2.4.05

இது தான் கடைசி

இதற்கு முந்தைய இதேமாதிரியான இரண்டு பதிவுகளில் சொதப்பி விட்டது. மிகச் சரியாக மீண்டும் இப்பொழுது இட முயல்கிறேன்.

கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கக் கூடும். சொல்லவேண்டியவையென நினைத்தவையெல்லாம் ஒரு பிசையல் போல, ஒரு குழையல் போல உள்ளே கிடக்கின்றன. வெளி வருகையில் ஒரு கூட்டாஞ்சோறு போல இருக்கக் கூடும்.

இப்போதெல்லாம் வலைப்பதிவுகளில் பின்னூட்டங்களை அதிகம் படிக்கிறேன். தேடித் தேடிப் படிக்கிறேன். கிட்டத்தட்ட தொடர் நாடக விரும்பிகளுக்கு இருக்கிற அதே ஆர்வத்தோடு!

குறிப்பாக தமிழகப் பதிவுகளில் பார்ப்பனியம் தலித் சொற்கள் அதிகம் புழங்கும் பதிவுகளை ஒரு வித சராசரி வாசகனுக்குரிய ஆர்வத்தோடு படிப்பதுண்டு. பார்ப்பனியம் குறித்த நேரடி அனுபவம் ஏதுமில்லை. ஈழத்தில் வாழ்ந்த எவருக்கும் இல்லை. (பாத்தினியம் என்ற ஒரு செடியைத் தான் தெரியும். பயிர்களைக் கொல்லும் இச்செடியும் ஓர் ஆக்கிரமிப்பின் ஊடே தான் ஈழ வடபகுதியில் பரவியதாக சொல்கிறார்கள். உறுதிப்படுத்திய பின் சொல்வதே நல்லது.)

வலைப்பதிவுகளில் காணும் தமிழக சாதி குறித்த பதிவுகள் ஈழத்தில் சாதி பற்றிய சிந்தனைகளையும் உருவாக்குகின்றன.

ஒரு காலத்தில் ஈழத்தில் (நான் படித்த புத்தகம் ஒன்றில் 1930 ஆண்டுகளில் என இருந்தது. என்னளவில் அது இன்னும் சற்று பின்னுக்கானதாயும் இருக்கலாம். 60 அல்லது 70 ம் ஆண்டுகளையும் தொடலாம்.) சாதி தலைவிரித்தாடிய பகுதிகளில் யாழ்ப்பாணமும் ஒன்றுதான். தமிழகத்தில் பிராமணிய ஆதிக்கம் போலவே யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் ஆகிய வேளாளர்கள் இருந்திருக்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவர்களின் தோளிற் சால்வையை இடுப்பில் இறக்கும் மரியாதையை எதிர்பார்த்து, வாழை இலைகளில் விரல் படாமல் சாப்பாடு போட்டு வெளித் திண்ணையின் ஒரு ஓரத்தில் அவர்களை உட்கார வைத்து..' இத்தனையும் யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கிறது. அதுவும் என்னால் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடிய காலம் வரை நடந்தது. அடக்கப்படுகிற ஓர் பிரிவினர் தம்மை விட தாழ்ந்தவர்கள் என கருதிய இன்னொரு பிரிவினரை அடக்குதல் அல்லது தமது மேலாண்மையை பிரயோகித்தல் என அத்தனையும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது.

தொன்னூறுகளிற்கு முதல் யாழ்ப்பாணத்தின் ஓர் கிராமக்கோவிலில் உள்நுழைந்த ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுவனை அந்த கோவில் ஐயர் ஒரு சிறு சுள்ளித் தடி கொண்டு அடித்து விரட்டியது எனக்கு மறக்க முடியாத ஒரு பதிவு. வெளியே ஓடியவன் ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்து சென்றானே.. அது இப்போதும் பிசைகிறது.

உயர்ந்தவர் என கருதியோர் வீடுகளுக்குள் வந்தால் வீட்டில் தண்ணீரோ தேனீரோ அருந்தாமல் சோடா வாங்கி குடித்தவர்களின் பிள்ளைகள், தனியாக வந்தால் 'வீட்டை சொல்ல வேண்டாம்' எனக் கேட்டு அந்த வீட்டின் தட்டுக்களிலேயே சாப்பிட்டு தேனீர் குடித்துப் போன மாற்றம் நிகழ்ந்த காலங்களும் நினைவில் நிற்கின்றன.

இப்பொழுது யாழ்ப்பாணத்தில் அல்லது ஈழத்தின் பிற பகுதிகளில் சாதி இல்லை.
என்னும் பெரிய பொய்யை சொல்ல நான் தயாரில்லை. இருக்கிறது. அடங்கிப் போய் இருக்கிறது.

யுத்தம், உயிரிழப்புக்கள், இடம்பெயர்வுகள், சாதிப் பிரயோகத்திற்கெதிரான கட்டுப்பாடுகள் சாதி என்னும் கருத்துருவை அதன் காப்பாளர் மனங்களில் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன முடிந்தவரைக்கும் வெளியெ விடாமல்... அவர்களில் பலர் தங்கள் 'புனிதத் தன்மை' தங்கள் கண்முன்னே அழிகின்றதே என இன்னமும் வெம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மற்றும் படி ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதிப் பிரிவினைகள் இல்லை. அதற்கு விடுதலைப் போரே காரணம் என்றால் அதன் அர்த்தம் அங்கே பொய் சொல்லப்படுகின்றது என்பதே.

விடுதலைப் போர் சாதியின் பேரால் தங்கள் மேலாண்மையைத் திணிக்க முற்படுபவர்களின் எண்ணத்தை பலாத்காரமாக கட்டி வைத்திருக்கிறது. அடக்கி வைத்திருக்கிறது. அதுவே அங்கே பாரதூரமான சாதிய வெறித்தனங்கள் நிகழாமல் பார்த்திருக்கிறது.(அதற்கு முன்பாக நடந்திருக்கின்றன.)

இந்த நிதர்சனமே ஒரு கேள்வியை உருவாக்குகிறது.

நாளை போர் ஓய்வுக்கு வந்தால் மீண்டும் அடங்கிக்கிடக்கிற இந்தச் சாதிய நடைமுறைகள் மீளக் கிளம்பாதா என்பதே அது.

சரியானதும் நியாயமானதுமான கேள்வி.

ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே விடயம் இந்த யுத்த காலத்தினூடே நடக்கின்ற ஒரு தலைமுறை மாற்றம் தான். கட்டுப்பாடுகள், போர் ஆகியவை காரணமாய் சாதிய வெறி உணர்வு அடக்கப்பட, அது அடுத்த தலைமுறைக்கு முழுவீச்சில் ஊட்டப்படுகின்ற வாய்ப்பு பெருமளவில் நழுவிப்போய் விட்டது. ஆக சாதிய உணர்வைத் தூக்கிப் பிடிப்பவர்கள் கடைசிவரை அதை தமக்குள் வைத்துப் பொரும, அடுத்ததாய்ப் பிறந்த தலைமுறை சாதிய வெறி ஊட்டல்கள் இல்லாமல் வளர்ந்து நிற்கிறது.

இதுதவிர யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் கோவிற் திருவிழாக்களில் சாதியின் பெயரால் திருவிழாவிற்கான நாட்கள் பிரிக்கப்படுவது இன்னமும் நடக்கிறது என்பதையும் திருமணங்களின் போது சாதி முக்கியமாய் எதிர்பார்க்கப்படுகிறது என்பதுவும் சொல்ல வேண்டிய விடயங்கள்.
-------------------------------------------------
ஈழம் தொடர்பாகவும் அவ்வப்போது பதிவுகள் வருகின்றன. அண்மையில் சிறீரங்கனின் The point:social steady is the sociality.
என்னும் பதிவில் புலிகளால் பராமரிக்கப்படும் காப்பகங்களில் வாழும் சிறார்களை குறித்து, அவர்களை வேள்விக் கிடாய்கள் என்னும் கருத்தில் அவர்கள் யுத்தத்திற்காய் வளர்க்கப்படுகிறார்கள் என எழுதிய போது அளவில்லாத மனவருத்தமாய் இருந்தது.

யாரும் அற்றவர்கள் என்ற எந்த எண்ணமும் கொஞ்சமும் இல்லாதவர்களாய் மகிழ்ச்சியாய் வளையவரும் அவர்களை பலியாடுகள் என்ற ரீதியில் எழுதியதைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது. எடுத்ததுக்கெல்லாம் மறுப்புச் சொல்லாதீர்கள் என அந்தப் பதிவில் சிறீரங்கன் எழுதியிருந்ததால் அதில் மறுப்பேதும் சொல்ல வில்லை.

ஆனால் அவர்கள் மறுப்புச் சொல்லட்டும்.

கொஞ்சம் பம்பலாய் கறுப்பியின் தளத்துக்குச் சென்று எழுதப்பட்ட பின்னூட்டங்களை படிப்பதுவும் அவற்றில் எவையெல்லாம் அழிக்கப்படும் என பட்டியலிடுவதும் மீண்டும் வந்து அவை அழிக்கப்பட்டு விட்டனவா என்று பார்ப்பதுவும் குஷியான பொழுது போக்குகள்.

டோண்டு அவர்களின் ஈழம் தொடர்பான பதிவுகளில் பின்னூட்டங்களிலும் ஆர்வம் அதிகம். பாலசிங்கத்திற்கு மருத்துவ உதவி கேட்டதை மறக்காமல் ஈழம் தொடர்பான அனைத்துப் பின்னூட்டங்களிலும் இடுவார். உதவி கேட்க ஒரு நாடிருந்த நிலையில் அந்த நாட்டில் போய் சதி செய்யக் கூடாது என்ற அவரது அறிவுரை படித்தேன்.

உதவி செய்வதாகச் சொல்லுகின்ற நாடுகளின் உள்நோக்கங்கள் பற்றி உதவி கேட்பவர்கள் ஆராயக்கூடாது.

அதற்கான உரிமைகள் எதுவும் அவர்களுக்கு கிடையாது.

சரி ஐயா அப்படியே ஆகட்டும்.

எனது பதிவொன்றில் அவரது ஆதங்கம் இது.

எப்படி ஐயா மறக்கும்? தமிழக மக்களுக்குப் பிரியமான நேருவின் பேரனைத் தமிழக மண்ணிலேயே சாய்த்தவர்களை இன்னும் தூக்கிலேற்றாமல் இருக்கப்படும் வரை இது மறக்காது.

தனது தலைவனை பலிகொண்ட அமைப்பின் தலைவனை தூக்கிலேற்ற வேண்டும் என ஐயா டோண்டு விரும்பினால், குமரப்பாவிலிருந்து திலீபன் முதலாக நூற்றுக்கணக்கான தமது உறுப்பினர்கள் பலியாக காரணமாயிருந்தவர்களின் தலைவரை தூக்கிலேற்ற, அது முடியாத பட்சத்தில் குண்டுவைத்துக் கொல்ல அந்த அமைப்பு ஏன் விரும்பக் கூடாது என்ற குதர்க்கத் தனமான கேள்வியுடன்

முடிச்சிட்டன்

7 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sayanthan

பரிசோதனை

4.41 3.4.2005

10:41 AM  
Blogger சயந்தன் said...

Testing

10:44 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வலைப்பதிவாளர்

எழுதிக்கொள்வது: வலைப்பதிவாளர்

//தனது தலைவனை பலிகொண்ட அமைப்பின் தலைவனை தூக்கிலேற்ற வேண்டும் என ஐயா டோண்டு விரும்பினால், குமரப்பாவிலிருந்து திலீபன் முதலாக நூற்றுக்கணக்கான தமது உறுப்பினர்கள் பலியாக காரணமாயிருந்தவர்களின் தலைவரை தூக்கிலேற்ற, அது முடியாத பட்சத்தில் குண்டுவைத்துக் கொல்ல அந்த அமைப்பு ஏன் விரும்பக் கூடாது என்ற குதர்க்கத் தனமான கேள்வியுடன்//

நல்ல கேள்வி. கேளுங்களைய்யா கேளுங்கள். நன்றாக தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி கேளுங்கள். கேட்கிறோம். கேட்கிறேன்.

டோண்டு ஐயா 'சோ'த்தனமாக பதில் சொல்லாமல் கொஞ்சம் மூளையை நல்ல வழியில் யோசித்துச் சொல்லுங்கள்.

எப்படியும் டோண்டு குதர்க்கமாகத்தான் சொல்லுவார் என்பது தெரியும். ;-)

கறுப்பியின் தளத்துக்கு நானும் இந்த விளையாட்டு விளையாடத் தான் போவது வழக்கம். இப்படி எத்தனை பேர் இருக்கிறோமோ. ;-)



13.56 2.4.2005

10:56 AM  
Blogger கொழுவி said...

ஆமா.. நீ கொன்றாய் அதனால் நான் கொன்றேன்.. நான் கொன்றேன் அதனால் நீயும் கொல்லுன்னு மாறி மாறி தாக்கிக்கிட்டே இருங்க! அடுத்தது என்னப்பா..? அத யாராச்சும் சொல்லுங்களேன்..

11:51 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

சாதிகள் குறித்த பதிவு நன்று. கறுப்பியின் தளம் குறித்து எழுதியிருக்கிறீர்கள். தனக்கு வந்தால்த் தான் தெரியும்.

12.28 3.4.2005

5:30 AM  
Anonymous Anonymous said...

ஆம் இலங்கை தமிழர்க்கு இந்தியன் எதிரிதான் ..இந்தியனுக்கு இலங்கை தமிழன் எதிரிதான் ..

ஆனா தேவையென்டா மட்டும் 'பெரியப்பா' நாடவதேன் ?

உங்கட கோபம் நியாயமாய் இருக்கலாம்..அந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும், வைகோ போன்ற இந்திய துரோகி நாய்களை என்னென்டு சொல்வது?

6:22 AM  
Blogger கறுப்பி said...

சயந்தன் என்னுடைய தளம் தங்களைக் குசியாக வைத்திருப்பதை இட்டு நல்ல சந்தோஷம்

6:39 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home