4.2.07

ஈழப் பாடல்களின் நினைவுகளில்..

பாடல்களுக்கு கடந்த காலங்களை நினைவு படுத்துகின்ற அற்புத சக்தி இருப்பதாகவே நான் கருதுகின்றேன். தமிழ்ச்சினிமாவின் பல பாடல்கள் என் சில கடந்த காலங்களை நினைவு படுத்துகின்றன என்பதற்கும் அப்பால் தமிழ்ச் சினிமாவிற்கு சற்றேனும் சம்பந்தப்படாத நாம் வளர்கின்ற காலங்களில் எந்த திணிப்பும் இல்லாமல் இயல்பாகவே எங்களுக்கு கேட்க கிடைத்த தமிழீழ எழுச்சிப் பாடல்களில் சிலவும் என் கடந்த காலங்களை நினைவு படுத்தியே நிற்கின்றன.

திலீபன் அழைத்தது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்ற பாடலைக் கேட்கையில் 87 இல் எங்கள் வீட்டின் கட்டட வேலைகள் நடந்த காலம் நினைவுக்கு வருகிறது.

கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என்னும் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் 93 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் எனது ஆரம்ப நாட்கள் ஞாபகத்தில் வருகின்றன.

ஓடு ஓடு நீ ஓய்ந்து விட்டால் வரும் கேடு என்ற பாடலில் 95 இன் வரலாற்றுத் துயரம் யாழ்ப்பாண இடம் பெயர்வு நினைவில் எழுகிறது.

சின்ன சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊரிழந்தோம் என்ற பாடல் எனது வன்னி நாட்களை நினைவில் இழுக்கிறது.

ஆரம்ப காலங்களில் தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த சில எழுச்சி மிகு பாடல்கள் தான் தமிழீழ விடுதலைப் போரின் பரப்புரைக்கு பயன்படுத்தப் படும் பாடல்களாக இருந்திருக்கின்றன.

ஊமை விழிகள் திரைப் பட பாடலான தோல்வி நிலையென நினைத்தால் அவ்வகையான ஒரு பாடல்.

பின்னர் தமிழீழ விடுதலைப் போரிற்கென தனித்துவமான பாடல்களை தயாரிக்கத் தொடங்கிய காலங்களில் தமிழக கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானவையாக இருந்திருக்கின்றன.

தேனிசை செல்லப்பாவின் குரல் இன்னமும் எங்கள் நினைவில் நிற்கின்றது. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், இசையமைப்பாளர் வைத்திய நாதன், மனோ ஆகியோரும் குறிப்பிடக் கூடிய அளவு பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

வாணி ஜெயராமின்
நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

என்ற பாடல் கேட்பவர்களின் கண்ணீரை வரவழைக்கும்.

மலேசியா வாசுதேவன் பாடிய
நடடா ராசா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவலைக் காளை நாளை விடிய போகுது
பொழுது சாயும் நேரம் - இது
புலிகள் வாழும் தேசம்

என்ற பாடல் நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு பாடல்.

மனோ இன்னுமொரு பெண் பாடகியுடன் இணைந்து பாடிய பாடல் காதல் வயப்பட்டிருந்த இரு உள்ளங்கள் விடுதலைப் போரில் இணையும் பொருட்டு தம் காதலை தியாகம் செய்வதாய் அமைந்திருந்தமை கவனிப்புக் குரியது.

தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் - என்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் - அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

என்று ஆரம்பிக்கின்ற பாடல் இப்படி தொடர்கிறது.

காவலுக்கு வந்த பேய்கள்??? கடிக்கும் நாளையில் - ஒரு
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன். - தமிழ்
ஈழம் வந்தால் வாறேன்.

தவிர ஒரு சிறுமியின் குரலில் தமிழக பாடகி ஒருவர்(பெயர் நினைவில்லை) பாடிய காகங்களே காகங்களே காட்டுக்கு போறீங்களா?
காட்டுக்கு போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு களிப்பீர்களா?
என்ற பாடல் அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு மிகப் பிடித்த பாடலாக இருந்தது.

வாணி ஜெயராம் பாடிய வீசும் காற்றே தூது செல்லு என்ற பாடலின் பல வரிகள் பத்து ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்பது ஆச்சரியமாய் இருக்கிறது. அது இதுதான்.

வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் - அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ - கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ

இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடிக்குது..

கால ஓட்டத்தில் தமிழகத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடல்கள் எங்கள் தாயக தேசத்திலேயே உருப் பெற தொடங்கின.

தாயகத்தில் வெளியான ஆரம்ப கால பாடல்களில் பாடகர் சாந்தன் மற்றும் சுகுமார் ஆகியோரின் பங்களிப்பு நிறையவே இருந்தது. சாந்தன் பாடிய எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம். தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம் என்ற பாடலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ஒரு சிறுவன் இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு பாட்டுப் பாடுமாறு இராணுவம் கேட்க பாடிக் காட்டினானாம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரும் கவிஞருமான புதுவை இரத்தினை துரை அவர்கள் பெருமளவில் எழுச்சிப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவரின் பாடல்களில் இது வரை என்னைக் கவர்ந்தவை கரும்புலிகள் என்கிற ஒலிப்பதிவுத் தட்டில் வெளிவந்த அத்தனை பாடல்களும் தான்.

அநாமதேயமான அந்த வரிகள் பல கேள்விகளின் முடிச்சுக்களை அவிழ்க்கின்றன.

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் - இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாம் அழுவோம் யாரறீவீர்கள்.
October 31, 2004

Labels:

11 Comments:

Blogger கானா பிரபா said...

95 இற்கு முன்புவரை ஈழப்பாடல்களை சினிமாப்பாடல்கள் கேட்ட அதே பாங்கில் தேடித் தேடிக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றிப் பதிவே போடக்கூடிய அளவுக்குப் பல நினைவுமீட்டல்கள்.

2:27 AM  
Blogger கஸ்தூரி said...

காகங்களே காகங்களே பாடலைப் பாடியது எல். ஆர். ஈஸ்வரி எனும் பின்னணிப் பாடகி.

மனோவுடன் தென்னங்கீற்றில் தென்றல் வந்து பாடலைப் பாடிய பெண்குரல் வாணி ஜெயராமுடையது

3:04 AM  
Anonymous Anonymous said...

நல்ல பதிவு. இந்தப் பாடல்கள் உள்ள தளங்கள் ஏதாவது தெரியுமா?

9:01 AM  
Blogger படியாதவன் said...

இந்துக் கல்லூரியோ அண்ணை, அப்ப சீனியர் எண்டு சொல்லுங்கோ. 1993 இல 6ம் ஆண்டு படிச்சியளோ?
நீங்கள் சொல்லுற மாதிரி பாட்டுகள்தான் வாழ்க்கையில ஒவ்வொரு தருணத்தையும் ஞாபகப்படுத்துறது.
சிலநேரம் இனிய நினைவுகளையும் சிலநேரம் சில துரதிருஷ்டமான சம்பவங்களையும் ஞாபகப்படுத்தும்.

முத்து படப்பாட்டுகளை இப்ப கேட்டாலும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து இருக்க ஒழுங்கான இடமும் இல்லாம அலைஞ்சதும், மட்டுவில் வயல் வெளிக்குள்ள பட்டம் விடுறதும்தான் ஞாபகம் வரும். அதுகளை ஞாபகப்படுத்த விருப்பப்படுறதில்லை எண்டுறதால கேக்கிறதையே தவிர்த்துக்கொள்ளுவேன்.(1995 ஐப்பசி கார்த்திகையில முத்து பாட்டுக்கள்தான் பிரபலம் எண்டுறதால அடிக்கடி அங்க ஒரு வீட்டில பெரிய ஸ்பீக்கரில போடுவினம்)

1995 இல நான் சின்னப் பெடியனா இருந்ததால பெரிதாக புரட்சி மற்றும் சினமா பாடல் வரிகள் ஞாபகம் இல்லை, ஆனால் அதிகமானவற்றின் பல்லவிகள் மட்டும் தெரியும்.
அந்தக்காலத்தில எனக்கு அதிகமா பிடிச்சது 'வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்..'
'அப்புகாமி பெற்றெடுத்த லொக்குபண்டா மல்லி', 'அந்தக் கடலதை நாங்கள் வெல்லுவோம்'

சின்னப் பிள்ளைகளின்ர குரலில வந்த சில பாட்டுக்கள் இப்பவும் மனதுக்குள்ள நிக்குது..
1995 கடைசியில வந்த ஒரு பாட்டு, கரும்புலிகளைப் பற்றியது எண்டு நினைக்கிறன், போராடப் போகிறோம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிற தொனியில் வரும்.. பாட்டு ஞாபகம் இருக்கோ?
புலிகளின் குரல் 2 அலைவரிசைகளில ஒலிபரப்பாகும், ஆமி ஒண்டைக்குழப்ப மற்றதில போடுவினம், ஒவ்வொண்டு நிக்க மாத்தி மாத்தி கேக்கிறது இப்பவும் ஞாபகம் இருக்கு.(அப்ப எனக்கு 10 வயசு)

இப்பிடித்தான் வசீகரா படப்பாட்டுக்களை கேக்க..சீ வெக்கமா இருக்கு, சொல்லமாட்டன். ;-)

11:21 AM  
Blogger சயந்தன் said...

//போராடப் போகிறோம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிற தொனியில் வரும்.. பாட்டு ஞாபகம் இருக்கோ?//

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது. - இனி
இங்கே மலரும் சின்னப் பூக்கள் வாடாது

//முத்து படப்பாட்டுகளை இப்ப கேட்டாலும் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து இருக்க ஒழுங்கான இடமும் இல்லாம அலைஞ்சதும், மட்டுவில் வயல் வெளிக்குள்ள பட்டம் விடுறதும்தான் ஞாபகம் வரும்.//

இங்கும் அதே.. அதே..
தில்லானா தில்லானா பாடலுக்கு இடம்பெயர்வும் கொடிகாமத்தில ஒரு வீட்டில இடம் பெயர்ந்து வந்திருந்த தங்கர்பச்சானின் அழகியும் நினைவில இருப்பார்கள்.

11:36 AM  
Blogger படியாதவன் said...

//எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது. - இனி
இங்கே மலரும் சின்னப் பூக்கள் வாடாது//
அதுதான்..அதுதான்..
எங்கையாவது பதிவிறக்க முடியுமோ?

//தங்கர்பச்சானின் அழகியும் //
;-)

12:32 PM  
Blogger மலைநாடான் said...

சயந்தன்!
குறிப்பிட்டுள்ள எல்லாமே நல்ல பாடல்கள். தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
நன்றி.

12:54 PM  
Anonymous Anonymous said...

அருமையான ஒரு பதிவு..பாடியவர்கள் பற்றிய விபரங்கள் அறிய உதவியதற்கு நன்றிகள்..

[உங்கட ப்ளொக் அழகாயிருக்கு)

3:27 PM  
Blogger வன்னியன் said...

சின்ன சின்னக் கூடு கட்டி

பாடும் பறவைகள் வாருங்கள்:- திலீபன் நினைவுப்பாடல்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

6:39 PM  
Blogger சயந்தன் said...

//[உங்கட ப்ளொக் அழகாயிருக்கு) //
பயமாயிருக்கவில்லைத்தானே..

வன்னியன் சொல்லாமற் செய்வார் பெரியார்.. நீர் பெரியர்.. நன்றி

12:21 AM  
Blogger Haran said...

வீசுங் காற்றே எனக்குப் பிடித்த பாடல் ஒன்று.. அத்துடன்... வாணி ஜெயராம் அவர்களின் குரலில் மிகவும் இனிமையாக இருந்தது.

வீசுங் காற்றே பாடலோ அல்லது பாடும் பறவைகள் பாடலோ என்று தெரியவில்லை... பாடிவிட்டு வாணி ஜெயராம் அவர்கள் அழுததாகக் கேள்விப்பட்டேன். அவர் இப் பாடல்களை உணர்ந்து... மனதை உருக்கும்படி பாடி உள்ளார்...

1:40 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home