30.3.05

ஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்

படிப்பு முடிஞ்சோ அல்லது வேலை முடிஞ்சோ வரேக்கை Tram எடுத்துத் தான் வாறனான். Tram நிறுத்தத்திலை ஒரு ஐஞ்சு பத்து நிமிசம் நிக்க வேண்டியிருக்கும். அந்த நிறுத்தத்துக்கு பக்கத்திலை ஒரு வட இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு.

இங்கை என்ரை இடத்திலை இலங்கைத் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் குறைவு. இல்லையெண்டே சொல்லலாம். வியட்னாம், சீன கடைகள் தான் கூட. அதுவும் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் நான் ஒஸ்ரேலியால இருக்கிறனோ இல்லாட்டி சீனாவில இருக்கிறனோ எண்டு சந்தேகமா இருக்கும்.

எனக்கு கொஞ்சம் எண்டாலும் தெரிஞ்ச, அறிஞ்ச சாப்பாடு ஏதும் வேணுமெண்டா இப்பிடியான இந்திய சாப்பாட்டு கடையளுக்குத் தான் போறனான். (எனக்கு சப்பாத்தி, பூரி எண்டால் நல்லா பிடிக்கும்.) அதுவும் நல்ல உறைப்புச் சாப்பாட்டுக்கு இந்திய கடைகளுக்குத் தான் போகவேணும். (எங்களுக்கு உறைப்பு இல்லாட்டி நாக்கு செத்துப் போயிடுமே!)

அப்ப, இப்பிடி Tram இற்கு நிக்கிற நேரம் பக்கத்திலை இருக்கிற அந்த இந்தியக் கடைக்கு போய் ஏதாவது இனிப்பு வகைகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நிப்பன். (கள்ளத்தீனி, நொறுக்குத் தீனி) மைசூர் பாகில இருந்து பெயர் தெரியாத எல்லா இனிப்பையும் நாளுக்கு ஒன்றாய் வாங்குவன்.

எந்த இனிப்பெண்டாலும் ஒரு துண்டு, ஒரு டொலர் அங்கை.

முதல் நாள் ஒரு டொலரைக் குடுத்து ஒரு இனிப்பைக் கேட்டன். அங்கை நிண்ட கடைக்காரர் 3 இனிப்பைத் தூக்கி தந்தார். நான் நினைச்சன் மனிசன் மாறித் தருகுதாக்கும் எண்டு நினைச்சக்கொண்டு நான் ஒரு டொலர் தான் தந்தன் எண்டு சொன்னன். அதுக்கு அவர் பரவாயில்லை.. இருக்கட்டும் எண்டு சொன்னார்.
நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மீள் பதிவு
சரியெண்டு வாங்கி கொண்டு வந்திட்டன். (ஒரு வேளை பழுதாப்போயிருக்குமோ எண்டும் நினைச்சன். ஆனால் நல்லாத்தான் இருந்தது.)

உப்பிடி நிறைய நாள் நடந்திட்டுது. நேற்று ஜிலேபி வாங்க ஒரு டொலர் குடுத்தன்.( ஜலேபியை இலங்கையில தேன் குழல் எண்டுறவை.) அவர் ரண்டைத் தூக்கி தந்தார்.

நானும் சிரிச்சுக் கொண்டே நன்றியைச் சொல்லிப்போட்டு தொடர்ந்து இப்படித்தான் ஒண்டு கேட்டால் ரண்டு மூண்டு தாறியள் எண்டு சொன்னன்.
அவரும் சிரிச்சுக் கொண்டு நீங்களும் எங்கடை நாடு தானே.. அது தான், எண்டார்.

ஓஹோ இது தான் விசயமா எண்டு நினைச்சக்கொண்டு வந்து ட்ராமில் ஏறி வாற வழியெல்லாம் யோசிச்சுக் கொண்டு வந்தன்.

சும்மாவே எனக்கு முதலில அறிமுகமாகிற சிங்களப் பெடியள் எந்த இடம் எண்டு கேட்டால் யாப்பாணே என்றோ Jaffna என்றோ சொல்லாமால் வீம்புக்கு யாழ்ப்பாணம் எண்டு அறுத்துறுத்து சொல்லுறனான்.

இப்பிடியிருக்க நேற்று அந்தக் கடைக்காரர் நீங்களும் இந்தியர் தானே என்ற கருத்துப்பட சொன்ன போது, இல்லை நான் சிறீலங்கன் என ஏன் நான் சொல்ல வில்லை? ஏன் நான் சிறீலங்கன் எண்ட தேசியம் எனக்குள் விழித்துக் கொள்ளவில்லை?

இதிலென்ன சந்தேகம்... எல்லாம் அந்த ஒரு டொலர் ஜிலேபிக்காகத் தான் என்று இலகுவாக சொல்லிவிட்டு போனாலும் வேறும் ஏதாவது இருக்கக்கூடும்!

8 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஒருவன்

வெறும் ஜிலேபிக்காக தேசியத்தை விற்றவன் என வரலாறு உங்களை பதியட்டும்! ஹி ஹி

20.16 31.3.2005

2:19 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ilakkiyan

என்னை யாராவது இந்தியராக அடையாளம் காண நினைத்துக் கேட்டால் அது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை.

12.54 31.3.2005

2:59 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: நேசிப்பவன்

//என்னை யாராவது இந்தியராக அடையாளம் காண நினைத்துக் கேட்டால் அது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை.//

என்ன பேசுகிறோம் என யோசித்து பேசுங்கள். வார்த்தைகள் மனதை காயப்படுத்தும்.

6.17 1.4.2005

6:19 AM  
Blogger கறுப்பி said...

ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொருமாதிரி வேலை செய்யும். என்னைச் சிங்களத்தி என்று நினைத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். கறுப்பி என்று நினைத்தவர்களும் இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் பொண்ணு என்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன் என்று சொல்ல மாட்டேன் அப்படியாயின் அது வர்க்க பேதத்திற்குள் என்னை தள்ளி விடும். ஆனால் நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழச்சி அது உண்மை. எனது பிறப்பை நான் மதிக்கின்றேன். எனது அடையாளத்தை நான் மதிக்கின்றேன். மாறவோ மாற்றவோ வேண்டிய அவசியமற்றது அது.
சயந்தன் தங்கள் நேர்மையை மதிக்கின்றேன். பேசாமல் இலவசமாகக் கிடைக்கும் ஜிலேபியை வாங்கிச் சாப்பிடுங்கள். ஆனால் தங்களை இலங்கையர் என்று கடைக்காறருக்குக் கூறினாலும் தங்களின் நேர்மைக்காக இலவச இணைப்புத் தொடரும் என்றே நம்புகின்றேன்.
இலக்கியன் தாங்களின் பின்னூட்டத்தை ஏற்க மனம் மறுக்கின்றது.

6:39 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: suratha

பழைய சுனாமி வந்து நாட்டை பிரிக்காமலிருந்திருந்தால் நாமும் இந்தியரே..அதைக்கூட ஏற்காவிட்டாலும் இலங்கையில் படை கொண்ட பாண்டிய சோழ படைகளின் எச்ச சொச்ச இரத்த கலப்பு
எப்படியும் இல்லாமலா போகும்???

22.35 31.3.2005

12:42 PM  
Blogger Muthu said...

இங்கு ஜெர்மனியில் என்னை இலங்கையைச் சேர்ந்தவனாய் நினைத்துக்கேட்டவர்கள் பலர். அப்போது எனது பக்கத்து ஊரின் பெயரைச்சொல்லி அந்த ஊர் உனது சொந்த ஊரா என்று கேட்ட உணர்வுதான் வந்தது. மேலும் இந்தியர்களுக்கும்,இலங்கையர்களுக்கும் அந்தளவுக்கு வித்தியாசம் இருப்பதாய் நினைக்கவில்லை. உண்மையில் இலங்கை சென்னையைவிட மிக அருகில் எனக்கு,என் ஊருக்கு :-).

4:02 PM  
Blogger Muthu said...

///என்னை யாராவது இந்தியராக அடையாளம் காண நினைத்துக் கேட்டால் அது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை.///

நாம் இன்னும் தமிழர்தான் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் :-).
http://muthukmuthu.blogspot.com/2005/03/blog-post_24.html

4:07 PM  
Anonymous Anonymous said...

கருத்தை முதலில் புரிந்து கொள்ளுஙகள். நான் என்னை இந்தியராக அடையாளங் காண்பதைத் தான் அருவருப்பாக உணர்கிறேன் என்று எழுதினேன்.

தமிழராக அடையாளங் காண்பதை அருவருப்பாக உணர்வதாய் நான் எழுதவில்லை. இந்தியத் தமிழர்கள் தமிழர்கள் என்பதற்குள் அடங்கவில்லையென்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தியர்கள் என்பதற்குள் அடங்கமாட்டார்கள் என்பதை மட்டுமே எழுதிக்கொண்டேன்.

இங்கே நான் குறிப்பிட்டது இந்தியர்கள் என்கிற சொல்லாடலைத்தான். இந்தியர்கள் என்றால் யார் என்கிற கேள்விக்கு நீங்கள் விடைதேடுங்கள். அதன்பபின்பு நான் எழுதியதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும், அதனை நான் பயன்படுத்திய சூழலையும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

அளவான வார்த்தைகளால் எழுதியும் அதை ஒழுங்காக விளங்கிக் கொள்ளாமல் கருத்து எழுதுவதை மட்டும் ஒரு வளர்ந்த இனத்தின் பண்பாக நினைக்கிறீர்களோ முத்து?

யாரையும் மனம்வருந்தச் செய்வதற்காய் நான் எழுதவில்லை. என் மனம் நோவதைத் தான் நான் எழுதினேன். நன்றி வணக்கம்.

2:47 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home