14.2.07

தமிழகத்தில் ஈழ அகதிகள்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.

1953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.

தனது நூலெங்கும் தமிழீழம் என்னும் நாட்டிற்காக தான் திட்டமிட்டிருந்த கனவுகளை டேவிட் ஐயா சொல்லிச் செல்கின்றார். தனது ஆரம்ப காலங்கள், இலங்கையின் அப்போதைய அரசியல் நிலைகள், வெலிக்கடைச் சிறை நினைவுகள், தனது தமிழக அனுபவங்கள் என பலதினதும் கூட்டாக அது அமைந்திருக்கிறது. ஆங்காங்கே தீவிரமாக ஈழத்தையும், இஸ்ரேலையும் சாதகமாக ஒப்பிடுகிறார். 1962 இல் இரண்டு வார காலம் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்தமையையும் Exodus என்னும் நூல் குறித்தும் சிலாகித்துச் சொல்கின்றார். I wanted to build Tamil Eelam like Israel. Now I hate the Israelis. They are slaves to America.

திரு டேவிட் ஐயா தனது நூலில் தனது தமிழக அகதி வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுதியதை முடிந்தவரை மொழி பெயர்த்திருக்கின்றேன். 1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் தற்போதையை நிலை குறித்து இங்கு எழுதியிருக்கின்றார். இனி அவர்....

தமிழகத்தில் எனது அகதி வாழ்வின் அனுபவங்கள் பற்றி நான் சிலவற்றைக் கூற வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அதிகளவான ஈழத் தமிழ் அகதிகள் பரந்திருக்கிறார்கள். நான் வந்ததன் பிற்பாடு, அகதிகளின் தொகை எழுபதினாயிரமாக அரசாங்க முகாம்களிலும், ஒரு லட்சமாக வெளியிடங்களிலும் அதிகரித்தது. இப்போது முகாம்களில் அதே எழுபதினாயிரமாகவும் வெளியிடங்களில் முப்பதினாயிரமாகவும் உள்ளது. 1983 இல் நாம் மிக மரியாதைக் குரியவர்களாக வரவேற்கப் பட்டோம்.

ஆயினும் ரஜீவ் காந்தி கொலையின் பின், முழுமையாக எனச் சொல்ல முடியாவிட்டாலும், தமிழக மக்களால் கூட நாம் வெறுக்கப் படுகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது.

எனது இரண்டு சொந்த அனுபவங்களை இங்கு நான் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் திருமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள இனஸ்பெக்டர் - அவர் பெயர் பூங்காவனம் எனச் சிலர் சொன்னார்கள் - என்னை ஒரு நாயைப் பார்ப்பது போல ஏளனமாய்ப் பார்த்தார். எந்த விதமான கேள்விகளும் இல்லை. நடுங்கும் என் கைகளிலிருந்து ஆவணங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்.

நான் நரைத்து விட்ட தலையுடனும் தாடியுடனும் எழுபதை நெருங்கும் வயதில் இருந்தேன். அவரைக் கோபமூட்டும் எதனையும் செய்யவும் இல்லை. எனினும் இனஸ்பெக்டர் எனது ஆவணங்களைக் கிழித்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து கத்தினார்

போ.. போய் எடுத்திட்டு வா

நான் போய் எடுத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அந்த ஆவணங்கள் இல்லாது நான் தமிழ் நாட்டில் வாழ முடியாது.

இப்போது ஈழத் தமிழ் அகதிகள் குடிவரவுத் திணைக்களத்தில் கூட பதிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாம் பொலிஸ் நிலையத்திலிருந்தும், வங்கியிலிருந்தும், வீட்டுச் சொந்தக் காரர்களிடமிருந்தும் கடிதம் பெற்றுச் சென்று குடிவரவுத் திணைக்களத்தில் நமது பதிவைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை நான் இத் திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அப்போது 76 வயது எனக்கு. கூடவே உடல் நடுக்க வியாதியும் வேறு. நான் நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்றவர் தனது அலுவலை முடித்து விட்டுச் சென்ற பின் நான் அதிகாரியை நோக்கிச் சென்றேன். ஆயினும் அவர் என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை அழைத்தார். ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நான் - ஒரு காலத்தில் இந்த உலகம் முழுவதையும் கால்களால் அளந்தவன் - நடுங்கும் என் உடலோடு நிற்க வேண்டியிருந்தது.

நான் எனது குடையையும் பையையும் எடுத்து வெளியேறி விட்டேன். பின்னர் குடிவரவுத் திணைக்கள பிரதான அதிகாரியொருவருக்கு என்னுடைய விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை அனுப்பியதையடுத்து என்னை அழைத்த அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்தியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காதெனவும் உறுதியளித்தார்.

எனது சிக்கல் தீர்ந்து விட்டது. ஆயினும் இன்னமும் ஈழத் தமிழர்கள் குடிவரவுத் திணைக்களங்களில் தமது நேரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இங்கே நேரம் பெறுமதியற்றது. அமெரிக்க டொலர்களே பெறுமதி மிக்கன.

இதே நூலில் பிறிதொரு இடத்தில் பத்து ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு அந்த நேரத்தில் தன்னிடம் பணம் இல்லாது தவித்ததையும் பின்னர் வேறொரு இளைஞன் உதவி புரிந்ததையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு காலத்தில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, யப்பான், தாய்லாந்து என உலகம் சுற்றிய ஒரு பொறியியலாளன், கென்யா நாட்டின் நகரொன்றை திட்டமிட்டு அமைத்த குழுவின் தலைவன், ஈழத்திற்கான திட்டமிடல் கனவுகளோடு திரிந்தவன் இன்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வயிற்றைக் கழுவுகிறான் என்பது எவ்வளவு சோகம்?

15 Comments:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
இவரைப் பற்றிச் சிலவருடங்களுக்கு முன் "குமுதம்" ரிப்போட்டர் ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகம்.
ஆம் ஓர் சிறந்த கல்விமானாகவும்; ஈழத்தில் கட்டுமானத்தை கனவிலும் சுமப்பவராகவும் அந்தக் கட்டுரை சுட்டியிருந்தது.
மீண்டும் தந்ததற்கு நன்றி!

2:32 PM  
Blogger சின்னக்குட்டி said...

//1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் //

எனக்கு தெரிந்த அளவு அதற்கு மேலே..... அவர் ஒரு பிரத்தியகமான கட்டிட கலைஞர்(archi- tech) பட்டதாரி

2:59 PM  
Anonymous Anonymous said...

காந்தீயம்

3:04 PM  
Blogger P.V.Sri Rangan said...

சயந்தன்,டேவிட் ஐயா ஒரு பெரும் இயகத்தைக் கட்டி வளர்த்தவர்.அவரிடம் அரசியல் நேரடியாகக் கற்றவர்கள் பலர்.இன்றைய தலைவர்களுக்கு முன்பே அவர் அந்த அமைப்பை நிறுவித் தன்னாலா பணிகளைச் செய்தவர்.இறுதியில் அவர் என்ன சொல்கிறார் என்று கீழ் வரும் அவரது எழுத்தில் படியுங்கள்.


"1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் திரு.சந்திரகாசனின்(செல்வநாயகத்தின் புத்திரர்)தனிப்பட்ட அரசியல் முயற்சிகளைப் பற்றியும்,அவருடைய வெளிநாட்டுப் பணச் சேகரிப்புகளைப் பற்றியும் ஈழ இளைஞர்கள் மத்தியில் இவரால் உருவாக்கப்படும் குழப்பங்கள் பற்றியும்,ஈழத் தமிழ் மக்களுக்கு இவரால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை கொடுக்கும் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டேன்...


...விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக் கட்டை என்றதும்,சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமது எழிச்சி ஏட்டில் என்னைப் பிற்போக்குச் சக்தி,"காக்கை வன்னியன்" என்று வர்ணித்ததையும் அறிவேன்...


நாம் மனம் தளர வில்லை.உண்மைக்கும்,நேர்மைக்கும்,மனிதாபிமானத்துக்கும்,சனநாயகத்துக்கும் வேறொரு கழகத்தைக் கட்டியெழுப்பி ஈழவிடுதலைக்கு உழைப்போம் என்ற உறுதி மொழியைத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கிறோம்".-ச.அ.டேவிட்.


இப்படித்தான் அவரது நிலைமை உருவாகியது.இறுதியில் நடந்ததென்னவோ!

3:40 PM  
Anonymous Anonymous said...

விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக் கட்டை என்றதும்,சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமது எழிச்சி ஏட்டில் என்னைப் பிற்போக்குச் சக்தி,"காக்கை வன்னியன்" என்று வர்ணித்ததையும் அறிவேன்...

புளொட்டிலிருந்து விலகிய பின்னர் அவர்கள் கூட இவரை கொல்லத் திரிந்தனர். ஒரு தடவை உயிர் தப்பியும் இருக்கின்றார். அண்மைக் காலமாக ஈழப்போரில் புலிகளின் தவிர்க்க வியலாத இடத்தை தான் ஏற்றுக் கொள்வதாக தனது பேட்டிகளில் கூறுகிறார்..

4:06 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

எண்பதுகளில் தமிழகத்தில் நடந்த ஈழத்தமிழர் கருத்தரங்குகளில் அவரைக் காண முடியும். காந்தியம் என்ற அமைப்பை வைத்து நடத்திக் கொண்டிருந்த அவர் அப்பொழுது காந்தியக் கொள்கைகளின் மேல் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இந்தியாவின் உதவியுடன் அமைதியான வழியில் சுதந்திரத்தையோ அல்லது சுய நிர்ணய உரிமையையோ ஈழத்தமிழர் வென்றெடுக்க முடியும் அன்று நம்பினார்.

சென்னையிலிருந்து அரு. கோபாலன் நடத்தி வந்த எழுகதிர் என்ற இதழில் காந்திய வழியைப் பற்றித் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்திய இராணுவ நுழைவுக்குப் பின் அவர் காந்தியத்தைக் கைவிட்டாரா என்று தெரியாது. பின்னால் ஈ.வே.ஆனைமுத்து நடத்தி வந்த Periyar Era என்ற இதழில் வந்த இக்கட்டுரைகளில் காந்திய வழிமுறைகளில் நம்பிக்கையின்மை தெரிந்தது. ப்ளாட் போன்ற போராளி இயக்கங்கள் மற்றும் சந்திரகாசன் ஆகியோரின் மேல் அவருக்கு இருந்த ஏமாற்றத்தையும் படித்ததாக நினைவு.

அவர் மட்டுமல்லாமல் எண்ணற்ற ஈழத் தலைவர்களும், அகதிகளும் அவமானப் படுத்தப் படுமளவுக்கு போராளி இயக்கங்களைப் பற்றிய பொய்ப்பிரச்சாரங்கள் திட்டமிட்டு நடத்தப் பட்டது. இராஜீவ் காந்தி கொலை அதற்கு இன்னும் சாதகமாக அமைந்தது. ஆனால் உண்மையில் தமிழ் நாட்டில் சமூக விரோதச் செயல்களிலும், தெரு வன்முறைகளிலும் ஈடுபட்டு குற்றஞ்சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இன்னும் இரத்தினக் கம்பள வரவேற்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்துப் பத்திரிகையின் ஒவ்வொரு விழாவிலும் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேட்டால் இலங்கை அரசில் மந்திரி என்பார்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

4:11 PM  
Blogger தமிழ்நதி said...

வாசிக்கும்போது மிக வருத்தமாக இருந்தது சயந்தன். எல்லாம் சரியாக இருந்திருப்பின் இத்தகையோர் மதிக்கத்தகு இடங்களில் இருந்திருக்கக்கூடும். அகதி என்று அலைவதற்கு விதிக்கப்பட்டதன் பின் அவமானங்கள்தானே மிச்சம். பதினேழு ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருபவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவர் எங்கிருக்கிறார்... சந்திக்க முடியுமா என்று எனக்கு முடிந்தால் தனிமடலிடுங்கள். நன்றி.

7:14 PM  
Anonymous Anonymous said...

He is writing on Periyar Era for last seven years.

9:29 PM  
Anonymous Anonymous said...

எஸ். ஏ. டேவிட்

9:30 PM  
Blogger சயந்தன் said...

//புளொட்டிலிருந்து விலகிய பின்னர் அவர்கள் கூட இவரை கொல்லத் திரிந்தனர். ஒரு தடவை உயிர் தப்பியும் இருக்கின்றார்.//

ஆம். தனது நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். உமாமகேஸ்வரனால் தான் தேடப்பட்டதாகவும் ஒரு முறை வாகனத்தில் கடத்திச் செல்லப்படுகையில் தனக்கு அறிமுகமான சாரதியினால் சென்னையில் வீடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

//அண்மைக் காலமாக ஈழப்போரில் புலிகளின் தவிர்க்க வியலாத இடத்தை தான் ஏற்றுக் கொள்வதாக தனது பேட்டிகளில் கூறுகிறார்..//

விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத் தேவையை பல இடங்களில் சொல்கின்றார். புலத்தில் வசிக்கும் மக்கள் புலிகளைப் பொருளாதார ரீதியாகப் பலப் படுத்த வேண்டுமெனவும் எழுதகிறார்.ஈழத்தில் இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் பட வேண்டுமெனவும் குறித்துள்ளார்.
Every Eelam tamil man or women from the age of 18 t 45 must take millitary training and be a member of the tamil eelam army ready to defend tamil eelam.

4:05 AM  
Anonymous Anonymous said...

கட்டுரைக்கு நன்றி. ஒரு தகவலுக்காக.. மட்டக்களப்பிலிருந்து சிறையுடைத்தவர்களை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தவர்களில் மாமனிதர் சிவராமின் பங்கும் பிரதானமானது.

4:32 AM  
Anonymous Anonymous said...

I included the link to David ayya's photo in a previous comment. However it did not work out as I intened
http://bp1.blogger.com/_OBFBfYawg8g/RdPvwTSjtCI/AAAAAAAAAA0/NxbkpMFiM6A/s1600-h/cda1.jpg

8:29 AM  
Anonymous Anonymous said...

நாவலர் பண்ணையை வைத்து நிர்வாகித்தவரும் இதே டேவிட் அவர்கள்தான்.
நாவலர் பண்ணை குறித்து வ.ந.கிரிதரன் எழுதியதை இங்கே சென்று வாசிக்கலாம்.
http://www.geotamil.com/pathivukal/Navalarfarm.html

9:17 AM  
Blogger சின்னக்குட்டி said...

I included the link to David ayya's photo in a previous comment. However it did not work out as I intened

அந்த படத்தை இங்கே அழுத்தி பார்க்கவும்

10:31 AM  
Blogger சயந்தன் said...

சின்னக் குட்டியண்ணை சிரமம் பாராமல் உதவினதுக்கு நன்றி.. மற்றும் எல்லாருக்கும் நன்றி.. தமிழ்நதி தனிமடலில் தொடர்ப விபரங்கள் அனுப்பகிறேன்.

3:14 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home