திருந்தன என்பதை பலரும் வசதியாக மறந்து போகினம்.

எனக்கென்னவோ இவ்வாறான ஒரு தாக்குதலை புலிகளால் மட்டும் தான் நடாத்த முடியும் எண்ட கோணத்திலதான் பலரும் புலிகளை நோக்கி கரம் நீட்டுகிறார்கள்.

முன்பு போலில்லாமல் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான நேரடித் தொடர்புகள் இருக்கின்ற ஒரு காலத்தில், அதைத் தொடர்ந்தும் பேண புலிகள் விரும்புகின்ற ஒரு சூழ்நிலையில் இப்பிடியான ஒரு காரியத்தை செய்ய புலிகள் முன்வருவினம் எண்டது சாத்தியம் இல்லாதது.

வேணுமெண்டால் புலிகள் சர்வதேச நாடுகளிடம் நம்பிக்கை இழந்து, நீங்கள் செய்யிறதை செய்யுங்கோ நாங்கள் எங்கடை வழியைப் பாக்கிறம் எண்டு முடிவெடுத்து, உலகம் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்ல எண்ட ஒரு நிலையில் இப்படியான காரியங்களில ஈடுபட கூடும்.

நிறைய பேர், கதிர்காமரின் கொலையை அடுத்து புலிகள் அப்பிடியொரு முடிவினை எடுத்து விட்டினம் எண்டுதான் ஆருடம் சொல்லியிருந்தவை. அதாவது யுத்தம் ஒண்டை தொடங்குறதுக்கு தயாராய் விட்டதாகவும் அவ்வாறெனில் அதற்கு தடையாக இருக்க கூடிய கதிர்காமரை அவர்கள் கொலை செய்திருக்கலாம் எண்டும் அவை சொல்லியிருந்தவை.

ஆனால் நிலைமை அப்பிடி இல்லை. புலிகள் இப்பவும் வெளிநாடுகள் சொல்லுறதை கேட்கினம் எண்டதுக்குக்கும் வெளிநாடுகளோடை ஒரு சுமுக உறவை பேண விரும்புகினம் எண்டதுக்கும் நல்ல ஒரு உதாரணம் சொல்லலாம்.

அதாவது பேசுவதாயிருந்தால் இடைக்கால நிர்வாக சபை மட்டும் தான் பேசுவம். அதை விட்டால் எதனையும் பேசத் தயாரில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த புலிகள் கதிர்காமரின் கொலையை அடுத்து யுத்தநிறுத்த நடைமுறைகள் குறித்து நோர்வே அனுசரனையில் இலங்கை அரசோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இணங்கியிருக்கிறார்கள். பேச்சுக்கள் வரும் வாரங்களில் ஒஸ்லோ நகரில் நடக்க இருக்கிறது என்கிறார்கள்.

இது புலிகளாக எடுத்த முடிவில்லை. ஏதோ ஒரு அல்லது கூட்டு வெளிச்சக்தி அன்பாக அல்லது அழுத்தமாக புலிகளை இந்த முடிவுக்கு இணங்கச் செய்திருக்கிறது.

யுத்தத்தை ஆரம்பிக்க முடிவெடுத்து கதிர்காமரை புலிகள் கொலை செய்திருந்தால், யுத்தநிறுத்தத்தை செம்மையாக நடைமுறைப் படுத்துவது தொடர்பாக பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? பேச்சுக்களுக்கு அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுச் சக்திகளுக்கு இணங்க வேண்டிய காரணம் என்ன?

ஏனெனில் புலிகள் உலக நாடுகளுடன் சுமுக உறவு பேண விரும்புகிறார்கள். தமிழீழ தேசிய விடுதலைப் போரின் இன்னொரு பரிணாமமாக உலக நாடுகளுடனான தொடர்பை, உறவை புலிகள் விரும்புகிறார்கள்.

வெளிநாடுகளின் அழுத்தம் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டிருக்கின்ற புலிகள் இவ்வாறான ஒரு கொலைக்குள் தெரிந்தும் காலை வைப்பார்களா?

சரி, அப்ப யார் செய்திருப்பினம்?

புலிகளை இவ்வாறான ஒரு அழுத்தத்திற்குள் தள்ளிவிட விரும்புகின்ற அல்லது இன்னும் நிறைய இலக்குகளில் இதனையும் ஒரு இலக்காக கொண்ட ஒரு சக்தியாக ஏன் இருக்க கூடாது?

அண்மையில் வசந்தனோடை கதைச்சு கொண்டிருக்கேக்கை ஒண்டு சொன்னன். இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லையாயின் எனக்கு இரட்டை சந்தோசம்.

ஒன்று புலிகள் செய்யாததற்கு!

18.8.05

கிட்டு மாமா பூங்கா

யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது.

எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான்.

அப்பிடியென்ன பிரமாதம் உலகில் இல்லாத பிரமாதம் என யாரும் கேட்கலாம். அப்படி எதுவும் இல்லைத்தான். ஆனால் யுத்த காலத்தில் எங்கள் வயதொத்த சிறுவர்களின் மகிழ்வுக்கான தளமாக அது இருந்தது.

யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தப் பூங்கா, புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டன. அதிலும் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு தூர்வாரப்பட்டது.

இம்முறை கிட்டு பூங்காவிற்கு சென்று நிறைய நேரம் உலாவித்திரிந்தேன். சிதைந்து போயிருந்தது பூங்கா...

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

9.8.05

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.)

நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம்.
பாலத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சைக்கிள் மோட்டர்சைக்கிள் தவிர்ந்த வாகனங்களுக்கு அந்த வீதி மூடப்பட்டிருந்தது. அந்தப்பாலத்தினை என்னால் எண்டைக்கும் மறக்க முடியாது.

95 இன் இடம் பெயர்வில் பாலத்தில் ஏறுவது ஆபத்தென எண்ணி அருகே நீர் நிலைக்குள் நெஞ்சு முட்டும் தண்ணிக்குள்ளால் நடந்த ஞாபகங்கள் அந்தப் பாலத்தை கடக்கும் பொழுதுகளில் வரும்.

கைதடி தாண்டி, சாவகச்சேரி தாண்டி, கொடிகாமம் தாண்டி எழுது மட்டுவாள் வீதியில் ஏற இப்போது நான் ஓட்டத்துடங்கினேன்.

எழுதுமட்டுவாளிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தினில்த்தான் நாங்கள் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். தற்போது அது உயர்பாதுகாப்பு வலயம்.

எழுதுமட்டுவாளின் வீதிகள் பரவாயில்லை ரகம். ஆனால் வீதிகளில் இராணுவ பிரசன்னம் இனியில்லையென்ற அளவு அதிகம். வீதிகளிலும், கடைகளிலும் (அவர்களின் சொந்தக் கடைகளும் இருக்கின்றன. உ+ம் அப்பக்கடை அல்லது புலனாய்வு மையம்) வாகனங்களிலும் திரியும் இராணுவத்தினரை பார்க்கையில் ஏதோ இராணுவ பிரதேசத்திற்குள் வந்து மக்கள் குடியேறி இருக்கின்றது போல இருந்தது.

வீதிகளில் ஒவ்வொரு இராணுவ ட்ரக் வரும் போதும் சோமிதரன் பின்னாலிருந்து குரல் கொடுப்பான். ' கவனமடா.. தட்டிப்போட்டு விபத்தெண்டுவாங்கள்.'

முகமாலை இராணுவ சோதனைச்சாவடி.

நான் மோட்டச்சைக்கிள் விபரங்களை இராணுவத்திற்கு குடுக்க வேணும். சோமிதரன் போய் தனது அடையாள அட்டை விபரங்களை பதிந்து விட்டு வரவேணும்.

மோட்டச்சைக்கிளை நிறுத்தி விட்டு நான் என்னைப்பதியிறவரிடம் போனன்.

'எந்த இடம் போறனீங்க'

'கிளிநொச்சி'

'ஐடென்ரிகாட்'

குடுத்தன். அதில் எனது முகவரி கொழும்பு என்று இருக்கக்கண்டவன் பிறகு சிங்களத்தில் கதைக்க தொடங்கினான். நான் திணறத்துடங்கினேன்.
மோட்டர்சைக்கிள் நம்பர் கேட்டான்.

'நாசம்கட்ட.. ஆருக்கு தெரியும் அது? நான் நினைவில்லையென்று சொன்னன். என்னை ஒரு மாதிரிப் பார்த்தான்.

ஒருவேளை மோட்டச்சைக்கிள் களவெடுத்துக்கொண்டு போறன் எண்டு பிடிக்கப்போறானோ என்று வேறு யோசிச்சன்.

'என்ரையில்லை எண்டு சொல்லிப்போட்டு வந்து போய்ப்பாத்துக்கொண்டு வர கேட்டன். ஓம் எண்டான். போய் நம்பர் பாத்திட்டு வர அதுக்கிடையில சோமிதரனும் வந்திட்டான்.

எல்லாம் முடிஞ்சு மோட்டச்சைக்கிளில் ஏறி வெளிக்கிட திடீரென்று ஒருத்தன் நிப்பாட்டி என்ரை பொக்கற்றை காட்டி என்ன எண்டு கேட்டான்.
ஜீன்ஸ் பொக்கற்றுக்குள்ளை துருத்திக்கொண்டு ஒரு பொருள் இருந்ததை அவன் கண்டு விட்டான். ஹி ஹி ஹி.. அது வேறையொண்டுமில்லை. அது.. ஒரு கொஞ்சம் பெரிசாப்போன சீப்பு.

எடுத்துக்காட்டினன். அவனுக்கு சிரிப்பு வந்தது.

'எங்கை போனாலும் உதுகளை விடமாட்டியளே..' என்று சோமிதரன் நக்கல் அடித்தான்.

ஒரு கொஞ்சத்தூரமான ஆமியுமில்லாத புலிகளுமில்லாத சூனிய பிரதேசத்தை தாண்டி இப்ப புலிகளின்ரை பகுதிக்குள்ளை நுழைகிறோம்.

'சரி சயந்தன். நீ உவங்களிட்டை போய் எல்லா பதிவுகளையும் முடிச்சுப்போட்டு வா. அதுக்கிடையில நானொருக்கா கிளிநொச்சி போட்டு வாறன்.' எண்டு சோமிதரன் சொல்லும் போதே விளங்கிட்டுது.

ஒரு விண்ணப்பம் வாங்கி அதை நிரப்ப வெளிக்கிட்டன். அதில மோட்டச்சைக்கிள் என்ன கலர் எண்டு கேட்டு இருந்தது. மோட்டச்சைக்கிளை பாத்தன். அதில பச்சை நீலம் கறுப்பு என எல்லா கலரும் இருந்தது. நான் எல்லா கலரையும் எழுதினன்.

முக்கியமா விண்ணப்ப படிவத்தை தமிழில நிரப்ப சொல்லி இருந்தது. எனக்கு பக்கத்தில நிண்டவர் என்னைப்பாத்து அண்ணை 'Super cup' இற்கு (ஒரு மோட்டச்சைக்கிள் வகை.) என்ன தமிழண்ணை எண்டு கேட்டார்.

'பேசாமல் 'சுப்பர் கப்' எண்டு போடுங்கோ எண்டு சொன்னன். 'இல்லயண்ணை உவங்களோடை சில்லெடுக்கேலாது. ' எண்டு சொல்ல சோமிதரன் முதல்த்தர கோப்பை எண்டு போடுங்கோ எண்டான்.

அவர் பேசாமல் போட்டார். என்னெண்டு போட்டார் எண்டு தெரியேல்லை.
எல்லாம் முடிய நாங்கள் ஒராளைப்போய் சந்திக்க வேணும். அவர் எங்களை ஒரு சின்ன இன்ரவியூ செய்வார். அதுக்கு பிறகு விசா?? தருவார்.

நானும் சோமியும் உள்ளை நுழையுறம். வணக்கம் இருங்கோ எண்டுறார்.
'கிளிநொச்சியில எந்த இடத்துக்கு போறியள்.'

NTT (தமிழீழ தேசிய தொலைக்காட்சி) என்று சோமிதரன் சொன்னான்.

'நீங்கள் செய்தியாளர்களோ' சோமியைப்பாத்து கேட்டார்.

'இல்ல. நான் NTT க்கு பயிற்சி வகுப்பு எடுக்கிறனான். இவர் என்னோடை வாறார். ' இன்னும் கொஞ்ச நேரம் கதைத்தபிறகு நாங்கள் புறப்பட்டோம்.

கொஞ்ச நேரத்தில் பளை கடந்து ஆனையிறவு பெருவெளி வந்தது.
--இன்னும் சொல்லுவன்--

6.8.05

மெல்பேணில் இசை நிகழ்வு

Image hosted by Photobucket.com இன்று மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக இன்னிசை மாலை நிகழ்வொன்று நடைபெற்றது. போயிருந்தேன்.

வசந்தனும் வந்திருந்தார். அவர் என்னிடம் இலங்கையிலிருந்து கொண்டு வரச் சொன்ன சில புத்தகங்களையும் நானாக கட்டாயம் படியும் எனச்சொல்லிக் கொடுத்த ஷோபா சக்தியின் தேசத்துரோகிகள் தொகுப்பினையும் பெற்றுக்கொண்ட அதே வேளை எனக்கு இரவு வேலை நேரம் நேரத்தினை போக்குவதற்காக மட்டும் சாண்டில்யனின் கடல் புறா மூன்று தொகுதிகளையும் கொண்டு வந்து தந்திருந்தார்.

நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே மேடையில் அந்த இசையமைப்பாளரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அவராக இருக்குமோ என்று யோசிப்பதும் பிறகு.. இருக்காது அவர் இப்பிடி மேடை நிகழ்ச்சியில் பாட்டெல்லாம் பாட வருவாரோ என்று சிந்திப்பதுமாக இருந்தேன்.

Image hosted by Photobucket.com அப்போது அமைக்கப்பட்டிருந்த திரையில் அவரைக் காட்டினார்கள். அவரே தான்.
ஜோய் மகேஸ்வரன்.
தமிழீழ பொருளாதார வள ஆலோசகர், தவிரவும் நடந்து முடிந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலானவற்றில் விடுதலைப்புலிகள் தரப்பில் பங்குபற்றியவர்களில் ஒருவர். விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபை கட்டமைப்பு குழுவில் அங்கம் வகித்தவர்.

இன்றைய நிகழ்வில் அவரது சொந்த இசைக் குழுவே நிகழ்ச்சியினை வழங்கியது. சினிமாப் பாடல்கள் தான். ஒரேயொரு..!! புலிகளின் பாடலும் மற்றுமொரு சுனாமி பாடலும் பாடினார்கள். சுனாமி பாடலை ஜோய் மகேஸ்வரன் பாடினார். அவரே நிகழ்வின் இறுதியில் சந்திரமுகியின் அண்ணனோடை பாட்டு.. ஆட்டம் போடுடா என்ற பாடலையும் பாடினார். அவரின் மனைவியே அறிப்புச் செய்தார்.

Image hosted by Photobucket.com வெளிநாட்டு மக்களுக்கு ஜொலியான ஆட்டம் போட வைக்கின்ற, வாய்விட்டு சிரிக்க வைக்கின்ற, களிப்பூட்டும் Entertainment ஒன்றினை கொடுத்தே தாயகத்தில் அவதியுறும், அல்லல் படும் மக்களுக்கு துயர் துடைக்க வேண்டியிருக்கிறது என்ற உண்மை உறைத்தாலும், நிகழ்வு நிறைவு.