10.1.07

கவிதையில் களவு

சமீபத்தில்.. உண்மையாகவே சமீபத்தில் தான் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் சோமிதரனுடன் பேசிக்கொண்டிருந்த போது கொழும்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றினை எடிற் செய்து வெளியிட்ட முன்னைய சம்பவம் ஒன்று தொடர்பாக தனது காரசாரமான கண்டனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். (.. மச்சான் எடிற் செய்தனோ.. இல்லை என்ன செய்தனோ.. இண்டைக்கு ஆனந்த விகடனில உம்மடை எழுத்துக்கு அவங்கள் செய்திருக்கிறதை விட மோசமாய் நான் ஒன்றும் செய்யவில்லை.)

1990ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் நினைவு கூரப்பட்ட இரண்டாவது மாவீரர் தினம்.
யாழ்ப்பாண பகுதியெங்கும் முன்னெப்போதும் பின்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வார காலம் அனுஸ்டிக்கப்பட்டது. 27 நவம்பர் 90 இறுதி நாளன்று எங்கள் ஊரிலும் ஒரு மேடை நிகழ்வு ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.

அதில் நானாக ? எழுதி கவிதை வாசிக்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நினைவில் உள்ள வரை இதுதான் நான் எழுதி வெளிக் கொண்டு வந்த முதலாவது கவிதை.

குரலிலும் உடம்பிலும் கொஞ்சம் நடுக்கத்தோடு வேட்டி கட்டி இரண்டு கைகளாலும் ஒலிவாங்கியை அழுத்திப் பிடித்து அந்த நீண்ட கவிதையை வாசித்துக் கொண்டிருந்த போது எனது வயது 10.

மாவீரர் தினம் வந்ததுவே மாவீரர் தினம் வந்ததுவே என ஆரம்பித்து சாவிலும் தம்மை சந்தனமாக்கினர் என்றவாறாக தொடர்ந்தது அக்கவிதை.

அப்போதே எனக்கு எதுமை மோனை பற்றிய புரிதல் இருந்தது. சொல்லப் போனால் எதுகை மோனையுடன் ஒரு ஓசைச் சந்தத்தில் எழுதினாலே அது கவிதைதான் என்ற நினைப்பும் இருந்தது. அது நிறைய நாளாக இருந்தது.

மாவீரர் தின கவிதை கூட முடிந்தளவு எதுகை மோனைச் சந்தத்துடன் தான் இருந்தது.

கவிதையை முடித்து வெளியேறிய அடுத்த நாள் எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். அவர் அப்போது முரசொலி பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

-நல்ல கவிதை. தாருமன் பேப்பரில போடுவம்- என்று அவர் கேட்டார்.

ஏதாவது ஒரு ஆக்கத்துடன் எனது பெயரும் அச்சில் வரவேண்டும் என்ற தணியாத தாகம் இருந்த அந்தக் காலத்திலும் அவரது கோரிக்கைக்கு என்னால் இணங்க முடியவில்லை.

-வேண்டாம் அங்கிள். -

-ஏன்.. இது நல்லதொரு கவிதை.. தாரும்.. நான் கட்டாயம் போட்டு விடுறன்..-

-இல்லை அங்கிள்.. நான் சின்னப் பெடியன்.. போடுவினமோ தெரியாது..- உண்மையில் அந்த வாய்ப்பை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அதற்கெல்லாம் முயன்றேன். -அங்கிள் மாவீரர் பற்றின இந்த நினைவுகள் என்ர ஆத்ம திருப்திக்காக எழுதினது. இதை அச்சில ஏற்றி பிரபல்யம் தேட வேணும் எண்டு நான் நினைக்கவில்லை- என்று சொல்லியாவது சமாளிப்பதற்குரிய ஆக்குறைந்த வளர்ச்சி கூட அப்போது என்னிடம் இல்லை.

அவரோ விட்ட பாடில்லை.அவர் அப்போது முரசொலியில் முக்கிய பதவியொன்றில் இருந்தார்.

வேறு வழியில்லாமல் அழுத்தங்கள் காரணமாக எனது கவிதையை முரசொலியில் பிரசுரிக்க கையளித்தேன். அது மேடை வாசிப்புக்காக எழுதப்பட்டதால் நீண்டதாக இருந்தது. பத்திரிக்கையில் வெளியிடுவதற்காக எடிற் செய்ய வேண்டியிருப்பதாகவும் அதனை என்னை வைத்துக் கொண்டே செய்தால் இலகுவாயிருக்கும் என்றும் அவர் கூறி அப்போதே அந்த வேலையை ஆரம்பித்தார்.

-இந்த வரி நல்லாயிருக்கு.. இந்தப் பந்தி பெரிசா நல்லாயில்லை.. ம்.. இது சுப்பர்.. -இப்படியாக முழுக்கவிதையும் எடிற் செய்யப்பட்ட பிறகு உண்மையிலேயே அது ஒரு ரசனைக்கு உரிய ஆக்கமாக மாறியிருந்தது.

-உம்மடை பெயரை அச்சில கொண்டு வாற முதல் ஆள் நான்- தான் என்ற புளகாங்கிதத்துடன் அவர் புறப்பட்டார்.

மூன்று நாட்கள் ஆகிய நிலையில் நானும் ஒரு நப்பாசையில் வாசிக சாலையில் முரசொலியைப் பார்ப்பதுண்டு.

அதே வாசிக சாலையில் அவரை அடுத்தடுத்த ஒரு நாளில் பார்த்தேன். ஒரு புழுவைப் பார்ப்பது போல அவர் என்னைப்பார்த்தார்.

-என்னடா.. இப்பிடி என்ரை மானத்தை வாங்கிப் போட்டாய்..? நீ தந்தது புதுவை இரத்தின துரையின்ர கவிதையாம். அதை கொண்டு போய்க் குடுத்த என்ர மானம் காத்தில போட்டுது. நீ சொல்லியிருக்கலாம் தானே.-

அவர் ஒரு வித விரக்தியில் அதிகம் பேசவில்லை. அவர் அவமானப் பட்டது அவரது பேச்சில் தெரிந்தது.

உண்மைதான். அந்தக் கவிதையில் ஐம்பதுக்கு மேற்பட்ட வீதம் கவிஞர் புதவை இரத்தின துரையின் வரிகள்தான். அதிலும் சிக்கல் என்ன என்றால் முரசொலிக்காரர் எடிற் செய்யும் போது எனது வரிகளைச் சரியில்லை என்ற காரணத்தால் தூக்கி விட்டதால் அந்தக் கவிதை முழுக்க முழுக்க புதுவையின் வரிகளாகிப் போனது.

ஆனாலும்.. .இதில நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நாம் மறைமுகமாக சாத்தியமான எல்லா வழிகளிலும் எமது மறுப்பைத் தெரிவித்திருந்த போதும் ....

நான் அதற்குப் பின்னரும் கவிதை எழுதினேன்..
இப்போது எழுதுவதில்லை.

5 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

"சமீபத்தில்.. உண்மையாகவே சமீபத்தில்தான்" இந்த மாதிரி டிஸ்கி போடும் அளவுக்கு அந்த பெரிசு எல்லோரையும் டரியல் ஆக்கிவிட்டது என்று எல்லோரும் பல்லைக் கடிப்பதற்கு முன்னால் நான் கமெண்ட் போட்டு விடுகிறேன்.
:)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

12:57 AM  
Blogger சயந்தன் said...

மீண்டும் ஒரு புது வீட்டுச் சோதனை..

1:31 PM  
Blogger மலைநாடான் said...

புதுவைக்கே இந்தக்க கதியெண்டா..சோமி என்ன சுண்டைக்காய் :)

1:43 PM  
Anonymous Anonymous said...

ஹாய்! சயந்தன்,

ஜீன்ஸ் பட பாடலை உனது கவிதையாய் சொன்னதயும் எழுது.

Kanex (Bamba hindu 99 maths)
eextg@nottingham.ac.uk.

4:11 PM  
Blogger சயந்தன் said...

kanex புளொக்கர் மூலமாக தொடர்பு கிடைச்சிருக்கு. புளொக்க(அவ)ருக்கு நன்றி. பரவாயில்லையே.. 9 வருசத்துக்குப் பிறகும் அன்பே அன்பே கொல்லாதே பாடலை நான் எழுதிய விசயத்தை நினைவு வைத்துள்ளமை கண்டு மெய் சிலிர்க்குது.. எழுதிடுவோம்..

9:44 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home