28.2.07

ஆடுகிறார் வசந்தன்

வசந்தனுக்கு இசையின் மீது தீராத காதல் இருப்பது உங்களில் பலருக்குத் தெரியாது. இசை மீதான அவரது காதல் நடனம் மீதான மோகமாக மாறியதில் வியப்பில்லைத் தானே. மாயாவின் பாடல் ஒன்றுக்கு அவர் எப்படி நடனப் பயிற்சி செய்கின்றார் என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா..? வழமை போலவே என்னதான் தன் முகத்தை மறைக்க அவர் முயற்சித்தாலும் தருணங்கள் அவ்வப்போது காட்டிக்கொடுத்து விடுகின்றன.
நினைவில் வைத்திருங்கள் இது வெறும் ஒத்திகை தான்.


24.2.07

வாழ்வினூடு பயணிக்கும் புதுவையின் கவிதைகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ) ஈழப் போராட்டப் பாடற்களத்தில் புதுவை இரத்தினதுரைக்கு பெருமளவு பங்கிருக்கிறது.

பாடற்களம் தவிரவும் கவிதைப் பரப்பிலும் இவர் அறியப் படுகிறார். புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பே இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கின்றார் என அவரது முன்னைய கவிதைகள் சொல்கின்றன. பிற்காலங்களில் கூட தனது சில பல கவிதைகளில் என் ஜேவிபி தோழனே என விளித்திருக்கிறார். தனது மே தின கூட்டங்கள் குறித்து நினைத்திருக்கின்றார்.

ஆயினும் எது கவிதை என்ற சுழலில் அவரும் சிக்காமல் இல்லை. விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வியாசன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதைகளை, அவர் தற்போதைய எண்ணக் கருக்களுக்கேற்ப அவை கவிதைகளா என தனக்குத் தெரியாதெனவும், ஆனால் அவற்றை உரைச் சித்திரங்கள் எனத் தன்னால் கூற முடியும் எனவும் சொல்கிறார்.

உலைக் களத்தில் வெளியாகும் புதுவையின் உரைச்சித்திரங்கள் நிறைந்த வீச்சைக் கொண்டவை. சம காலத்தின் மீதான அவரது பார்வையைச் சொன்னவை. அவரது கோபங்களைக் கூறியவை. (புலம் பெயர் தமிழர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய இரண்டு வரிகள் அண்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமாதானத்திற்கான காலத்தில் அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்திருந்த போது அவரை விமர்சிக்க அது பெருமளவு பயன்பட்டது.)

94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்
நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்
கதையற்ற கலைப்படைப்பு என்பதால்
பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்
நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.
இடை வேளையுடன் திரை விழுந்தது.
ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை
திருத்தியெழுதப்பட்டதை
அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை
குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.
கொட்டட்டும்.

95 ஒக்ரோபர் 30 யாழப்பாண இடப்பெயர்வின் பின்னர் துயர் சுமந்து இடிந்து போயிருந்த காலத்தில் அவரது படைப்புக்கள் சோகத்தைச் சுமக்கின்றன.

இடைவெளியற்று இடி விழுகிறது எமக்கு
அவலம் அன்றாட வாழ்வாச்சு
கறிக்கு உப்பானது கண்ணீர்
நாசித்துவாரங்கள் காற்றையல்ல
கந்தகத் துகள்களையே சுவாசிக்கின்றன.
அடுத்த நேர உணவு எந்த அகதி முகாமில்..
யாரறிவார்..

அதே நேரம் பொதுமக்களை நோக்கிய நம்பிக்கை அறைகூவல்களாக இருந்திருக்கின்றன.

எரியுண்டு போகுமா எம்மண்
நடவாது
பூவரசு பூக்கும் பூமிக்கு
வெள்ளரசு வந்தா விலங்கிட முடியும்..
மழை நீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது
அசையாதென்பதறிக
எந்நாட்டு மக்களையும் எம் தேசம் வரவேற்கும்
படையோடு வருபவர்க்கு எம் தலைவாசல் மரமிடிக்கும்.
குமாரணதுங்காவின் குடும்பத் தலைவிக்கு
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.

அவரது கவிதைகளில் எள்ளலும் கேலியும் ஆங்காங்கே தொனிக்கிறது. 96 இல் யாழ் குடா நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு நகருக்குள் வாழச்சென்ற சில பிரபலங்கள் மீதான தனது எள்ளலை இப்படிச் சொல்கின்றார்.

புராதன வாழ்வின் பெருமை அறியாது
நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென
எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி
புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.
சிங்கக் கொடியேற்றும் போது
நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?
கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்
உள்ளே வந்துள்ளான்
கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.
வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை
இங்கு காணவில்லை.
சந்தக் கவிஞர்களல்லவா
உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.
வாசலில் நிற்க வைக்கவும்.
சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.
குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய
காட்டாற்று வேகக் கதைக்காரன்
வீட்டுக்கு வந்தள்ளார்.
பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்
பழைய பேப்பர் வழங்குக
அவர் பாடநூல் அச்சிடட்டும்..
பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே
உமக்கு என்ன நடந்தது
உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை
உமக்குச் சொல்லித்தந்தது யார்.?

பொதுவாக இவரது இத்தகைய உரைச் சித்திரங்களில் பிரதேச பேச்சு வழக்குக் கதையாடல்களும், பழமொழிகளும் நிறைந்திருக்கும். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றைச் சொல்லும் போது

காற்றுக்கொதுங்கிய போர்த்துக்கீசனின்
கண்ணிலெம் தாயகம் தெரியும் வரை
தலையில் கட்டிய தலைப்பாகையை
முதுகில் தொட்டுப் போவதென
உயர்ந்த வாழ்வுக் குரியவராய் இருந்தோம் நாம்.
எம்மை நாமே எழுதினோம்.
வெடிமருந்துடன் வந்தவனை
வேலும் வாளும் வெல்ல முடியவில்லை
வேற்றொருவனின் காலில் விழுந்தோம்.
கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்தோம்.
யானைகள் மிதிக்கும் சேனைப்புலவாய்
மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்
நாறிக் கிடந்தது நம் வாழ்வு
வெள்ளைக் காரன் வெளியெறிய போது
சேனநாயக்காவிற்கு சிம்மாசனம் கிடைத்தது.

குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயம் புதுவை இரத்தினதுரை, தான் தேர்ந்தெடுத்த போராட்டப் பாதையினூடு தன்னோடு பயணித்த சக தோழர்களின் பிரிவுகளையும் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரித்த திலீபனை அவர் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளையெனப் பாடுகின்றார்.

சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு
அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.
திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.
வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை
அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!
அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது
இமயம் உயரமெனும் அகம்பாவம்.
'கந்தன் கருணை' யிலிருந்துன் கால் நடந்த போது
கோயில் வீதியே குளிர்ந்து போனது.
கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி
வீற்றிருந்தாள் முத்துமாரி.
பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி
நீ உருகியபோது
வெள்ளை மணல் வீதி விம்மியது.
உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது
குற்றவுணர்வு எம்மைக் குதறியது.
வரண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது
திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.

இவர் ஈழப் போரில் நிகழ்ந்தேறிய சகல சமாதானப் பேச்சுக்களையும் ஒரு வித எச்சரிக்கையுணர்வுடனே அணுகியிருக்கிறார். வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை முன்னிறுத்தியே அவை பற்றிப் பேசுகிறார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு மாவீரர் தினத்தில் அவரது உணர்வுகள் இவ்வாறு இருந்திருக்கின்றன..

இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும் போதே
என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்..?
சம்பூ கொணர்ந்தோம்
சவர்க்காரம் கொணர்ந்தோம்
சீமெந்தும் முறுக்குக் கம்பியும்
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்ல முடியுமா அவர்களுக்கு

2004 இறுதியில் சுனாமிக்கு உறவுகளைத் தின்னக்கொடுத்ததெம் தேசம். அந்த வலியின் அவலங்களை அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

முள்முடி சூடி
முதுகிற் பாரச் சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.
இயேசுவே
எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி
ஆலமுண்ட நீல கண்டனே
எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு
அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்தபெருமானே
வெள்ளம் வருகுதென்றாயினும்
சொல்ல வேண்டாமா..?
எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்
நாம் தான் தனித்துப்போனோம்

நிகழ்காலத்திலான அவரது கவிதைகள் சமாதான மாயையில் சிக்கிப்போன நிலைபற்றிச் சொல்கின்றன. சலிப்பினையும் விரக்தியினையும் ஏமாற்றத்தினையும் அவை பேசுகின்றன.

இந்தத் தடவை வானப் பயணம் போனவர்
வந்து இறங்கியதிலிருந்து
ஆவியாய் வெளியேறிக் கரைகிறது
மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..
மேசையிலமர்ந்து பேசுவதென்பது
பூதகியிடம் பால் குடிப்பதைப் போன்றதே
உறிஞ்ச வேண்டும்
விழுங்கக் கூடாது
சிரிக்க வேண்டும்
சிக்குப்படக்கூடாது

சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை

நெஞ்சுக்குள் அலையெற்றிய
மாயக்கனவுகள் வெளியேற
நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.
மினுங்கிய மின்சாரமற்று
தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று
செப்பனிடப்பட்ட தெருவற்று
மாவற்று - சீனியற்று - மருந்தற்று
ஏனென்று கேட்க எவருமற்று
கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.
கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்
வீட்டு மூலையில் வீசிவிட்டு
மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்
விறாந்தையின் தரைவிரிப்புகளையும்
மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்
அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு
பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.
விடுவிக்கப்பட்ட ஊர்களை
விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து
ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல
மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.
இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து
மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.
இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி
தாய்நிலம் வாய்திறந்து பாடும்
விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.
மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி
எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி
கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

ஒரு உண்மையான பிற்சேர்க்கை:
2002 இல் நானும் நண்பர்களும் ஆரம்பித்த எழுநா என்னும் இணையத்திற்காக புதுவை இரத்தினதுரை அவர்களிடம் பெற்ற வாழ்த்து இது தனிப்பட என் சேமிப்பில் இல்லையாயினும் மினிவெளியில் ஏதோ ஒரு மூலையில் இருந்தது.

இன்று புது உதயம் எழுகிறது.
இணையமதை
வென்று நிலைத்து விடும் விருப்பில்
எழுநா எனும்
கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது.

நன்றென்று வாழ்த்தி
நான் மிதந்து கொள்கின்றேன்.

நீளக்கிடக்கின்ற நிலமெல்லாம்
நெடிதுயர்ந்து
ஆளும் நிலை தமிழுக்காகுமெனும்
நம்பிக்கை சூழ்கிறது.

எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..
உங்கள் தொண்டு மிக நெடிது.
வாழ்வீர்.
புதிய தொரு வரலாறு உமக்காகும்.

எழுநாவால் எழும் உலகு.
இனித்தமிழ்
தொழுதுண்டு வாழாதெனச் சொல்லி
நீ துலங்கு..

இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. ஆரம்பத்தில் இணையத்திற்கு உயிர்ப்பு எனத்தான் பெயரிட்டோம். புதுவையின் கவிதை கூட உயிர்ப்பு என்ற பெயரை மையப்படுத்தியே இருந்தது. (உயிர்ப்பால் உயிர்க்கும் உலகு என்றவாறாக..) ஆனால் சடுதியாகச் சில காரணங்களால் அதனை எழுநா என மாற்ற வேண்டியேற்பட்டது. கவிதையையும் மாற்ற வேண்டும். அவரும் மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வில சரியான பிசி.. வேறை வழியில்லாமல் ஆங்காங்கே நானே கை வைக்க வேண்டியதாய்ப் போனது. ஆயினும் அது அவருக்கு அறிவிக்கப் பட்டது.


ஒரு உண்மையற்ற பிற்சேர்க்கை:
தம்பி சயந்தா உன் சாதனை மிகப்பெரிது என்று கூட ஒரு வரியைச் சேர்க்கலாம் என்றிருந்தேன். ஆனா சோமிதரன் தன்ர பேரையும் போட வேணுமெண்டான். சோமி உன் ஆற்றலைக் காமி என்றோ சோமி நீ எங்க குல சாமி என்றோ போட்டிருக்கலாம் தான். எண்டாலும் போடேல்லை ;)

20.2.07

விடுதலைப் புலிகளைப் பற்றி வீராச்சாமி

ஈழவிடுதலை பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அசாதாரண ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் எந்த ஒரு பேச்சையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஈழத்தில் தமிழ் அரசியல் வாதிகள் செல்வாக்கு செலுத்தாத காலத்தில் பிறந்தவன் என்பதாலேயோ வளர்ந்தவன் என்பதானாலேயோ இவ்வாறான உரைகளைக் கேட்டதில்லை. சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆங்காங்கே பரப்புரைகளை நடாத்திய போதும் தமிழக தலைவர்களினது உணர்ச்சி மிகு உரைகளைப் போல அவை இருந்ததில்லை.

புலிகள் கூட தமது நிகழ்வுகளில் அவ்வாறு பேசியதில்லை. அதனால்த் தானோ என்னவோ ஆணி வேர் திரைப்படத்தில் நந்தா மேடையில் ஏறி நாம் பூனைகள் அல்ல புலிகள் என்று உறுமிய போது எனக்கு இந்திய தமிழ்ச் சினிமா பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல்த் தடவையாக விடுதலைப் புலிகள் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஒரு தமிழக அரசியல் பிரமுகர் அத்தனை ஆக்ரோசமாகப் பேசியதைக் கேட்டேன். அவர் யாருமல்ல. வீராசாமியெனும் காவியம் அளித்த விஜய ரி ராஜேந்தர் தான் அவர். கேட்கிறீங்களா..?19.2.07

செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்..

12 வருசங்களுக்கு முன்பு முற்றம் கோடி தாழ்வாரம் கிணற்றடி என வாழ்ந்த சூழலில் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்த்த காலத்தின் பின் மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்தின் ஏதோ ஒரு கோடியில் வாய்த்து விட்ட வீடாயினும் அமைதியும் கதவைத் திறந்தால் முன் முற்றத்தில் இறங்கி விளையாடும் சூழலும் வளர்ப்புப் பிராணிகளை விரும்பி ஏற்கப் பண்ணின.

இப்போ சற்று முன்னர் பூனைக் குட்டியாரைத் திரத்தித் திரத்திப் படமெடுத்தேன். அப்போ ஜெர்மன் மொழியில் அவர் சிந்தித்ததை முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். பார்க்கிறீங்களா..?

wweeeeee

wweeeeee

18.2.07

இப்போ வந்த பின்னூட்டங்கள் இவை..

இந்த வலைப்பதிவின் பக்கத்தில், இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் ஒரு பகுதி இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் எனது வலைப்பதிவுக்கு கடைசியாகப் பின்னூட்டம் இட்டவர்களினுடைய பெயர்களும், பின்னூட்டங்களில் இருந்து சில வரிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும்.பின்னூட்டங்களினூடு, பதிவொன்றின் தொடர்ச்சித் தன்மையைப் பேண, இது பெருமளவு வழி வகுக்கிறது. இதனை நிறுவுதல் தொடர்பான சில குறிப்புக்களை இப்போது பார்ப்போம்.

உங்களது கிளாசிக் வார்ப்புருவில் இணைக்க வேண்டிய முதலாவது நிரலினை இவ்விணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். txt கோப்பாக கிடைக்கும் இந் நிரல் துண்டைப் படியெடுத்து, அவதானமாக உங்களது வார்ப்புருவின் <head> பகுதிக்குள் செலுத்துங்கள். குறிப்பாக </head>என்னும் பகுதிக்கு மேலாக செருகுதல் உங்களுக்கு இலகுவானதாக இருக்கும்.

இனி உங்கள் வலைப்பதிவில் இறுதியாக இடப்பட்ட பின்னூட்டங்கள், காட்சிப்படுத்தப்பட வேண்டிய இடத்தைத் தீர்மானியுங்கள். பொதுவாக side bar எனப்படும் பகுதியில் இடுவதே பொருத்தமாயிருக்கும். உங்களது வார்ப்புருவில் அதற்கான பகுதியைத் தெரிந்து கொண்டு இவ்விணைப்பில் உள்ள நிரல்த் துண்டினை இணைத்து விடுங்கள்.

இங்கு yourName என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுப் பெயர் உள்ளிடப்பட வேண்டும் என்பதை, நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்மென்பதில்லை. அது போலவே numcomments என்னும் variable, காட்டப்பட வேண்டிய பின்னூட்டங்களின் எண்ணிக்கையையும், numchars என்பது ஒவ்வொரு பின்னூட்டத்திலும் காட்டப்படவேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தெரிவு செய்ய முடியுமாயினும் 10 பின்னூட்டங்களும் 100 சொற்களுமே போதுமானவை.

இனி layout வார்ப்புருவில் இறுதிப் பின்னூட்டங்கள் தொடர்பாகப் பேசுவோம். அதில் இவ்வாறான சுத்துமாத்து வேலைகள் தேவையில்லாத வகையில், புளொக்கர் நேரடியான சேவையை வழங்குகிறது.

உங்களுடைய Template பகுதியில் Page Elements பிரிவினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இனி இறுதிப் பின்னூட்டங்களை காட்சிப்படுத்துவதற்கேதுவாக Add a Page Element இனை அழுத்தி தோன்றும் புதிய window இல் Feed என்னும் பகுதியில் ADD TO BLOG இனை அழுத்துங்கள்.

இப்போது பின்னூட்டங்களுக்கான Feed url இனை நீங்கள் அதில் கொடுக்க வேண்டியிருக்கும். கீழுள்ள இறுதிப் பின்னூட்டங்களுக்கான Feed url இனை அங்கு இட்டு, Continue இனை அழுத்துங்கள்.

http://yourName.blogspot.com/feeds/comments/default?start-index=2

yourName பகுதியில் வலைப்பதிவின் பெயரெழுத மறக்க வேண்டாம்.

இப்போது திரட்டப்படும் பின்னூட்டங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும். அதில் தரப்பட்டுள்ள தெரிவுகளுக்கேற்ப சில மாறுதல்களை, அதாவது பின்னூட்டத்தினை இட்டவரின் பெயர் மற்றும் திகதி என்பவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம். Title பெயர் கொடுக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.

முடித்தாயிற்றா..? இனியென்ன உங்கள் வலைப்பதிவில் இறுதிப் பின்னூட்டங்கள் இப்போது தயார்.

குறிப்பு: இதனை வெற்றிகரமாக நீங்கள் நிறுவினால் உங்களால் ஒரு விடயத்தை அவதானிக்க முடியும். அதாவது கடைசிப் பின்னூட்டத்திற்கு முந்தைய பின்னூட்டம் வரையான பின்னூட்டங்கள் திரட்டப்படுவதே அது. உண்மையில் இறுதி வரையான பின்னூட்டங்களைத் திரட்டுவதற்குரிய Feed

http://yourName.blogspot.com/feeds/comments/default

என்பதே. ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர், சடுதியாக இது ஒரு வருடத்திற்கு முந்தைய பின்னூட்டங்களைத் திரட்டத் தொடங்கியது. அதனால் சில மாறுதல்களைச் செய்து இறுதிக்கு முந்தைய பின்னூட்டம் வரை திரட்ட வழி செய்யப்பட்டிருக்கிறது.

15.2.07

கூகுள் றீடரில் பின்னூட்டங்கள்

நீங்கள் கூகுள் றீடர் போன்ற செய்தி ஓடைகளுக்கான செயலிகள் ஊடாக பதிவுகளைப் படிக்கும் பழக்கம் உடையவரா?

நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் குறித்த ஒரு இடுகை தொடர்பான புதிய பின்னூட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா..?

புதிய பின்னூட்டம் இடப்பட்டிருக்கும் போது அப்பதிவு கண் சிமிட்டும் நேரமளவே தமிழ் மணத்தில் தங்குவதால் நீங்கள் ஆர்வமுடன் படித்த ஒரு இடுகையை அதன் பின்னூட்டங்களுடன் பின் தொடர முடியாது போகலாம்.

உங்களுடைய கூகுள் றீடரில் கீழ்க்கண்ட முகவரியை இணைத்து விடுங்கள். இங்கே sayanthan.blogspot.com என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பிப் படிக்கும் வலைப்பதிவைச் சேருங்கள். நீங்கள் Fire Box பயன்படுத்துபவராக இருந்தால் நேரடியாக அதிலேயே இந்த இணைப்பை இணைத்து விடலாம். அது இலகுவானதும் கூட.

இதெல்லாம் நமக்காகாதப்பா என்பவர்கள் இந்த முகவரியை உங்கள் இணைய உலாவியில் ஒரு தடவை முயற்சித்தாவது பாருங்கள்.

http://sayanthan.blogspot.com/feeds/comments/full

யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு

2005 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் என்னால் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இது. ஏற்கனவே சில இந்த வலைப்பதிவில் வந்திருந்தாலும் இத் தொகுப்பிலும் மீளவும் இடம் பெற்றிருக்கின்றன. வெளிச்சப் பெட்டி (Light Box)நுட்பத்தில் அமைந்திருக்கும் இத்தொகுப்பினை பார்வையிட ஒரு படத்தின் மீது அழுத்திய பின்னர் தோன்றும் பெரிதான படத்தின் வலது இடது பக்கங்களில் மெளஸை நகர்த்துவதால் தோன்றும் Next,Prev என்பவற்றின் மீது அழுத்தி அடுத்த படத்திற்கோ அல்லது அதற்கு முந்தைய படத்திற்கோ செல்லலாம். தனித் தனியாகவும் பார்க்கலாம்.

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

wweeeeee

குறிப்பு:சின்னக் குட்டியரின் யாழ்ப்பாண படங்கள் பதிவின் தாக்கத்தினால்

14.2.07

தமிழகத்தில் ஈழ அகதிகள்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.

1953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.

தனது நூலெங்கும் தமிழீழம் என்னும் நாட்டிற்காக தான் திட்டமிட்டிருந்த கனவுகளை டேவிட் ஐயா சொல்லிச் செல்கின்றார். தனது ஆரம்ப காலங்கள், இலங்கையின் அப்போதைய அரசியல் நிலைகள், வெலிக்கடைச் சிறை நினைவுகள், தனது தமிழக அனுபவங்கள் என பலதினதும் கூட்டாக அது அமைந்திருக்கிறது. ஆங்காங்கே தீவிரமாக ஈழத்தையும், இஸ்ரேலையும் சாதகமாக ஒப்பிடுகிறார். 1962 இல் இரண்டு வார காலம் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்தமையையும் Exodus என்னும் நூல் குறித்தும் சிலாகித்துச் சொல்கின்றார். I wanted to build Tamil Eelam like Israel. Now I hate the Israelis. They are slaves to America.

திரு டேவிட் ஐயா தனது நூலில் தனது தமிழக அகதி வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுதியதை முடிந்தவரை மொழி பெயர்த்திருக்கின்றேன். 1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் தற்போதையை நிலை குறித்து இங்கு எழுதியிருக்கின்றார். இனி அவர்....

தமிழகத்தில் எனது அகதி வாழ்வின் அனுபவங்கள் பற்றி நான் சிலவற்றைக் கூற வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அதிகளவான ஈழத் தமிழ் அகதிகள் பரந்திருக்கிறார்கள். நான் வந்ததன் பிற்பாடு, அகதிகளின் தொகை எழுபதினாயிரமாக அரசாங்க முகாம்களிலும், ஒரு லட்சமாக வெளியிடங்களிலும் அதிகரித்தது. இப்போது முகாம்களில் அதே எழுபதினாயிரமாகவும் வெளியிடங்களில் முப்பதினாயிரமாகவும் உள்ளது. 1983 இல் நாம் மிக மரியாதைக் குரியவர்களாக வரவேற்கப் பட்டோம்.

ஆயினும் ரஜீவ் காந்தி கொலையின் பின், முழுமையாக எனச் சொல்ல முடியாவிட்டாலும், தமிழக மக்களால் கூட நாம் வெறுக்கப் படுகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது.

எனது இரண்டு சொந்த அனுபவங்களை இங்கு நான் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் திருமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள இனஸ்பெக்டர் - அவர் பெயர் பூங்காவனம் எனச் சிலர் சொன்னார்கள் - என்னை ஒரு நாயைப் பார்ப்பது போல ஏளனமாய்ப் பார்த்தார். எந்த விதமான கேள்விகளும் இல்லை. நடுங்கும் என் கைகளிலிருந்து ஆவணங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்.

நான் நரைத்து விட்ட தலையுடனும் தாடியுடனும் எழுபதை நெருங்கும் வயதில் இருந்தேன். அவரைக் கோபமூட்டும் எதனையும் செய்யவும் இல்லை. எனினும் இனஸ்பெக்டர் எனது ஆவணங்களைக் கிழித்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து கத்தினார்

போ.. போய் எடுத்திட்டு வா

நான் போய் எடுத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அந்த ஆவணங்கள் இல்லாது நான் தமிழ் நாட்டில் வாழ முடியாது.

இப்போது ஈழத் தமிழ் அகதிகள் குடிவரவுத் திணைக்களத்தில் கூட பதிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாம் பொலிஸ் நிலையத்திலிருந்தும், வங்கியிலிருந்தும், வீட்டுச் சொந்தக் காரர்களிடமிருந்தும் கடிதம் பெற்றுச் சென்று குடிவரவுத் திணைக்களத்தில் நமது பதிவைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை நான் இத் திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அப்போது 76 வயது எனக்கு. கூடவே உடல் நடுக்க வியாதியும் வேறு. நான் நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்றவர் தனது அலுவலை முடித்து விட்டுச் சென்ற பின் நான் அதிகாரியை நோக்கிச் சென்றேன். ஆயினும் அவர் என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை அழைத்தார். ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நான் - ஒரு காலத்தில் இந்த உலகம் முழுவதையும் கால்களால் அளந்தவன் - நடுங்கும் என் உடலோடு நிற்க வேண்டியிருந்தது.

நான் எனது குடையையும் பையையும் எடுத்து வெளியேறி விட்டேன். பின்னர் குடிவரவுத் திணைக்கள பிரதான அதிகாரியொருவருக்கு என்னுடைய விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை அனுப்பியதையடுத்து என்னை அழைத்த அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்தியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காதெனவும் உறுதியளித்தார்.

எனது சிக்கல் தீர்ந்து விட்டது. ஆயினும் இன்னமும் ஈழத் தமிழர்கள் குடிவரவுத் திணைக்களங்களில் தமது நேரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இங்கே நேரம் பெறுமதியற்றது. அமெரிக்க டொலர்களே பெறுமதி மிக்கன.

இதே நூலில் பிறிதொரு இடத்தில் பத்து ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு அந்த நேரத்தில் தன்னிடம் பணம் இல்லாது தவித்ததையும் பின்னர் வேறொரு இளைஞன் உதவி புரிந்ததையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு காலத்தில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, யப்பான், தாய்லாந்து என உலகம் சுற்றிய ஒரு பொறியியலாளன், கென்யா நாட்டின் நகரொன்றை திட்டமிட்டு அமைத்த குழுவின் தலைவன், ஈழத்திற்கான திட்டமிடல் கனவுகளோடு திரிந்தவன் இன்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வயிற்றைக் கழுவுகிறான் என்பது எவ்வளவு சோகம்?

12.2.07

என்னத்த காதலும் கவிதயும்

இந்தக் கவிதையை எதற்காக இங்கிட்டேன் என்று சொல்வதற்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் சும்மா சடைதலுக்காகவேனும் காதலர் தினத்துக்காக இக்கவிதையை இங்கிடுகிறேன் என சொல்லிக் கொள்கின்றேன். மற்றும் படி காதலர் தினத்துக்கு கவிதையோ சிறப்பு நிகழ்ச்சிகளோ ஏற்பாடு செய்யும் நோக்கமெதுவும் எனக்கில்லை.

கவிதையின் ஒரு சில Samples பாருங்க..

வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.

ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.


காதல் ரசம் வழிந்து வாய்க்கால் வழியோடும் இந்த கவிதையின் முழுப் பதிவையும் கேளுங்கள்... கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்..
11.2.07

வலை நுட்பம், வகுப்பு ஆ..´ரம்பம்´

ஒரு முழுமையான வலைப்பதிவு ஆக்கத்தில், எனது பதிவான சாரல் அனுபவங்களை முன்வைத்து அதன் நுட்ப விபரங்கள் மற்றும் சீரமைத்தல் முறைகளைச் சொல்ல முயல்கின்றேன். நுட்பங்களுக்கு முன்பாக ஆரம்ப நிலையில் வலைப் பதிவொன்றினை எமக்கு ஏற்ற முறையில் சீரமைத்தலைப் பார்க்கலாம்.

ஆரம்பம் முதல் இறுதி முழுமைக்குமான பயற்சிக்காக, ஒரு தற்காலிக வலைப் பதிவினை இவ் இணைப்பில் ஆரம்பித்துள்ளேன். அவ்வப் போது இடுகின்ற பதிவுகளின் செயன்முறையை உங்களோடு சேர்ந்து நானும் இவ் வலைப்பதிவில் சோதித்துப் பார்க்கவே இவ் ஏற்பாடு.

தவிர, இப் பயிற்சிக்காக நான் பயன்படுத்தியிருக்கும் வார்ப்புருவினை, ஒவ்வொரு தடவையும் கொடுக்கப்படும் செயன்முறை விளக்கங்களுக்கு ஏற்ப, மீள் மாற்றம் செய்து, உங்களால் தரவிறக்கம் செய்து பார்வையிடக் கூடியதாகவும் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இதனை உடனடியாகவே உங்கள் நடைமுறையில் உள்ள வலைப்பதிவில் இட்டுச் சோதனை செய்வதை விட, பயிற்சிக்கான ஒரு தனியான வலைப்பதிவினை (காசா பணமா ) ஆரம்பிப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும். அவ்வாறு தொடங்கப்பட்ட வலைப்பதிவில் சில புதிய பதிவுகளைச் சேர்த்து விடுங்கள்.

வலைப் பதிவொன்றின் ஆரம்பத்தில் நான் முன்னைய பதிவில் கூறிய நுட்ப விபரங்களைப் பார்ப்பதற்கு முன்னர், அதனை அழகுணர்ச்சியோடு சீராக்கும் சில வழி முறைகள் பற்றிப் பேசாலாம். அவரவர் ரசனைக்கு ஏற்ப அழகுணர்ச்சி வேறுபடுமேயாயினும் அடிப்படையான ஒரு விடயமாக, எளிமை இருக்கின்றது.

கணணியில் ஒவ்வொரு HD இலக்கங்களுக்கும் ஒவ்வொரு வண்ணம் கிடைக்கின்றது என்பதற்காக ஆயிரத்தெட்டு வண்ணக் கலவைகளைக் கொண்டு தேருக்கு சேலை சுற்றுவது போலவும் (ஆனானப் பட்ட தேருக்கே சேலை தான், என்று யாரும் வராதீங்கப்பா.. :)) கோபுரம், குஞ்சம், தோரணம் என கட்டம் கட்டுவதும் எளிமையான விடயங்களாக இருக்காது.

இப் பயிற்சிக்காக தேர்தெடுத்த வார்ப்புரு வெள்ளை நிறத்தைப் பிரதான நிறமாக கொண்டுள்ளது. எளிமையாகவும் உள்ளது. இப்போ ஆரம்பிக்கலாமா..?

 • பயிற்சிக்காக ஆரம்பித்த வலைப்பதிவின் வார்ப்புருவை (Template) கிளாசிக் வகை வார்ப்புருவில் பேணுங்கள். Layout முறையிலான வார்ப்புருவில் இருந்தீர்களாயின், மீளவும் கிளாசிக் வகைக்கு மீளுங்கள். (தற்காலிகப் பின்னடைவு தான்.. கடைசியில் தூள் கிளப்பலாம்..)


 • இவ் விணைப்பில் இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருவினைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இக் கோப்பானது RTF வகையில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் கணணியில் திறந்து கொள்ள, Wordpad செயலியைப் பயன்படுத்துங்கள். அது இலகுவானது. (MS office word செயலி, வார்ப்புருவில் உள்ள தமிழ் சொற்களைப் பெட்டி பெட்டியாகக் காட்டும் வல்லமை உள்ளது.கவனம் ;)


 • Wordpad இல் திறந்து வைத்திருக்கின்ற நிரல்களை ஒரு லுக்கு விட்டுக்கொள்ளுங்க. ஆங்காங்கே சில வரிகள் பெரிய சைஸ் எழுத்திலேயும், வண்ண வண்ண நிறங்களிலேயும் தெரிகிறதா..? ம்.. இப்போ இந்த மொத்த நிரலையும், கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் அப்பிடியே கொப்பி செய்து அள்ளிக் கொண்டு, உங்கள் வலைப்பதிவின் கிளாசிக் வார்ப்புருப் பகுதியில் ஒட்டுங்கள்.


 • வழமையாக வார்ப்புருவில் மாற்றங்கள் செய்த பின்னர், உடனடியாகச் சேமிக்காமல் Preview பார்த்து விட்டுச் சேமியுங்கள். சேமித்த பின்னர் வலைப்பூவைப் பாருங்கள். அது இப்பதிவின் ஆரம்பத்தில் நான் தந்திருந்த பயிற்சி வலைப்பூவினை ஒத்திருக்கின்றதா..? கண்டிப்பாக இருக்கும்.

இப்போது வலைப்பதிவின் தலைப்பினைப் பற்றிப் பார்க்கலாம். கொஞ்சம் முன்பாக எனது வார்ப்புருவினைப் பயன்படுத்தி நீங்கள் அமைத்த வலைப்பதிவில் ஒரு திண்டுக்கல்ப்பூட்டு அதன் தலைப்பினில் உள்ளது. எங்களுக்கு பூட்டு வேண்டாம், திறப்புத் தான் வேணும் என்று நினைக்கிறீர்களா..? பூட்டும் வேணாம், திறப்பும் வேணாம்.. எனக்கு என்னுடைய முகம் ? தான் வேணும் என்று கூட நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்ன எல்லாம் பிடிக்கிறதோ, அது அத்தனையையும் (அத்தனையையும் என்றால் அத்தனையும் அல்ல. அவற்றில் ஒன்றை) நீங்கள் உங்கள் பதிவில் போடலாம். ஆனால் அதன் சீர் கெடாமலிருக்க, சில விடயங்களைக் கையாள வேண்டும். பார்க்கலாமா..?

 • தரவிறக்கிய வார்ப்புருவை மீண்டும் ஒரு லுக்கு விடுங்க. அதில் சிவத்த பெரிய எழுத்தில் ஒரு வரி கீழ்க்கண்ட வாறு இருக்குமே.. அது தான் எங்கோ இருக்கிற இந்தப் பூட்டுப் படத்தை உங்க வலைப் பதிவுக்கு இழுத்து வாற சூக்குமம்.

  background-image: url(http://nea.ngi.it/templates/img/78-locked.jpg);


 • இதில நீங்கள் விரும்பகிற படத்தை இழுத்து வாறதுக்கு முன்பு ஒரு விசயம் சொல்ல வேணும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் படம் மிக மிகச் சரியாக அதே பூட்டுப் படத்தின் அளவில் இருந்தாக வேண்டும் (760 pixels X 180 pixels). அப்போ தான் அங்கே இங்கே தள்ளி நிற்காமல் நேராக வலைப் பதிவின் சீர் பேணப்படும்.


 • பயன்படுத்துகின்ற படத்தை 760 pixels X 180 pixels அளவில் சரியாக வெட்டியெடுத்து photobucket மாதிரியான ஒரு இடத்தில் சேமித்து அதன் நேரடி இணைப்பினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


 • இப்போது அவ்விணைப்பினை சிவத்த தடித்த வரியில் உள்ள http://nea.ngi.it/templates/img/78-locked.jpg என்பதற்குப் பதிலாக ஒட்டுங்கள். இணைப்புக்களும் வழிமுறைகளும் சரியானதாக இருப்பின் இப்போ உங்கள் வலைப் பதிவில் பூட்டு உடைக்கப்பட்டு சொந்தப் படம் ரிலீசாகியிருக்கும்.

இப்போ Home Work செய்யலாமா..? இன்னொரு தடவை wordpad இல் உள்ள வார்ப்பருவை உற்றுப் பாருங்க..? ஆங்காங்கே நீல நிறத்தில் தடித்த எழுத்தில் நான், பிடித்தவை, இணைப்புக்கள், முன்னைய காலம் ,இதற்கு முன், சோதனை 1, சோதனை 2 என சொற்கள் தெரிகின்றனவா..? அவை என்ன என்பதை ஊகித்திருப்பீர்கள். இவற்றை உங்களுக்குப் பிடித்தமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

மாமு.. இதெல்லாம் நடக்குத் தெரிஞ்ச விசயம் தான்.. நீ இதையெல்லாம் விட்டிட்டு நேராவே முன்னைய பதிவில் சொன்ன 5 நுட்பங்களையும் சொல்லலாம் எண்டு நினைச்சீங்கள் எண்டால் சொல்லுங்கோ.. அதில இருந்தே ஆரம்பிக்கலாம்.

சந்தேகங்களைப் பின்னூட்டங்களாகப் போட்டால் நான் மட்டுமல்ல வேறும் பல வலைப் பதிவர்கள் அதற்கு விடை கொடுக்க முடியும்.

8.2.07

வலைப் பதிவு நுட்பம், படிக்கலாம் வாங்கோ

இதுவரை நுட்பக் கட்டுரைகளோ, வழிகாட்டற் குறிப்புக்களோ எழுதி எனக்குப் பழக்கமில்லை. பாடசாலையில் விஞ்ஞான மலரில் கருந்துவாரங்கள் (Black Holes) என்ற ஒரு அறிவியல் ? சிறுகதையை எழுதியது தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லையாயினும் இனி எனது வலைப்பதிவில் ஆகக் குறைந்தது வலைப் பதிவு நுட்ப விபரங்களையாவது எழுத முயலலாம் எனத் துணிந்தமைக்கு சில காரணங்கள் உள்ளன.

அண்மையில் அற்புதன் என்னும் ஒரு பதிவர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்களின் (அவர் ஈழப் பதிவர்கள் என குறிப்பிட்டிருந்தார்) இடுகைகள் இறந்த காலத்தைப் பற்றிப் பேசுவனவாக, நனவிடை தோய்தல்களாக இருப்பதனை அவர் சுட்டியிருந்தார். நான் உட்படப் பலர் அதையே செய்து கொண்டுடிருந்தோமாயினும் இயல்பாகவே அதில் ஒரு ஈடுபாடின்மை எனக்கு ஏற்பட்டுவிட்டதன் பிரதி பலிப்பே அண்மைக் காலமாக நான் இட்டு வந்த மீள்பதிவுகள் மற்றும் மீள் மீள் பதிவுகள்.

ஆயினும் வலைப் பதிவில் உள்ள நுட்பச் சிக்கல்களுடனும், நுட்ப விபரங்களுடனும் அண்மைக் காலமாக மல்லுக் கட்டுவது ஒரு வித ஈர்ப்பைத் தந்ததினால் அதன் காரணமாகவே என்னால் மீண்டும் புதிய ஈடுபாட்டுடன் வலையில் செயற்பட முடிந்தது.

தமிழ் வலையுலகில் துறை சார்ந்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நிதி, மருத்துவம், அறிவியல், நுட்பம் போன்ற பதிவுகள் சீரான வீச்சுடன் வருவதில்லை. தமிழில் உள்ள 1000 பதிவுகளில் எத்தனை வீதம் துறை சார் பதிவாக இருக்கும் என்பது மகிழ்ச்சி தராத விடையினைத் தான் தரும்.

வலைப் பதிவுகளில் பொழுது போக்கு என்பதற்கும், பொழுது போக்குவதற்காக வலைப் பதிவு என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென சில பதிவர்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.

இத்தகைய வரலாற்றுப் புறச் சூழ்நிலையில்.. (நல்லாத் தானே எழுதிட்டிருந்தான்..? திடீர்ன்னு ஆரம்பிச்சிட்டான்) அண்மைக் காலமாக நான் புளொக்கரில் குடைந்து, கடைந்தெடுத்த சமாசாரங்களைச் சொல்வதும், எழுதுவதும் என்னை இன்னொரு ஈடுபாட்டுடன் தொடர்ந்து இயங்க வைக்கும் என நம்புகின்றேன்.

என்னுடைய சாரல் வலைப்பதிவு புதிய புளொக்கருக்கு மாறி விட்ட போதும், இன்னமும் அது கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துகிறது. (அதிலிருந்தும் அடித்துக் கலைக்கவோ, ஆட்டோ அனுப்பித் தூக்கி ஏற்றவோ மாட்டார்கள் என நம்புவோமாக) ஆக அடிப்படையில் அது பழைய புளொக்கர் தான். புதிய Layout முறையிலான வார்ப்புருவின் மூலம் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்த முடியாது என சொல்லப் படுகின்ற கிளாசிக் வார்ப்புருவில் இருந்து கொண்டே நான் அமைத்துக் கொண்ட வசதி வாய்ப்புக்கள் இவை
 1. பதிவுகளுக்கு லேபிள் இடும் வசதி : இது புளொக்கர் தரும் லேபிள் இடும் வசதியைப் பயன்படுத்தாது வேறு வழியில் பதிவுகளைத் திரட்டுகிறது. புளொக்கர், Search முறையில் லேபிள் குறிச் சொற்களை வைத்து பதிவுகளைத் தேடித் திரட்டுவதோடு, திரட்டப்படும் ஒரே வகையான மொத்தப் பதிவுகளையும் அவற்றின் உள்ளடக்கத்துடன் ஒரே பக்கத்தில் காட்டுகின்றது. இது பக்கத் தரவிறக்கலுக்கு சாதகமானதல்ல. சாரலில் பயன்படுத்தப் படும் முறை நேரடியாக பதிவுகளைத் திரட்டுவதோடு, முதலில் ஒரே வகையான பதிவுகளின் தலைப்புக்களை மட்டுமே, தருகிறது. அவற்றிலிருந்து பயனர் தனது தேர்வினைச் சுட்டி, முழுப் பதிவிற்கும் செல்லலாம். சாரலில் இவ் வகையான வகைப்படுத்தல் Drop down menu முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை லேபிள்கள் இட்டாலும், நமது பக்கத்தில் இடத்தினைப் பிடிக்கும் அடாத்து வேலையினைச் செய்யாது. பார்க்க சாரலின் பெரும் பிரிவுகள்


 2. கடந்த காலப் பதிவுகளை Drop down menu இல் காட்டுதல் : இது இதற்கு முன்பும், பலரால் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு வருடங்களைத் தாண்டிய நிலையில் மொத்தம் 24 மாதப் பதிவுகளை இது உள் வைத்திருந்து, தேவைக்கு ஏற்பத் தரும். சாதாரண முறையில் 24 மாதங்களும் பதிவில் எத்தனை இடத்தினைப் பிடிக்கும் என்பது தெரியும் தானே..? (இது ஒரு அழகுணர்ச்சி ஏற்பாடே தவிர பெரிய அளவில் நுட்பப் பயன் இல்லை) பார்க்க காலம் எழுதிய கதை


 3. நமக்குப் பிடித்த வேறு பதிவுகளைத் திரட்டல் : நாம் விரும்பிப் படிக்கும் வேறு பதிவர்களுக்கு நமது தளத்தில் ஏற்கனவே இணைப்புக் கொடுத்திருப்போம். ஆனால் இந்த நுட்பத்தின் மூலம், அவர்கள் எழுதிய, எம்மைக் கவர்ந்த பதிவுகளுக்கு மட்டும் தனியாக இணைப்பினைக் கொடுக்கலாம். வேறு வலைப்பதிவுகளின் செய்தி ஓடையைப் பயன் படுத்தி கூகுள் றீடர் இந்த வசதியைத் தருகிறது. நமது பதிவர்கள், புதிதாக ஒரு பதிவு எழுதி, அது நமக்குப் பிடித்திருந்தால் (பிடிக்காவிட்டால் கூட எனக்குப் பிடிக்காத பதிவுகள் எனத் திரட்டலாம்;))கூகுள் றீடரில் ஒரு சின்னக் கிளிக் மூலம் அதைத் தெரிவித்தால் போதும். உங்கள் பக்கத்தில் அது திரட்டப்படும். ஒப்பீட்டு அடிப்படையில் இலகுவான நுட்பம். பார்க்க எனக்குப் பிடிச்சிருக்கு


 4. இறுதிப் பின்னூட்டம் இட்டவர்களையும் பின்னூட்டங்களின் சில வரிகளும் : இதன் மூலம் எமக்கு இறுதியாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், இப் பின்னூட்டங்களின் ஒரு சில வரிகளையும், நமது பதிவின் அனைத்துப் பக்கங்களிலும் காட்சிப்படுத்தலாம். எத்தனை பின்னூட்டங்களை வெளியிடலாம் என்பதனையும், பின்னூட்டத்தில் எத்தனை சொற்கள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாமே முடிவு செய்யலாம். புளொக்கர் கூட இவ்வாறான ஒரு வசதியைத் தருகின்றது. பின்னூட்டமிட்டவரின் பெயர் மற்றும் நேரம் என்பவற்றை நமது பக்கத்தின் முகப்பில் காட்டும் வசதியே அது (முகப்பில் உள்ள பின்னூட்டங்களை மட்டுமே). ஆனாலும் முகப்பிலிருந்து தனியான ஒரு பதிவிற்குள் நுழைந்தீர்களாயின், பின்னர் இறுதிப் பின்னூட்டங்கள் காட்டப் படாது. சாரலில் நீங்கள் எந்தப் பக்கத்தில் எப்படி நின்றாலும் இறுதியாக சாரலுக்கு வந்த (அல்லது நானாகவே இன்னொரு பெயரில் போட்ட ;))பின்னூட்டங்கள் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும்.பதிவர்களின் பெயர்கள் மேலே கிளிக்கினால் மூலப் பதிவுக்குப் போக முடியும். பதிவுகள் வழியாகப் பின்னூட்டங்கள் என்பதை விடுத்து முதலில் பின்னூட்டங்கள் பின்னர் அது வழியாகப் பதிவுகள் என்ற புதிய புரட்சியை இது தோற்று விக்கும்;) பார்க்க இப்போ கருத்து இட்டவர்கள்


 5. இது தவிர சாரலுக்கெனத் தனியான Flash Audio player: திருப்தி தரக் கூடிய வகையில் இது இயங்குகிறது. நமது MP3 கோப்பையும் ஒரு சிறிய flash (2kb) கோப்பையும் அதனுடன் ஒரு xml கோப்பையும் bandwidth பிரச்சனை வராத இடத்தில் ஏற்றும் வசதி இருக்குமாயின் இதுவே போதும் இதனைப் பயன் படுத்த. பார்க்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஒலிப்பதிவு
தொடர்ந்தும் இவை பற்றித் தனித்தனியாக நிறுவுதல் முதற்கொண்டு பயன்படுத்துவது வரை முடிந்தவரை இலகுவாக எழுத உள்ளேன். நிறைய ஆர்வமும் கொஞ்சூண்டு திறமையும் இருந்தால்ப் போதும். இவற்றை நீங்களும் உங்கள் வலைப் பதிவில் பயன் படுத்தலாம். பதிவுகளை எழுதும் போதே பரிசோதனை முயற்சியாக நீங்களும் முயற்சிக்கலாம். இவற்றை முயற்சிக்க புதிதாய் ஒரு புளொக்கரைத் தொடங்குவதும் அல்லது இருப்பதையே பயன்படுத்துவதும் உங்கள் தெரிவு. ஆனால் இத்தனை வசதிகளும் கிளாசிக் வகை வார்ப்புருவிலேயே அமைந்ததென்பதால் நீங்கள் அந்த வார்ப்புருவுக்கு மீண்டு வர வேண்டியிருக்கும்.

யுத்தம் முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகும். விரைவில் யுத்தம் முடிய ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக;)

7.2.07

பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன

புளொக்கரில் அதாகப் பட்டது புதிய புளொக்கருக்கு மாறிய பின்னரும் கிளாசிக் வகை வார்ப்புருவையே விடாப்பிடியாக பயன்படுத்தும் இப்பதிவில் பின்னூட்டங்களைத் திரட்டி வெளியிடும் வசதியினை செய்திருக்கின்றேன். எனது பதிவில் பின்னூட்டமிடும் நண்பர்கள், அன்பர்கள், வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றம் பெயர்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வலைப் பதிவின் சகல பக்கங்களிலும் காட்சிப் படுத்தப்படும். ( அது தவிர பின்னூட்டங்களில் தனித் தனியவும் நன்றி செலுத்தப்படும். :)

இந்த வசதி ஏற்கனவே wordpress சேவையில் உள்ளது. தவிர புதிய புளொக்கரின் புதிய layout முறையிலும் உள்ளதாம்.(சரியாக தெரியாது) கிளாசிக் வார்ப்புருவிலேயே இருந்து கொண்டு ஏற்படுத்திய இரண்டாவது வசதி இது. இதற்கு முதல் லேபிள்கள் மூலம் பதிவுகளை வகைப் படுத்தியிருந்தேன்.

செய்தி ஓடைகளைக் கொண்டு நமது இணைய உலாவியிலேயே புதிய பதிவுகளை மட்டுமல்ல.. புதிய பின்னூட்டங்களையும் உடனுக்குடன் படித்து முடிக்கின்ற வாய்ப்புக்கள் ஏற்படுகின்ற போதும்.. குடுமிச் சண்டை குழாயடிச் சண்டைகள் மட்டுமல்ல.. யுத்தச் :) செய்திகளைப் படிப்பதற்கும் தமிழ்மணத்திற்கு வருவது தான் சுவாரசியம்.

இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் இப் பின்னூட்டத் திரட்டில் கருத்தெழுதியவரின் பெயரின் மீது கிளிக்குவதனால் மூலப் பதிவுக்கு செல்லலாம். அங்கு உங்கள் பின்னூட்டங்களையும் இடலாம்:)

6.2.07

கேள்விகள்

ஆனையிறவுப் பெருவெளியைக் கடக்கின்ற போதெல்லாம் மேனி சிலிர்த்துப் போவதென்னவோ உண்மைதான். 'ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி.." மோட்டார் சைக்கிளை ஓட்டிய நகுலன் சத்தம் போட்டு பாடினான். அற்புதமான குரல் அவனுக்கு.. நேற்று இரவு முழுதும் அவனது பாட்டுக்கச்சேரியுடன் தான் கழிந்தது.

'கவனமடா.. பாத்துப்போ.." பின்னாலிருந்து சொன்ன எனக்கு லேசான பயமிருந்தது. கரை முழுவதும் மிதிவெடி கவனம் அறிவிப்புக்கள்.

'ஒல்லாந்தர், வெள்ளைக்காரன், சிங்களவன்,இந்தியன் எண்டு ஒரு முன்னு}று வருஷம் அந்நிய ஆதிக்கத்தில கிடந்த நிலம் இது.. இதுக்காக நாங்கள் கொடுத்த உயிர் விலை முவாயிரத்துக்கும் மேலை.."

பக்கவாட்டாக வீசிய காற்று என் காதுகளில் 'இர்..." என்று இரைந்து கொண்டிருந்ததால் அவன் குரலை உயர்த்தியே சொல்ல வேண்டியிருந்தது.நான் அமைதியானேன். கிட்டத்தட்ட மூன்று வருசத்துக்கு முதல் இதே வீதிகளில் இரவுகளில் அவர்கள் உலவியிருப்பார்கள். காயம் வழி குருதி வழிந்தோட கிடந்திருப்பார்கள். உயிர் பிரிந்திருப்பார்கள். அவர்களின் சுவாசப்பையை தொட்டு வந்த காற்று இந்தப்பெரு வெளியில் உலவக்கூடும்.

நகுலன் மோட்டர்சைக்கிளை மெதுவாக்கி ஓரமாக்கினான். டொல்பின் வாகனமொன்றில் 'காய் கூய்" என்று கத்தி கை தட்டிப்பாடி, இளைஞர் கோஷ்டியொன்று எங்களைக் கடந்து எதிர்த்திசையில் சென்றது. சற்று முன்னர் நாங்கள் கடந்த ஆனையிறவு வரவேற்புப் பலகை முன்பாகவோ அல்லது தகர்க்கப்பட்டுக் கிடந்த இராணுவ டாங்கி முன்பாகவோ இறங்கி நின்று அவர்கள் படமெடுத்துக்கொள்ளக் கூடும்.

'டேய்.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பேர் என்ன..? " வரும் வழியில் இயக்கச்சிக்கு பிரியும் வழியில் இருந்த அந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி நான் கேட்டேன். ஒன்றிரண்டு மரநிழல்கள் தான். அவற்றின் கீழ் பிள்ளைகள் அமர்ந்திருந்தார்கள். பெயர்ப்பலகை கூட இல்லை எப்பிடியும் ஒரு பத்து பன்னிரண்டு வயசுக்குள்ளை தான் எல்லோருக்கும் இருக்கும். மோட்டர் சைக்கிளை நிறுத்தச் சொல்லி விட்டு நான் இறங்கிக்கொண்டேன். மர நிழல் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும். அவர்களும் இடம் பெயர வேண்டியிருக்கும். எப்பிடியும் உச்சி வெயில் தலையைப் பிளக்கும்.

'என்ன.. இங்கை நிறைய பள்ளிக்குடங்கள் இப்படித்தான்.. கட்டடிடங்களெல்லாம் சிதைஞ்சு போச்சு.. கட்டித்தருவாரும் இல்லை. கணக்கெடுப்பாரும் இல்லை..அதுக்காக.. விடமுடியுமே..? " நகுலனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.

'நகுலா.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பெயர் என்னண்டு கேட்டன்."

'ஓ.. அந்த இயக்கச்சிப் பள்ளிக்குடமோ.. தெரியேல்லையடா.. வேணுமெண்டால் வரேக்கை கேட்பம்" என்றவன் 'இல்லை கேட்க முடியாது" என்றான்.

'ஏன்.."

'பின்னேரம் அந்தப் பள்ளிக்குடம் இருக்காது. நாளைக்கு காலமை தான் இருக்கும்..".
உண்மைதான். மாலையில் அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததென்று அடையாளமே தெரியாமலிருக்கும். பரந்தன் சந்திக்கு வந்தோம். எனக்கு கால் விறைத்திருந்தது. 'நகுலன்.. கொஞ்ச நேரம் நிப்பாட்டு.. கால் விறைச்சுப் போச்சு.. " நகுலன் நிறுத்தினான்.

'சங்கீதா எங்கை நிற்பாள்..? வீட்டிலயா.. அல்லது..?"

'ரண்டிடத்திலயும் போய்ப்பாப்பம். சரி ஏறு.." நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

'சங்கீதாவை எப்பிடித்தெரியும்..?" நான் அவனுக்கு பதில் சொல்ல வில்லை. அவனும் திருப்பிக் கேட்கவில்லை.

சங்கீதாவிற்கு முழங்காலுக்கு கீழே ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்ததை முதல் சந்திப்பிலேயே நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் படு இயல்பாக ஊன்று கோலுடன் அவள் நடப்பதும், சில சமயங்களில் ஓடுவதும், கால் மேல் கால் போட்டுக்கொள்வதும்.. எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு வேளை மனசுக்குள்ளே வலியிருக்குமோ..? ஆறேழு மாதங்களுக்கு முதல் ஏதோவொரு நிகழ்வில் எங்கேயிருந்து வாறியள் என்று அவள் கேட்டபோது தான் அவள் அறிமுகமானாள். பதில் சொன்னபோதே அவள் முகத்தில் ஏதோ ஒரு ஏளனம் தோன்றியது உடனடியாகத் தெரிந்தது. அதனை நேரடியாகச்சொல்லும் வரை காரணம் கேட்க முடியவில்லை. அன்று மாலை வந்து அழைத்த போது கேட்க முடிந்தது.

“தமிழ் வளக்கிறவரே.. ரீ குடிக்க வாங்கோ..” எழுந்து போகும் போதே கேட்டேன். “அதென்ன தமிழ் வளர்க்கிறவர் எண்டு நக்கலாய்….?”

“தமிழைச்சாகவிடாமல் வளக்கிறது நாங்கள் தான் எண்டு மூச்சுக்கு முன்னூறு தடைவ சொல்லுறது நீங்கள் தானே…..நீங்கள் எண்டால் நீங்கள் இல்லை..உங்களைச் சார்ந்த பிரதேசம், சூழல்..இதெல்லாம் தான்..”

உண்மைதான் என்று தோன்றியது எனக்கு. ஆனாலும்… அதெப்படி ஒரு பெண்ணிடம் தர்க்க ரீதியாய் நான் தோற்கக்கூடும் என்கின்ற எனக்குள்ளிருந்த ஆண் வர்க்க சிந்தனை அடுத்த கேள்வியைக்கேட்டது.

“அப்படி வளர்க்கிறதிலை என்ன பிழை.”

“ஒண்டு சொன்னா பிழையா நினைக்கக்கூடாது. தமிழை வளக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..? என்ன உரிமை இருக்கு..?தமிழ் எண்டுறது வெறும் மொழி மட்டுமில்லை. அது சார்ந்த இனம் பண்பாடு பொருளாதாரம் அரசியல் எல்லாம் தான்.. நீங்கள் என்னத்தை வளர்த்திருக்கிறியள்..? ”

இதுநாள் வரை எனக்குள்ளேயே பொங்கி எழுந்த கேள்விகள் தான் அவை. இப்போது இன்னொருவரிடமிருந்து வந்தது. வெளியே சொல்லாது உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். ‘சரியான வாய்க்காரி..’ அதற்கடுத்த அடுத்த நாட்களில் அவள் எழுதிய சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஒரு கொப்பி முழுதும் எழுதப்பட்ட கவிதைகளை அவளே கொடுத்தாள். ஒரு காலையில் ஓரமாயிருந்து புரட்டிக்கொண்டிருந்தபோது நடந்து வந்து முன்னால் அமர்ந்து கொண்டாள்.

தெருப்புழுதியில்
கந்தகம் மட்டுமே
கரைந்திருந்தது..
குழந்தைகளின் கூக்குரல்களே
காற்றலைகளை
நிறைத்திருந்திருந்தன

“என்ன கவிதைக்குள்ளை எதுகை மோனையை தேடுறியள் போலை கிடக்கு.. அதெல்லாம் கிடைக்காது…. எங்கடை கவிஞர் சொன்னது போல உள்ளே கொதிப்புறும் உலைமுகத்தின் வாய்மொழியில் புனைவுகள் இருக்காது. பொய்யான வேஷங்கள் இருக்காது. அது மாதிரித்தான் இதுவும்.. அதைவிட்டிட்டு சும்மா விழ விழ எழு எழு எண்டு வழ வழாவெண்டு எழுத எனக்கு தெரியாது. அப்படி எழுதுறாக்களுக்கு ஒரு பெயர் சொல்லட்டே.. சொல்லடுக்குக் கொத்தனார்கள். கவிதைக்கான வார்த்தைகளை தேடுவதிலேயே சொல்ல வந்த பொருளை மறந்து போகின்றவர்கள்.." அவள் சொன்ன எதுவுமே எனக்கு புதிய விடயமாகத்தெரியவில்லை. ஆனாலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

'எங்கடை மண்ணிலை இருந்து எழுதுற எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்.." அது வரை பேசிக்கொண்டிருந்த விடயத்திற்கு தொடர்பில்லாமல் கேட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

'எங்கை தெரியப்போது..? உங்களுக்கு சாண்டில்யனையும் ராஜேஸ்குமாரையும் உங்கடை பொம்பிளைப்பிள்ளையளுக்கு ரமணிச்சந்திரனையும் விட்டால் ஆரைத்தெரியும்..?"

'இல்லை எனக்குத் தெரியும்.." என்றேன் நான்

'உங்களுக்கு என்றால் நீங்கள் இல்லை..நீங்கள் சார்ந்த பிரதேசம்,சூழல் இவையெல்லாம் தான்.." மீண்டுமொரு முறை அவள் நினைவூட்டினாள். எனக்கு கோபம் எதுவும் வரவில்லை. ஆனாலும் குரலை கடுமையாக்கி வார்த்தைகளில் செயற்கையாய் சூடேற்றிச்சொன்னேன்.

'இஞ்சை பாருங்கோ.. எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டுமென்றில்லை.. அது அவையின்ரை தேடலைப்பொறுத்தது. எல்லாத்தையும் எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்க வேணும் எண்டு எந்த கொம்பனும் கட்டளையிட முடியாது.." கடுமையான எனது தொனி அவளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. 'கொம்பன் இல்லை கொம்பி.." என்று அவள் சொல்ல அவளுடன் சேர்ந்து நான் தான் சிரிக்க வேண்டியதாய்ப்போனது.

'உங்களை, உங்கடை எழுத்துக்களை ஏன் எங்களுக்கு தெரியாமல் போனதெண்டால் அதுக்கு காரணம் இஞ்சை நடந்த சண்டைதான். இவ்வளவு காலமும் நீங்கள் எங்களை வந்து சேரேல்லை. இனி வருவியள்..சரியான ஊடகங்கள் அந்த வேலையைச் செய்யும். சரி.. நீங்கள் எழுதின கவிதையளைத் தாங்கோ.. நான் கொண்டு போய்க்குடுக்கிறன்.. "

அவள் அப்போது கோபப்பட்டிருக்கக்கூடும். 'என்ன..? நான் என்ன பப்ளிசிட்டிக்கு அலையிற ஆளெண்டு நினைச்சியளே..?" அவளது கேள்வியில் வேறு யாரோ அலைகிறார்கள் என்கிற தொனி அப்பட்டமாய்த் தெரிந்தது. அதனைக்கேட்டு பெரிசுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும் பப்ளிசிட்டியை விரும்பாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்குள் தொக்கி நின்றது.

அன்று மதியம் வரை அவள் நிறையப்பேசினாள். . 'செம்மணியில் புதைக்கப்பட்ட சனங்களுக்காக அந்த இடத்தில ஒரு நினைவுச்சின்னம்..அல்லது ஒரு ஞாபகச்செய்தி எண்டு ஒண்டும் இல்லை. ஆனா எங்கையிருந்தோ வந்த ரேடியோக்காரன் அதிலை கட்அவுட் வைச்சு வரவேற்கிறான்." என்று சினந்தாள். 'யாழ்ப்பாண லைபெறறி எண்டுறது சுண்ணாம்பு அடிச்ச அந்தக்கொங்கிறீட் கட்டிடமில்லை. அது எங்கடை ஆத்மா.." என்று விளங்கப்படுத்தினாள். 'எந்தவொரு ஆக்கிரமிப்பாளனுக்கும் மண்டியிடாமல் கடைசி வரை நின்று போராடிய பெருமை முல்லைத்தீவைத்தான் சேரும்.." என்று பெருமைப்பட்டாள். உறுதியாக, மாற்றுக்கருத்துக்களே கிடையாது என்ற ரீதியில் அவள் பேசிய விடயங்கள் பரவலாயிருந்தது

ஆண்கள் நிறைந்த சபைகளிலே அவர்கள் என்ன சொன்னாலும் வாய்மூடி மௌனிகளாகக் கேட்டுவிட்டு ஆட்டு மந்தைகள் போல் தலையசைத்துச்செல்கின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். ஆண்களுக்கு சமானமாக நின்று பேசத்தெரியாமல் அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு வர ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலாக வரும். 'அவையும் அவையின்ரை வெட்கமும்.."
சில வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றின் முகப்பில் வைத்து 'தேவையில்லாத வேலை பார்த்தாயெண்டா உதை வாங்குவாய்" என்று ஒருத்தி சொன்ன போது அவமானத்திற்குமப்பால் மகிழ்ச்சியும் எட்டிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்த மகிழ்ச்சி சங்கீதாவைச் சந்திக்கும் போதும் வந்தது.

மோட்டார் சைக்கிள் சடார் சடார் எண்டு வீதியின் குழிகளுக்குள் துள்ளித்துள்ளி விழுந்தது.

'எங்கடை சர்வதேசத் தர வீதியிலை பயணம் செய்ய குடுத்து வைச்சிருக்கவேணும் நீ.." எனக்குச் சிரிப்பு வந்தது. பிரதான வீதியிலிருந்து விலகி மோட்டர் சைக்கிள் உள் வீதியொன்றில் நுழைந்து சங்கீதா வீட்டின் முன் நின்றது. நான் கேற்றைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன். நகுலன் மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தான். கேற் திறந்த சத்தம் கேட்டிருக்க வேண்டும் போல.. சங்கீதா தான் வந்து பார்த்தாள்.

'அட.. வாங்கோ.. வாங்கோ.." அழைத்துக்கொண்டு போய் என்னை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். நகுலனை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கிடுகுகளால் வேயப்பட்டிருந்த அந்த வீடு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. முன்றலில் பூங்கன்றுகள் வரிசையாய் பூத்திருந்தன.

சங்கீதா இப்போதெல்லாம் அவள் ஊன்று கோல் இல்லாமலே நடக்கிறாள்
மதியம் அங்கேயே சாப்பிட்டோம். சங்கீதா சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசினாள். 'எங்களில கன பிள்ளையள் கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியயெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப அனைத்துலக கல்வியறிவும் இருக்கிறது தான். அதை எங்களுக்கும் தரவேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை.."

'சரி சங்கீதா.. நாங்கள் வரப்போறம்.. நகுலனுக்கு வேறை இடத்திலை அலுவல் ஏதோ இருக்காம்.." நான் புறப்பட்டேன்.

'சரி..சந்திப்பம்.." மோட்டர் சைக்கிளில் ஏறி உட்கார நகுலன் ஸ்ரார்ட் செய்தான்.

'என்ன நகுலன்.. போச்சிப்போத்திலை எறிஞ்சிட்டீர் போலை.." பெற்றோலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் மோட்டர் சைக்கிளை ஸ்ரார்ட் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிறிற் அல்லது ரின்னர் அடைக்கப்பட்ட சிறு குப்பியைத்தான் சங்கீதா போச்சிப்போத்தல் என்றாள். இப்போது அது தேவைப்படவில்லை.

'இல்லை. எறியேல்லை.. பத்திரமா வைச்சிருக்கிறன். திரும்பத் தேவைப்படுமோ தெரியாது.."

வரும் வழியில் நகுலன் பேசிக்கொண்டே வந்தான். இங்கையிருக்கிற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையை சுமந்து கொண்டு தான் வாழுகினம். பாத்தாய் தானே படிக்கப்பள்ளிக்குடம் இல்லை.. சரியான வேலையில்லை. யுத்தம் எத்தனை பேரை அங்கவீனமாக்கியிருக்கு..? கையை இழந்து காலை இழந்து எத்தனை ஆண்கள்...பெண்கள்... "
நான் அமைதியாகவே வந்தேன். 'இப்பிடி அங்கவீனமான ஆண்களைப்பற்றி பெண்களைப்பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நாளைக்கு கலியாணம் எண்டொரு நிலை இவைக்கு வரேக்கை கலியாணத்தின்ரை தேவையை வேறை விதமா விளங்கிக்கொள்கிற ஆக்களே நிறைய இருக்கிற எங்கடை சமூகத்திலை இருந்து அங்கவீனமானவர்களை கலியாணம் கட்ட எத்தனை பேர் முன்னுக்குனு வருவினம்..?"

'நகுலன் நிப்பாட்டு நான் ஓடுறன்.." நகுலன் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் மோட்டர் சைக்கிளை ஓட்டத்தொடங்கினேன். ஆரம்பித்து விட்ட ஆனையிறவுப் பெருவெளியின் காற்று முகத்திலடித்தது. சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூரப் பூமழை தூவியது..இப்போது நான் தான் பாடினேன். என்னாலும் பாட இயலும்.
November 13, 2004

5.2.07

நம்மைப் பிடித்த ............... போயின..

'எங்கட பிரண்ட்சிப்பை இப்படித் தப்பா ஏன் விளங்கிக் கொண்டீங்கண்ணு எனக்கு இன்னும் விளங்கேல்லை.. " சொல்லி விட்டு நிரோஷா திரும்பிப் பார்த்தாள்.

சாரகன் அமைதியாய் நின்றான்.

'அவசரப்பட்டு விட்டேனோ..இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்திக் கேட்டிருக்கலாமோ.." எண்ண அலைகள் உள்ளே மிதந்து கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென முடித்து விட்டு மறந்து விட்டுப்போகின்ற வழமைக்குள்ளேயே சிறு வயது முதல் வளர்ந்த அவனுக்கு காலந்தாழ்த்தல் என்பது சிரமமாயிருந்திருக்க வேண்டும்.

'ஒண்ணு கேட்டால் சொல்வீங்களா.." நிரோஷா தான் அமைதியைக் குலைத்தாள்.

'சொல்லுங்க"

'இதுக்கு நானும் ஏதாவது காரணமாய் இருந்திருக்கேனா..?"

அந்த நேரத்திலும் சாரகனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி இவளால் இப்படி இலகுவாக கேட்க முடிகிறது..

"இருட்டில போகப் பயமாயிருக்கு.. ஒவ்வோர் நாளும் என் கூட வரமுடியுமா.."

"உங்களுக்கென்றதால்த் தான் என் போட்டோஸை நான் காட்டினேன்..

"எப்படி சாறியிலை நான் அழகாயிருக்கேனா.."

"உங்க நம்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." என்றெல்லாம் பேசினாளே.. ஞாபகத்திலேயே இருக்காதா..? சில சமயம் சாதாரணமாய்த்தான் இப்படியெல்லாம் பேசினாளோ..? வேறெந்த எண்ணமும் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாதா..?

ஒரு வேளை நிரோஷா அப்படிப் பேசியிருந்தால்... நான் காரணங்களைச் சொல்ல ச்சீ..நீ இவ்வளவு தானா என்று அவள் நினைக்கக்கூடும்..

கிட்டத்தட்ட சாரகன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். நினைவுகளில் காலம் பின்னோக்கிப் போனது.

சாரகனின் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடுகள் தொலைவில்த்தான் நிரோஷா இருந்தாள். சில காலங்களுக்கு முன்னரேயே அவளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவன் படித்த வகுப்பிலேயே அவளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் முதன்முதலாய் அவனுக்குள் ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதிகாலை நேர வகுப்புக்களுக்கு அவள் செல்லும் போது நேரம் பார்த்திருந்து வீதியில் இறங்கி குட்மோர்ணிங் சொல்லி.. இப்படித்தான் ஆரம்பமானது.. ஆனாலும ஒவ்வொரு நாளும் இப்படிச் சந்திப்பதை அவள் தப்பாக விளங்கிக்கொள்ள மாட்டாளா என்று கவலைப்பட்ட போது தான் அவள் ஒரு நாள் கேட்டாள்..

'சாரகன்.. காலையில க்ளாசுக்கு போறதுக்கு வீட்டில பயப்பிர்றாங்க.. ஒவ்வொரு நாளும் என் கூட வரமுடியுமா..." சாரகனின் நெஞ்சுக்கூண்டுக்குள் குரங்கொன்று ஜம் என்று வந்து உட்கார்ந்து கொண்டது அப்போது தான்.

வகுப்பை வந்தடையும் வேளைகளில் கூடி நின்று நண்பர் கூட்டம் கேலி பண்ணும். நிரோஷா எரிச்சலடைவாள்.

'அவங்கள் அப்படித்தான்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க.." சாரகனின் உதடுகள் உச்சரித்த போதும் மனது நண்பர்களை மானசீகமாய் வாழ்த்தும்.

'சாரகன் உங்க நம்பர் என்ன..?" ஒரு முறை கேட்ட போது சொன்னான்.

'வாவ்.. எனக்கு ரொம்பப்பிடிச்ச நம்பர்" என்றவள் கண்களை அகலவிரித்துச் சொன்ன போது நெஞ்சுக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்ட குரங்கு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தது.

'நியூமராலஜியில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..?" தொடர்ந்து கேட்டாள்.

'ம்.. நிறைய.."

தொடந்தும் குரங்கின் சேட்டைகள் தொடர்ந்தன. இதனை தொடர வி;ட முடியாது என்ற நிலையில் முடிவு எப்படி இருக்கிறதோ, நினைத்ததை நிகழ்த்தி முடிப்பவன் என்ற அவனுக்குள்ளிருந்த இறுமாந்த நெஞ்சு ஒரு மாலைப்பொழுது அவளிடம் கேட்க வைத்தது.
* * *

'என்ன சாரகன்.. நானும் ஏதாவது காரணமா..?"

'இல்லை.. நீங்க காரணமில்லை.. நான் தான்.." சாரகன் அவசரமாய்ச் சொன்னான்.

நிரோஷா சிரித்தாள்..

'நான் நினைச்சுக் கூடப் பாக்கலை சாராகன்... ஓ.கே.. இப்ப என்ன..? நீங்க கேட்டது கூட நல்லது தான்.. இல்லைன்னா உங்களுக்குத்தான் பிறகு கஸ்ரமாயிருக்கும்.. "

சாரகன் நாக்கு வரண்டு உதடு உலர்ந்து போயிருப்பதாய் உணர்ந்தான்.

இந்த இழப்பு வாழ்வையே அடித்துப் போட்டு சின்னாபின்னமாக்கி விடாது என்று அவனுக்குத் தெரியும்.. இரண்டு வாரமோ மாதமோ பின் மனது வழமைக்குத் திரும்பக்கூடும். அப்புறம் இச்சம்பவம் எப்போதாவது ஞாபகிக்கையில் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அதுவரை ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கும். அது வழமைச் செயல்களைப் பாதிக்க விடக்கூடாது என்று சாரகன் நினைத்துக் கொண்டான்.

'என்ன சாரகன் பேசாமலிருக்கிறீங்க.. தொடர்ந்தும் நாங்க இப்பிடியே இருக்கலாம் என்று நான் நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்லுறீங்க.."

சாரகன் மீண்டும் மீண்டும் அமைதியாயிருந்தான்.

ஒரு தலைக் காதல் என்பது உண்மையில் காதல் இல்லை என்கிறார்கள் மனவியலாளர்கள். அது காதல் மீதான ஒரு ஏக்கம் தானாம். காதலோ ஏக்கமோ.. அவ்வளவு தானா.. இது தான் முடிவா..?

வேறு ஏதாவது வகையில் நிரோஷாவுடன் பேசி.. எப்பிடிப் பேசி.. நீங்க இல்லையென்றால் செத்திடுவன்.. வாழ்க்கையே இல்லாமல் போயிடும்.. இப்பிடி ஏதாவது.. அடி செருப்பாலை.. இவ்வளவு தானா நீ என்று இப்போது சாரகன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

'தெரியேல்லை.. நிரோஷா.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சு போறதென்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும். ஆனா அதுக்கு முதல் நான் சில விஷயங்களை மறக்க வேணும். என்னாலை முடியும்.. " என்று தொடர்ந்தவனை 'நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரிச் சொல்லுறிங்க.." என்று குறுக்கிட்டாள் நிரோஷா.. சாரகன் சின்னதாய்ச் சிரித்தான்.

'அதுக்குப்பிறகு நான் உங்களோடை கதைக்கிறன்.. அது வரை நன்றி வணக்கம்.." கை குவித்துச் சொன்னான்..

'கீப் இற் அப்.." என்றாள் நிரோஷா

'உங்கட வாழ்த்தைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உனக்கு உப்படித்தான் நடக்கும். அந்த ஒவ்வொரு முறையும் இப்பிடியே செய் எண்ட மாதிரியெல்லோ இருக்கு..அப்பிடியெதுவும் நடந்தால் உங்களுக்குத்தான் அடியிருக்கு.." இயல்பான உற்சாகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனாலும் வலிந்து வரவழைத்துச் சொன்னான்.

இப்போது நிரோஷா பலமாகச் சிரித்தாள்.

'இந்தச்சிரிப்புத்தானே...." என்றெழுந்த மனதை 'ச்சே.. சும்மாயிரு.." என்று சாரகன் அடக்கினான்.
* * *

அம்மாவிற்கும் என்னை அலைக்கழித்த பெண்களிற்கும் அர்ப்பணம்.. ராத்திரி நித்திரைக்குப் போகு முன் படித்த புத்தகத்திலிருந்த வசனம் சாரகனின் ஞாபகத்தில் காரணமின்றி வந்து போனது. கூடவே உதட்டோரம் ஒரு சிரிப்பும்.. அவன் புரண்டு படுத்தான்.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் அதிகாலை எழும்ப வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை. பத்து பதினொரு மணிவரை தூங்க முடிகிறது.

தொலைபேசி கிணுகிணுத்தது. அருகிலேயே அது இருந்த போதும் எழுந்து சென்று எடுக்கின்ற அலுப்பில் அவன் படுத்திருந்hன். அம்மா வந்து எடுத்து விட்டு உனக்குத்தான் என்று சொல்ல எரிச்சல் வந்தது. றிசீவரை வாங்கினான்..

'ஹலோ.."

'ஹலோ நான் அட்சயா கதைக்கிறன்.. "

சாரகனை விட நாலைந்து வயது இளைய அவள் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானாள். அவ்வப்போது போன் பண்ணி அவள் அடிக்கும் அரட்டை சில சமயம் எரிச்சலை வரவழைக்கும். சில சமயம் பொழுது போகச்செய்யும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசு படுத்திப் பேசுவதும் அடிக்கடி கோபிப்பதும் அவளுக்கு வழமையானவை. 'சின்ன வயது தானே.. அது தான் அப்படி.." என்று சாரகன் நினைத்துக் கொள்வான்..

'சொல்லு.. " தூங்கியெழுந்த சோர்வு அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

'என்ன நித்திரையை குழப்பிட்டேனா..?"

'குழப்பிட்டாய்.. இனி என்ன செய்ய முடியும்.. சொல்லு.."

'உங்கடை பிறந்த நம்பர் என்ன.."

உள்ளிருந்து ஓடிவந்த பதில் சாரகனின் தொண்டைக்குழிக்குள் சுதாகரித்து நின்று கொண்டது. ஏதேதோ சம்பவங்களெல்லாம் ஞாபகத்தில் வந்து போகத்தொடங்கின.

'ஏன்.. கேட்கிறாய்.."

'நியூமராலஜி புத்தகம் ஒண்டு கிடைச்சிருக்கு.. அது தான் பார்க்கிறதுக்கு கேட்டனான்... சொல்லுங்கோ.. என்ன நம்பர்.."

'இல்லை.. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கையில்லை.. " என்றான் சாரகன்.

'பரவாயில்லை.. எனக்குச் சொல்லுங்கோ.." அட்சயா விடாது கேட்டாள்..

'ஏய் முடியாதென்று சொல்லுறனெல்லே.. விடன்.." சாரகன் உண்மையிலேயே கோபப்பட்டான். அவள் சடாரென்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு அட்சயா கதைக்காது விடக்கூடும்.

நித்திரை முழுதும் முறிந்து விட அறையை விட்டு வெளியே வந்த போது எதிர் வீட்டிருக்கின்ற ராகுலன் பென்சிலும் கொப்பியுமாக எதிரில் வந்தான். இரண்டாவது வகுப்பில் படிக்கும் அவன் எப்போதாவது வந்து அண்ணா அம்மாவைப்பற்றி பத்து வசனம், உலகம் பற்றி பத்து வசனம் எழுதி;த் தாங்கோ என்பான். இன்றைக்கும் அது எதற்காகவோ தான் வந்திருக்க வேண்டும்.

'என்னடா.." என்று கேட்டான் சாரகன்.

'அண்ணா ரீச்சர் சொன்னவ பாரதியார் எழுதின பாட்டு ஏதாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லி.. சொல்லுறியளே.. எழுதுறன்.."

சாரகன் யோசிக்கத் தொடங்குமுன்னரே எதேச்சையாக அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன..

'நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி.." ராகுலன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

'முழுப்பாட்டும் என்னண்ணா.."

'கொஞ்சம் பொறு..எடுத்தாறன்" சாரகன் உள்ளே போனான்.
October 18, 2004

இலங்கை வானொலியில் Comedy Time

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தன் தமிழ் ஊடாக இலங்கையின் தமிழர்கள் பற்றிய, அவர்கள் பேசுகின்ற மொழி பற்றிய நன்மதிப்பை அண்டை அயல் நாடுகளில் ஏற்படுத்தித் தந்தது என்பது வரை மகிழ்ச்சியாயிருக்கிறது.

சந்தோசம்.

எமக்கெல்லாம் அதன் தமிழ்ச்சேவை ஒலிபரப்புக்களை கேட்கின்ற வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனாலும் அதன் வர்த்தக சேவை ஒலிபரப்பு எம்மைக் கடந்து தான் தமிழகம் போகும். தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகமானதே வர்த்தக சேவை ஒலிபரப்பிலிருந்து தான்.

யாழ்ப்பாணத்திலிருந்த கடைசி காலம் வரை சினிமா பாடல்களுக்கு வர்த்தக சேவையைத் தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. (அத்தோடு இரவு 8.45 க்கு திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் தூத்துக்குடி வானொலியில் எண்ணி 3 பாடல்கள் போடுவார்கள். அதனையும் நம்பியிருந்தோம்)

நன்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம்.

ஆனால் அதன் செய்தியறிக்கை பற்றி பேசுவதானால்,

மன்னிக்கவும்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் மக்களை மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான பின்வாங்கல்களுக்கும் உட்படுத்திய பெருமை அதன் செய்தியறிக்கையைத் தான் சாரும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த வானொலி பல பிரதேசங்களை (பல தடவைகள்) விடுவித்திருக்கிறது.

ஒவ்வொரு சண்டைக் களத்திலும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைய பல நூற்றுக்கணக்கான புலிகளை அந்த வானொலி கொன்று குவித்திருக்கிறது.

யுத்தங்களில் அகப்பட்டு செத்துப்போகின்ற அப்பாவி மக்கள் அத்தனை பேரையும் அந்த வானொலி பயங்கர வாதிகள் ஆக்கியிருக்கிறது.

திட்டமிடப்பட்ட அதன் உளவியல் தாக்குதல் ஆரம்பத்தில் ஏகத்துக்கும் மன உளைச்சலைத் தந்தது. ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என சஞ்சலப்பட வைத்தது.

அதன் அருவருக்கத்தக்க கீழ்த்தரமான பொய்ப் பிரசாரம் கோபம் கொள்ள வைத்தது.

இறுதியில் அவற்றிற்கெல்லாம் நாம் இயைவாக்கம் அடைய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி நேரம் நமக்கெல்லாம் Comedy Time ஆகிப்போனது. அதன் செய்திகள் நம்மை வாய் விட்டு சிரிக்க வைத்தன.

1995 ஜுலையில் இராணுவம் எனது சொந்த ஊரான வட்டுக்கோட்டை உட்பட யாழ்ப்பாணத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை முன்னேறிப் பாய்தல் என்ற இராணுவ நடவடிக்கை மூலம் தன் கட்டுப்பாட்டினில் கொண்டு வந்திருந்தது.

அடுத்த 5 வது நாள் புலிகள் புலிப் பாய்ச்சல் என்ற எதிர் நடவடிக்கை மூலம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றினார்கள்.

இருப்பினும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை வானொலியின் செய்தியில் எனது ஊரும் இன்னும் பிற ஊர்களும் இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டின் கீழேயே இருந்தன. இராணுவத்தினர் எமக்கு மறுவாழ்வு??? அளிக்கும் செயற்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனராம். மக்கள் அவர்களோடு அன்னியோன்னியமாக உறவு கொண்டார்களாம். புலிகளின் அராஜகங்கள் பற்றி மக்கள் கதை கதையாய்ச் சொன்னார்களாம்.

எங்களுக்கு சிரிப்பு வராதா பின்னே?

எங்கு குண்டு வீசினாலும் எங்கு ஷெல் விழுந்தாலும் எந்தக் குழந்தை செத்துப்போனாலும் அன்றையை மாலைச் செய்தியில் புலிகளின் ஆகக்குறைந்தது ஒரு முக்கியஸ்தர் கொல்லப்பட்டார் என்ற செய்தி கண்டிப்பாக வரும்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பற்றிய ஒரு சுவையான கதை இருக்கிறது.

பூலோகத்தில் பொய் களவு சூது வாது எல்லாம் நிறைந்து விட்டன. பூலோக பிரதி நிதி ஒருவர் இறைவனிடம் செல்கின்றார்.

இறைவா நமது தேசத்தில் பொய்யும் புரட்டும் புரண்டோடுகிறது. நீ கண்டும் காணாதும் போல இருக்கிறாயே என்று அவர் இறைவனிடத்தில் நொந்து கொண்டார்.

பக்தா, கவலை அறு. அங்கு நடக்கும் எல்லாவற்றையும் நான் அறிந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று இறைவன் சொல்ல எப்படி இறைவா என்கிறார் பக்தர்.

வா என்று அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கின்றார் இறைவன். அங்கே ஒரு சுவர் முழுக்க சிவப்பு விளக்குகள்.

பக்தருக்கு எதுவும் புரியவில்லை. ஆச்சரியத்தடன் அவர் இறைவனைப் பார்க்கின்றார். இறைவன் விளக்கம் கொடுக்க தொடங்கினார்.

பூலோகத்தில் யார் பொய் சொன்னாலும், அவர்கள் சொல்லும் பொய்யின் அளவுக்கேற்ப இங்கிருக்கின்ற சிவப்பு விளக்குகள் எரியும். அதன் படி நான் அறிந்து கொள்வேன் என்கிறார் இறைவன்.

திடீரென்று அங்கிருந்த அத்தனை சிவப்பு விளக்குகளும் எரியத் தொடங்கின. பக்தருக்கு குழப்பம்.

இறைவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு அமைதியாக சொன்னாராம். வேறொன்றுமில்லை. இலங்கை என்கிற நாட்டில் அவர்களுடைய அரச வானொலியில் இப்போது மாலைச் செய்தி ஆரம்பித்திருக்கிறது. செய்தி முடியும் வரை அத்தனை சிவப்பு விளக்குகளும் எரிந்து கொண்டுதானிருக்கும்.
October 15, 2004

புதுசு கண்ணா புதுசு

புது புளொக்கருக்கு மாறிய பின்னரும் நான் கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துவதால் புளொக்கரின் புதிய வசதிகளைப் பயன்படுத்த முடியாது இருந்தது. குறிப்பாக லேபிள் இடும் வசதி..

அதற்காக சும்மா இருந்து விட முடியுமா..? இணையத்தில் விழுந்து மூழ்கி புரண்டு எழுந்ததில் கிடைத்த அறிவுத் துணுக்குக்களை முன்வைத்து எனது பதிவிலும் லேபிள்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்காக ஒரு வெறும் பதிவினை வெளியிட வேண்டிய கட்டாயம். இதற்கு முன்னைய பதிவு அதற்காகத் தான்.லேபிள்களைச் சுட்டுவதன் மூலம் திரட்டப்படும் பதிவுகள் இந்தப் பிரிவுகள் பதிவின் உள்ளடக்கத்திலேயே திரட்டப்படும்.

புளொக்கர் தரும் லேபிள் வசதிகளைப் பரிசோதித்த போது அவற்றின் லேபிள்களை சுட்டினால் அவை குறித்த முழுப் பதிவுகளும் மொத்தமாய் பதிவு உள்ளடக்கத்தோடு வருகின்றன. உதாரணமாக அனுபவம் என்ற லேபிளில் 17 பதிவுகள் இருப்பின் அந்த 17 பதிவுகளும் ஒரே பக்கத்தில் தோன்றுவது அத்துணை நல்லது அல்ல.

நான் இட்டிருக்கும் லேபிள்கள் அவற்றிற்குரிய பதிவுகளின் தலைப்புக்களையும் பதிவு பற்றிய மேலோட்டத்தினை மட்டுமே தரும். இது பக்கம் இலகுவில் தரவிறங்க ஏதுவாகிறது. என்னுடைய லேபிள்கள் பெரும் பிரிவுகள் என்ற தலைப்பில் பக்கத்தே உள்ளது.

இது பற்றிய தொழில் நுட்ப விபரங்களைப் பின்னர் எழுத இருக்கிறேன்.

4.2.07

பிரிவுகள்
என் சிறுகதைகள் பற்றிய செய்திகள்

அர்த்தம். எனது சிறுகதைத் தொகுதியின் பெயர். சரிநிகர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைக் கொண்டு நிகரி என்னும் பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவந்தது. அந்த நிகரி வெளியீடாகவே எனது அர்த்தமும் வெளிவந்தது.

1998 இல் தினக்குரல் பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதையான எங்கடை மக்கள் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் எனக்கு எவரையுமே அறிமுகம் இல்லாதிருந்த காலத்தில் அச் சிறுகதை வெளிவந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காணாமல் போன ஒரு மகனின் தாயின் உணர்வுகளை பேசிய அச்சிறுகதை எனது அச்சில் வெளிவந்த முதற் கதையாயினும் கடந்த வருடம் நின்று திரும்பி பார்த்த போது எனக்கு அது பிடிக்கவில்லை. அதனாலேயே அக்கதை என் தொகுப்பில் இடம் பெறவும் இல்லை.

என் சிறுகதை அச்சில் வெளிவந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த கதைகளை எழுதத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 20 நாள் இடை வெளியில் கூண்டு என்னும் அடுத்த சிறுகதை வெளிவருகிறது. வெளிநாடு செல்ல வெளிக்கிட்டு இடைநடுவில் பிடிபட்டு திரும்ப இலங்கை வந்து மீண்டும் வெளிநாடு போகவே மாட்டன் என்றிருந்த வேளையில் இராணுவத்தால் கைது செய்யப் பட்டு விசாரணையின் பின் விடுதலையான பின்னர் மீண்டும் வெளிநாடு போக விரும்புகின்ற ஒரு பெண்ணின் கதை. கதையோட்டத்தில் எனக்கு திருப்தி தந்த சிறுகதை அது.

இவ்வேளை சில சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். நான் கதை எழுதுவதையும் அவை பத்திரிகைகளில் வருவதையும் எனது பாடசாலை நண்பர்கள் நம்பத் தயாராய் இருக்க வில்லை. கதிர் சயந்தன் எண்ட பெயரில வேறை யாரோ எழுதுகினம். நீ பொய் சொல்லாதே என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் அவர்களை நம்ப வைப்பதற்காக நான் எழுதிய கதைகளின் பாத்திரங்களின் பெயர்களுக்கு என் நண்பர்களின் பெயர்களை இட்டேன். அதன் பின்பே அவர்கள் ஒருவாறு நம்பத் தொடங்கினார்கள்.

அக்கரை என்று நான் எழுதிய ஒரு சிறுகதை எனது இந்திய படகு பயண அனுபவத்தை மையப் படுத்தியது. சிறுகதைகளை விரும்பி வாசிப்பவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த அந்த சிறுகதையே இலகுவாக வழி சமைத்தது.

அது வரை காலமும் தினக்குரலில் மட்டுமே எனது சிறுகதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தில் தான் உயிர்ப்புவை நாங்கள் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்தோம். கொழும்பில் இயங்கிய தமிழாலயம் என்னும் அமைப்பின் ஊடாக அது வெளிவந்தது. (பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சந்தித்த கருத்து முரண்பாடுகள், கொள்கைப் போரிடல்கள், மனஸ்த்தாபங்கள் என்று எல்லாவற்றையும் நாங்கள் அப்போதே சந்தித்தோம் என்பது வேறு விடயம்)

பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பி விட்டு எப்ப வரும் என்று எதற்காக பார்த்து கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுது தான் நம்மிடமே பத்திரிகை இருக்கிறதே. அதிலேயே என் சிறுகதைகளை வெளியிடலாமே என்ற எண்ணத்தில் அதன் பின்னர் தினக்குரலுக்கு கதைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

முதலாவது உயிர்ப்பில் வந்த சிறுகதை ஐயோ சயந்தா நீயுமா என்று என்னை நானே கேட்க வைக்கின்ற கதை. முழுக்க முழுக்க பாலகுமாரன் பாதிப்பில் அது கிடந்தது. காதலை வெளிச்சொன்ன ஒரு இளைஞனுக்கு காதலிக்க வேண்டாம். கல்யாணம் கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகின்ற ஒரு பெண் தொடர்பான கதை அது. இளைஞன் தமிழனாயும் பெண் சிங்கள இனத்தை சேர்ந்தவளாயும் இருந்தார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி ஒரு கதையை நான் எழுதியிருக்கத் தேவையில்லை என்று தோன்றினாலும் அதுவே எனக்கு பல பெண் நண்பர்களை தேடித்தந்தது என்பது உண்மை... உண்மை... உண்மை...

அடுத்த உயிர்ப்பு இதழில் எனக்கு மன நிறைவு தந்த அர்த்தம் வெளிவந்தது. போராளிகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் சாதாரண மனித உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லிய அந்தச் சிறுகதையின் பெயரிலேயே என் தொகுப்பு இருந்தது. லீவில் வீடு வந்திருந்த போராளி முன் வீட்டில் இருந்த அவனோடு படித்த பெண் பற்றி கேட்பதும் அவளுக்கு கல்யாணம் முடிந்து அவள் வெளிநாடு போய் விட்டாள் என தாய் சொல்வதும் மெல்லிய இதய சுவரோரம் கூரிய முள் ஒன்று லேசாய் கீறிச் செல்வது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்படுவதும் இப்படியாக பல விடயங்களை அச் சிறுகதை தொட்டது.

அந்த போராளி எழுதி வைத்திருந்ததான

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா
ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும் இரு விழிகள்

என்ற கவிதை என்னை மிகக்கவர்நத எனது வரிகளில் ஒன்று.

சில விதி முறைகளை மீறிய காரணத்திற்காக நானும் எனது நண்பன் சேயோனும் உயிர்ப்பு ஆசிரியர் குழுவில் இருந்து நீக்கப்பட்டோம். (பலர் செய்வது போல நானும் அவனும் புதிய உயிர்ப்பு என்ற பெயரில் பத்திரிகை தொடங்குகின்ற முட்டாள்த் தனமான காரியத்தை செய்ய வில்லை. நானும் அவனும் விளம்பர பிரிவுக்கு நியமிக்கப் பட்டோம். அக்கால கட்டத்தில் தான் தமிழ் வெப் றேடியோ மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஆகியவற்றின் விளம்பரங்கள் தாங்கி உயிர்ப்பு வெளிவந்தது என்பதனை எங்களுடைய திறமை குறித்து உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இங்கே எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன பண்ணுவதாம்.)

அக்கால கட்டத்தில் நான் எந்த சிறுகதையையும் உயிர்ப்புக்கு எழுத வில்லை. எங்கே எனது கதைகள் புறக்கணிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குட்டி குட்டி கவிதைகள் எழுதி வந்தேன்.

மீண்டும் உயிர்ப்பின் ஆசிரியர் குழுவில் நான் இடம் பெற்றேன்.(தண்டனைக் காலம் முடிவடைந்ததும்?????). அதுவே கடைசி வெளியீடு என்பது எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. பேசாமல் இதழின் கடைசி பக்கத்தில் கை கூப்பி நன்றி சொல்லும் பெண்ணின் படம் போட்டு நீங்கள் இது வரை காலமும் தந்த ஆதரவுக்கு நன்றி என்று போட்டு விடலாமா என்றும் யோசித்தேன்.

அந்த இதழில் ஒரு பெண்ணின் புனை பெயரில் நான் எழுதியிருந்த முகங்கள் கதையும் எனக்கு பிடித்தது.

கேள்விகள் என்கின்ற ஒரு சிறுகதை திருமறைக் கலாமன்றம் வெளியிட்ட கலைமுகம் என்னும் இதழில் வெளிவந்தது. அக்காலப் பகுதியில் கலைமுகத்தின் ஆசிரியராக இருந்தவன் எனது நண்பன் சோமிதரன். கிட்டத் தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே அக் கதையை என்னிடமிருந்து வாங்கி இந்தா வருது அந்தா வருது என்று கொண்டிருந்தான். உது வேலைக்காவாது என்று கருதி விட்டு அச்சிறுகதையை நான் சுடரொளிக்கு அனுப்பியிருந்தேன். பிறகும் பல காலத்தின் பின் ஒருவாறு கலைமுகம் திருமுகம் காட்டியது எனது கதையோடு . நல்ல வேளை சுடரொளியில் வரவில்லை என்று ஆசுவாசப் பட்டபோது அட.. அடுத்த வார சுடரொளியில் அச்சிறுகதை வெளிவந்தது. சோமிதரனிடம் நான் நன்றாகவே வாங்கி கட்டிக்கொண்டேன்.

2003 ஏப்ரல் 20 மீண்டும் தினக்குரலில் எனது சிறுகதை வெளிவருகிறது. கலக்குறே சயந்து என்று என்னை நானே பாராட்டிக் கொள்கின்ற சிறுகதை அது. போர் மையம் கொண்டிருந்த காலத்தில் வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த இளைஞன் ஒருவன் போர் ஓய்ந்த பின் மீண்டும் வன்னிக்கு போகின்றான். அவனது நினைவுத் தடத்திலிருந்த ஒரு பெண் தொடர்பான கதை தான் அது. வெட்கம் என்ற பெயரில் அது வந்தது. (ஆட்டோகிராப் படம் வெளிவர முன்னமே அது வந்து விட்டது என்பதை இத்தால் அறிய தருகிறேன்.) அதுவே இது வரைக்கும் என்னுடைய இறுதிக் கதை.

(இவை தவிர காதலை வித்தியாசமான கோணத்தில் அணுகுதல் என்ற பார்வையில் அல்லது போர்வையில் கண்ட கேட்ட ஒரு காதல் பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு வித்தியாசமான தீர்வு கொடுத்து கதையாக்கி நான் எழுதுகின்ற சிறுகதைகள் சஜீ என்ற பெயரில் சுடரொளியில் அவ்வப்போது வெளிவரும். அம்மாவுக்கு கூட தெரியாமல். அம்மாவுக்கு தெரிஞ்சா படிக்கிற வயசில என்ன காதலும் கத்தரிக்காயும் என்று பேசுவா)
September 29, 2004

Labels:

ஈழப் பாடல்களின் நினைவுகளில்..

பாடல்களுக்கு கடந்த காலங்களை நினைவு படுத்துகின்ற அற்புத சக்தி இருப்பதாகவே நான் கருதுகின்றேன். தமிழ்ச்சினிமாவின் பல பாடல்கள் என் சில கடந்த காலங்களை நினைவு படுத்துகின்றன என்பதற்கும் அப்பால் தமிழ்ச் சினிமாவிற்கு சற்றேனும் சம்பந்தப்படாத நாம் வளர்கின்ற காலங்களில் எந்த திணிப்பும் இல்லாமல் இயல்பாகவே எங்களுக்கு கேட்க கிடைத்த தமிழீழ எழுச்சிப் பாடல்களில் சிலவும் என் கடந்த காலங்களை நினைவு படுத்தியே நிற்கின்றன.

திலீபன் அழைத்தது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்ற பாடலைக் கேட்கையில் 87 இல் எங்கள் வீட்டின் கட்டட வேலைகள் நடந்த காலம் நினைவுக்கு வருகிறது.

கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என்னும் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் 93 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் எனது ஆரம்ப நாட்கள் ஞாபகத்தில் வருகின்றன.

ஓடு ஓடு நீ ஓய்ந்து விட்டால் வரும் கேடு என்ற பாடலில் 95 இன் வரலாற்றுத் துயரம் யாழ்ப்பாண இடம் பெயர்வு நினைவில் எழுகிறது.

சின்ன சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊரிழந்தோம் என்ற பாடல் எனது வன்னி நாட்களை நினைவில் இழுக்கிறது.

ஆரம்ப காலங்களில் தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த சில எழுச்சி மிகு பாடல்கள் தான் தமிழீழ விடுதலைப் போரின் பரப்புரைக்கு பயன்படுத்தப் படும் பாடல்களாக இருந்திருக்கின்றன.

ஊமை விழிகள் திரைப் பட பாடலான தோல்வி நிலையென நினைத்தால் அவ்வகையான ஒரு பாடல்.

பின்னர் தமிழீழ விடுதலைப் போரிற்கென தனித்துவமான பாடல்களை தயாரிக்கத் தொடங்கிய காலங்களில் தமிழக கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானவையாக இருந்திருக்கின்றன.

தேனிசை செல்லப்பாவின் குரல் இன்னமும் எங்கள் நினைவில் நிற்கின்றது. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், இசையமைப்பாளர் வைத்திய நாதன், மனோ ஆகியோரும் குறிப்பிடக் கூடிய அளவு பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

வாணி ஜெயராமின்
நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

என்ற பாடல் கேட்பவர்களின் கண்ணீரை வரவழைக்கும்.

மலேசியா வாசுதேவன் பாடிய
நடடா ராசா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவலைக் காளை நாளை விடிய போகுது
பொழுது சாயும் நேரம் - இது
புலிகள் வாழும் தேசம்

என்ற பாடல் நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு பாடல்.

மனோ இன்னுமொரு பெண் பாடகியுடன் இணைந்து பாடிய பாடல் காதல் வயப்பட்டிருந்த இரு உள்ளங்கள் விடுதலைப் போரில் இணையும் பொருட்டு தம் காதலை தியாகம் செய்வதாய் அமைந்திருந்தமை கவனிப்புக் குரியது.

தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் - என்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் - அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

என்று ஆரம்பிக்கின்ற பாடல் இப்படி தொடர்கிறது.

காவலுக்கு வந்த பேய்கள்??? கடிக்கும் நாளையில் - ஒரு
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன். - தமிழ்
ஈழம் வந்தால் வாறேன்.

தவிர ஒரு சிறுமியின் குரலில் தமிழக பாடகி ஒருவர்(பெயர் நினைவில்லை) பாடிய காகங்களே காகங்களே காட்டுக்கு போறீங்களா?
காட்டுக்கு போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு களிப்பீர்களா?
என்ற பாடல் அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு மிகப் பிடித்த பாடலாக இருந்தது.

வாணி ஜெயராம் பாடிய வீசும் காற்றே தூது செல்லு என்ற பாடலின் பல வரிகள் பத்து ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்பது ஆச்சரியமாய் இருக்கிறது. அது இதுதான்.

வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் - அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ - கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ

இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடிக்குது..

கால ஓட்டத்தில் தமிழகத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடல்கள் எங்கள் தாயக தேசத்திலேயே உருப் பெற தொடங்கின.

தாயகத்தில் வெளியான ஆரம்ப கால பாடல்களில் பாடகர் சாந்தன் மற்றும் சுகுமார் ஆகியோரின் பங்களிப்பு நிறையவே இருந்தது. சாந்தன் பாடிய எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம். தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம் என்ற பாடலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ஒரு சிறுவன் இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு பாட்டுப் பாடுமாறு இராணுவம் கேட்க பாடிக் காட்டினானாம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரும் கவிஞருமான புதுவை இரத்தினை துரை அவர்கள் பெருமளவில் எழுச்சிப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவரின் பாடல்களில் இது வரை என்னைக் கவர்ந்தவை கரும்புலிகள் என்கிற ஒலிப்பதிவுத் தட்டில் வெளிவந்த அத்தனை பாடல்களும் தான்.

அநாமதேயமான அந்த வரிகள் பல கேள்விகளின் முடிச்சுக்களை அவிழ்க்கின்றன.

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் - இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாம் அழுவோம் யாரறீவீர்கள்.
October 31, 2004

Labels:

3.2.07

தலைப்பெதுவும் கிடையாது

பள்ளியின் பின்புறமாக எல்லோருடைய சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவளதும் அவனதும் சைக்கிள்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது தான் அவள் அறிமுகமானாள்.

வித்தியாசமாக தெரிந்தாள்.

இப்பொழுதெல்லாம் வேண்டுமென்றே அவனது சைக்கிள் அவளினது சைக்கிளின் அருகே நிறுத்தப்படுகிறது.

இயல்பாகவே விழிகள் அவளை தேடத்தொடங்குகின்றன.

தினமும் பார்த்து விடத் துடித்தான்.

மற்றவர்களிடத்தினின்று தன்னை வித்தியாசப்படுத்த, தனித்துவமாய் திகழ திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.

ரியூசனிலும் அவள் இணைந்து கொண்டாள்.

பின்தொடர்தல்கள் தொடர்கின்றன.

மனசுக்குள் பூப்பூக்கத்தொடங்குகின்றது.

அவள் எப்போதும் அவனையே பார்ப்பதாய் எண்ணங்கள்.

நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஒரு சில வேளைகளில் அதுவே உண்மையாயும் இருந்தது.

காதலிக்க தொடங்குகின்றான்.

எதிர்காலம், தொழில், திருமணம் என்பன குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், என்னையும் அவள் காதலித்தாக வேண்டும் என்ற ஒரே இலக்கில்

காதலிக்க தொடங்குகின்றான்.

காய்கள் நகர்கின்றன.

அடுத்த நாளினை அவளோடு எப்படி ஆரம்பிப்பது என்ற திட்டமிடலிலேயே இரவுகள் கழிந்தன.

'இப்படிப் பேசினால், அவள் அப்படிப் பதில் சொல்லுவாள், அதற்கு நான் இப்படிப் பதில் சொன்னால், அவள் சிரிப்பாள்"

அவளின் கவனத்தை பெறும் ஒரே நோக்கில்

நடந்தான்.

இருந்தான்.

படித்தான்.

பாடினான்.

சிரித்தான்.

நண்பர்கள் அவர்களை ஜோடி கட்டி பேசத்தொடங்கினார்கள்.

பொய்யாய் கோபப்பட்டான்.

உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

மிகுந்த திட்டமிடலின் பின் ஒர வார காலம் வகுப்புக்களுக்கு மட்டம் போட்டான் அவன்.

'உங்கடை Commerce கொப்பியை தாங்களேன். நோற்ஸ் எழுதிட்டு தாறன்"

முறைத்தாள்.

'அதுக்கு வேறை யாரையும் பாருங்க"

அவமானப்பட்டது போல இருந்தது.

கோபம் வந்தது.

அவன் கேட்டால் அவள் தந்தே தீருவாள் என்ற கர்வம் உடைந்து போனது.

இருப்பினும், முயற்சி திருவினை ஆக்கியே தீர்ந்தது.

அவன் எது கேட்டானோ அந்த நோட்ஸ் கொப்பி அது அவன் கை வந்தது.

நான்கோ ஐந்தோ நாள் வைத்திருந்தான். அவ்வப்போது எடுத்துப் பார்த்தான்.

நெஞ்சில் அணைத்தான்.

அட, முத்தம் கூட இட்டானாம் அந்த வெற்றுக் காகித கொப்பிக்கு.

அந்த நாட்களில் அவள் கையெழுத்துப் போலவே எழுதவும் பழகினான்.

அடி முன் ஜென்மம் நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்ணே நான் அழகில்லையா (!!!!அட்ரா.. அட்ரா.. !!!)
உன் கனவுக்குள் வரவில்லையா..

அவளது கொப்பியில் அவளது கையெழுத்தில் எழுதினான்.

அசாத்திய துணிச்சல்.

அவள் மீதான ஈர்ப்பை நடவடிக்கைகளால் உணர்த்த தொடங்கினான்.

ஒரு முறை அற்லஸ் (உலக வரைபடம்) கேட்டாள்.

அதை அட்ரஸ் என்று அவசரப்பட்டு விளங்கிக் கொடுக்க,

அதில் அவமானப்பட்டுப் போனான்.

ஏற்கனவே வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த ஆங்கில அறிவு பற்றி என்ன நினைத்திருப்பாள்?

அவனை மலேரியா தாக்கியது. ஒரு வார காலம். அதே காலத்தில் அது அவளையும் தாக்கியது.

அவனுக்கு காய்ச்சல் வந்தால் அது அவளுக்கும் வருகிறது. கணக்குப் போட்டான்.

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளை யாரோ படம் எடுக்க அவள் அந்த யாரோவோடு சண்டை பிடிக்க

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளுக்கு யாரோ காதல் கடிதம் கொடுக்க அவள் அதை கிழித்தெறிய

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளோடு படித்த ஒருவன் அவளிடம் கொப்பி கேட்க அவள் கொடுக்க

கவலைப் பட்டான்.

..................................

..................................
October 10, 2004

1.2.07

படங்களில் நிற்பது நான் தான்

இந்தப் படங்களை எனது வலைப்பதிவில் அங்கங்கு எங்காவது பார்த்திருக்கலாம் நீங்கள். டிஜிற்றல் கமெரா கிடைத்த ஆரம்ப நாட்களில் ஒஸ்ரேலியாவில் அருகிருந்த வீட்டுப் பொடியன் செந்தூரனை சிப்பிலியாட்டாத குறையாக அப்படியெடு இப்பிடியெடு அந்தா எடு இந்தா எடு என்று ஆக்கினைப் படுத்தி எடுத்த ஒரு சில படங்களில் இரண்டு படங்கள்..

Image hosted by Photobucket.com

தோளுக்குப் பின்னிருந்து சூரியன் ஒளிர வேண்டுமென நினைத்து எடுத்தது. சற்றுத் தவறி விட்டது. நான் இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பதாக அப்போது யாரோ சொன்னார்கள்.

Image hosted by Photo bucket.com

Titanic பாதிப்பில் எடுத்தது. அந்த நேரத்தில் யாருமில்லாததால் நான் மட்டுமே நிற்க வேண்டியதாய்ப் போய் விட்டது. பரவாயில்லை. பறக்க முயற்சித்தேன் முடியவில்லையென்றும் சொல்லலாம்.