4.10.06

என் முதல்ப் பதிவு

நினைவுகள் மீட்டல் எவ்வளவு சுகமானது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் செப்ரம்பர் 2004 செப்ரெம்பர் 22 ஒஸ்ரேலியாவிலிருந்து வலையுலகில் எனது முதல் பதிவை இட்டேன். யாழ் நெற் தந்த வசதியூடாக உனது முதலாவது வலைப்பதிவு வலையேறியது.

ம்.. காலம் தான் எவ்வளவு வேகமாயோடுகிறது..

அந்தப் பழைய பதிவுகளை இப்போதும் படித்துப் பார்க்கின்றேன். ஒஸ்ரேலியாவில் ஆரம்பத்திலிருந்த தனிமை தான் உடனடி நினைவில் வருகிறது.

இதுதான் எனது முதற்பதிவு . பாரி மூக்கன் ஸ்ரேயா மதி சந்திரவதனா ஆகியோர் பின்னூட்டமிட்டிருந்தனர்.. அப்போதைய பதிவுகளை படித்து பார்த்தால்.. தினமும் ஒரு பதிவு என்ற கணக்கில் இருக்கிறது.. ம்.. அது ஒரு காலம்.. இனி அந்த பழைய முதல் பதிவு

வணக்கம்
வலைப்பூக்களை பற்றி சாடை மாடையாக நான் கேள்விப்படத்தொடங்கியது கடந்த வருட இறுதியில்த்தான். அப்போது கொழும்பில் இருந்தேன். என்னுடைய நண்பன் மயூரன்தான் அறிமுகப்படுத்தினான். ஆயினும் சரியான தெளிவு அப்போது கிடைக்கப்பெறவில்லை அல்லது நான் பெரிய அளவில் ஆர்வமுற்றிருக்கவில்லை.

இத்தனைக்கும் இணைய வலைப்பக்கங்கள் பலவற்றினுடும் எனக்கு பரிச்சயம் இருந்தது. 2000 ஆயிரம் ஆண்டிலிருந்து விதம் விதமாக இணையப் பக்கங்கள் தயாரிப்பதும் அவற்றை இலவசமாக பதிவேற்றுவதும் தான் என்னுடைய பொழுது போக்கு.

உங்களில் சிலர் நன்கு அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்ற எழுநா என்னும் இணையத்தளத்தின் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கின்றேன் என்றாலும் கூட வலைப்பூ ஒன்றினை நான் ஆரம்பிக்க 1 வருடம் எடுத்தது என்பது எனது ஆர்வமின்மையாகத்தான் இருக்கும். (எழுநாவின் ஆயுட்காலம் வெறும் ஆறு மாதங்களுக்கு உட்பட்டது தான். ஆயினும் அக்காலம் எனக்கு சுவாரசியமான காலம். பல நண்பர்களை பெற்றுத்தந்த காலம். அது பற்றி பின்னர் கதைக்கலாம் என்றிருக்கிறேன்.)

அதன் பின்னர் அவுஸ்ரேலியா வந்த பின்னர் தான் வலைப்பூக்களை அதிகம் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரே ஆர்வமும் வந்தது. ஆயினும் ஆரம்பத்தில் எனது வலைப்பூவினை யார் படிப்பார்கள் என்ற சந்தேகமும் அதனை எப்படி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற கேள்வியும் இருந்தது.

எனினும் கடந்த சில வாரங்களாக காசியின் தமிழ்மணம் பற்றியே எங்கும் பேச்சு. அதற்குப் பின்னர் என் சந்தேகம் போச்சு..

இந்த வலைப்பூ பெயர் கூட எப்போதோ இருக்கட்டும் என்பதற்காக பதிந்து வைத்தது தான். நுழைவுச்சொல் கடவுச்சொல் எல்லாம் மறந்து விட்ட நிலையில் நான் அதிகம் பாவிக்கின்ற ஒரு நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் உள்ளிட்டுப் பார்த்தேன். அட அதிஷ்டம் அப்போது என் பக்கம் இருந்தது. இப்பொழுது கூட இந்த வலைப்பூவின் தலைச்சொல்லை தமிழில் மாற்றவும் இதன் பின்னணி நிறங்களை மாற்றவும் விரும்புகின்றேன். எவராவது எனக்கு உதவுவதாயிருந்தால் அவர்களுக்கு இப்போதே எனது நன்றிகள். படி நிலை படிகளாக சொல்லித்தாருங்கள். முயற்சித்து கண்டு பிடிக்க பஞ்சியாக இருக்கிறது.

வேறென்ன.. வலைப்பூ வட்டத்தில் அதிகம் எனது தந்தை நாடாம் இந்திய நண்பர்களின் வருகையை அவதானிக்கிறேன். அவர்களும் சற்றே வளர்ந்த இந்த முரட்டு சகோதரனாம் ஈழத்தமிழனின் வாசல் வரவேண்டும்.

இங்கே இதனைத்தான் எழுதப்போகின்றேன் என்ற எந்த வரையறையையும் நான் ஏற்படுத்திக் கொள்ள போவதில்லை. அது என்னோடிணைந்த நகைச்சுவையாகவும் இருக்கலாம் அல்லது அரசியலாக இருக்கலாம்.

அப்புறம் எனக்கு வலைப்பூவை அறிமுகப்படுத்திய மயூரனுக்கு நன்றி. அவன் ஆரம்பித்த ம்.. என்னும் வலைப்பூவினை இடைநடுவில் கைவிட்டு விட்டானா என்று தெரியவில்லை என்பது கூடுதல் தகவல்.

1 Comments:

Blogger இளங்கோ-டிசே said...

பழைய பதிவுகளை நீர் போட்டுத்தாக்கும் விதத்தைப் பார்த்தால் இன்னும் நீர் கூண்டுக்கிளியாய் 'யன்னலின் வழியே' மட்டுந்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றீர் போல இருக்குது.. எப்போது கூண்டை உடைத்து வெளியே வருவதாய் உத்தேசம் அண்ணை ;-) ?

6:35 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home