29.5.07

மே 31 - எரியும் நினைவுகள்!

1981 மே 31 நடு இரவு ஓர் இனத்துக்கெதிரான அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண நூல் நிலையம் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாயுள்ள அந் நூலக எரிப்புக் குறித்து நண்பர் சோமிதரன் எரியும் நினைவுகள் என்னும் ஆவணப் படமொன்றைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் நூலகம் குறித்தும் எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்தும் சோமிதரன் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.


27.5.07

என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்

மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் இதில குந்தியிருக்கிறதை விட அங்கை போனால் பொழுது போகும் எனத் தோன்றியது. ஆனாலும் ஆரும் வந்து கூப்பிடாமல் எப்பிடிப் போறது..? என்னைக் கூப்பிடக் கூடிய யாரும் பக்கங்களில நிக்கினமோ எண்டு அங்காலை இங்காலை பாத்தன். யாருமில்லை. இதில இருந்தாச் சரிப்படாது யாற்றையும் கண்ணில படக் கூடிய மாதிரி நின்றால்த் தான் சரியென எழுந்து ஓரமா வந்தன்.

மேடையில குழந்தையின் கையைப் பிடிச்சுத் தாயே கேக்கை வெட்டி, அவவே அப்பாக்கும் தீத்தி விட்டா. குழந்தை வீரிட்டு கத்திக் கொண்டடிருந்தது. மேடையின் கீழே ஒரு பத்துப் பதினைஞ்சு பேர் முதல்ல போய் மொய் குடுக்கவும், வீடியோக்கு முகம் காட்டவும் தயாராய் கியூவில நின்றனர்.

´´என்னடாப்பா இங்கை நிக்கிறாய்? எங்கை நிண்டனி இவ்வளவு நேரமும்.. வா வா உள்ளை வா.. ´´ ஐய்யோ தெய்வமே.. ஆரோ என்னைக் கூப்பிடுகினம். இனி பொழுது சுவாரசியத்துக்குக் குறையில்லாமல்ப் போகும். ´´சும்மா இந்தப் பக்கம் வந்தனான்´´எண்டு நான் சொல்லிக்கொள்வதை கவனத்திலேயே எடுக்காதவர் போல அவர் நடக்க, நான் பின்னால் போய் ஒரு சில தெரிந்த முகங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

´´என்ன விசர்க்கதை கதைக்கிறியள்.. பொடியள் இப்ப கிழக்கில இருந்து வெளியேறிப் போட்டாங்கள். இது ஒரு தன்மானப் பிரச்சனையெல்லோ எண்ட படியாலை அடுத்த அடி மணலாறில தான் விழும். மணலாறைக் கையுக்கை கொண்டு வந்தாத்தான் கிழக்கில அடியளைத் தொடங்கலாம்´´ எண்டு அங்கையிருந்து சொன்னவர் கையில இருந்த க்ளாசை அடிக்கடி ருசி பாத்துக்கொண்டார். அவர் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி இடைமறித்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் இப்ப முழுவதுமாய்ச் சொல்லத் தொடங்கினார். ´´கிழக்கில இப்போதைக்கு கை வைக்கிறதில்லை´´ ஏதோ தான் தான் அந்த முடிவை எடுத்தவர் மாதிரிச் சொன்னவர் ´´முதல்லை யாழ்ப்பாணத்தில தொடங்க வேணும். பொடியள் தாங்கள் பலமாயிருக்கிறம் எண்டு காட்ட வேணுமெண்டால் யாழ்ப்பாணத்தை தங்கடை கையுக்குள்ளை கொண்டு வரோணும்´´ எண்டு முடித்தார். நான் வந்ததன் பிறகு அவருக்கு இது ரண்டாவது ரவுண்ட்.

´´அது மட்டுமில்லையண்ணை. யாழ்ப்பாணத்தை அவன் பிடிச்சு பன்னிரண்டு வருசமாச்சு. இனியும் விட்டுவைக்கேலாது. கெதியில தொடங்க வேணும்´´ என்றவரை எனக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. சில வேளை கிட்டடியில வந்திருப்பார். ´´ஓ... அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர்.

´´இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ.. ´´ யாரோ உறைப்பாக் சொன்னது கேட்டது. பிறகென்ன.. இங்கையும் தெளிவாக் கதைக்கிறதுக்கு ஆரோ இருக்கினம் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன். அதுக்கு ஆரும் பதில் சொல்லேல்லை. பதில் சொல்லுறதுக்கும் ஒண்டும் இல்லைத் தானே. ரண்டு மூண்டு பேர் எழும்பி வெளியில போயிச்சினம். மேடையடியில இப்ப பெரிய கியூ நிண்டது. பிறந்த நாள் குழந்தையின் கையில குடுக்கிற என்வெலப்புக்களை தாயும் தகப்பனும் சிரிச்சுக் கொண்டே வாங்கி பின்னாலை வைத்துக்கொண்டிருந்தினம். இன்னும் கொஞ்சம் கியூ குறையட்டும் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன்.

´´என்னடா.. உதோடையே அப்ப துவங்கி இருக்கிறாய். ஏதாவது பெரிசா அடியன்´´ எண்ட ஒருவர் பெரிசா ஒரு போத்தலை என்னருகில் நகர்த்தினார். ´´இல்லையண்ணை. பெரிசு பழக்கமில்லை. லைட் தான் எப்பவும். அதோடை போகேக்கை ட்ரைவிங் செய்ய வேணும். உது சரிப்பட்டு வராது.´´ எண்டு நான் சொல்லி முடிக்க முதலே அவரிட்டை இருந்து ஒரு இடிச் சிரிப்பு வெளிவந்தது. கொஞ்ச நேரத்துக்கு கெக்கட்டம் போட்டு அவர் தொடர்ந்து சிரிக்க, இதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கெண்டு எனக்கு விளங்கவில்லை.

´´ஏன்ராப்பா உன்ர மனிசி இன்னும் ட்ரைவிங் பழகேல்லையே..? என்ரை மனிசியை வந்து ஆறுமாதத்தில பின்னாலையும் முன்னாலையும் கலைச்சு லைசென்சை எடுக்கப் பண்ணிப் போட்டன். ஒரு மூவாயிரம் செலவழிச்சது. இப்ப பார் ஒரு பிரச்சனையும் இல்லை. எவ்வளவும் ஏத்தலாம். காசைப் பாக்காதை. மனுசியை உடனை லைசென்சை எடுக்கச் சொல்லு. ´´ எண்டு சொல்லிப் போட்டு ´´பெரிய மனுசர் சொல்லுறதைக் கேட்டு நட´´ எண்டு வேறை சொன்னார்.

வெளியில கியூ சரியாக் குறைஞ்சிருந்தது. மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை அது எண்டு எண்ணிக் கொண்டேன்.

வெளியில வெயில் நல்லாயிருந்தது. வரும் வழியில் லேசாக மனைவியிடம் கேட்டேன். ´´என்னமாதிரி கார் பழகிற பிளானுகள்.. ´´
´´ஓ.. இப்பதானே படிக்கிறன். எடுக்கத் தான் வேணும். ஏன் கேட்கிறாய்.. ´´
´´இல்லை கெதியில படிச்சு லைசென்சை எடன். மனசு வைச்சுப் படிச்சாயெண்டால் கெதியில எடுக்கலாம். சோதினையை எடுத்து விட்டாய் எண்டால் பிறகு நானே பழக்கி விடுவன். சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கேலாது தானே´´
´´ம்.. என்ன திடீரென்று அக்கறை.. ´´
´´ஒண்டுமில்லை.. இங்கை எல்லா பொம்பிளையளும் கார் ஓடுகினம். என்ர மனுசியும் ஓட வேணும் எண்டு எனக்கும் ஆசையிருக்கும் தானே..அதோடை அந்தரமாவத்துக்கும் உதவும் தானே.. ´´
சிக்னலில் இப்போ சிவப்பு லைட் எரிந்தது. காரை நிறுத்தினேன். பூவுலகில் பொய் சொல்லும் போது மேலுலகில் கடவுளின் இடத்தில் சிவப்பு லைட் எரியும் கதையொன்று தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.

20.5.07

மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே...

வேறொன்றும் இல்லைங்க... சும்மா நாங்க முன்று பேர் சேர்ந்து மிகப் பழைய காலத்துப் பாடல்கள் பற்றியும் அதுக்கு அப்புறமா வந்த படத்துப் பாடல்கள் பற்றியும் பேசினோம். நாங்கள் பிறக்கிறதுக்கு முன்பே வந்த பாடல்கள் சில ஏன் எங்களுக்குப் பிடிச்சிருக்கு அந்தப் பாடல்கள் என்ன என்பது தான் இந்த முறைக்கான விசயம். அவ்வப் போது பாடியுமிருக்கிறம் எண்டு சொல்லி உங்களை இப்பவே எச்சரிக்கையும் செய்யிறம்.

வழமையாவே நாங்கள் ஒலிப்பதிவுகளைத் தொடங்கிறதும் முடிக்கிறதும் மொட்டையாத்தான். தொடங்கும் போதாவது வணக்கம் சொல்லுவம். முடியும் போது அதுவுமில்லை. ஆனா இந்த முறை இந்த ஒலிப்பதிவு நீங்கள் ஆரும் எதிர்பார்க்கா வண்ணம் முடிஞ்சிருக்கு. அது என்னெண்டு அறிய ஒலிப்பதிவை முழுசாக் கேளுங்கோ எண்டு சொல்லுறது வீண்வேலை. ஏனென்டால் நீங்கள் ஓட விட்டும் கேட்பியள். எப்பிடியெண்டாலும் கேளுங்கோ.. ஆனா கடைசி நிமிடங்களைக் கேட்கத் தவற வேண்டாம். Play பொத்தானை அழுத்திய பின்னர் சற்றுத் தாமதித்தே ஆரம்பிக்கவும். பொறுமை காக்கவும்


18.5.07

கேரளாவில் சோமிதரனின் பிட்டு அனுபவங்கள்

அண்மையில் சோமிதரன் கேரளா போய் வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பிட்டு அனுபவங்கள் இருப்பினும் பிட்டுக்குப் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற கேரளாவில் அவரது பிட்டு அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு.

மொக்கைப் பதிவு வழங்கி நீண்ட நாட்களாகி விட்டது என்பதனாலும் அதுவே எந்த விதமான புயல்களுக்கும் கால் கோலாய் அமையாது என்ற காரணத்தினாலும் எழுதுவதில் உள்ள ஆர்வமும் தீவிரமும் இல்லாது போய்விட்டதாலும் இவ்வாறான பதிவுகள் இலகுவாகத் தெரிகின்றன.

தவிர சென்ற முறை வெளியான சோமியை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் திரைமறைவு நாடகங்கள் என்பதான கிசுகிசுவை பொய்யாக்கவும்..::))))) வெளிவிடுகின்ற இவ் ஒலிப்பதிவைக் கேளுங்கள். பிட்டுப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


14.5.07

சூடான பதிவர் ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு

Ravi Dreams ரவிசங்கருடன் நடாத்திய கலந்துரையாடல் ஒலிப்பதிவு இது. வலைச் சூழலில் தினமும் இரண்டு மூன்று பின்னூட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு பதிவுக் கயமை :) செய்யும் ஒரு வலைப் பதிவர் அவர். ஒரு நாளில் 8 பதிவுகள் இட்டு சாதனை புரிந்த அவர், இதனால் திரட்டிகளின் முதற் பக்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுவோமோ என்பாதாலேயோ திரட்டிகளை விட்டு போய்விட்டார். அவருடனான இக் கலந்துரையாடலில் உபுண்டு, வேர்ட்பிரஸ், மாற்று மற்றும் திரட்டிகள் குறித்து அவர் பேசியிருக்கிறார். இவை பற்றி ஏற்கனவே அவர் பல பதிவுகளில் எழுதியும் இருக்கிறார்.

இவ் ஒலிப்பதிவினை ஏலவே கேட்ட ஒருவர் எனக்குச் சொன்னார்.
உங்களுடைய சிரிப்புக்கு போட்டியாக ரவிசங்கர் உருவாகிறார்.


12.5.07

பண்டி (பன்றி) பார்க்கலாம் வாங்க

இது வழமையான ஒரு பன்றிப் பதிவு அல்ல :)
நான் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலில் பன்றி என்பதனை பண்டி எனத் தான் சொல்வது வழமை. இதுவே சில சமயங்களில் ஆட்களை போடா பண்டி எனத் திட்டவும் பயன்படுகிறது. தமிழகத்தில் கூட பன்றி என்ற சொல் சில இடங்களில் பன்னி எனத் திரிபடைந்திருப்பதை அறிந்திருக்கிறேன்.

இங்கே சுவிசில் நான் வாழும் நகரச் சூழல் அற்ற பெரு வயல்வெளிகளும் ஏரிகளும் பண்ணைகளும் அமைந்திருக்கின்ற கிராமச் சூழல் ஒன்றில் வீட்டிற்கு மிக அண்மையாக இருக்கும் ஒரு பன்றிக் கூண்டை பதிவு செய்து காட்சிப்படுத்துகிறேன். மாலை வெயிலில் வீடியோவிற்கான ஒளி அமைப்பு சரியாக வில்லை. அதனால் என்ன.. ?


4.5.07

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு

2002 களில இலங்கையில யுத்தம் தவிர்க்கப்பட்டிருந்த அந்த சமாதான காலத்தில தான் எனக்கு நண்பர்களோடு அதிகம் வெளியில சுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப் போனால் அதுக்கு பிறகு தான் வீட்டில தேடாமல் விட்டவை. கொழும்பில நான் ராகுலன் செந்தூரன் சோமி இந்த நாலு பேரும் தான் ஒரு செட். அந்தக் காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை திறக்கப் பட்டிருந்தது. அதனாலை பின்னேரங்களில அங்கை தான் நிப்பம். நாலு பேரும் சுத்த வர இருந்தமெண்டால் 9 அல்லது 10 மணி வரை உள்ள நாட்டு விசயம் எல்லாம் அலசுவம்.

நானும் ராகுலனும் மொக்கைக்கு மட்டுமே பெயர் போனவர்கள். சோமியும் செந்தூரனும் ஒருவித அறிவிஜீவித்தனத்தோடை கதைக்கிற ஆக்கள். அப்பிடி அவை கதைக்கும் போது கொமன்ற் அடிக்கிறது தான் எங்கடை வேலை. அதுவே நல்ல சுவாரசியமாக இருக்கும்.

அது மாதிரியான ஒரு அலசல் தான் இது. சோமிதரன் வழமைபோலவே ஒரு வித மிதப்பு நிலையில் இருந்து அறிவுசீவித்தனமாகவே கதைக்கிறார். கேளுங்க..


3.5.07

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

இது நான் இரண்டோ அல்லது மூன்றாவது வகுப்போ படிக்கும் போது நடந்தது என நான் குறிப்பிடுவது, உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வழமையாக இதெல்லாம் பத்தோ அல்லது பதினொன்றோ படிக்கும் போது தானே நடக்கும் என்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ஓம் அப்பவும் நடந்தது தான். (அது வேறை கதை) ஆனா இது அதெல்லாத்துக்கும் மூத்ததும் முதன்மையானதும் என்பது தான்.

வடிவாச் சொன்னால் அது நான்காம் ஆண்டு (வகுப்பு 3) படிக்கும் போது நடந்தது தான். என்னோடை படிச்ச ஆக்களில சிலரை இந்தக் கதைக்காக நான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது. பரந்தாமன், கண்ணதாசன், ஐயா (இவனை இப்படித்தான் கூப்பிடுறாங்கள். முழுப்பெயர் மறந்து போச்சு), பாமினி, ராதிகாவோ ரசிகாவோ, இவர்களோடு நான். இவர்கள் போதும். இதில ஒருவித போட்டி எனக்கும், கண்ணதாசனுக்கும், பாமினிக்கும் இடையில் இருந்தது. இப்ப யோசித்தால் அது எங்களுக்குள் இயல்பாக எழுந்த போட்டியில்லாவிட்டாலும், வெளியிருந்த ஆக்களால் ஏற்படுத்தப்பட்ட, அல்லது ஊட்டப்பட்ட போட்டிதான் அதுவெனப் புரிகிறது. அதுவும் அடுத்த வருசம் நடக்க இருந்த புலமைப் பரிசில் பரீட்சைக் காய்ச்சல் பெற்றோர்களூடாக எங்களுக்கும் தொற்றியிருந்த காலம் அது.

என்னுடைய கையெழுத்து கொஞ்சம் உறுப்பாக இருப்பதுண்டு. இது தான் அந்தச் சம்பவத்துக்கு காரணமாய் அமைந்தது. வகுப்பில் ரீச்சர் வராத ஒரு நாள் பரந்தாமன் தன்ரை கொப்பி நடுப்பக்கத்தில ஒரு காதல் கடிதம் எழுதித் தரச் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதுவது தான் அவனுடைய திட்டம். அவனுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதால எனக்கு எந்த ஒரு இழப்பும் இல்லையெண்ட படியாலை நானும் அதுக்குச் சம்மதித்தேன்.

கடுமையாக யோசித்துப் பார்த்தாலும் அந்தக் கடிதம் முழுவதும் நான் என்ன எழுதினேன் என நினைவுக்கு வருகுதில்லை. ஆனால் இரண்டு விசயத்தை சொல்லலாம். அது கடிதம் எங்கும் பரந்தாமன் தன்னை, அத்தான் என விளித்து எழுதச் சொன்னான். அதாவது அன்பு அத்தான் எழுதுவது எண்ட மாதிரியும், இப்படிக்கு அத்தான் எண்ட மாதிரியும்.

அதை விட இன்னொரு விசயம் இன்னும் பம்பலா இருக்கும். கடிதத்தின் இடையே அவன் ஒரு பாடலின் வரிகளைச் சேர்க்க விரும்பியிருக்க வேண்டும். அதனாலை கடிதத்தின் முடிவில் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என அவன் எழுதச் சொன்னான். எனக்கென்னவோ அந்த வரிகள் பிடிக்கவில்லை எண்டதால என்ர அபிப்பிராயத்தை சொல்லத் தொடங்கினன்.

உது பழைய பாட்டு. உதை விட கண்ணே உனைத் தேடுகிறேன் வா எண்ட பாட்டை எழுதினால் நல்லாயிருக்கும் என நான் சொல்ல, அதை அவனும் ஓமெண்டு ஏற்றுகொள்ள, கடைசியில கடிதம் முடிவுக்கு வாற நேரம் கண்ணதாசன் எல்லாத்தையும் குழப்பிட்டான். ஓம்.. அவன் நாங்கள் கடிதம் எழுதின விசயத்தை, அடுத்த பாடத்துக்கு வந்த ரீச்சரிட்டை போட்டுக் கொடுத்திட்டான். எங்கள் ரண்டு பேருக்கும் பப்ளிக்கில வைச்சு அடியோ அடி. ரீச்சர் பரந்தாமன் கேட்ட படியாலை தான் எழுதிக் கொடுத்தனான் எண்டு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக்கு விழுந்த அதேயளவு அடி தான் எனக்கும் விழுந்தது.

இதெல்லாத்தையும் விட, அன்று விழுந்த அடிகள் எனக்கு எழுத்தறித்தவர்களின் கண்டிப்பை உடனடியாகவும், அதே வேளை அவையள் என்ன ஆக்கள்..? நீங்கள் என்ன ஆக்கள்? உதெல்லாம் தேவையோ என்ற ரீதியில் அவர்கள் சொன்ன வார்த்தைகள், அவர்களின் சமூக மனநிலையை, பின்னாளிலும் உணர்த்தின.

பின்னாளில் இந்தச் சம்பவம் மிகப் பிரபலமாகி ஊர் வரைக்கும் பரவி விட்டிருந்தது. இன்றைக்கும் எனக்கு நெருக்கமான நண்பர்களிடத்தில் மூன்றாம் ஆண்டில கடிதம் எழுதினவன் என்ற பெயரில் நான் விளிக்கப் படுவதுண்டு. மூன்று வயதில் தேவாரம் பாடிய சம்பந்தரைப் போல.

சில பிற்குறிப்புக்கள் : காட்டிக் கொடுத்த கண்ணதாசன் எனது நெருங்கிய உறவினன். அவன் மீதிருந்த கோபத்தை பின் நாட்களில் பாடசாலையில் செய்த நாடகங்களில், அவனுக்கு காக்கை வன்னியன், எட்டப்பன் வேடங்களைக் கொடுத்து தீர்த்துக் கொண்டேன். 2005 இல் அவனைச் சந்தித்து இந்த சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னான் அதெப்படி நான் ஒருத்தன் அவளைக் காதலிக்க நீங்கள் கடிதம் குடுப்பியள்..?

இதேவேளை சோமிதரனை சந்தித்த எனது பாடசாலை நண்பர் ஒருவன் இதே கதையை வரலாற்றைத் திரிபு படுத்தி சோமிக்கு சொல்லியிருந்தான். அதாவது நிஜமாகவே நான் தான் கடிதம் எழுதியதாகவும் அகப்பட்ட நேரத்தில் அதனை பரந்தாமன் தலையில் கட்டிவிட்டதாகவும் அவன் சோமிக்கு சொல்லியிருந்தானாம். சோமி பாவம் . சந்தர்ப்ப சூழ்நிலைகள் சோமியை நம்ப வைத்திருக்கின்றன.