20.2.05

எனக்கும் ஒரு சாதி சான்றிதழ்

மண்டபம் ஏதிலிகள் தங்ககத்திலிருந்து திருச்சிக்கு சென்று தங்கியிருந்த காலப் பகுதி அது!

என்னை அங்குள்ள ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் மூலமாக அறிமுகமான சட்டத்தரணி ஒருவர் தான் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பள்ளிக்கு இருக்கின்ற வரைமுறைகள் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு அமையவே அனுமதிகள் தரப்படவில்லை என்றே நான் நம்புகின்றேன்.
இருப்பினும் நான் படகில் வந்தவன் என்ற காரணமும் அவர்களுக்கு ஏதாவது சிக்கல்களை ஏற்படுத்தியிருக்க கூடும்.

இவ்வாறாக ஓர் பள்ளியில் எனது அனுமதிக்காக கொஞ்சம் இறங்கி வந்து T.C மற்றும் சாதிச் சான்றிதழ் என்பவற்றை கொண்டு வர சொன்னார்கள்.

இவை மீண்டும் எனக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தன.

முதலாவது அகதியாக படகில் ஏறி வந்த நான் T.C கொண்டு வரவில்லை

இரண்டாவது சாதிச் சான்றிதழ் என்ற ஒன்று என்னிடம் எங்களிடம் இலங்கையில் இல்லவே இல்லை.

இது சாதி என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அவர்கள் அப்படி கேட்டது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது என்கிற எண்ணத்தை ஏற்படுத்த எழுதப்பட்டதல்ல.

சாதி என்பது என் காலத்தில் முன்னிலையில் பேசப்படாத விடயமாகவே இருந்து வந்தது. (மற்றும்படி அது பேசப்பட்டது.)
ஒருவரைப் பார்த்து நீங்கள் என்ன சாதி என்று கேட்பது பண்பற்றது என்ற கருத்தியலில் வளர்ந்த எனக்கு அவ்வாறு கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் ஒருவித சங்கடத்தை உணர்த்தின.

சாதிக்கென தனியான சான்றிதழ் எதுவும் இலங்கையில் கொடுக்கப்படுவதில்லை. நமது பிறப்பு பதிவு சான்றிதழில் சாதி என்கிற ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இலங்கைத் தமிழர் என்று குறிக்கப்படும். அவ்வளவே

இதற்கிடையில் எனக்கான ரி சி யினை இலங்கையிலிருந்து எடுப்பித்தால் சாதிச் சான்றிதழை போலியாக தயாரிக்கலாம் என்று சட்டத்தரணி கூறினார்.
அவ்வாறு தயாரிக்கும் போது பிற்படுத்தப்பட்ட (பிற்பட்ட அல்ல) சமூக அமைப்புகளை தெரிவு செய்தால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடுகளின் நல்ல பலன் பெற முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

நான் இறுதியாக கல்வி கற்ற பள்ளி வன்னியில் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இலங்கை ராணுவத்தினர் வன்னியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு பாதை சமைக்க ஜெயசிக்குறு சமரை நடத்திக்கொண்டிருந்தனர்.
வன்னிக்கான எந்த தொடர்புகளும் அற்ற நிலை. எனது ரி சி யினை பெறவே முடியவில்லை.

இப்படியாக மாதங்கள் அள்ளுண்டு போனது.
இறுதியாக கொழும்புக்கும் புறப்பட்டாயிற்று.

இதனை எனது ஊரின் உறவினர்களுக்கு சொன்னபோது 'கன்றாவி.. அதுக்கெல்லாம் சேட்டிபிகேற் இருக்கோ' என்று ஆச்சரியப்பட்டனர்..

அவர்களில் சாதியை ஏற்றுக் கொண்டவர்களும் அடக்கம்.

18.2.05

யானைக் கதை

இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்!

அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம்.

ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு வந்தம். அது ஒரு தென்னந்தோட்டம். அடுத்தடுத்து ஒவ்வொரு வித்தியாசமான பெயருகளிலை நிறைய தோட்டங்கள். ஆச்சி தோட்டம் G.S காணி வெள்ளைக் கேற் (Gate) சிவத்தக் கேற் பத்தேக்கர் காணி எண்டு உப்பிடி நிறைய வித்தியாசமான பெயர்கள்.

நாங்கள் வந்திறங்கின தோட்டம் ஆச்சி தோட்டம். அது என்ன காரணப்பெயரா என்று எனக்கு தெரியாது.

அதுக்குள்ளை ஒரு மண்ணாலான கட்டிடம் இருந்தது. தேங்காய் எண்ணைக்கு பாவிக்கிற கொப்பறாக்களை மூட்டை மூட்டையாக கட்டி அதுக்குள்ளை வைச்சிருந்தினம்.

எண்ணை வாசம் சும்மா அந்த மாதிரி கமகமக்கும்.

அதுக்குள்ளைதான் அண்டைக்கு இரவு படுத்தம்.

இரவு வந்தபடியால எனக்கு இடம் வலம் எதவும் தெரியேல்லை. நல்ல களைப்பு வேறை.. அப்பிடியே நல்ல நித்திரை...

விடிய நல்லா நேரஞ்செண்டுதான் எழும்பி பாத்தன்..

என்ரை கடவுளே.. ஏதோ நடுக் காட்டுக்குள்ளை கொண்டு வந்து விட்ட மாதிரி கிடந்தது.

பாக்கிற இடமெல்லாம் தென்னை மரங்கள்.. அதை தாண்டினா காடுகள்..

ஏதோ ஒரு வனாந்தரத்தில வந்து நின்ற மாதிரியான ஒரு வெறுமை..

என்ன செய்ய முடியும்.. வந்தாச்சு இனி வழியைப் பாக்க வேணும்.
நாங்களும் ஒரு வீடு கட்டுவதென்று முடிவாச்சு. அதுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த காணின்ரை பெயர் பத்து ஏக்கர் காணி.

அதுக்கு ஒரு காரணம் இருந்தது. வன்னியிலை சீமெந்து கட்டு கட்டப்பட்ட கிணறுகள் அரிது அல்லது கிடையாது. ஆனால் அந்த காணிக்குள்ளை இருந்த கிணறு அப்பிடி கட்டப்பட்டிருந்தது. அது மட்டுமில்லை.. அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல தண்ணி கிணறு இருந்த ஒரே காணியும் அதுதான்.

ஆனால் இன்னொரு பக்கத்தாலை அந்தக் காணியில வேறை சில விசயங்களும் இருந்தது.

அதன் ரண்டு பக்கங்கள் காட்டோடு இணைந்திருந்தன. இன்னொரு பக்கம் ஒரு ஒற்றை வீதியூடும் மற்றயது ஆச்சி தோட்டத்துடனும் இணைந்திருந்தது.

காட்டோடு இணைந்திருந்தமையால் யானைகளின் தொல்லை இருக்குமென்று சொன்னார்கள்..

அதுவும் அந்த தோட்டத்திலை இளம் தென்னைகள் தான் நாங்கள் இருக்கும் போது இருந்தன. அதனால யானைகள் கட்டாயம் வரும் எண்டும் சொல்லிச்சினம்.

இருந்தாலும் பறவாயில்லை எண்டு நாங்கள் தொடங்கிட்டம் வீடு கட்ட. காடுகளிற்குள் அனுமதியின்றி மரம் தறித்தல் சட்டவிரோதமாக புலிகள் அறிவிச்சிருந்தவை. அதனாலை அனுமதி பெற்று மரங்களை தறிச்சு களி மண்ணிலை கல் அரிஞ்சு ஒரு மாதிரி வீட்டை எழுப்பிட்டம்.

நானும் பள்ளிக்கூடம் ரியூசன் நண்பர்கள் எண்டு திரிய பழைய வெறுமையும் மறந்து போச்சு.

மிச்சம் வரும்!

15.2.05

தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு

வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு.. இந்த பாடல் குறித்து எனது பழைய பதிவொன்றிலும் குறித்திருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. இந்த பாடல் வரிகள் அத்தனையும் என்னை கவர்ந்திருக்கின்றன.. இந்த பாடலின் MP3 வடிவத்திற்கான ஓர் இணைப்பினை கொடுத்திருக்கிறேன். தரவிறக்கி கேட்டு பாருங்களேன். தரவிறக்க
நன்றி www.thaiman.ch

14.2.05

இணைய வல்லுனர்களின் தார்மீக கடமை

ஹி ஹி ஹி அப்பிடியொண்டும் பெரிசா இல்லை இணைய வல்லனர்களே.. புது வீட்டுக்கு வந்தும் ஒழுங்காக கடிதங்கள் வந்து சேராது போல இருக்கிறது. இன்னமும் தீர்க்க வேண்டிய சில பிரச்சனைகள் கூடவே வந்து கொண்டிருக்கின்றன.

1) தமிழில் பின்னூட்டம்... பார்க்கும் பதிவில் எல்லாம் அவரவர் ஹாயாக தமிங்கிலிஷில் அடியுங்கள் தானாக தமிழாகும் பாமினியில் அடியுங்கள் தானாக யுனிகோட் ஆகும் என்றெல்லாம் போட்டிருக்கிறதை பார்க்க இந்தச் சின்னத்தம்பியின் மனது கனத்துப் போகிறது!!! கொசப்பேட்டை குப்பு விக்கி இப்பிடி எல்லா இடத்தில சொன்னது மாதிரியும் முயற்சித்து பின்னர் களைத்தும் ஆச்சு.. ஒண்டும் சரிவரேல்லை

2) சாரல் பதிவில் தனித்த பதிவுகளை சொடுக்கிப் பார்க்கின்ற போது உதாரணமாக ஒரு பதிவை நான் இட்டால் அதனை தமிழ்மணத்தினூடாக நீங்கள் அணுகினால் அங்கு கருத்து எழுதுவதற்கு எந்த வசதியையும் காணோம். முகப்பு பக்கத்தில் மட்டும் அந்த வசதி இருக்கிறது..
ஆகவே தான் நண்பர்களே எதை எதை வெட்டி எங்கு எங்கு ஒட்டுவதென்று சொன்னால் உங்களுக்கு ரொம்ப புண்ணியமாக போகும்.
ஹி ஹி ஹி நாளைக்கு உலக அளவில் பேசப்படப் போகின்ற ஒரு வலைப் பதிவுக்கு உதவி செய்வதன் மூலம் வரலாற்றில் உங்கள் பெயரையும்.............................. நிறுத்துடா சயந்தா

மீண்டும் வணக்கம்

ஒரு சில கால இடைவெளியின் பின்னர் மீண்டும் வந்துவிட்டேன். யாழ் தந்த வீட்டில் போட்டது போட்டபடி இருக்க கொஞ்சம் ஜிலு ஜிலுப்பாய் ஒரு வீடு கட்டி வந்தாச்சு. ( இங்கே மெல்பேர்ணில் வசிக்கும் வீட்டினையும் மாற்றியாச்சு). இனித் தொடர்ந்து எழுதுவதற்கு முன்பாக ஒரு படம்! புது வீட்டில் படங்கள் எல்லாம் சரியாக வருகிறதா என பரிசோதிக்க இது.
ஒஸ்ரேலிய பழங்குடியினர் சிட்னியில் எடுக்கப்பட்டது.
பிற்குறிப்பு: தமிழில் பின்னூட்டம் தொடர்பாக எல்லா இடத்திலும் சொன்னது மாதிரி முயற்சித்து விட்டேன். ஒரு பயனும் இல்லை. பின்னூட்டத்தினை அனுப்பும் போது ERROR வருகிறது. யாராவது ஏதாவது சொல்லுங்கப்பா....

13.2.05

கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம்

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது.

அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா என்ற கேள்வியும் இப்போதாவது தெரிந்ததே என்ற எண்ணமும் ஒருங்கே உண்டாகின்றன.
சக்தி சொல்லியதை வைத்துப் பார்த்தால் நமது அதிபர் சற்றுக் கடுமையாகத் தான் கருத்து வெளியிட்டிருக்கிறார் போல தெரிகிறது.

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாகவும், சிறு சிறு விடயங்களிற்கு எல்லாம் அரசிலிருந்து விலகப் போவதாக மிரட்டுவதாகவும்,அவ்வாறு விலக விரும்பினால் அவர்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அரச பங்காளிக் கட்சியான ஜே வி பியின் நடவடிக்கைகளால் சந்திரிகா எவ்வளவுக்கு நொந்து போயிருக்கிறார் என்பதை அவரது கருத்துக்கள் சொல்கின்றன.

பார்க்கலாம்!

''கண் கெட்ட'' பின்னாலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்