25.1.07

பழைய இரும்புக்கு பழம் வாங்கியிருக்கிறியளா?

கானா பிரபா மாம்பழங்கள் பற்றி எழுதிய போது நினைத்திருந்த பதிவு இது.
பின்னர் மலைநாடான் பாலைப் பழங்கள் (பால்ப் பழம் என்றால் யார் கேட்கப் போறாங்க..?) பற்றியெழுத அவரின் வழி சிநேகிதியும் அம்பிரலாங்காய் குறித்து எழுதியாயிற்று.

இது என் முறை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடித்தது போலவே எனக்கு நிறையப் பிடித்தது ஐஸ்பழங்கள். (தமிழ்நாட்டில் இதனை குச்சி ஐஸ் என்பர்). 50 சதம் விற்றுக் கொண்டிருந்த போது அறிமுகமானது இந்தப் பழம். மத்தியானத்துக்கும் பின்னேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் சைக்கிளில் மணியடித்துக் ஐஸ்பழக் காரர் வர ஆரேனும் 50 சதம் தரமாட்டினமோ எண்டு மனம் அலைபாயும். அந்த நேரம் கோன் கிறீம் 2 ரூபா வித்தது. எண்டாலும் அது எங்கையாவது கோயிலுக்குப் போனாத்தான் வாங்கித் தருவினம். மற்றும் படி வீடுகளில இருக்கிற நேரம் ஐஸ்பழம் தான்.

ஞாபகப்படுத்திப் பாத்தால் ஐஸ்பழம் சிவப்பு நிறத்திலையும், மஞ்சளும் ஒரேஞ்சும் கலந்த ஒரு நிறத்திலையும் தான் அதிகம் இருந்தது போல. நீல நிறத்திலையோ பச்சை நிறத்திலையோ அதை நான் பாத்ததில்லை.

ஐஸ் பழக்காரர் ஒரே பெட்டியிலயே ஐஸ்பழங்களையும், கிறீமையும் வைச்சிருந்து எடுப்பார். சில வேளை பெட்டியை ரண்டாப் பிரிச்சு வைச்சிருப்பார் எண்டு நினைக்கிறன். முன்னாலை கோன் பிஸ்கற்றை அடுக்கி வைத்திருப்பார். சில வசதியான ஐஸ்பழக்காரர் சைக்கிள் டைனமோவில பாட்டும் போட்டுக் கொண்டு வாறவை. ஆனா மணிச் சத்தம் தான் பிரசித்தம்.

எங்கடை அம்மம்மா கச்சான் விக்கிற படியாலை அதுக்கான பைகளை ஒட்டிக் குடுத்தால் 25 சதம் அல்லது 50 சதம் தருவா. அல்லது கச்சான் விற்கும் போதும் நேரை கோவிலுக்குப் போய் அம்மம்மாவை ஒரு அப்பாவிப் பார்வை பாத்துக் கொண்டு நிண்டா ஐஸ்பழம் வாங்கக் காசு தருவா.

இதெல்லாத்தையும் விட அந்த நேரம் ஒரு நடைமுறையிருந்தது. ஐஸ்பழக் காரரிடம் ஏதாவது பழைய இரும்பைக் குடுத்தால் அவர் ஐஸ்பழம் தர மாட்டார். ஆனா ஒரு தட்டையான பிஸ்கற்றில கொஞ்சக் கிறீம் போட்டுத் தருவார். இதனாலை எங்கடை வீட்டில இருந்த பழைய நெளிஞ்ச புட்டுப்பானை, வாளிக் கம்பி இதெல்லாம் அந்தரத்தக்கு எனக்குக் கை கொடுத்திருக்குது.

ஒரு முறை.. எங்கடை வீட்டுச் சாமியறைக்குள்ளை சாமிக்குத் தண்ணி வைக்கிறதுக்கெண்டு (ஒரு கமண்டலம் இருந்தது. கமண்டலம் அங்கை அப்ப அரிதான பொருளாம். (கமண்டலம் தானா சரியான பெயர் எனத் தெரியாது. அகத்தியர் வைச்சிருந்தாரே அது ) அந்தக் கமண்டலம் ஒரு நாள் வீட்டில இருந்து காணாமல் போனது. கடைசியில சரியான விசாரனைகளுக்குப் பிறகு அதை நான் தான் ஐஸ்பழக் காரருக்கு குடுத்தனான் எண்டதை ஒப்புக் கொள்ள வேண்டியதாப் போச்சு. எண்டாலும் வழமையா வெறும் பிஸ்கற்றில கிறீம் பூசித் தாற ஐஸ்பழக் காரர் கமண்டலத்துக்கு ஒரு முழு ஐஸ்பழமே தந்தார் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன்.

ஐஸ்பழங்களிலயும் நிறையச் சுவையள் இருக்கு. சிலது முடியும் வரை நாவுக்குச் சுவை தரும். சிலது ஒரே உறிஞ்சலில, நிறமும் போய், சுவையும் போய் வெறும் ஐஸ்கட்டியா குச்சியில ஒட்டிக் கிடக்கும்.

காலம் போகப் போக ஐஸ்பழ வாகனங்கள் ஊருக்குள்ளை வரத் தொடங்கின. சினிமாப் பாட்டுக்களைப் போட்டு விட்டு குழந்தைகள் இருப்பதாய் அவர்கள் அவதானிக்கிற வீடுகளில் நெடுநேரமாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். அவர்களிடம் அறிமுகமானது தான் ஐஸ் சொக்.
வெளியே சொக்லெற் பூசப்பட்ட, உள்ளே பாற் சுவையில் (ஐஸ் பழத்தைப் போலல்லாது கடைசி வரை நிண்டு நிலைக்கும் மாறாச் சுவை) நிறைய ருசியாக இருக்கும். அதுவும் கோன் கிறீமும் சமமான விலையில் விற்றன.

இரண்டு மூன்று பேர்களுடன் ஐஸ் பழம் வாங்கி அவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு அதன் பிறகு நான் குடிக்கத் தொடங்குவதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை கோவில் திருவிழா ஒண்டில் எனக்கு கோன் ஐஸ் கிரீம் ஒண்டு வாங்கித் தந்தினம். தனியக் கிறீமை மட்டும் சாப்பிட்டு விட்டன். கோன் பிஸ்கற் மட்டும் அப்பிடியே முழுசாக் கிடந்தது. மனசுக்குள்ளை ஒரு யோசினை. யாருமில்லாமல் நான் மட்டும் ஐஸ்பழ வாகனத்தை நோக்கிப் போனன். அங்கை ஆக்கள் எல்லாம் வாங்கி முடியட்டும் எண்டு காத்திருந்தன். ஒரு மாதிரி ஒரு இடை வெளி கிடைச்சுது. ஒரு தயக்கமாவும் கிடக்குது. பரவாயில்லை எண்டு நேரை போய் அண்ணாந்து வாகனத்துக்குள்ளை இருந்தவரைப் பாத்து வெறும் பிஸ்கற் கோனை நீட்டிக் கேட்டன்

இதுக்கை கொஞ்சம் கிறீம் போடுவியளே..?

அவருக்கு ஒரே சிரிப்பு. இங்கை என்ன சபையோ வைக்கிறம்.. ( சாப்பாட்டுப் பந்தி ) கறி முடிஞ்சால் போடுறதுக்கு..

நான் கொஞ்ச நேரம் அப்பிடியே நிண்டன். பிறகு வந்திட்டன். என்ர கஸ்ர காலம் பரன் எண்டொரு அண்ணை அதை கண்டு வீட்டை சொல்ல.. எல்லாற்றை மானத்தையும் நான் காத்தில பறக்க விடுறதா ... பிறகென்ன வழமையான பூசை தான்.
கிராமத்தின் பாடசாலையை விட்டு நகரப் பாடசாலைக்கு பெயர்ந்த காலங்களில்த்தான் எனக்கு கூல்பார்களும் கப்பில் போட்டுச் சாப்பிடும் ஐஸ்கிறீம்களும் அறிமுகமாயின. அப்போது கூட நோர்மல் ஸ்பெசல் என்ற இரண்டு வகைதான் பாவனையிலிருந்தது. சொன்னா நம்ப மாட்டியள்.. 6 ம் ஆண்டு நகரப் பாடசாலைக்கு வந்த பிறகு முதலாம் தவணைச் சோதினையில 7ம் பிள்ளையா வந்த எனக்கு அடுத்த முறை 3ம் பிள்ளைக்குள்ளை வந்தால் ஒரு ஸ்பெசல் ஐஸ்கிரீம் வாங்கித் தரப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. என்னால் நிறைவேற்ற முடியேல்லை எண்டாலும் ஐஸ்கிரீம் கிடைச்சது.

அதுவே அடுத்த ஐந்தாறு வருடங்களில் 20ம் 25 ம் பிள்ளையாக வந்த போது எனக்கு எதுவும் வாங்கித் தருவதாய் எவரும் சொல்ல வில்லை. அந்த நேரங்களில ஆசைப் பட்டதை வாங்கித் தரவும் முடியாது தானே.

9 Comments:

Blogger கானா பிரபா said...

ஆரம்பிச்சுட்டாருய்யா ;-)) (வடிவேலு பாணியில்)

3:12 PM  
Anonymous Anonymous said...

பழங்கள் பற்றி தொடராய் வந்து கொண்டிருக்கிற நேரத்திலை வந்த இந்த ஜஸ் பழ பதிவும் உண்மையாய் நல்லாதான் இருக்கு...கையோடை கையாய்.யாரும்..சைவபழத்தை பற்றியும் பதிவு போட்டியள் என்றால் திறமாய் இருக்கும்

3:16 PM  
Blogger சினேகிதி said...

சைவப்பழமா?? அப்பிடியெண்டால் என்ன? உண்மைய அப்பிடி ஒரு பழம் இருக்கா?

கமண்டலத்தைக் குடுத்து ஐஸ்கிறீமா?? நல்ல பழக்கம்.அப+ர்வ பொருட்களையெல்லாம் இப்பிடியா துலைக்கிறது. 2 ருபாக்கெல்லாம் ஐஸ்கிறீமா?? குடுத்து வச்சனீங்கள்.எனக்குத் தெரிஞ்சு ஐஸ் பழம் 5 ரூபா கோண் ஐஸ் கிறீமும் ஐஸ்சொக் ம் 10 ரூபா.

எனக்கு இன்னொருக்கா ஐஸ்கிறீம் வாங்கோணும் போல இருந்தா ஐஸ்கிறீம் வான்காரரிட்ட போய் என்ர கிறீமை நிலத்தில விழுத்திட்டன் என்று சொல்லி இன்னொருக்கா வாங்கியிருப்பன் :-) அந்த நிலை வரேல்ல..நிறைய சொந்தக்காரர் எனக்கு எல்லாரும் திருவிழாவுக்குக் காசு தருவினம் ஒருநாள் தேர்த்திருவிழா இன்று 10 ஐஸ்கிறீம் குடிச்சிருக்கிறன்.பிறகு பின்னேரம் பூங்காவனத்திருவிழாவில வில்லுப்பாட்டுச் செய்யவேணும் எப்பிடிக் கதைச்சிருப்பன் என்று யோசிச்சுப் பாருங்கோ.அதை மட்டும் சிறீதேவியோ சின்னமணியோ பார்த்து இருக்க வேணும் நான் செத்தன்.

3:44 PM  
Blogger சினேகிதி said...

thalaipukum pathivuku ena sambantham?? kamandalam palaya irumpa??? ungada amma blog vasika mada enna?

3:45 PM  
Blogger மலைநாடான் said...

கலக்கல் அப்பு!:))

சயந்தன் உண்மையிலேயே சின்னப்பாராய நினைவுகளைத் தட்டித்தழுவியது.

//கையோடை கையாய்.யாரும்..சைவபழத்தை பற்றியும் பதிவு போட்டியள் என்றால் திறமாய் இருக்கும் //


சின்னக்குட்டியார் சொல்லி, செய்யாமல் விடிறதோ ?:))

5:17 PM  
Anonymous Anonymous said...

அப்பளம் பற்றியும் எழுதலாமோ..? இது உணவோடு சாப்பிடும் அப் பளம் அல்ல. மிட்டாசு விற்பவர் கலர் கலராக கொண்டு வருவாரே.. அந்தப்பளம்.

3:10 AM  
Anonymous Anonymous said...

##இதுக்கை கொஞ்சம் கிறீம் போடுவியளே..?##
LOL

படம் நல்லூருக்கு பின்னால உள்ள றியோ மாதிரிக்கிடக்கு.
ஊருக்குப் போகேக்கை எடுத்தியளோ?

3:59 AM  
Anonymous Anonymous said...

சயந்தன் !
இதுகும் நல்ல "பழப்" பதிவுதான் அதுவும்; எந்தக் காலத்திலும் கிடைக்கும் பழமெல்லவா??தட்டுப்பாடே இல்லாப் பழம். எங்கள் ஐஸ்ப்பழம்....
மேலும் பதிவு;பின்னூட்டங்களைக் கொண்டு நீங்கள் எல்லோரும் இளையவர்கள்;காரணம் 50 சதத்துக்கு ஐஸ்ப்பழம் சாப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால் நான் 5 சதத்துக்குச் சாப்பிட்டவன். அப்போதும் அந்த 5 சதத்தை வீட்டில் அதட்டிப் போட்டே
தந்தார்கள். "இது தான் கடைசித் தடவை" -ஊருக்கு அப்பா வந்தால்; நிற்கும் நாள் கொண்டாட்டமே!!
அப்போது பிஸ்கட்டில் பூசித்தரும் கிறீம் 10 சதம் ; கோன் ;ஐஸ்சொக் 15 சதம்.
கோன்;சொக் சாப்பிடுவதென்பது அபூர்வம்...வருசத்தில் ஒன்றோ! இரண்டுதரம் தான் ; கட்டாயம் கோவில் தேர்த்திருவிழாவுக்கு உண்டு.
அப்போ பாடசாலை வாசலில் விற்றவர்;ஒன்று 5 சதமானாலும் 10 சதத்துக்கு 3 தருவார்- இது ஓர் வகையான புறமோசன் சற்று அளவில் சிறியது போல் இருக்கும்(அப்படி ஒரு சந்தேகமோ தெரியவில்லை). அப்போ நாங்கள் கூட்டாளிகள் 2 பேர் 5 சதம் போட்டு
3 பேர் சாப்பிடுவோம். இப்படிப் ஆளுக்குப் 10 சதத்துடன் 3 நாள் சாப்பிடுவோம்.
அப்போதும் சைக்கிளில் 4 வாளியிருக்கும்; 2 ஐஸ்பழம் ;1 சொக்,1 கிறீம் அழைப்புக்கு மணி அல்லது பீப்பீப் என்ற குழல் தான் ;பின்பு சுபாஸ்,பீளவுஸ்;ராஜா கிறீம் கவுஸ்; றியோ...இப்படிப் பல வான்களும் உலாவியது.
அன்றைய காலங்களில் ஐஸ்பழம் சாப்பிட்டால் இளம் பிள்ளை வாதம் வருமென ; பள்ளிக் கூடத்தில கூட வெள்ளிக்கிழமை- "நமச்சிவாய வாழ்க -நாதன் தாள் வாழ்க "வின் பின் தலைமை வாத்தியார்
கூறுவார். மனக் கண்ணில் காலை இழுத்து நடக்கும் தெரிந்தவர்கள் வந்து போவார்கள்.
எனினும் ;மணி அடித்த சத்தம் கேட்டதும் "அம்மா முன் அண்ணாந்து" நின்றதை மறக்கமுடியாது.
அவர் சேலைத் தலைப்பு முடிச்சவிழ்த்துக் காசு தந்தது; கண்ணுக்குள் நிற்கிறது.
பிற்காலத்தில் "சுபாஸ் கூல் பார்"...ஐஸ்கீறீம்...சாந்தி கூல் கவுஸ்;ராஜா கிறீம் கவுஸ்..." போன்றவற்றில்
ஐஸ்கிறீம் உண்பது ஒரு நாகரீகம் போல் பரவியது; அவர்கள் ஒதுக்கான இடங்கள் ;மங்கலான வெளிச்சத்தில் குடும்பத்திற்கென ஒதுக்கியதும்; காதலர்கள் அதைப் பயன் படுத்தியதும்; தெரியும்.
அப்போ காதலியைப் படத்துக்குக் கூட்டிச் செல்வது; ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுப்பது சடங்கு போல்
இளசுகள்..கொப்பற்ற காசில் செய்வார்கள். சில பொடியள் பொடிச்சிகளையே பேர்சைத் திறக்க வைக்கும்
கலையில் மன்னர்களாக இருந்தார்கள்.
இப்படி இந்த "ஐஸ் பழ மகாத்மியம்" சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இப்போ டாக்டர் இதெல்லாம் வேண்டாமென்று விட்டார். பழசை நினைக்கத் தடையில்லைத் தானே!
யோகன் பாரிஸ்

6:31 AM  
Blogger சயந்தன் said...

கானா பிரபா.. நாங்க எப்ப வருவோம் எப்பிடி வருவோம்ணு யாருக்கும் தெரியா... ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வரமாட்டம்..
(இதை யார் பாணியில் என சொல்லத் தேவையில்லை)

சின்னக் குட்டி பழங்கள் பற்றி மட்டுமல்ல.. சேலைகள் பற்றியும் தொடராய் எழுதலாம்.

1:53 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home