3.2.07

தலைப்பெதுவும் கிடையாது

பள்ளியின் பின்புறமாக எல்லோருடைய சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவளதும் அவனதும் சைக்கிள்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது தான் அவள் அறிமுகமானாள்.

வித்தியாசமாக தெரிந்தாள்.

இப்பொழுதெல்லாம் வேண்டுமென்றே அவனது சைக்கிள் அவளினது சைக்கிளின் அருகே நிறுத்தப்படுகிறது.

இயல்பாகவே விழிகள் அவளை தேடத்தொடங்குகின்றன.

தினமும் பார்த்து விடத் துடித்தான்.

மற்றவர்களிடத்தினின்று தன்னை வித்தியாசப்படுத்த, தனித்துவமாய் திகழ திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.

ரியூசனிலும் அவள் இணைந்து கொண்டாள்.

பின்தொடர்தல்கள் தொடர்கின்றன.

மனசுக்குள் பூப்பூக்கத்தொடங்குகின்றது.

அவள் எப்போதும் அவனையே பார்ப்பதாய் எண்ணங்கள்.

நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஒரு சில வேளைகளில் அதுவே உண்மையாயும் இருந்தது.

காதலிக்க தொடங்குகின்றான்.

எதிர்காலம், தொழில், திருமணம் என்பன குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், என்னையும் அவள் காதலித்தாக வேண்டும் என்ற ஒரே இலக்கில்

காதலிக்க தொடங்குகின்றான்.

காய்கள் நகர்கின்றன.

அடுத்த நாளினை அவளோடு எப்படி ஆரம்பிப்பது என்ற திட்டமிடலிலேயே இரவுகள் கழிந்தன.

'இப்படிப் பேசினால், அவள் அப்படிப் பதில் சொல்லுவாள், அதற்கு நான் இப்படிப் பதில் சொன்னால், அவள் சிரிப்பாள்"

அவளின் கவனத்தை பெறும் ஒரே நோக்கில்

நடந்தான்.

இருந்தான்.

படித்தான்.

பாடினான்.

சிரித்தான்.

நண்பர்கள் அவர்களை ஜோடி கட்டி பேசத்தொடங்கினார்கள்.

பொய்யாய் கோபப்பட்டான்.

உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

மிகுந்த திட்டமிடலின் பின் ஒர வார காலம் வகுப்புக்களுக்கு மட்டம் போட்டான் அவன்.

'உங்கடை Commerce கொப்பியை தாங்களேன். நோற்ஸ் எழுதிட்டு தாறன்"

முறைத்தாள்.

'அதுக்கு வேறை யாரையும் பாருங்க"

அவமானப்பட்டது போல இருந்தது.

கோபம் வந்தது.

அவன் கேட்டால் அவள் தந்தே தீருவாள் என்ற கர்வம் உடைந்து போனது.

இருப்பினும், முயற்சி திருவினை ஆக்கியே தீர்ந்தது.

அவன் எது கேட்டானோ அந்த நோட்ஸ் கொப்பி அது அவன் கை வந்தது.

நான்கோ ஐந்தோ நாள் வைத்திருந்தான். அவ்வப்போது எடுத்துப் பார்த்தான்.

நெஞ்சில் அணைத்தான்.

அட, முத்தம் கூட இட்டானாம் அந்த வெற்றுக் காகித கொப்பிக்கு.

அந்த நாட்களில் அவள் கையெழுத்துப் போலவே எழுதவும் பழகினான்.

அடி முன் ஜென்மம் நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்ணே நான் அழகில்லையா (!!!!அட்ரா.. அட்ரா.. !!!)
உன் கனவுக்குள் வரவில்லையா..

அவளது கொப்பியில் அவளது கையெழுத்தில் எழுதினான்.

அசாத்திய துணிச்சல்.

அவள் மீதான ஈர்ப்பை நடவடிக்கைகளால் உணர்த்த தொடங்கினான்.

ஒரு முறை அற்லஸ் (உலக வரைபடம்) கேட்டாள்.

அதை அட்ரஸ் என்று அவசரப்பட்டு விளங்கிக் கொடுக்க,

அதில் அவமானப்பட்டுப் போனான்.

ஏற்கனவே வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த ஆங்கில அறிவு பற்றி என்ன நினைத்திருப்பாள்?

அவனை மலேரியா தாக்கியது. ஒரு வார காலம். அதே காலத்தில் அது அவளையும் தாக்கியது.

அவனுக்கு காய்ச்சல் வந்தால் அது அவளுக்கும் வருகிறது. கணக்குப் போட்டான்.

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளை யாரோ படம் எடுக்க அவள் அந்த யாரோவோடு சண்டை பிடிக்க

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளுக்கு யாரோ காதல் கடிதம் கொடுக்க அவள் அதை கிழித்தெறிய

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளோடு படித்த ஒருவன் அவளிடம் கொப்பி கேட்க அவள் கொடுக்க

கவலைப் பட்டான்.

..................................

..................................
October 10, 2004

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home