19.3.08

பூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்

நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன்.

அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார். அவர் இசையமைத்த விடுதலை மூச்சுத் திரைப்படத்தில் பாடகர் திப்புவின் பாடலும் இடம் பெற்றிருந்தது.


17.3.08

பின்னவீனத்துவம் - புரிதலுக்கான உரையாடல்

ஏற்கனவே ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் பதிவுலகில் பின்னவீனத்துவம் குறித்த உரையாடல்கள் நடந்த போது எனக்கும் வசந்தனுக்குமான இந்த உரையாடலை வசந்தன் தனது பதிவில் வெளியிட்டிருந்தார்.

அடுத்த ஒருவருடத்தில் அந்த உரையாடலை மீளவும் வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன் :)

முதற்பதிப்பு Friday, February 23, 2007
இரண்டாம் பதிப்பு இன்று :)


3.3.08

இது ஒப்பாரி அல்ல - நினைவு 1

புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன்.

டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேல் வெடித்தது. அம்மம்மா தொபுக்கென கீழே விழுந்து படுத்தா - ஸ்டீரியோ சிஸ்டத்தில் சத்தம் இடம் மாறுவது போல வெடித்தலின் பின்பும் அவர்களைக் கடந்து இரைச்சல் அமர்முடுகிச்சென்று அடுத்த கணங்களில் நிலம் அதிரச் செய்தது. ´´கடவுளே கிட்ட எங்கேயோ தான் விழுந்து போட்டுது. மருமோள் கெதியில வா பிள்ளை´´

அம்மா இன்னும் வந்த பாடில்லை - நித்திரை கொள்ளும் பிள்ளைகளை எழுப்புவதற்குச் சிரமமாயிருந்திருக்க வேண்டும் அவவுக்கு. மகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டா. மற்றவன் சுருண்டு படுத்திருந்தான்.

மீண்டும் டப் என்ற அமுக்கச்சத்தம் - காற்றைக் கிழிக்கும் கூவல் சத்தம் - மகளோடு முற்றத்தின் மாமரத்திற்கு கீழ் ஓடிவந்து மகளை நிலத்தில் வளர்த்தி இரு கைகளாலும் அவளை அணைத்து முழுவதுமாய் தனக்குள் மறைத்த படி கீழே கிடந்து முருகா முருகா என்றா அம்மா. காதுகளை கிழித்துத் தலைக்கு மேல் வெடித்து அவர்களைத் தாண்டிச்சென்றது இரண்டாவது செல். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விழும்.

´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.

´´பிள்ளை . பஞ்சு எடுத்தந்து ரண்டின்ரை காதுக்குள்ளையும் வைச்சு விடு. உந்த இரைச்சலும் சத்தமும் கூடாது´´ செல் அடிக்கும் போது வீடுகளிற்குள் இருக்கக் கூடாது.வெளியான இடங்களில் குப்புறப்படுத்துவிட வேண்டும். பதுங்கு குழிகள் இன்னும் பாதுகாப்பானவை. செல் தலைக்கு மேல் விழும் சந்தர்ப்பங்கள் தவிர (விழுந்தால் விதியெனச்சொல்லி விட்டு போய்ச் சேர வேண்டியதுதான்) மற்றைய பொழுதுகளில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கக் கூடிய நிறைய வழிகள் இருந்தன.

பதுங்கு குழியொன்றை வெட்டச்சொல்லி அம்மம்மாவின் வளர்ந்த பேரனொருவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு பனைமரங்களை அதற்காக தறித்து விழுத்த வேண்டுமேயென்ற காரணத்திற்காக அம்மம்மா பெரிதும் அக்கறையெடுத்திருக்கவில்லை. தவிர மடத்துப் பிள்ளையார் அந்த அளவிற்கு விட மாட்டார் எனவும் அவர்கள் நம்பத் தலைப்பட்டார்கள். ´´நீ இருந்து பாரடா பிள்ளையாரைத் தாண்டி ஒரு துண்டுச் சன்னம் கூட வர அவர் விடமாட்டார்´´

தன்னைத் தாண்டி இரண்டு செல்களை அனுமதித்த மடத்துப் பிள்ளையார் அடுத்ததாக மூன்றாவதற்கு அனுமதியளித்தார்.

´´டப்´´ காதைக்கிழிக்கும் இரைச்சல். அம்மம்மா நிலத்தில் விழுந்து கிடந்தபடி விளக்கை ஊதி அணைத்தா. பாவம். ஏவப்பட்ட செல்லுக்கு விளக்கின் ஒளிபார்த்து விழும் வல்லமை இருக்கும் என அவ நினைத்திருக்கலாம். இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. மூன்று வயது மகள் வீரிட்டுக் கத்தினாள். அதையும் தாண்டி அம்மம்மா பெருங்குரலெடுத்து கடவுள்களை அழைத்தா. அம்மா அமைதியாயிருந்தா ஆனால் அழுதுகொண்டிருந்தா. மகனும்

இம்முறை தலைக்கு மேல் அல்லாது சற்றுத் தூரத்தில் மேலே வெடித்து காற்றை உதைத்து முன்னேறி வரும் இரைச்சல் கேட்டது. ´´பிள்ளையாரப்பா .. என்ரை பிள்ளையளைக் காப்பாற்று .. ´´அம்மா முணுமுணுத்தா. ´´இங்கைதான் எங்கையோ விழப்போது. போறதெண்டால் எல்லாரும் ஒண்டாப் போகவேணும். ´´ இருந்தாற்போல அம்மம்மாவிடமிருந்து வெளிப்பட்டன அந்த வார்த்தைகள்.

விழுந்த இடமெங்கும் செந்நிறம் பாய்ச்சி வெடித்தது ஆட்லறி - அது 1986 ம் ஆண்டு