5.2.07

இலங்கை வானொலியில் Comedy Time

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தன் தமிழ் ஊடாக இலங்கையின் தமிழர்கள் பற்றிய, அவர்கள் பேசுகின்ற மொழி பற்றிய நன்மதிப்பை அண்டை அயல் நாடுகளில் ஏற்படுத்தித் தந்தது என்பது வரை மகிழ்ச்சியாயிருக்கிறது.

சந்தோசம்.

எமக்கெல்லாம் அதன் தமிழ்ச்சேவை ஒலிபரப்புக்களை கேட்கின்ற வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனாலும் அதன் வர்த்தக சேவை ஒலிபரப்பு எம்மைக் கடந்து தான் தமிழகம் போகும். தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகமானதே வர்த்தக சேவை ஒலிபரப்பிலிருந்து தான்.

யாழ்ப்பாணத்திலிருந்த கடைசி காலம் வரை சினிமா பாடல்களுக்கு வர்த்தக சேவையைத் தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. (அத்தோடு இரவு 8.45 க்கு திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் தூத்துக்குடி வானொலியில் எண்ணி 3 பாடல்கள் போடுவார்கள். அதனையும் நம்பியிருந்தோம்)

நன்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம்.

ஆனால் அதன் செய்தியறிக்கை பற்றி பேசுவதானால்,

மன்னிக்கவும்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் மக்களை மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான பின்வாங்கல்களுக்கும் உட்படுத்திய பெருமை அதன் செய்தியறிக்கையைத் தான் சாரும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த வானொலி பல பிரதேசங்களை (பல தடவைகள்) விடுவித்திருக்கிறது.

ஒவ்வொரு சண்டைக் களத்திலும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைய பல நூற்றுக்கணக்கான புலிகளை அந்த வானொலி கொன்று குவித்திருக்கிறது.

யுத்தங்களில் அகப்பட்டு செத்துப்போகின்ற அப்பாவி மக்கள் அத்தனை பேரையும் அந்த வானொலி பயங்கர வாதிகள் ஆக்கியிருக்கிறது.

திட்டமிடப்பட்ட அதன் உளவியல் தாக்குதல் ஆரம்பத்தில் ஏகத்துக்கும் மன உளைச்சலைத் தந்தது. ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என சஞ்சலப்பட வைத்தது.

அதன் அருவருக்கத்தக்க கீழ்த்தரமான பொய்ப் பிரசாரம் கோபம் கொள்ள வைத்தது.

இறுதியில் அவற்றிற்கெல்லாம் நாம் இயைவாக்கம் அடைய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி நேரம் நமக்கெல்லாம் Comedy Time ஆகிப்போனது. அதன் செய்திகள் நம்மை வாய் விட்டு சிரிக்க வைத்தன.

1995 ஜுலையில் இராணுவம் எனது சொந்த ஊரான வட்டுக்கோட்டை உட்பட யாழ்ப்பாணத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை முன்னேறிப் பாய்தல் என்ற இராணுவ நடவடிக்கை மூலம் தன் கட்டுப்பாட்டினில் கொண்டு வந்திருந்தது.

அடுத்த 5 வது நாள் புலிகள் புலிப் பாய்ச்சல் என்ற எதிர் நடவடிக்கை மூலம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றினார்கள்.

இருப்பினும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை வானொலியின் செய்தியில் எனது ஊரும் இன்னும் பிற ஊர்களும் இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டின் கீழேயே இருந்தன. இராணுவத்தினர் எமக்கு மறுவாழ்வு??? அளிக்கும் செயற்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனராம். மக்கள் அவர்களோடு அன்னியோன்னியமாக உறவு கொண்டார்களாம். புலிகளின் அராஜகங்கள் பற்றி மக்கள் கதை கதையாய்ச் சொன்னார்களாம்.

எங்களுக்கு சிரிப்பு வராதா பின்னே?

எங்கு குண்டு வீசினாலும் எங்கு ஷெல் விழுந்தாலும் எந்தக் குழந்தை செத்துப்போனாலும் அன்றையை மாலைச் செய்தியில் புலிகளின் ஆகக்குறைந்தது ஒரு முக்கியஸ்தர் கொல்லப்பட்டார் என்ற செய்தி கண்டிப்பாக வரும்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பற்றிய ஒரு சுவையான கதை இருக்கிறது.

பூலோகத்தில் பொய் களவு சூது வாது எல்லாம் நிறைந்து விட்டன. பூலோக பிரதி நிதி ஒருவர் இறைவனிடம் செல்கின்றார்.

இறைவா நமது தேசத்தில் பொய்யும் புரட்டும் புரண்டோடுகிறது. நீ கண்டும் காணாதும் போல இருக்கிறாயே என்று அவர் இறைவனிடத்தில் நொந்து கொண்டார்.

பக்தா, கவலை அறு. அங்கு நடக்கும் எல்லாவற்றையும் நான் அறிந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று இறைவன் சொல்ல எப்படி இறைவா என்கிறார் பக்தர்.

வா என்று அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கின்றார் இறைவன். அங்கே ஒரு சுவர் முழுக்க சிவப்பு விளக்குகள்.

பக்தருக்கு எதுவும் புரியவில்லை. ஆச்சரியத்தடன் அவர் இறைவனைப் பார்க்கின்றார். இறைவன் விளக்கம் கொடுக்க தொடங்கினார்.

பூலோகத்தில் யார் பொய் சொன்னாலும், அவர்கள் சொல்லும் பொய்யின் அளவுக்கேற்ப இங்கிருக்கின்ற சிவப்பு விளக்குகள் எரியும். அதன் படி நான் அறிந்து கொள்வேன் என்கிறார் இறைவன்.

திடீரென்று அங்கிருந்த அத்தனை சிவப்பு விளக்குகளும் எரியத் தொடங்கின. பக்தருக்கு குழப்பம்.

இறைவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு அமைதியாக சொன்னாராம். வேறொன்றுமில்லை. இலங்கை என்கிற நாட்டில் அவர்களுடைய அரச வானொலியில் இப்போது மாலைச் செய்தி ஆரம்பித்திருக்கிறது. செய்தி முடியும் வரை அத்தனை சிவப்பு விளக்குகளும் எரிந்து கொண்டுதானிருக்கும்.
October 15, 2004

2 Comments:

Anonymous Anonymous said...

அழுத்தம்
திருத்தம்

12:45 PM  
Anonymous Anonymous said...

சயந்தனாகிய நான் இடும் சோதனைப் பின்னூட்டம்.

4:10 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home