29.8.05

முதலாளியின் அப்பா

என்னுடைய வேலை அனுபவத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தாரா வின் ஒரு பதிவினை பார்த்த பிறகு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அது கட்டாயம் எழுதப்பட்டேயாக வேண்டும் என்ற முடிவினை எட்டியது. அதாகப்பட்டது,

ஒஸ்ரேலியா வர முன்பே அங்கு போனால் ஏதாவது பகுதி நேர வேலை செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது கிடைக்கும் நேரத்தை பயனாக செலவழிக்கலாம் என்பதனால் அல்ல அதுவே கட்டாயமும் என்பதனாலும் ஆகும்.

ஆக இங்கு வந்து ஆரம்பத்தில் அதிகம் யாரையும் அறியாமல், சரியான சாப்பாடு இல்லாமால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அக்காலத்திலும் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதை நான் விடவில்லை. ஆனால் வேலை தரும் நேரத்துக்கு நான் போக வேண்டும் என்ற யதார்த்தை முறித்து எனக்கு வசதிப்படும் நேரங்களிலேயே என்னால் வேலைக்கு போக முடியும் என்பதனால், நிறைய வாய்ப்புக்கள் கைவிட்டுப் போய்க்கொண்டிருந்தன.

இந்த காலத்தில் தான் அந்த அண்ணா எனக்கு அறிமுகமானார். இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு Petrol Station இல் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். பார்க்கும் எவரிடமும் ஏதாவது வேலைக்கு சொல்லி வைத்துக்கொண்டிருந்ததனால் அவரிடமும் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என சொல்லியிருந்தேன்.

பகுதி நேரமாக பலதரப்பட்ட வேலைகள் உதாரணமாக தொழிற்சாலைகளிலோ அல்லது சுத்தீகரிப்பு வேலைகளோ எடுக்கலாம் எனினும் படிக்கும் மாணவர்களுக்கு உடல் அலுப்பு தராத வேலைகளே பொருத்தமாயிருக்கும் என்பதனால் அவ்வாறான ஒரு வேலைக்கு என்னை முயற்சிக்க சொன்னவர் எனது தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி கொண்டார்.

கடந்த வருடம் September மாதத்தில் முதல் வாரம்!

அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

'என்ன மாதிரி வேலை வேணுமோ'

'ஓ.. ஓ..' நான் நாக்கை தொங்கப்பட்ட நாய் மாதிரி பதில் சொன்னன்.

'சரி நான் வேலை செய்யிற Petrol Station க்கு நாளைக்கு மத்தியானம் போல வாரும்'

அந்த Station அதிஷ்ட வசமாக எனது வதிவிடத்துக்கு மிக அருகில் இருந்தது. அடுத்த நாள் மத்தியானம் நான் அங்கு ஆஜர்.

அந்த Station இன் Boss ஒரு ஒஸ்ரேலியர். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

'English எல்லாம் எப்பிடி என்று Boss கேட்டார்.

'அதெல்லாம் சமாளிக்கலாம் என்று நான் சொன்னேன்.

Computer பாவனையஜன' பழக்கம் என்ன மாதிரி என்று கேட்டார்.

'அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று நான் சொன்னன்.

சரி! அவ்வளவும் தான். எனக்கு வேலை கிடைத்து விட்டது. 2 வாரங்கள் பயற்சிக்கு சென்றேன். அதன் பின்னர் எனது கடமை ஆரம்பித்தது.

எனது படிப்பு தவிர்ந்த, எனக்கு வசதிப்பட்ட நேரங்களில் நேரம் ஒதுக்கி தந்தார் அந்த அண்ணா.

எங்களது Station எரிபொருள் தவிர்ந்த உள்ளே உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்கள் எல்லாம் கொண்ட ஒரு கலவைக் கடை.

உணவுப்பொருட்கள் வேலை செய்பவர்களுக்கு இலவசம்! இது மட்டும் போதுமே எங்களுக்கு. பலருக்கு ஒவ்வொரு நாளுக்குமான உணவே கடையில் தான் கழிந்தது. உண்மையைச் சொன்னால் ஒரு கட்டத்தில் அளவு கணக்கு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரை நான் வேலை செய்யும் நாட்களில் கட்டாயமாக ஒரு ஐஸ்கிரீம், ஒரு குளிர்பானம் இன்னும் சில இனிப்பு வகைகள்.. இது தான் எனது மெனு.

வேலை செய்யும் நாள் மட்டும் தான் என்றில்லை. எனக்கு வெலை இல்லாத நாட்களிலும் நான் வீடு வரும் வழியிலேயே கடை இருப்பதனால் உள்ளே சென்று ஏதாவது எடுத்து சாப்பிட்டுக்கொண்டோ குடித்துக் கொண்டோ தான் வருவேன்.

இப்படியிருக்க எங்களது Boss ஒரு நடைமுறை கொண்டு வந்தார். நாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறொம் என்பதை அறிய (அதிகார பூர்வமாக அறிய) ஒவ்வொருவரும் எடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துக்குமான விலைப்பட்டியலை எடுத்து மொத்த தொகையை Station Use Account இல் போட வேண்டும். இது எங்களுக்கு சினத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி பேசாமல் இனி இலவசமாய் எடுப்பதை நிறுத்தி எடுக்கும் பொருட்களுக்கு காசு கொடுப்போமா என்று யோசித்தாலும் பிறகு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தோம்.

எங்களது கடையில் Boss ம் அவரது மனைவியும் மதியம் 1 மணி வரை நிற்பார்கள். மொத்தம் 2 Counter. அதில் ஒன்றில் 1 மணி வரை மனைவி நிற்பார். Boss கணக்கு வழக்குகள் சரி பார்ப்பார்.

அந்த ஒரு மணி வரைதான் அது ஒஸ்ரேலியருக்கு சொந்தமான கடை. அதன் பிறகு அது எங்களது கடை. அங்கு வேலை செய்கின்ற எல்லோருமே இலங்கையர்கள். அங்கு வேலை செய்பவர்கள் மூலமாகவே புதிதாக வருபவர்கள் இணைவதனால் இது தொடர்ந்தும் சாத்தியமாயுள்ளது.

வாரமொருநாள் நான் திங்கட்கிழமைகளில் இரவு வேலை செய்கின்றேன். இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை. மிகச் சரியாய் நேரங்களை பிரித்து செய்வதனால் இலகுவாக செய்ய முடிகிறது. 12 மணிக்கு அந்த நாளுக்கான கணக்கு வழக்குகளை முடித்து 3 மணி வரை வருகின்ற பால் பாண் முதலானவற்றை சரிபார்த்து வைத்தேன் என்றால் 3 மணிக்கு தொலைபேசியோடு ஐக்கியமாகி விடுவேன். இங்கே மூன்று மணியென்பது ஐரோப்பிய நாடுகளில் மாலை 7 மணி. ஆறுதலாக இருந்து கதைப்பதற்கு அவர்களுக்கு ஏற்ற நேரம்.

காலை 5.30 இலிருந்து 7 மணி வரையும் தான் சரியான நெருக்கடியாக இருக்கும். அதையும் முடித்தால்... சரி..

அதே போல வியாழக்கிழமைகளில் மதியம் 12 மணியிலிருந்து இரவு 9 மணி வரை. இருவர் வேலை செய்வோம். அரசியல் பேசி வாழ்க்கை பற்றி பேசி, வந்து போகும் நபர்களை பற்றி புறம் பேசி இப்படிப் போகும் பொழுது..

அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலிருந்து மதியம் 3 மணிவரை. இந்த Shift ஐ நான் விரும்பி எடுத்தேன். குட்ட நெருக்கடியே இருக்காது. தவிர ஞாயிற்றுக் கிழமை Boss ம் மனைவியும் வரமாட்டார்கள். Boss இன் அப்பா தான் வருவார்.

முதியவரான அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தீகரிப்பு வேலைகளில் ஈடுபடுவார். பழகுவதற்கு நல்லவர். கிறீக் நாட்டை சேர்ந்தவர். (ஒஸ்ரேலியாவில் மூன்றிலொரு பங்கினர் கிறீக் மொழி தெரிந்தவர்கள்). தாங்கள் நாடு பற்றி, தாங்கள் ஒஸ்ரேலியா வந்த காலங்கள் பற்றி சொல்லுவார்.

போன ஞாயிற்றுக் கிழமை.. அவர் மதியம் புறப்பட்டார். போகும் போது தான் பெற்றோல் அடிக்க போவதாக கூறினார். சரி அடியுங்கோ.. நான் Station use account இல் போடுறன் என்று சொன்னேன்.

உடனேயே மறுத்த அவர்.. அதெல்லாம் வேண்டாம்.. நான் வந்து காசு தருவன் என்றார். சொன்ன மாதிரியே வந்து காசும் தந்தார்.

வெளிநாடுகளில அவர்கள் தாங்கள் தங்களுடைய செலவுகளை பார்க்கிறார்கள் தான். ஆனாலும் வேலை செய்யும் நாங்களே எடுத்து சாப்பிட்டு விட்டு Station use என்று விட்டு வாறம். இவர் தன்ரை மகன்ரை கடையில வந்து பெற்றோல் அடிச்சிட்டு காசு தந்திட்டு போறார் என்று யோசித்துக் கொண்டிருந்தன்.

அந்த யோசினையோடையே வேலை முடிய ஒரு ஐஸ்கிரீமை எடுத்து Station use க்குள்ளை போட்டுவிட்டு வெளியேறினேன்.

6 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: குட்ட நெருக்கடியே இருக்காது.

முதலாளியி அப்பா குட்ட நெருக்கடியே இருக்காது.

16.18 29.8.2005

7:24 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: உன்னையறிவன்

// இங்கே மூன்று மணியென்பது ஐரோப்பிய நாடுகளில் மாலை 7 மணி//

எங்கை சுவிசுக்குதானே? பிறகென்ன ஐரோப்பா என்று சுத்தல்..?

7.39 30.8.2005

2:42 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: :) :) :)

//எங்கை சுவிசுக்குதானே? பிறகென்ன ஐரோப்பா என்று சுத்தல்..? //

:) :) :) அது தானே.

12.46 31.8.2005

11:50 PM  
Blogger 'மழை' ஷ்ரேயா(Shreya) said...

அட ..சயந்தன் இனி Station use என்டு போடாமல் காசு குடுப்பாரென்டு பாத்தா..இப்பிடிக் கவுத்தீட்டீரே!

5:42 PM  
Blogger à®•à¯Šà®´à¯à®µà®¿ said...

உங்களையெல்லாம் வேலைக்கு வச்சு என்னத்தை உழைக்கிறாங்களோ தெரியேல.

அந்தக் "குட்ட" எண்ட இன்னும் மாத்தேலப் பாத்தீரோ?

உதென்ன சுவிஸ் கதை?
அடிக்கடி இந்தநாடு உம்மட பதிவில அடிபடுது.

9:10 PM  
Blogger à®Ÿà®¿à®šà¯‡ தமிழன் said...

//அந்த யோசினையோடையே வேலை முடிய ஒரு ஐஸ்கிரீமை எடுத்து Station use க்குள்ளை போட்டுவிட்டு வெளியேறினேன்//
அதுதானே பார்த்தேன் :-).
//உதென்ன சுவிஸ் கதை?//
கொழுவி, நான் சயந்தன் UKக்குத்தான் அடிக்கடி தொலைபேசுவார் என்டெல்லோ நினைச்சுக்கொண்டிருந்தனான். நீர் இப்படிச் சொல்கின்றீர் :-).

10:04 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home