13.4.06

ஈழம் குறித்து ஜெயலலிதா..

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..

ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.