30.4.05

சிவராம்! புலிகளின் குரலிலிருந்து..

கடந்த இருபத்தொன்பதாம் திகதி புலிகளின் குரல் வானொலியின் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியிலிருந்து..


26.4.05

பழைய Passwords

முற்குறிப்பு:
இணையம் பாவிக்க தொடங்கிய ஆரம்ப காலங்களில் (முன்னமொரு காலம்) மின்னஞ்சல் முகவரிகளை அளவு கணக்கில்லாமல் பெறுவது வழக்கம். (ஓசியாக என்றபடியால் ஒவ்வொரு நாளும் ஒரு மின்னஞ்சல்).

நேற்று எனது பழைய முகவரிகளை நினைவுபடுத்தி ஒவ்வொன்றாக உள் நுழைந்து பார்த்தேன்... என்னமோ மூன்று வரியில் அது பற்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. சொல்கிறன்..

கடந்து போன காதல்கள்
இன்னமும்
கடவுச் சொற்களாக...


பிற்குறிப்பு:
கடவுச்சொல் - Password

17.4.05

மூன்றாவது ஈழப்போரின் பத்தாண்டுகள்

சித்திரை பத்தொன்பது! மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து 10 வருடங்களாகிறது.

1995 சித்திரை பத்தொன்பதாம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலித் தாக்குதல் மூலம் ரணசுறு, சூரயா என்ற இரண்டு கப்பல்கள் தகர்க்கப்படுவதோடு மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிறது.

94 இன் இறுதியில் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இரண்டாம் கட்ட ஈழப்போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

ஆனால் பேச்சுவார்த்தையின் நகர்வினூடே அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய ஹெலிகளில் எந்த விதமான அதிகாரங்களுமற்ற பிரமுகர்கள் வந்து இறங்கினார்கள். பேச்சுவார்த்தைகளின் முடிவில் முடிவெதனையும் எடுக்க முடியாதவர்களாக, அனைத்தையும் அரச தலைமைக்கு அறிவிக்கிறோம் என ஏறிச் சென்றார்கள்.

மீண்டும் வந்தார்கள். மீண்டும் சென்றார்கள். பேச்சு வார்த்தை என்ற பெயரில் இந்தக் கூத்து தொடர்ந்தது.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் அப்படியே தான் இருந்தன. யாழ்ப்பாணத்திற்கான பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை முழுவதுமாக நீக்கப்படாமல் அப்படியே தான் இருந்தது. இன்னமும் ஆபத்து நிறைந்த கிளாலி கடனீரேரியூடாகத் தான் மக்கள் பயணம் செய்தனர்.

இவ்வாறான மக்களின் அடிப்படை பிரச்சனைகளே முதலில் தீர்க்கப்பட வேண்டியவை என புலிகள் தரப்பு வற்புறுத்திய போதும் அரசு அதனை அசட்டை செய்தது.

பொருளாதார தடைகளை நீக்கி, மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பூநகரி இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரை சற்று பின்னகர்த்துமாறு புலிகள் கோரிக்கை முன்வைத்தனர்.(இந்த இராணுவ முகாமை யுத்தம் தொடங்கிய பின்னர் தாமாகவே ராணுவத்தினர் கைவிட்டு சென்று விட்டனர்.)

அரசு அதனை நிராகரித்தது. பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக புலிகள் அறிவிக்க மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் தமிழர்கள் சந்தித்த இழப்புக்கள் அதிகமானவை. ஒரு இரவில் 5 லட்சம் மக்கள் தம் வேரிலிருந்து பிடுங்கியெறியப்பட்டது இக்காலத்தில்த் தான்.

இராணுவ படையெடுப்புகளுக்கும், குண்டு வீச்சுக்களுக்கும் அஞ்சி இருக்க இடம் இல்லாமல் வீதிகளிலும், மரநிழல்களிலும், கோயில்களிலும், காடுகளிலும் அவர்கள் தஞ்சம் புகுந்திருந்தமை இக்காலத்தில்த்தான்.

அதே வேளை யாழ்ப்பாண இழப்பு உட்பட ஆரம்ப பின்னடைவுகளிற்கு பின்னர் போரியல் உலகம் வியக்கும் தொடர் வெற்றிகளை புலிகள் பெற்றுக் கொண்டதும் இக்காலத்தில் தான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தொடர் சண்டையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கும் யுத்தம் என்ற பெயரில் தமிழர் வாழ்விடங்களை அழித்து முன்னேறியிருந்த இராணுவத்தினரை (தெற்காசியாவில் அண்மைக்காலங்களில் அதிக நாள் நடந்த சண்டை அது) இரண்டு நாட்களில் விரட்டி அடித்து அவர்களது பழைய நிலைக்கு அனுப்பிய அதியுச்ச வியப்புச் சமர் இக்காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது.

ஆனையிறவென்கின்ற யாராலும் அசைக்க முடியாதென அமெரிக்க ராணுவ தளபதிகளே சொன்ன நிலத்தை வென்றெடுத்ததும் இதே ஈழப்போரில்த்தான்.

புலிகளைப் பொறுத்தவரை தமது இராணுவ கட்டமைப்பிலும் பல உயரங்களை இக்காலத்தில் தொட்டிருக்கிறார்கள்.

விமான எதிர்ப்பு பீரங்கி படையணி என்னும் கட்டமைப்பின் ஊடாக ஏவுகணைப் பயன்பாட்டினை புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அப்பாவி மக்களின் அழிவுக்கும் புலிகளின் இழப்புக்களுக்கும் காரணமாயிருந்த விமான குண்டு வீச்சுக்கள் ஓரளவுக்கு தடுக்கப்பட்டன. அதன் பின்னரே ஈழ வான் பரப்பில் சிங்கள அரச விமானங்களின் பறப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

96 இல் முல்லைத் தீவு ராணுவ முகாம் தாக்குதலோடு நீண்ட தூர எறிகணைகளான ஆட்லறிகளை கைப்பற்றியதன் ஊடாக இன்னொரு படிநிலையில் கால் பதித்தார்கள்.

இன்றைக்கு அரச மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகின்ற விமானப்படை தோற்றமும் இதே காலத்தில் தான் நிகழ்ந்தது. (நேற்றும் கிளாலி கடற்பரப்புக்கு மேலாக விமானமொன்று வன்னிப்பகுதிக்கு சென்று மறைந்ததாக இராணுவ தரப்பு சொல்கிறது.)

மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்க முன்பு சந்திரிகா அரசு என்ன செய்ததோ அதனையே இப்பொழுதும் செய்கிறது. அதே இழுத்தடிப்பு.. அதே காலங்கடத்தல்..

ஆனால் புறச் சூழ்நிலை மாறியிருக்கிறது. இப்பொழுது உலக நாடுகளிடம் புலிகள் தொடர்பான நன்மதிப்பும், வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அதனை மிகச் சரியாக புலிகளும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

புலிகளைச் சீண்டி யுத்தத்திற்குள் இழுக்க திட்டமிட்டே அரச இராணுவம் முயல்கின்ற போதும் பொறுமை காக்கின்ற புலிகளின் இயல்பு ஆச்சரியமளிக்கிறது. தமது அரசியல் விவேகத்தினை மிகத் திறம்பட புலிகள் வெளியுணர்த்துகின்றனர்.

வெளிப்படையாகவே என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாது முழிக்கும் அரச கபடத்தை தோலுரித்து உலகெங்கும் புலிகள் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இனி....

யுத்தம் ஒன்றை யாருமே விரும்பவில்லை. யுத்தம் செய்பவர்கள், யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்தவர்கள் என எவருமே விரும்பவில்லை. ஒரு வேளை யுத்தமொன்றே யதார்த்த நிலையிலும் சரியான தீர்வாக இருக்குமென்ற நிலை வரின்...

அவ்வாறான யுத்தம் ஒன்றைத் தொடங்கச் சொல்வதற்கான முழு உரிமையும் யுத்தம் செய்பவர்களுக்கும், அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்ற மக்களுக்குமே உண்டு!

மாறாக தனிமனித வாழ்நிலை மேம்படுத்தலுக்காக தேசங்கள் தாண்டி வந்து, விருப்பப்பட்டும், விரும்பாமலும் மாசாமாசம் காசு கொடுத்து விட்டு அங்கே என்னவாம் நடக்குது என செய்திகளில் தேடி.. உதுக்கு சண்டையை தொடங்கிறது தான் சரியான வழி எனச் சொல்கின்றவர்களுக்கு அதைச் சொல்ல எந்த உரிமையும் கொஞ்சமேனும் இல்லை.

15.4.05

ஒஸ்ரேலியாவில் சந்திரமுகி

முதல்நாள், முதல்க்காட்சி அலைமோதும் கூட்டம் இல்லை. ஆரவாரம் இல்லை.

இரவு ஏழு மணிக் காட்சி. ஏற்கனவே ரிக்கெற்றுக்களை பதிவு செய்து விட்டதனால்.. அவ்வப்போது ஆறுதலாக வந்து சேர்ந்த கூட்டம்..

இடிபட்டு தள்ளுப்பட்டு சட்டைகிழிந்து பேச்சு வாங்கி இவ்வாறான எந்தவிதமான அனுபவங்களும் இல்லாமல் சந்திரமுகி படம் இன்று பார்த்தேன்.

படம் ஏதோ பரவாயில்லைப்பா.. பாபாவை விட பரவாயில்ல.. இது தான் வந்திருந்த பெரும்பாலானோர் சொன்னது.

படம் ஆரம்பித்து ரஜினி தன் சப்பாத்துக்களை காட்டி வந்த போது முன்னிருந்து சிலர் மலர் தூவினார்கள். அட இங்கேயுமா?

வடிவேலு புண்ணியத்தில் தியேட்டர் சிரிப்பலைகளில் மிதந்து கொண்டே இருந்தது.

தவிர சீரியசான சில இடங்களிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. குறிப்பாக ரஜினி யாரோ ஒரு உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணரின் மாணாக்கன் என்ற போது சிரிப்பு தாங்க முடியவில்லை.

இன்னும் ஒரு கட்டத்தில் பிரபுவிடம் ஜோதிகாவின் நிலை பற்றி விளக்க பிரபு 'என்ன கொடுமை இது' என்பார். அப்போதும் எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்று தெரியவில்லை.

தேவுடா பாடலில் றிப்பீட்டு சொல்ல டிரெக்ரர் வாசு, பிரபுவின் அண்ணா ராம்குமார், 'இன்னும் ஒருவர்' வந்தார்கள். அந்த இன்னும் ஒருவர் யாரென்று தெரியவில்லை.

ஜோதிகா.. லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்கலக்கல்..

சந்திரமுகியாக மாறுகிற போது கண்ணும் முகமும்.. பயமாக்கிடக்கு!
கிராபிக்ஸில் பாம்பு காட்டுகிறார்கள். எதுக்கு காட்டுகிறார்களோ
தெரியவில்லை.

படம் தொடங்கும் போது கமல்காசனுக்கு நன்றி என்று ரைற்றில் போடுகிறார்கள். (எதுக்கு..)

படத்தை தொய்யாமல் கொண்டு சென்றதில் வடிவேலுக்கு பங்கிருக்கிறது.

ஜோதிகாவின் பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்ரன். அவர் பின்னியெடுத்திருப்பார் என்றனர் சிலர்.

எனக்கு ஜோவையே பிடிச்சிருந்தது.

லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்க

13.4.05

வருசப்பிறப்பு - ஒரு கலவைப் பதிவு

வருசப்பிறப்பு தமிழர்களுடையது இல்லை என சொல்லியாயிற்று. நல்லது. அது யாருக்கு வருடப்பிறப்பாக இருக்கிறதோ, எவரெல்லாம் (தமிழர்களேயாயினும்) அதனைத் தம் வருடப்பிறப்பாக கொள்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் எனது வாழ்த்துக்கள்.

சென்ற முறை இந்த வருடப்பிறப்பு நாள், நான் யாழ்ப்பாணத்தில் ஊரில் நின்றேன். சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஊக்குவிக்கும் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்று, அன்று என் ஊரில் நிகழ்ந்தது. தவிர சில நிகழ்ச்சிகளும் நடந்தன. இறுதியில் நடந்தது இசை நிகழ்வு ஒன்று.

நீண்ட காலத்திற்கு பிறகு ஊரில் நான் மேடையேறினேன். ம். அந்த இசை நிகழ்வில் நான் அறிவிப்பாளனாக இருந்தேன்.

மேடையில் நின்று பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. 95 க்கு முதல் ஒரு நிகழ்வென்றால் வரும் சனக்கூட்டத்தின் பத்தில் ஒரு பங்கினரும் வந்திருக்கவில்லை. காரணம் தொலைக்காட்சி. அதிலும் அன்று சன் டிவியில் Boys படம் போட்டிருந்தார்கள்.

பெரிதாக நிகழ்ச்சியை நீட்டிப்பதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. வந்திருக்கின்ற பத்துப் பதினைந்து பேருக்காக இங்கே பாடிக்கொண்டிருப்பதிலும் பார்க்க வீட்டுக்கு போனால் Boys படம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

நிகழ்வு முடியும் நேரத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்தது. ம்..

என்னாலும் பாட முடியுமா என்பதை அங்கே சோதிக்கலாமா என்று நினைத்தேன்.

இறுதிப்பாடல்.. 'இதைப் பாட நான் அழைப்பது' என்ற பீடிகையுடன் என்னை நானே அழைத்து பாடத் தொடங்கினேன்.

'சொல்லத் தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்..' என்ற பாடல் அது. (நிறைய நாளுக்குப் பின்னர் ஊருக்கு வந்த சயந்தன் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் இந்தப் பாடலைப் பாடுகிறான் என எனது அத்தான் நினைத்தாராம்.)

என்னால் பாட முடியவேயில்லை. அதுவும் இசையுடன் இணைந்து பாட முடியவேயில்லை. இசை மெதுவாகப் போகின்ற நேரங்களில் நான் வேகமாக பாடினேன். 'அடடா இசை மெதுவாகப் போகின்றதே' என உணர்ந்து நான் பாடலின் வேகம் குறைக்க இசை வேகமானது.

பாடலுக்கு இடையிலான ஒரு இசை ஒலிக்கும் நேரம். பிரதான கீபோட் வாசித்துக் கொண்டிருந்தவர் என்னை கண்களால் அழைத்து காதுக்குள் 'மெதுவாக என்னோடை சேர்ந்து வாரும்.. என்னோடை வாரும்..' என்றார்.

'இவர் ஏன் என்னை தன்னோடு வரச் சொல்கிறார்' என யோசித்தேன். 'ஒரு வேளை நிகழ்ச்சி முடிந்த பிறகு சாமான் கட்டுறதுக்கு ஆள் தேவையென்ற படியால் கேட்கிறாரோ' என்ற நினைப்பில் சரியான ரைமிங்கில் பாடவேண்டிய சரணத்தை விட்டு விட்டேன்.

இசை தொடர்ந்தது. பிறகும் ஏதோ ஒரு கட்டத்தில் பாடத் தொடங்கி... மொத்தத்தில் சொதப்பி முடித்தேன்..

அதுவே இறுதிப்பாடல் என்ற படியால் பெரிதாக பிரச்சனையில்லை. முடிக்கும் போதும் 'என்னாலும் பாட முடியுமா என பரிசோதித்துப் பார்த்தேன். அதற்கு உங்களைப் பலிக்கடா ஆக்கியதற்கு மன்னிக்க வேண்டும்' என சொல்லித் தான் முடித்தேன்.

இறங்கி வரும் போதே யாரோ சொன்னார்கள்.. 'நாய்க்கேன் போர்த்தேங்காய்..'

மேடையில் நான் பாடும் போது அழைத்து 'தன்னோடு வரும்படி' சொன்னவரிடம் போய்.. 'என்ன உங்களோடை வரச் சொன்னனியள்.. ஏதாவது உதவி வேணுமோ' என்று கேட்டேன்.

அவர் தலையில் கை வைத்தார்.. 'என்னோடு.. எனது இசையோடு வரச் சொன்னதாக' சொல்லி அவர் சிரித்தார். ஆனாலும் நான், 'இவன் வாசித்தால் எனக்கென்ன' என்ற ரீதியில் பாடியதாகவும் சொன்னார்.

ஒருவித அவமானம் தான். ஆனாலும் என்ன.. நான் பாட மாட்டேன் என்று எனக்கும் எல்லோருக்கும் உணர வைத்ததே அந்த நிகழ்வு தானே..

அன்றைய தினம் சன் டிவியில் Boys போட்டதாக சொன்னேனில்லையா.. யாழ்ப்பாணத்தில் boys படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்தப் படம் திரையிட்ட ஒரு காட்சியுடன் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. அத்தோடு உத்தியோகப்பற்றற்ற முறையில் முழுவதுமாக தடை செய்யப்பட்டு விட்டது.

இது சரியானதா தவறானதா என்பவற்றுக்கு அப்பால் இந்த தடை, அதன் நோக்கத்தை எந்தளவிற்கு நிறைவேற்றியது என்றால் 'நிறைவேற்றவில்லை'யென்பதே பதில்

ஏனெனில் யாழ்ப்பாணத்திலிருந்து Boys படம் பார்க்க யார் யார் எல்லாம் விரும்பினார்களோ, அவர்களெல்லாம் அந்த படத்தை பார்த்து விட்டார்கள். இளைஞர்களாக, பிரத்தியேகமாக வாகன ஒழுங்கு செய்து கொழும்பு வந்து அந்தப் படத்தைப் பார்த்துப் போன இளைஞர்களை அறிந்திருக்கிறேன்.

இதுவே நிலைமையாயிருக்க அவ்வாறான ஒரு தடை அதன் நோக்கத்தை எட்டவேயில்லை என்பதே உண்மை.

தவிர புதுவருட தினத்தன்று சக்தி தொலைக்காட்சியில் Boys படம் திரையிட்டார்கள். கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சக்தி, யாழ்ப்பாணத்திற்கென தனியான கோபுரம் அமைத்து யாழ்ப்பாணத்திற்கும் சேவை நடத்துகிறது.

திரைப்படம் தொடங்கி சில நிமிட நேரங்களில் யாழ்ப்பாணத்தில் படம் நிறுத்தப் பட்டு விட்டது. ஆனால் கொழும்பில் ஒளிபரப்பு தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அதற்கு பதிலாக ராதிகாவின் சிறகுகள் படம் போட்டார்கள்.

ஆனால் அன்றிரவே சன் தொலைக்காட்சியில் அந்த திரைப்படத்தினை போட்டார்கள். அதுவும் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி வி க்களின் வரவில் எல்லா வீடுகளிலும் சன் உடபட செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.

காலையில் படத்தை நிறுத்தியதன் நோக்கம் மாலையில் அடிபட்டுப் போனதே...

இவ்வாறான தடையுத்தரவுகள் பண்பாடு தொடர்பான கடும் நடவடிக்கைகளின் ஒரு அடையாளமாக இருக்குமே தவிர நடைமுறையில் அதுவும் தற்போது சாத்தியப்பட போவதில்லை.

புலிகளால் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட காலத்தில் அது குறித்த உடன்பாடில்லாத கருத்தினை தெரிவித்தவர்கள் பலர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவி அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் புலிகளின் இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

9.4.05

பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

'கட்டின சீலையோடை ஓடுறது' எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

'சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது' எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை 'நவீன பாஞ்சாலி' எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ

Image hosted by Photobucket.com

8.4.05

முகங்கள்

'விழுந்தாலும் உயிர்ப்போம்' எனத் தொடங்கி 'எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை' என முடித்தான்.

பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். 'அவ்வப்போது அடியுங்கடா விசில்' என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.

'இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்' என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.

அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.

இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..

'யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ'

'நிகழ்ச்சி முடிய போய் பேசிப் பாக்கலாம். ஏதாவது கவிதையைப் பற்றித்தான் பேச வேணும். அவளுக்கும் கவிதை எழுத தெரிஞ்சால் எவ்வளவு நல்லது? '

'எப்பிடியிருந்தது நிகழ்ச்சி.. நல்லாயிருந்ததோ'

'ம்.. உங்கடை கவிதையள் நல்லாயிருந்தது.'

'எங்கை படிக்கிறியள்'

'...இஞ்சை தொகுப்புரை தர உம்மை கூப்பிட்டாச்சு போம்..' பக்கத்திலிருந்தவன் தட்ட வேட்டியைச் சரி செய்து கொண்டு எழுந்தான். வியர்த்தது.

'விசரர்.. ஒரு ஏ சி ஹோலை புக் பண்ணியிருக்கலாம்..'

குரல் செருமினான். அவள் இவனையே பார்த்தபடி.

'அப்பொழுது சொன்னதையே இப்பொழுதும் சொல்கிறேன். நாம் ஆண்ட பரம்பரை. மீளவும் ஆளுவோம். அதை யார் தடுத்தாலும் எதிர்த்து போராடுவோம். '


காடு அமைதியாயிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த அமைதி கலையும்.

அவர்கள் அவசர கதியில் பங்கர்களுக்குள் நிறைந்த நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.

'எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது..' யாரோ ஒருவன் பாடினான்.

'ச்சூய்... காட்டுக்குள்ளை கழுதை வரப்போது. பாட்டை நிப்பாட்டு.' அது அவன் தான். எப்போதும் போலில்லாமல் இன்று அதிகமாய் பேசியும் சிரித்தும் கொண்டிருந்தான்.

பாடியவன் நிறுத்த 'சரி சரி பாடு நான் பகிடிக்கு சொன்னன்.. நல்லாத்தான் இருக்கு' என்றான்.

அவன் பாடவில்லை. எல்லோரும் அமைதியானார்கள்.

'இன்னுமென்னடா ஒரு ஐஞ்சு மணித்தியாலம். பிறகு எல்லாம் சரி.. பிறகு இங்காலைப் பக்கம் அவன் வந்து பாக்க மாட்டான்.'

மீண்டும் அவனைத் தவிர எல்லோரும் அமைதியாயிருந்தார்கள்.

'பாட மாட்டியோ.. சரி போ நான் பாடுறன்..' அவன் பங்கருக்குள் இறங்கி சேற்று நீரை வெளியிறைத்தான்.

'எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது'


பஸ் சிரிப்புக்களால் நிறைந்தது.

'பிறகெங்கையடா அவள்'

'காணேல்லை. தேடினன் போயிட்டாள் போல'

'சரி விடு.. எப்பிடி எங்கடை விசிலடி'

'கலக்கிட்டியள்.. '

'எங்கை வேட்டி..'

'அது சும்மா.. உள்ளை ஜீன்ஸ் போட்டிருந்தன். நிகழ்ச்சி முடிய வேட்டியை கழட்டி எறிஞ்சிட்டன். அதை மனிசன் கட்டுவானே.. சும்மா ஒரு பிலிம் காட்டவெல்லோ அது கட்டினது. எப்பிடி என்ரை கவிதையள்'

'அந்த மாதிரி.. நல்லா உணர்வு பூர்வமா இருந்திச்சு.. கேட்கறவனுக்கு கட்டாயம் ஒரு பீலிங் வந்திருக்கும்.'

உள்ளுக்குள் பெருமையாயிருந்தது.

'ம்.. சரி நாளைக்கு படம் பாக்கப் போவமே? '

'புதுசா தமிழ்ப் படம் ஒண்டும் வரேல்லையே'

'தமிழ்ப்படத்துக்கு ஆர் போறது. இங்கிலிஷ் படத்துக்கு போவம்.'


எல்லோருக்கும் உடம்பு வலித்திருந்தது. அருகருகாக அமர்ந்திருந்தார்கள்.

பருத்தித்துறை வடையும் வெறுந்தேத்தண்ணியும் நன்றாகவிருந்தன.

'வேறை என்னடாப்பா.. ஏதாவது கதையுங்கோவன்.'

இன்னும் சில நிமிட நேரங்கள் இருந்தன. அதன் பின்பு இந்தக் காடு அதிரும்.

அவன் அருகிலிருந்தவனின் முதுகில் சாய்ந்தான். அருகிலிருந்தவன் கண்கள் பனித்ததை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்.

வோக்கி இரைந்தது... 'ரூ..ரூ.. கந்தயா.. என்னெண்டு சொன்னால்..

அவன் எழுந்தான். இடுப்பில் தோளில் என எல்லாவற்றையும் பொருத்தினான். எல்லோருக்கும் கை கொடுத்தான். இருட்டுக்குள் நுழைந்து திரும்பி கையசைத்து திரும்பி நடந்தான்.

நிமிடங்கள் கரைந்தன. காடு வெடியோசையூடு அதிர துரத்தே செந்நிற பிழம்பெழுந்தது. தொடர்ந்து சடசடத்தன. நடு இரவு தாண்டி விட்டது. இனி விடியும்.


வெளியே மழை வரும் போல இருந்தது. கட்டிலிலி கால் நீட்டிப் படுத்தான் அவன்.

அன்றைய பத்திரிகை பார்வையில் இருந்தது.

கவிதைப் போட்டி..

எழுந்து உட்கார்ந்தான். இன்றைய சமகால நிலையை பிரதிபலிப்பதாய் நூறு சொற்களுக்கு கூடாமலும் ஐம்பது சொற்களுக்க குறையாமலும் கவிதைகளை அனுப்புங்கள். பரிசு முதல்ப்பரிசு 5000....

பேப்பரும் பேனையும் எடுத்தான்.

'விழ விழ எண்டு தொடங்கினால்.. எழு எழு எண்டு அடுத்த வரி போடலாம்.. அழ அழ எண்டு ஏதாவது எழுதி அடுத்த வரியை நிரப்பலாம்.. பிறகு... ம்.... வழ வழ எண்டு ஏதாவது எழுதலாமா' என்று யோசிக்க தொடங்கினான். வெளியே இருட்டிக் கொண்டு வந்தது.

7.4.05

நான் படம் பார்த்த கதை

சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும்.

அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா நடிக்க வந்தவை எண்டது சுத்தமாத் தெரியாது. சொன்னால் நம்ப மாட்டியள். 97 இல வன்னிலை பூவே உனக்காக பாத்த போது தான் உவர் தான் விஜய் எண்டதையும் அவற்றை முகத்தையும் முதலில பாத்தன். அதுவும் அந்தப் படத்தில Don't miss எண்டொரு பாட்டுக்கு ஆடுறது அரவிந்த சாமி எண்டு சொன்னாங்கள். (அது விஜய் தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்) நான் அதையும் நம்பிக் கொண்டு திரிஞ்சன்

தியேட்டருக்கு போற பழக்கமெல்லாம் 90 ம் ஆண்டே முடிஞ்சு போட்டுது. யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில கடைசியா ராஜா சின்ன ரோஜா எண்ட படம் பாத்த பிறகு நான் 7 வருசமா தியேட்டர்களுக்கு போனதில்லை. (பிறகு 97 இல திருச்சியில சோனா மீனா எண்டொரு தியேட்டருக்கு போய் படம் பாத்து விரதத்தை முடிச்சன்.)

யாழ்ப்பாணத்தில சண்டை தொடங்கின பிறகும் கொஞ்சக் காலம் கரண்ட் இருந்தது. அப்ப நாங்கள் படங்கள் பாக்கிறனாங்கள். பிறகு ஒரேயடியாய் கரண்ட் போச்சுது. அதோடை படம் பாக்கிறதும் குறைஞ்சு போச்சு. எண்டாலும் அப்பப்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்த வீட்டில படங்கள் போடுவம்.

அந்தக் காலத்தில தான் புலியள் தணிக்கை முறையை கொண்டு வந்தினம். படம் தொடங்கும் போது முதலில புலிகளின் தணிக்கைச் சான்றிதழ் வரும். பிறகு தான் இந்திய தணிக்கை சபையின் சான்றிதழ் வரும். பாட்டுக் கட்டங்கள் போகும் போது சில இடங்களில ரோஜா பூ காட்டுப் படும். அந்த இடங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன என்று அர்த்தம்.

அந்த நேரம் சின்னத்தம்பி படம் நல்ல பிரபல்யம். எங்கடை வீட்டிலும் போட வேணும் எண்டு ரண்டு மூண்டு தரம் முயற்சித்தும் கசெற் கிடைக்கேல்லை. கடைசியா ஒரு மாதிரி கசெற் கிடைக்க ஜெனரேற்றர் வாடகைக்கு எடுத்து வந்து படத்தை போட்டால் கொஞ்ச நேரத்தில அது பழுதாப் போட்டுது. எனக்கு அழுகையே வந்திட்டுது. என்ரை அத்தான் எனக்கு நல்ல பேச்சு. 'சனம் சாகக் கிடக்குது. உனக்கு சின்னத்தம்பி பாக்க முடியேல்லையெண்டு அழுகையோ?'

பிறகு கொஞ்சக் காலத்தில படங்கள் ஒரேயடியாகத் தடை செய்யப்பட்டு விட்டன. யுத்தத்தில சிக்குப்பட்டிருக்கிற மக்களுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகமாக இருக்கிற சினிமாவை தடை செய்தது பற்றி பரவலான விமர்சனங்கள் வந்தன.

இந்த இடத்தில ஒரு கதையை சொல்ல வேணும். படங்கள் தடை செய்யப்பட்டிருந்த 95 ம் ஆண்டில யாழ்ப்பாணம் கோட்டையில் புலிகளின் காப்பரண்களுக்கான பதுங்கி குழிகள் வெட்டுவதற்காக ஒரு குறித்த சுற்று முறையில் எங்கள் ஊரின் சங்கமொன்றினூடாக நாங்கள் அங்கை போயிருந்தம்.

கோட்டைக்குப் பக்கத்திலை முந்தி இருந்த ஒரு தியேட்டரின் முன் சுவர் மட்டும் இருந்தது. மற்றதெல்லாம் உடைஞ்சு போட்டுது. அது றீகல் தியேட்டர். (இதைப் படிக்கிற ஆரும் பழைய ஆக்களுக்கு பழைய ஞாபகங்கள் வருதோ?) அதன் முகப்பில் அங்கு கடைசியாக ஓடிய ஒரு ஆங்கில படத்தின் பெயர் எழுதப் பட்டு வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு கிடந்தது.

அதைப் பாத்து ஒரு பெருமூச்சுத்தான் வந்தது. ம்.. அந்தக் காலம் இந்த மாதிரியான படமெல்லாம் யாழ்ப்பாணத்தில ஓடியிருக்கு. (இது 95 இல் எனது அறிவுக் கெட்டிய நிலையில் எழுந்த எண்ணம்.)

பிறகு கன காலத்துக்கு பிறகு வன்னியிலை இருக்கும் போது திரைப்படங்களுக்கான தடையை புலிகள் நீக்கினார்கள். எண்டாலும் தணிக்கை தொடர்கிறது இப்ப வரைக்கும். கன காலத்தக்கு பிறகு வன்னியிலை காதல் கோட்டை, பூவே உனக்காக மற்றது மாணிக்கம் எண்ட மூண்டு படங்களை ஒரே இரவில பாத்தன்.

இந்தியா போன பிறகு அங்கை இருக்கிற குஞ்சு குருமன் எல்லாம் அஜித் அக்ரிங் சுப்பர் நக்மா டான்ஸ் சுப்பர் எண்டு கதைக்க ஐயோ எனக்கு ஒண்டும் தெரியேல்லையே எண்டு வெக்கமா இருந்தது. பிறகு ஒரு மாதிரி இந்தியாவில சும்மா இருந்த காலத்தில சினிமா ருடே சினிமா எக்ஸ்பிரஸ் அது இது எண்டெல்லாம் வாங்கிப் படிச்சு என்ரை அறிவை வளர்த்துக் கொண்டன்.

6.4.05

கேள்வி கேட்டல்! எனது உரிமை

கேள்வி கேட்டு வாழும் உரிமை!
அங்கீகரித்தே ஆக வேண்டிய அதி முக்கிய உரிமை அது!
ஈழப்பிரச்சனை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் அதிகம் அடி படுகின்ற உரிமையாக இது இருக்கிறது.

'உனது கருத்தில் எனக்கு கிஞ்சித்தும் உடன் பாடு கிடையாது. ஆயினும் நீ உனது கருத்தினைச் சொல்ல உனக்கு இருக்கின்ற உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்.'

ஜனநாயகத்திற்கு சரியான அர்த்தம் கூறும் கருதுகோளாக மேற்கண்ட வாக்கியம் அமைந்திருக்கிறது. (அதனை நான் முதலில் படித்தது ஈபிடிபி யின் ஒரு பத்திரிகை அறிக்கையிலிருந்து என்பது வேறு விடயம்... முருகா...)

அதற்கு ஈழத்தில் இடமிருக்க வில்லை என்பது உண்மைதான். முழு இலங்கையிலுமே இடமிருக்கவில்லை.

அது பற்றி அலசுவது எனது நோக்கமில்லை.

நான் எப்பிடி கேள்வி கேட்கும் உரிமையை பிரயோகித்தேன் என்பதைக் கூறுவதற்குத் தான் இந்தப் பதிவு.

நாங்கள் பள்ளிக்குடத்தில படிக்கிற நாட்களில புலியள் பள்ளிக்குடத்துக்கு வந்து சில கலந்துரையாடல்கள் நடத்துறவை. நேரடியாவே சொல்லுறன்.. கருந்துரையாடல்களின் நோக்கம் பெரும்பாலும் இயக்கத்துக்கு இணைந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதை விளக்கிறதா தான் இருக்கும்.

அப்ப 14 ,15 வயசில எல்லாம் இயக்கத்துக்கு சேருவது நடந்து கொண்டிருந்தது தான். புலிகள் பகிரங்கமாக 18 வயதிற்கு மேலேயே உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னது 2000 ம் ஆண்டுக்கு பின்னதாகää ஒலரா ஒட்டுணுவைச் சந்தித்த பின்னர் தான்.

கட்டாய ஆட்சேர்ப்பு குறித்து அப்போதே பேசப்படும். இது பற்றி சில வார்த்தைகள் இப்போது பேசினால் நல்லது. கட்டாயமாக கடத்திக் கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக் குறித்து நான் வாழ்ந்த காலத்தில் நேரடியாய் அறிந்தது இல்லை. கட்டாயமாக கடத்திக் கொண்டு போனார்கள் என்று சொன்னவர்கள் இரண்டு வகையில் இருந்தார்கள்..

ஒரு வகை புலிகளுக்கு எதிரானவர்கள்.

மற்றவர்கள் சுவாரசியமானவர்கள். ஆர்வக் கோளாறில் இயக்கத்துக்கு சென்று இணைந்து விட்டு, பயிற்சி கடினம் போன்ற சிரமங்களினால் பத்துப் பதினைந்து நாட்களில் திரும்பி வந்தவர்கள் தங்கள் மானம் கெட்டுப் போய் விடக் கூடாதே என்பதற்காக சொல்கிற ஒரு திருகுதாளம்.. 'நான் விரும்பிப் போகேல்லை.. இழுத்துக் கொண்டு போட்டாங்கள்.'

(ஆயினும் புலிகளின் சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இளைஞர்கள் வற்புறுத்தலாக கூட்டிச்செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதனை அண்மைக்காலத்தில் அறிந்திருக்கிறேன். 2002 இல் மட்டக்களப்பு சென்று வந்த எனது பத்திரிகையாள நண்பன் சொன்னது கேட்டு கவலைப்பட்டேன்.)

சிறுவர்கள் இயக்கத்துக்கு சேர்கிறார்கள். நிலையான வதிவிடம், சரியான வருமானம் ஏதுமற்ற குடும்பம் இதற்குள் இருக்கின்ற ஒரு சிறுவன் ஆகக் குறைந்தது ஒரு வேளைச் சாப்பாடாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயக்கத்தில் சேர்கிறான்.

அவனுக்கு சிறுவர்களுக்கான உலக அமைப்புக்கள் தெரியாது. அவர்களை எப்படி அணுகுவது என்று தெரியாது. அவர்களுக்கு எது தெரிகிறதோ அதைச் செய்கிறார்கள். புலிகள் இயக்கத்தில், சிறுவர்களை சேர்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் அவ்வாறு சிறுவர்கள் சேராது இருப்பதற்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்யலாம். இது உலக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

(இப்போது கிளிநொச்சியில் யுனிசெப்பின் அனுசரணையோடு அமைப்பில் இணைந்த 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு (அவர்களில் குடும்ப ஆதரவு அற்றவர்களுக்கு) புனர்வாழ்வு அளிக்கும் மையங்களை புலிகள் செயற்படுத்துகிறார்கள்.)

ஏதோ சொல்ல வந்தன்.. சரி.. பள்ளிக்குடத்துக்கு புலியள் கருத்தரங்குக்கு வாறவை. வந்தால் கதைச்சுப்போட்டு 'உங்கடை கேள்வியளைக் கேளுங்கோ எண்டுவினம்.'

அப்ப வழமையா ஒரு நடைமுறை இருந்தது. கேள்வியளை பேப்பரிலை எழுதிக்குடுத்தால் எல்லா கேள்வியளையும் வாங்கிட்டு பிறகு ஒவ்வொண்டா பதில் சொல்லுப்படும்.

நான் கேள்வி எழுதிக் குடுக்கிறதிலை விண்ணன். இண்டைக்கு மீற்றிங் எண்டால் உடனை கொஞ்சக் கேள்வியள் றெடி பண்ணிடுவன். இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடக்கு. ஒண்டும் உருப்படியான கேள்வியள் இல்லை.

என்ரை கேள்வியளைப் பாருங்கோ..

'ரஜீவ் காந்தியை நீங்கள் தான் கொலை செய்தீர்களா'

'மாத்தையா எங்கை அவருக்கு என்ன நடந்தது.'

'உங்களிடம் விமானங்கள் இருக்கா'

(இதெல்லாம் 94 களில கேட்ட கேள்விகள்.)

உந்தக் கேள்விகளையும் மதிச்சுப் பதில் சொல்லுவினம்.

ரஜீவ் கொலை தொடர்பாக நேரடியாக ஒரு பதிலும் சொன்னதா நினைவில் இல்லை. மாத்தயா விவகாரம் பற்றி அரசல் புரசலா சொல்லுவினம். நடக்க இருந்த ஒரு சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது எண்டு சொல்லியிருக்கினம். விரைவில பகிரங்கமா அறிவிப்பினம் எண்டும் சொல்லியிருக்கினம். (ஆனாலும் மாத்தயா விவகாரத்தில் என்ன நடந்தது முதல் அவருக்கு எப்ப மரணதண்டனை வழங்கப்பட்டது என்பது வரை நான் 2002 கடைசிகளில் அடேல் பாலசிங்கத்தின் புத்தகத்தில இருந்து தான் தெரிஞ்சு கொண்டன்.)

பிளேன் பற்றின கேள்வியளுக்கு சிரிச்சுக் கொண்டே பலாலியில நிக்கிற ஆமியின்ரை பிளேனெல்லாம் எங்கடை தான் எண்டுவினம்.

என்ன செய்யறது.. 'சித்தாந்தத்தனமாவும்' 'அறிவு பூர்வமாவும்' கேள்வி கேட்க எனக்கு தெரியேல்லை.

ஒரு முறை மேஜர் சிட்டு கருத்தரங்கு வைக்க வந்தவர். அவர் ஒரு பாடகர். சோகம் ததும்புகின்ற பாட்டுக்களுக்கு அவரின் குரல் அந்த மாதிரி இருக்கும். மீற்றிங் தொடங்க முதல் பெடியள் எல்லாம் அவரைப் பாடச் சொல்லி கத்தினாங்கள். நான் மீற்றிங் வைக்கத்தான் வந்தனான் பாட இல்லை எண்டு சொன்னார். நாங்களும் விடேல்லை. கடைசியா உயிர்ப்பூ படத்தில அவர் பாடின சின்னச் சின்ன கண்ணில் எண்ட பாட்டை பாடிட்டுத் தான் மீற்றிங் தொடங்கினார்.

97 இல ஜெயசிக்குறு சண்டையில அவர் வீரச்சாவடைந்து விட்டார். தினத்தந்தி பேப்பரிலை அதுக்கு முக்கியத்தவம் குடுத்து செய்தி வந்தது. அதைப் பாத்த உடனை எனக்கு கவலையாயிருந்தது.

இப்பிடி நான் கேள்வி கேட்டுத் தான் வளந்தனான். என்னை விட எங்கடை அம்மம்மா இன்னும் வலு கெட்டிக்காரி. இந்தியன் ஆமி காலத்தில ஒரு நாலு இயக்கப் பெடியளுக்கு களவாச் சாப்பாடு குடுத்து குடுத்து, அவையள் நல்ல பழக்கம். (இந்தியன் ஆமி காலத்தில உப்பிடி சாப்பாடு குடுத்த அனுபவம் யாழ்ப்பாணத்தில எல்லா குடும்பங்களுக்கும் இருக்கும்.) அதை ஞாபகம் வைச்சு அவையில ஒருவர் நாங்கள் யாழ்ப்பாணத்தில இருந்த கடைசிக் காலம் வரையும் அவ்வப் போது வீட்டை வருவார்.

அம்மம்மா துணிச்சலா கேப்பா.. 'என்ன தம்பி வாங்கிற பவுண் எல்லாம் திருப்பித் தருவம் எண்டு சொல்லுறியள்.. உண்மையாத்தருவியளோ..' (கொடுத்த அடுத்தவருடமே குலுக்கல் முறையில் அந்தக் கடனை இரண்டு பவுணில் புலிச்சின்னம் பொறித்த தங்கக் காசாக எங்களுக்கு தந்து விட்டார்கள். அம்மம்மாவிற்கு இன்னும் அதிஸ்டம் வாய்க்கவில்லை. ஒவ்வொரு மாவீரர் தினக் காலங்களிலும் குலுக்கல் முறையில் குறித்த தொகையினர் தெரிவு செய்யப்பட்டு வாங்கிய கடன் மீளக் கொடுக்கப் படுகிறது.)

நாங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்றதுக்கு கொஞ்ச நாளைக்கு முதல் அவர் வீட்டை வந்திருந்தார். அம்மம்மா கேட்டா ஒரு கேள்வி.. 'என்னவாம்.. யாழ்ப்பாணத்தில இருந்து சனத்தை எழும்பச் சொல்லப் போறியளாம்.. நீங்களும் விட்டுட்டு போக போறியளாம்.. என்ன அதுக்கோ நாங்கள் காசு தந்தம்?'

பார்க்கப் போனால் அம்மம்மாவிற்கும் சித்தாந்ததனமாகவும் அறிவுஜீவித்தனமாகவும் கேள்வி கேட்க தெரியாது போல கிடக்கு!

4.4.05

கவித எழுத போறன்!

ஆர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நான் முடிவெடுத்திட்டன்.
எல்லாரும் கவித எழுதுகினம். அதுவும் நாப்பது ஐம்பது பின்னூட்டங்கள் வேறை.

நல்லாருக்கு, எழும்பியாச்சோ, நித்திர கொள்ளேலையோ எண்டுதான் பின்னூட்டங்கள் வந்தாலும், எனக்கென்ன.. எண்ணிக்கை தானே முக்கியம்.

அதனாலை தான் சொல்லுறன் நான் கவித எழுதியே தீரப் போறன்.

உந்த வசந்தன் சும்மா Anti Poet Org எண்டொரு இயக்கமாம். அது கவித எழுதக்கூடாது எண்டுதாம் எண்டு பினாத்துறார். ஒரு பொதுத்தளத்தில மாற்றுக்கருத்துக்களை வைச்சு விவாதிக்காமல், அதைப்பத்தி கேள்வி கேட்க எனக்கிருக்கிற உரிமையை மறுத்துப் போட்டு உவர் எப்பிடி உப்பிடி சொல்ல முடியும்?

விசயத்துக்கு வாறன்..

இப்ப கொஞ்ச நாளா இரவில எனக்கு நித்திரை வருகுதில்லை. இரவில நேரமும் போகுதில்லை. மெதுவா ஊருது. பேந்த பேந்த முழிச்சுக்கொண்டு இருக்கிறன். பிறகு பகலில நல்லா நித்திர கொள்ளுறன். மத்தியானத்துக்கு பிறகு தான் விடியுது.

சரி இப்ப நான் மேலை சொன்னதை கவிதையாச் சொல்லப் போறன். கவனமாக் கேளுங்கோ

என் இரவுகள்
ஊனமாகிப் போக
பகல்கள் ஒளியிழந்து கரைகின்றன.


அச்சாக் கவித.. எல்லாரும் ஒருக்கா கை தட்டுங்கோ.. மிச்சக்கவித பிறகு சொல்லுறன்

உந்த படிமம் குறியீடுகளைப் பத்தி பெரிசா எனக்கு அறிவில்லை. ஆரும் சொல்லித்தருவியளே..

எட மடையா உது கவிதையே இல்லை எண்டு நினைக்கிறாக்களும் சொல்லுங்கோ..

3.4.05

வெட்கம் - (கெட்ட) கதை

இது ஒரு சிறுகதை (அப்பிடியா!) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி தினக்குரலில் வெளியானது. சிறுகதையென்றால் திடுக்கிடும் எதிர்பாராத முடிவுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றி அது தன் பாட்டில் இயல்பாய்ச் சென்று முடியலாம் என ஒரு திடுக்கிடும் முடிவை நான் எடுத்து எழுதிய கதை.
இரண்டு வருடங்களுக்கு முன் நிறைவைத் தந்த கதை இப்பொழுது நின்று திரும்பிப் பார்த்தால் திருந்துவதற்கும் முன்னேறுவதற்கும் இடம் உண்டு என்கிறது.
இருப்பினும்.. இங்கே இட்டு வைக்கிறேன்.. ஆகக் குறைந்தது ஒரு ஆவணப்படுத்தலுக்காகவேனும்.. சற்றே நீண்டிருக்கிறது. நேரமிருந்தால் படியுங்கள்..


கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.

தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.

கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.

'நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்' என அவன் நினைத்துக் கொண்டான்.

'சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..' சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்தன. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருப்பார்கள்.

''எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..'' அம்மா சொல்வாள்.

உண்மைதான்.

நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.

இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.

'ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..' போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.

"கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே.." தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.

"அதுக்கென்னடா வாவன்..."

அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.

'அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?'

வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. 'முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..'

அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. 'ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..'

அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.

'அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..'

கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.

"அக்கா அக்கா.." வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மன் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.

"அம்மா ஆரோ வந்திருக்கினம்..." அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.

"கெனடியே.. வா வா என்ன திடீரென்று.." அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.

"கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்.."

"இல்லையக்கா வேண்டாம்.." கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.

"இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்.." அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.

"நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு.." அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.

"அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?" கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.

"வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்.."

"ஓம் அக்கா.." கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.

'ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..' அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.

'கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..' என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் 'நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்' என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.

பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து ... அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.

சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.

"அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா.." அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.

தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.

அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு 'முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..' என்று தான் முதலில் நினைத்தான்.

"வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு.."

"குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்"

"சத்தம் வையுங்கொ அது போயிடும்."

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.

கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

"அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்." என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.

"அக்கா இப்பவும் யானையள் வாறதோ?"

"அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்.." சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.

மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். "எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. "வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.

'மனிசன் மாறேல்ல'

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.

"தம்பி என்ன படிக்கிறியள்"

"நேசறி"

"படிச்சு என்னவா வர போறியள்"

"டொக்டரா வருவன்.."

"டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ"

"இல்லை"

"அப்ப..?"

"பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்.."

கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். "இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை." கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.

"பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்.." சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.

"என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ.." என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.

"அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்.." அக்கா அமைதியானாள்.

"அவன் இப்ப இல்லை" கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.

"வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்"

இப்பொழுது கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.

அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். "ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது." படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.

"கிழடுகள் மாதிரி கதையாதையடா" என்று கூட கெனடி சொல்லியிருக்கிறான்.

அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்

இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்

"ஏதேனும் அலுவலா வந்தனியோ..?"

"இல்லை சும்மா உங்களையும்.." என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.

'மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..' கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.

மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.

கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.

மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.

மாலிக்கா நில்லும் இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.

"நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ"

"ம்.."

"போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ" மாலிக்கா பேசாமல் நின்றாள்.

"போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ.." என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.

இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.

மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. 'இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..'

நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.

நிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. 'மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..'

அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா

லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.

"ஆரப்பன் உள்ளை வாரும்"

"ஐயா மாலிக்கா நிக்கிறாவோ.."

அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.

"இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா.." கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.

மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.

வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..

சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.

அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.

"வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்" கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

"எப்பிடி சுகமாயிருக்கிறியளோ.."

"ம்" கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.

"என்னோடை படிச்சவை"

மாலிக்கா நிறைய பேசினாள். "என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை.." தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.

"அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு." கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.

"சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்." மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.

மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். "கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ.."

ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.

"ம்.." கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..

அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.
20.04.2003 தினக்குரல்

2.4.05

எங்கிருந்து வருகிறது

பின்னூட்டமும் கொஞ்சம் குறிப்புக்களும் என்ற ஒரு பதிவினை இடுகையில் பிழைச்செய்தி காட்டியது. ஆக பதிவேற்றப்படவில்லையாக்கும் என்று விட்டு மீண்டும் ஒரு தடவை பதிந்தேன். மீண்டும் பிழைச் செய்தி! சரிதான் நாளை பார்க்கலாம் என்றால் அவை இரு பதிவுகளாக தமிழ்மணத்தில் வந்திருந்தன.

எப்பிடியோ வந்திட்டாக்கும் என்ற நினைவில் ஒன்றை எனது கணக்கில் சென்று அழித்து விடலாம் என்று கணக்கிற்குள் சென்றால் அங்கே அவ்வாறான எந்தவொரு பதிவும் இல்லை. (பயமாயிருக்கு.. ஒருவேளை.......!!)

தமிழ் மணத்தினூடாக போய் சோதனைக்காக ஒரு பின்னூட்டம் இட முயல்கையில் அவ்வாறான ஒரு பதிவு இல்லை என்றது. (ஆனால் பதிவு இருந்ததே..)

இப்பொழுது அதே பதிவினை இதுதான் கடைசி (கடுப்பில்) என்ற பெயரில் பதிவேற்றினேன். பின்னூட்டம் இட முடிகிறது. அதே நேரம் பழைய பதிவுகளை.. சும்மா போங்கப்பா.. குழப்புது..

இது தான் கடைசி

இதற்கு முந்தைய இதேமாதிரியான இரண்டு பதிவுகளில் சொதப்பி விட்டது. மிகச் சரியாக மீண்டும் இப்பொழுது இட முயல்கிறேன்.

கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கக் கூடும். சொல்லவேண்டியவையென நினைத்தவையெல்லாம் ஒரு பிசையல் போல, ஒரு குழையல் போல உள்ளே கிடக்கின்றன. வெளி வருகையில் ஒரு கூட்டாஞ்சோறு போல இருக்கக் கூடும்.

இப்போதெல்லாம் வலைப்பதிவுகளில் பின்னூட்டங்களை அதிகம் படிக்கிறேன். தேடித் தேடிப் படிக்கிறேன். கிட்டத்தட்ட தொடர் நாடக விரும்பிகளுக்கு இருக்கிற அதே ஆர்வத்தோடு!

குறிப்பாக தமிழகப் பதிவுகளில் பார்ப்பனியம் தலித் சொற்கள் அதிகம் புழங்கும் பதிவுகளை ஒரு வித சராசரி வாசகனுக்குரிய ஆர்வத்தோடு படிப்பதுண்டு. பார்ப்பனியம் குறித்த நேரடி அனுபவம் ஏதுமில்லை. ஈழத்தில் வாழ்ந்த எவருக்கும் இல்லை. (பாத்தினியம் என்ற ஒரு செடியைத் தான் தெரியும். பயிர்களைக் கொல்லும் இச்செடியும் ஓர் ஆக்கிரமிப்பின் ஊடே தான் ஈழ வடபகுதியில் பரவியதாக சொல்கிறார்கள். உறுதிப்படுத்திய பின் சொல்வதே நல்லது.)

வலைப்பதிவுகளில் காணும் தமிழக சாதி குறித்த பதிவுகள் ஈழத்தில் சாதி பற்றிய சிந்தனைகளையும் உருவாக்குகின்றன.

ஒரு காலத்தில் ஈழத்தில் (நான் படித்த புத்தகம் ஒன்றில் 1930 ஆண்டுகளில் என இருந்தது. என்னளவில் அது இன்னும் சற்று பின்னுக்கானதாயும் இருக்கலாம். 60 அல்லது 70 ம் ஆண்டுகளையும் தொடலாம்.) சாதி தலைவிரித்தாடிய பகுதிகளில் யாழ்ப்பாணமும் ஒன்றுதான். தமிழகத்தில் பிராமணிய ஆதிக்கம் போலவே யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் ஆகிய வேளாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவர்களின் தோளிற் சால்வையை இடுப்பில் இறக்கும் மரியாதையை எதிர்பார்த்து, வாழை இலைகளில் விரல் படாமல் சாப்பாடு போட்டு வெளித் திண்ணையின் ஒரு ஓரத்தில் அவர்களை உட்கார வைத்து..' இத்தனையும் யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கிறது. அதுவும் என்னால் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடிய காலம் வரை நடந்தது. அடக்கப்படுகிற ஓர் பிரிவினர் தம்மை விட தாழ்ந்தவர்கள் என கருதிய இன்னொரு பிரிவினரை அடக்குதல் அல்லது தமது மேலாண்மையை பிரயோகித்தல் என அத்தனையும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது.

தொன்னூறுகளிற்கு முதல் யாழ்ப்பாணத்தின் ஓர் கிராமக்கோவிலில் உள்நுழைந்த ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுவனை அந்த கோவில் ஐயர் ஒரு சிறு சுள்ளித் தடி கொண்டு அடித்து விரட்டியது எனக்கு மறக்க முடியாத ஒரு பதிவு. வெளியே ஓடியவன் ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்து சென்றானே.. அது இப்போதும் பிசைகிறது.

உயர்ந்தவர் என கருதியோர் வீடுகளுக்குள் வந்தால் வீட்டில் தண்ணீரோ தேனீரோ அருந்தாமல் சோடா வாங்கி குடித்தவர்களின் பிள்ளைகள், தனியாக வந்தால் 'வீட்டை சொல்ல வேண்டாம்' எனக் கேட்டு அந்த வீட்டின் தட்டுக்களிலேயே சாப்பிட்டு தேனீர் குடித்துப் போன மாற்றம் நிகழ்ந்த காலங்களும் நினைவில் நிற்கின்றன.

இப்பொழுது யாழ்ப்பாணத்தில் அல்லது ஈழத்தின் பிற பகுதிகளில் சாதி இல்லை.
என்னும் பெரிய பொய்யை சொல்ல நான் தயாரில்லை. இருக்கிறது. அடங்கிப் போய் இருக்கிறது.

யுத்தம், உயிரிழப்புக்கள், இடம்பெயர்வுகள், சாதிப் பிரயோகத்திற்கெதிரான கட்டுப்பாடுகள் சாதி என்னும் கருத்துருவை அதன் காப்பாளர் மனங்களில் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன முடிந்தவரைக்கும் வெளியெ விடாமல்... அவர்களில் பலர் தங்கள் 'புனிதத் தன்மை' தங்கள் கண்முன்னே அழிகின்றதே என இன்னமும் வெம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மற்றும் படி ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதிப் பிரிவினைகள் இல்லை. அதற்கு விடுதலைப் போரே காரணம் என்றால் அதன் அர்த்தம் அங்கே பொய் சொல்லப்படுகின்றது என்பதே.

விடுதலைப் போர் சாதியின் பேரால் தங்கள் மேலாண்மையைத் திணிக்க முற்படுபவர்களின் எண்ணத்தை பலாத்காரமாக கட்டி வைத்திருக்கிறது. அடக்கி வைத்திருக்கிறது. அதுவே அங்கே பாரதூரமான சாதிய வெறித்தனங்கள் நிகழாமல் பார்த்திருக்கிறது.(அதற்கு முன்பாக நடந்திருக்கின்றன.)

இந்த நிதர்சனமே ஒரு கேள்வியை உருவாக்குகிறது.

நாளை போர் ஓய்வுக்கு வந்தால் மீண்டும் அடங்கிக்கிடக்கிற இந்தச் சாதிய நடைமுறைகள் மீளக் கிளம்பாதா என்பதே அது.

சரியானதும் நியாயமானதுமான கேள்வி.

ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே விடயம் இந்த யுத்த காலத்தினூடே நடக்கின்ற ஒரு தலைமுறை மாற்றம் தான். கட்டுப்பாடுகள், போர் ஆகியவை காரணமாய் சாதிய வெறி உணர்வு அடக்கப்பட, அது அடுத்த தலைமுறைக்கு முழுவீச்சில் ஊட்டப்படுகின்ற வாய்ப்பு பெருமளவில் நழுவிப்போய் விட்டது. ஆக சாதிய உணர்வைத் தூக்கிப் பிடிப்பவர்கள் கடைசிவரை அதை தமக்குள் வைத்துப் பொரும, அடுத்ததாய்ப் பிறந்த தலைமுறை சாதிய வெறி ஊட்டல்கள் இல்லாமல் வளர்ந்து நிற்கிறது.

இதுதவிர யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் கோவிற் திருவிழாக்களில் சாதியின் பெயரால் திருவிழாவிற்கான நாட்கள் பிரிக்கப்படுவது இன்னமும் நடக்கிறது என்பதையும் திருமணங்களின் போது சாதி முக்கியமாய் எதிர்பார்க்கப்படுகிறது என்பதுவும் சொல்ல வேண்டிய விடயங்கள்.
-------------------------------------------------
ஈழம் தொடர்பாகவும் அவ்வப்போது பதிவுகள் வருகின்றன. அண்மையில் சிறீரங்கனின் The point:social steady is the sociality.
என்னும் பதிவில் புலிகளால் பராமரிக்கப்படும் காப்பகங்களில் வாழும் சிறார்களை குறித்து, அவர்களை வேள்விக் கிடாய்கள் என்னும் கருத்தில் அவர்கள் யுத்தத்திற்காய் வளர்க்கப்படுகிறார்கள் என எழுதிய போது அளவில்லாத மனவருத்தமாய் இருந்தது.

யாரும் அற்றவர்கள் என்ற எந்த எண்ணமும் கொஞ்சமும் இல்லாதவர்களாய் மகிழ்ச்சியாய் வளையவரும் அவர்களை பலியாடுகள் என்ற ரீதியில் எழுதியதைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது. எடுத்ததுக்கெல்லாம் மறுப்புச் சொல்லாதீர்கள் என அந்தப் பதிவில் சிறீரங்கன் எழுதியிருந்ததால் அதில் மறுப்பேதும் சொல்ல வில்லை.

ஆனால் அவர்கள் மறுப்புச் சொல்லட்டும்.

கொஞ்சம் பம்பலாய் கறுப்பியின் தளத்துக்குச் சென்று எழுதப்பட்ட பின்னூட்டங்களை படிப்பதுவும் அவற்றில் எவையெல்லாம் அழிக்கப்படும் என பட்டியலிடுவதும் மீண்டும் வந்து அவை அழிக்கப்பட்டு விட்டனவா என்று பார்ப்பதுவும் குஷியான பொழுது போக்குகள்.

டோண்டு அவர்களின் ஈழம் தொடர்பான பதிவுகளில் பின்னூட்டங்களிலும் ஆர்வம் அதிகம். பாலசிங்கத்திற்கு மருத்துவ உதவி கேட்டதை மறக்காமல் ஈழம் தொடர்பான அனைத்துப் பின்னூட்டங்களிலும் இடுவார். உதவி கேட்க ஒரு நாடிருந்த நிலையில் அந்த நாட்டில் போய் சதி செய்யக் கூடாது என்ற அவரது அறிவுரை படித்தேன்.

உதவி செய்வதாகச் சொல்லுகின்ற நாடுகளின் உள்நோக்கங்கள் பற்றி உதவி கேட்பவர்கள் ஆராயக்கூடாது.

அதற்கான உரிமைகள் எதுவும் அவர்களுக்கு கிடையாது.

சரி ஐயா அப்படியே ஆகட்டும்.

எனது பதிவொன்றில் அவரது ஆதங்கம் இது.

எப்படி ஐயா மறக்கும்? தமிழக மக்களுக்குப் பிரியமான நேருவின் பேரனைத் தமிழக மண்ணிலேயே சாய்த்தவர்களை இன்னும் தூக்கிலேற்றாமல் இருக்கப்படும் வரை இது மறக்காது.

தனது தலைவனை பலிகொண்ட அமைப்பின் தலைவனை தூக்கிலேற்ற வேண்டும் என ஐயா டோண்டு விரும்பினால், குமரப்பாவிலிருந்து திலீபன் முதலாக நூற்றுக்கணக்கான தமது உறுப்பினர்கள் பலியாக காரணமாயிருந்தவர்களின் தலைவரை தூக்கிலேற்ற, அது முடியாத பட்சத்தில் குண்டுவைத்துக் கொல்ல அந்த அமைப்பு ஏன் விரும்பக் கூடாது என்ற குதர்க்கத் தனமான கேள்வியுடன்

முடிச்சிட்டன்