13.1.07

அலை மீதேறிக் கரை தேடி 1

1997 மே 13 மதியம்

மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நாளைய இந்த நேரத்தில் ஏதாவது ஒரு அகதிகள் முகாமில் என் பெயரைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

அல்லது ?

நாச்சிக்குடா கடலில் இருந்து தமிழகம் புறப்பட்ட ஒரு றோலர் படகு கரைக்கு வெகு சமீபமாகக் கவிழ்ந்ததில் 150 பேர் செத்துப் போய் சில காலங்கள் தான் ஆகியிருந்தது.

ம்.. ஒரு மூன்று மாத காலம் ஆகியிருக்கும்.

முல்லைத் தீவின் தேவிபுரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயையும் இரு பிள்ளைகளையும் வெறும் உடலமாக கொண்டு வந்து இறக்கினார்கள். செத்துக் கிடந்த மூத்தவன் வீதிகளில் கண்டால் சிரிப்பான். பேசிப் பழக்கமில்லை. ஆனால் அவர்கள் மூன்று பிள்ளைகள் என்று தெரியும்.

அன்றைய இரவே இன்னொரு பிள்ளையையும் பிணமாக கொண்டு வந்து இறக்கினார்கள்.

அந்தக் குடும்பத்தில் அந்தப் பொழுதில் அவர்களுக்காக அழுவதற்காக யாருமிருக்கவில்லை.

இதோ என்னையும் இந்தக் கடலுக்கு துரத்தி விட்டிருக்கிறது காலம். முல்லைத் தீவில் புறப்பட்டு வன்னியை குறுக்காக கடந்து முழங்காவிலுக்கு வந்த இரண்டு வாரங்களில் இலுப்பைக் கடவைக்கு இரண்டு மூன்று தடவை வந்து விட்டேன். அத்தனை தடவையும் புறப்படும் படகுகளில், ஏதாவதொரு காரணத்தினால் எனது பயணம் தள்ளித் தள்ளிப் போனது.

95 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கித் தொடங்கிய ஓட்டம் கொடிகாமம், எழுதுமட்டுவாள், முல்லைத்தீவு, முழங்காவில் என நீண்டு இன்று இலுப்பைக் கடவையில் வந்து நிற்கிறது, அடுத்த சுற்றுக்கு தயாராக.

இலுப்பைக் கடவையென்ற அந்த நிலத்தில் என்னால் இலகுவாக கரைய முடியவில்லை. எழுதுமட்டுவாள் ஆகட்டும், முல்லைத்தீவு ஆகட்டும் இயல்பாக, இலகுவாக அந்தச் சூழ்நிலைக்குள் என்னைக் கரைத்துக் கொள்ள முடிந்தது. இலுப்பைக் கடவையிடம் நான் தோற்றுத்தான் போனேன்.

கரையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மருத்துவ முகாம் நடாத்திக் கொண்டிருந்தனர். வேறு மருத்துவ வசதிகள் அங்கு கிடையாது. ஏதாவது பாரதூரமான நோய்கள் எனில் அவர்களூடாக மன்னார் மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.

எனக்குள் நிறைய எண்ண அலைகள்

கிளாலிப் பயணம் போலவே இதுவும் இருக்குமா?

கிளாலியில் கடந்தது, யாழ்ப்பாணத்தையும் வன்னி பெரு நிலப்பரப்பையும் இணக்கும் கடல் நீரேரி. நிலங்களுக்கிடையில் உள் நுழைந்த கடல்.

இங்கே கடக்கப் போவது இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கும் பாக்கு நீரிணை.

வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். பயணத்தில் நேவி கவிழ்ப்பானோ.. அலைகள் கவிழ்க்குமோ.?

கரையைப் பார்த்தால் அவ்வளவு அலைகள் இருக்காது போலத்தான் தெரிந்தது. முல்லைத்தீவில், மணற்காட்டில் சீறி உயர்ந்தெழுந்து கரை வரும் வங்க அலைகளுடன் ஒப்பிடுகையில் இந்தக் கடல் அமைதியின் சொரூபம். இருப்பினும் இடையில் கிளம்பலாம். எவர் கண்டார்?

மணற்காட்டில் ஒரு முறை கரையில் வந்து சுழற்சியை முடித்துச் செல்லும் அலையொன்றின் இடையில் சிக்கி என்னை முழுவதுமாய் தண்ணீர் மூடி உள்ளே வைத்துச் சுழற்ற, என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில், செத்துப் போகும் கணம் இதுதானாக்கும் என நினைத்தேன். பாவம் பிழைத்துப் போகட்டும் என அலை விட்டுப்போன இடத்தில் திக்கித் திக்கி திணறிக் குழறியது ஞாபகத்தில் வந்தது.

பயணத்தின் போது அரைக் காற்சட்டையும், உடலோடு ஒட்டிய ரி சேட்டும் போட வேண்டும். சப்பாத்தோ செருப்போ அணிவதில்லை என முன்பே நினைத்திருந்தேன்.

கடலில் நீந்தியிருக்கிறேன். நீச்சல் பழகியதே திருவடிநிலைக் கடலில்த் தான். ஆனால் இலக்குத தெரியாத நிலையில், எங்கு போகிறோம், எங்கு நிற்கிறோம் என்று தெரியாத சூழ்நிலையில், என்னால் நீந்த முடியும் என்ற எண்ணம் துளியும் எனக்கு இல்லை.

ஆயினும் ஐந்து பத்து நிமிடங்களாவது சாவைத் தள்ளிப் போடும் ஆசை அது. யாருக்குத் தெரியும், யாராவது மீனவர்கள் காப்பாற்றக் கூடும். அல்லது நேவியே பிடித்து சுட்டுக் கொல்வதற்கான மனநிலை இல்லா விட்டால் மன்னார் நீதி மன்றத்தில் நிறுத்தலாம். அதுவரைக்குமாவது நீந்தலாமே

இத்தனை கடந்து இது தேவைதானா? இந்தப் பயணத்தைத் தவிர்த்திருக்கலாமோ?
அலையும்

7 Comments:

Blogger பகீ said...

பாகம் இரண்டு எப்ப???

ஊரோடி பகீ

1:52 AM  
Anonymous Anonymous said...

ஆர்வம் எழுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

9:41 AM  
Anonymous Anonymous said...

//95 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கித் தொடங்கிய ஓட்டம் கொடிகாமம், எழுதுமட்டுவாள், முல்லைத்தீவு, முழங்காவில் என நீண்டு இன்று இலுப்பைக் கடவையில் வந்து நிற்கிறது, அடுத்த சுற்றுக்கு தயாராக.//

இது ஈழத்தமிழர் எவருக்கும் பொருந்தும்

1:19 PM  
Anonymous Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள். தொடரவும்

5:44 AM  
Anonymous Anonymous said...

எப்போ அடுத்தது..?

4:48 PM  
Blogger செல்லி said...

//95 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கித் தொடங்கிய ஓட்டம்//
இப்ப்டிப் போக ஊரிலுள்ளோர், பெடியள் எல்லாருங் கேட்டும் என் தாயார் போகாமல் தனியே ஊரில் மிகவும் ஒருவேளை சாப்பாடு கூட இன்றி மிகவும் கஷ்ரப் பட்டார்.மற்றவர்கள் கூப்பிடேக்கை தானும் கூடப் போயிருந்திருக்கலாம் என்றும் கவலைப் பட்டாராம்.பின்னர் அவர்கள் பட்ட அளவிலா இன்னல்களை அறிந்து, கவலைப் பட்டுச் சொன்னாராம்" சமுத்திரத்தில இருக்கும் நாய்க்கு எங்கு போனாலும் நக்குத் தண்ணிதான்" என்று. அதன் பின் என் அன்னை காலமாகிவிட்டார்.
இந்தப் பதிவு என் அன்னை பட்ட நினைக்க வைத்தது. இப்படி எத்தனைபேர் இன்னற் பட்டிருப்பர்.
இந்தப் ப

5:51 PM  
Blogger செல்லி said...

சயந்தனுக்கு,
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி

11:45 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home