5.2.07

நம்மைப் பிடித்த ............... போயின..

'எங்கட பிரண்ட்சிப்பை இப்படித் தப்பா ஏன் விளங்கிக் கொண்டீங்கண்ணு எனக்கு இன்னும் விளங்கேல்லை.. " சொல்லி விட்டு நிரோஷா திரும்பிப் பார்த்தாள்.

சாரகன் அமைதியாய் நின்றான்.

'அவசரப்பட்டு விட்டேனோ..இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்திக் கேட்டிருக்கலாமோ.." எண்ண அலைகள் உள்ளே மிதந்து கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென முடித்து விட்டு மறந்து விட்டுப்போகின்ற வழமைக்குள்ளேயே சிறு வயது முதல் வளர்ந்த அவனுக்கு காலந்தாழ்த்தல் என்பது சிரமமாயிருந்திருக்க வேண்டும்.

'ஒண்ணு கேட்டால் சொல்வீங்களா.." நிரோஷா தான் அமைதியைக் குலைத்தாள்.

'சொல்லுங்க"

'இதுக்கு நானும் ஏதாவது காரணமாய் இருந்திருக்கேனா..?"

அந்த நேரத்திலும் சாரகனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி இவளால் இப்படி இலகுவாக கேட்க முடிகிறது..

"இருட்டில போகப் பயமாயிருக்கு.. ஒவ்வோர் நாளும் என் கூட வரமுடியுமா.."

"உங்களுக்கென்றதால்த் தான் என் போட்டோஸை நான் காட்டினேன்..

"எப்படி சாறியிலை நான் அழகாயிருக்கேனா.."

"உங்க நம்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." என்றெல்லாம் பேசினாளே.. ஞாபகத்திலேயே இருக்காதா..? சில சமயம் சாதாரணமாய்த்தான் இப்படியெல்லாம் பேசினாளோ..? வேறெந்த எண்ணமும் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாதா..?

ஒரு வேளை நிரோஷா அப்படிப் பேசியிருந்தால்... நான் காரணங்களைச் சொல்ல ச்சீ..நீ இவ்வளவு தானா என்று அவள் நினைக்கக்கூடும்..

கிட்டத்தட்ட சாரகன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். நினைவுகளில் காலம் பின்னோக்கிப் போனது.

சாரகனின் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடுகள் தொலைவில்த்தான் நிரோஷா இருந்தாள். சில காலங்களுக்கு முன்னரேயே அவளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவன் படித்த வகுப்பிலேயே அவளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் முதன்முதலாய் அவனுக்குள் ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதிகாலை நேர வகுப்புக்களுக்கு அவள் செல்லும் போது நேரம் பார்த்திருந்து வீதியில் இறங்கி குட்மோர்ணிங் சொல்லி.. இப்படித்தான் ஆரம்பமானது.. ஆனாலும ஒவ்வொரு நாளும் இப்படிச் சந்திப்பதை அவள் தப்பாக விளங்கிக்கொள்ள மாட்டாளா என்று கவலைப்பட்ட போது தான் அவள் ஒரு நாள் கேட்டாள்..

'சாரகன்.. காலையில க்ளாசுக்கு போறதுக்கு வீட்டில பயப்பிர்றாங்க.. ஒவ்வொரு நாளும் என் கூட வரமுடியுமா..." சாரகனின் நெஞ்சுக்கூண்டுக்குள் குரங்கொன்று ஜம் என்று வந்து உட்கார்ந்து கொண்டது அப்போது தான்.

வகுப்பை வந்தடையும் வேளைகளில் கூடி நின்று நண்பர் கூட்டம் கேலி பண்ணும். நிரோஷா எரிச்சலடைவாள்.

'அவங்கள் அப்படித்தான்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க.." சாரகனின் உதடுகள் உச்சரித்த போதும் மனது நண்பர்களை மானசீகமாய் வாழ்த்தும்.

'சாரகன் உங்க நம்பர் என்ன..?" ஒரு முறை கேட்ட போது சொன்னான்.

'வாவ்.. எனக்கு ரொம்பப்பிடிச்ச நம்பர்" என்றவள் கண்களை அகலவிரித்துச் சொன்ன போது நெஞ்சுக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்ட குரங்கு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தது.

'நியூமராலஜியில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..?" தொடர்ந்து கேட்டாள்.

'ம்.. நிறைய.."

தொடந்தும் குரங்கின் சேட்டைகள் தொடர்ந்தன. இதனை தொடர வி;ட முடியாது என்ற நிலையில் முடிவு எப்படி இருக்கிறதோ, நினைத்ததை நிகழ்த்தி முடிப்பவன் என்ற அவனுக்குள்ளிருந்த இறுமாந்த நெஞ்சு ஒரு மாலைப்பொழுது அவளிடம் கேட்க வைத்தது.
* * *

'என்ன சாரகன்.. நானும் ஏதாவது காரணமா..?"

'இல்லை.. நீங்க காரணமில்லை.. நான் தான்.." சாரகன் அவசரமாய்ச் சொன்னான்.

நிரோஷா சிரித்தாள்..

'நான் நினைச்சுக் கூடப் பாக்கலை சாராகன்... ஓ.கே.. இப்ப என்ன..? நீங்க கேட்டது கூட நல்லது தான்.. இல்லைன்னா உங்களுக்குத்தான் பிறகு கஸ்ரமாயிருக்கும்.. "

சாரகன் நாக்கு வரண்டு உதடு உலர்ந்து போயிருப்பதாய் உணர்ந்தான்.

இந்த இழப்பு வாழ்வையே அடித்துப் போட்டு சின்னாபின்னமாக்கி விடாது என்று அவனுக்குத் தெரியும்.. இரண்டு வாரமோ மாதமோ பின் மனது வழமைக்குத் திரும்பக்கூடும். அப்புறம் இச்சம்பவம் எப்போதாவது ஞாபகிக்கையில் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அதுவரை ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கும். அது வழமைச் செயல்களைப் பாதிக்க விடக்கூடாது என்று சாரகன் நினைத்துக் கொண்டான்.

'என்ன சாரகன் பேசாமலிருக்கிறீங்க.. தொடர்ந்தும் நாங்க இப்பிடியே இருக்கலாம் என்று நான் நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்லுறீங்க.."

சாரகன் மீண்டும் மீண்டும் அமைதியாயிருந்தான்.

ஒரு தலைக் காதல் என்பது உண்மையில் காதல் இல்லை என்கிறார்கள் மனவியலாளர்கள். அது காதல் மீதான ஒரு ஏக்கம் தானாம். காதலோ ஏக்கமோ.. அவ்வளவு தானா.. இது தான் முடிவா..?

வேறு ஏதாவது வகையில் நிரோஷாவுடன் பேசி.. எப்பிடிப் பேசி.. நீங்க இல்லையென்றால் செத்திடுவன்.. வாழ்க்கையே இல்லாமல் போயிடும்.. இப்பிடி ஏதாவது.. அடி செருப்பாலை.. இவ்வளவு தானா நீ என்று இப்போது சாரகன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

'தெரியேல்லை.. நிரோஷா.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சு போறதென்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும். ஆனா அதுக்கு முதல் நான் சில விஷயங்களை மறக்க வேணும். என்னாலை முடியும்.. " என்று தொடர்ந்தவனை 'நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரிச் சொல்லுறிங்க.." என்று குறுக்கிட்டாள் நிரோஷா.. சாரகன் சின்னதாய்ச் சிரித்தான்.

'அதுக்குப்பிறகு நான் உங்களோடை கதைக்கிறன்.. அது வரை நன்றி வணக்கம்.." கை குவித்துச் சொன்னான்..

'கீப் இற் அப்.." என்றாள் நிரோஷா

'உங்கட வாழ்த்தைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உனக்கு உப்படித்தான் நடக்கும். அந்த ஒவ்வொரு முறையும் இப்பிடியே செய் எண்ட மாதிரியெல்லோ இருக்கு..அப்பிடியெதுவும் நடந்தால் உங்களுக்குத்தான் அடியிருக்கு.." இயல்பான உற்சாகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனாலும் வலிந்து வரவழைத்துச் சொன்னான்.

இப்போது நிரோஷா பலமாகச் சிரித்தாள்.

'இந்தச்சிரிப்புத்தானே...." என்றெழுந்த மனதை 'ச்சே.. சும்மாயிரு.." என்று சாரகன் அடக்கினான்.
* * *

அம்மாவிற்கும் என்னை அலைக்கழித்த பெண்களிற்கும் அர்ப்பணம்.. ராத்திரி நித்திரைக்குப் போகு முன் படித்த புத்தகத்திலிருந்த வசனம் சாரகனின் ஞாபகத்தில் காரணமின்றி வந்து போனது. கூடவே உதட்டோரம் ஒரு சிரிப்பும்.. அவன் புரண்டு படுத்தான்.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் அதிகாலை எழும்ப வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை. பத்து பதினொரு மணிவரை தூங்க முடிகிறது.

தொலைபேசி கிணுகிணுத்தது. அருகிலேயே அது இருந்த போதும் எழுந்து சென்று எடுக்கின்ற அலுப்பில் அவன் படுத்திருந்hன். அம்மா வந்து எடுத்து விட்டு உனக்குத்தான் என்று சொல்ல எரிச்சல் வந்தது. றிசீவரை வாங்கினான்..

'ஹலோ.."

'ஹலோ நான் அட்சயா கதைக்கிறன்.. "

சாரகனை விட நாலைந்து வயது இளைய அவள் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானாள். அவ்வப்போது போன் பண்ணி அவள் அடிக்கும் அரட்டை சில சமயம் எரிச்சலை வரவழைக்கும். சில சமயம் பொழுது போகச்செய்யும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசு படுத்திப் பேசுவதும் அடிக்கடி கோபிப்பதும் அவளுக்கு வழமையானவை. 'சின்ன வயது தானே.. அது தான் அப்படி.." என்று சாரகன் நினைத்துக் கொள்வான்..

'சொல்லு.. " தூங்கியெழுந்த சோர்வு அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

'என்ன நித்திரையை குழப்பிட்டேனா..?"

'குழப்பிட்டாய்.. இனி என்ன செய்ய முடியும்.. சொல்லு.."

'உங்கடை பிறந்த நம்பர் என்ன.."

உள்ளிருந்து ஓடிவந்த பதில் சாரகனின் தொண்டைக்குழிக்குள் சுதாகரித்து நின்று கொண்டது. ஏதேதோ சம்பவங்களெல்லாம் ஞாபகத்தில் வந்து போகத்தொடங்கின.

'ஏன்.. கேட்கிறாய்.."

'நியூமராலஜி புத்தகம் ஒண்டு கிடைச்சிருக்கு.. அது தான் பார்க்கிறதுக்கு கேட்டனான்... சொல்லுங்கோ.. என்ன நம்பர்.."

'இல்லை.. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கையில்லை.. " என்றான் சாரகன்.

'பரவாயில்லை.. எனக்குச் சொல்லுங்கோ.." அட்சயா விடாது கேட்டாள்..

'ஏய் முடியாதென்று சொல்லுறனெல்லே.. விடன்.." சாரகன் உண்மையிலேயே கோபப்பட்டான். அவள் சடாரென்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு அட்சயா கதைக்காது விடக்கூடும்.

நித்திரை முழுதும் முறிந்து விட அறையை விட்டு வெளியே வந்த போது எதிர் வீட்டிருக்கின்ற ராகுலன் பென்சிலும் கொப்பியுமாக எதிரில் வந்தான். இரண்டாவது வகுப்பில் படிக்கும் அவன் எப்போதாவது வந்து அண்ணா அம்மாவைப்பற்றி பத்து வசனம், உலகம் பற்றி பத்து வசனம் எழுதி;த் தாங்கோ என்பான். இன்றைக்கும் அது எதற்காகவோ தான் வந்திருக்க வேண்டும்.

'என்னடா.." என்று கேட்டான் சாரகன்.

'அண்ணா ரீச்சர் சொன்னவ பாரதியார் எழுதின பாட்டு ஏதாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லி.. சொல்லுறியளே.. எழுதுறன்.."

சாரகன் யோசிக்கத் தொடங்குமுன்னரே எதேச்சையாக அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன..

'நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி.." ராகுலன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

'முழுப்பாட்டும் என்னண்ணா.."

'கொஞ்சம் பொறு..எடுத்தாறன்" சாரகன் உள்ளே போனான்.
October 18, 2004

3 Comments:

Anonymous Anonymous said...

அட்ரா..அட்ரா.. அட்ரா..

12:29 AM  
Blogger மாசிலா said...

கதை அவ்வளவுதானா?

நான் இன்னும் ஏதோ பொடி வைத்து எழுதி இருப்பீங்க என நினைத்து இருந்தேன். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தமே. நல்ல முயற்சி. தொடருங்கள்.

உரைநடை நன்றாக உள்ளது.

12:44 PM  
Blogger சயந்தன் said...

//கதை அவ்வளவுதானா?//
மாசிலா.. அது கதையல்ல .....

12:01 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home