3.5.07

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

இது நான் இரண்டோ அல்லது மூன்றாவது வகுப்போ படிக்கும் போது நடந்தது என நான் குறிப்பிடுவது, உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வழமையாக இதெல்லாம் பத்தோ அல்லது பதினொன்றோ படிக்கும் போது தானே நடக்கும் என்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ஓம் அப்பவும் நடந்தது தான். (அது வேறை கதை) ஆனா இது அதெல்லாத்துக்கும் மூத்ததும் முதன்மையானதும் என்பது தான்.

வடிவாச் சொன்னால் அது நான்காம் ஆண்டு (வகுப்பு 3) படிக்கும் போது நடந்தது தான். என்னோடை படிச்ச ஆக்களில சிலரை இந்தக் கதைக்காக நான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது. பரந்தாமன், கண்ணதாசன், ஐயா (இவனை இப்படித்தான் கூப்பிடுறாங்கள். முழுப்பெயர் மறந்து போச்சு), பாமினி, ராதிகாவோ ரசிகாவோ, இவர்களோடு நான். இவர்கள் போதும். இதில ஒருவித போட்டி எனக்கும், கண்ணதாசனுக்கும், பாமினிக்கும் இடையில் இருந்தது. இப்ப யோசித்தால் அது எங்களுக்குள் இயல்பாக எழுந்த போட்டியில்லாவிட்டாலும், வெளியிருந்த ஆக்களால் ஏற்படுத்தப்பட்ட, அல்லது ஊட்டப்பட்ட போட்டிதான் அதுவெனப் புரிகிறது. அதுவும் அடுத்த வருசம் நடக்க இருந்த புலமைப் பரிசில் பரீட்சைக் காய்ச்சல் பெற்றோர்களூடாக எங்களுக்கும் தொற்றியிருந்த காலம் அது.

என்னுடைய கையெழுத்து கொஞ்சம் உறுப்பாக இருப்பதுண்டு. இது தான் அந்தச் சம்பவத்துக்கு காரணமாய் அமைந்தது. வகுப்பில் ரீச்சர் வராத ஒரு நாள் பரந்தாமன் தன்ரை கொப்பி நடுப்பக்கத்தில ஒரு காதல் கடிதம் எழுதித் தரச் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதுவது தான் அவனுடைய திட்டம். அவனுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதால எனக்கு எந்த ஒரு இழப்பும் இல்லையெண்ட படியாலை நானும் அதுக்குச் சம்மதித்தேன்.

கடுமையாக யோசித்துப் பார்த்தாலும் அந்தக் கடிதம் முழுவதும் நான் என்ன எழுதினேன் என நினைவுக்கு வருகுதில்லை. ஆனால் இரண்டு விசயத்தை சொல்லலாம். அது கடிதம் எங்கும் பரந்தாமன் தன்னை, அத்தான் என விளித்து எழுதச் சொன்னான். அதாவது அன்பு அத்தான் எழுதுவது எண்ட மாதிரியும், இப்படிக்கு அத்தான் எண்ட மாதிரியும்.

அதை விட இன்னொரு விசயம் இன்னும் பம்பலா இருக்கும். கடிதத்தின் இடையே அவன் ஒரு பாடலின் வரிகளைச் சேர்க்க விரும்பியிருக்க வேண்டும். அதனாலை கடிதத்தின் முடிவில் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என அவன் எழுதச் சொன்னான். எனக்கென்னவோ அந்த வரிகள் பிடிக்கவில்லை எண்டதால என்ர அபிப்பிராயத்தை சொல்லத் தொடங்கினன்.

உது பழைய பாட்டு. உதை விட கண்ணே உனைத் தேடுகிறேன் வா எண்ட பாட்டை எழுதினால் நல்லாயிருக்கும் என நான் சொல்ல, அதை அவனும் ஓமெண்டு ஏற்றுகொள்ள, கடைசியில கடிதம் முடிவுக்கு வாற நேரம் கண்ணதாசன் எல்லாத்தையும் குழப்பிட்டான். ஓம்.. அவன் நாங்கள் கடிதம் எழுதின விசயத்தை, அடுத்த பாடத்துக்கு வந்த ரீச்சரிட்டை போட்டுக் கொடுத்திட்டான். எங்கள் ரண்டு பேருக்கும் பப்ளிக்கில வைச்சு அடியோ அடி. ரீச்சர் பரந்தாமன் கேட்ட படியாலை தான் எழுதிக் கொடுத்தனான் எண்டு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக்கு விழுந்த அதேயளவு அடி தான் எனக்கும் விழுந்தது.

இதெல்லாத்தையும் விட, அன்று விழுந்த அடிகள் எனக்கு எழுத்தறித்தவர்களின் கண்டிப்பை உடனடியாகவும், அதே வேளை அவையள் என்ன ஆக்கள்..? நீங்கள் என்ன ஆக்கள்? உதெல்லாம் தேவையோ என்ற ரீதியில் அவர்கள் சொன்ன வார்த்தைகள், அவர்களின் சமூக மனநிலையை, பின்னாளிலும் உணர்த்தின.

பின்னாளில் இந்தச் சம்பவம் மிகப் பிரபலமாகி ஊர் வரைக்கும் பரவி விட்டிருந்தது. இன்றைக்கும் எனக்கு நெருக்கமான நண்பர்களிடத்தில் மூன்றாம் ஆண்டில கடிதம் எழுதினவன் என்ற பெயரில் நான் விளிக்கப் படுவதுண்டு. மூன்று வயதில் தேவாரம் பாடிய சம்பந்தரைப் போல.

சில பிற்குறிப்புக்கள் : காட்டிக் கொடுத்த கண்ணதாசன் எனது நெருங்கிய உறவினன். அவன் மீதிருந்த கோபத்தை பின் நாட்களில் பாடசாலையில் செய்த நாடகங்களில், அவனுக்கு காக்கை வன்னியன், எட்டப்பன் வேடங்களைக் கொடுத்து தீர்த்துக் கொண்டேன். 2005 இல் அவனைச் சந்தித்து இந்த சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னான் அதெப்படி நான் ஒருத்தன் அவளைக் காதலிக்க நீங்கள் கடிதம் குடுப்பியள்..?

இதேவேளை சோமிதரனை சந்தித்த எனது பாடசாலை நண்பர் ஒருவன் இதே கதையை வரலாற்றைத் திரிபு படுத்தி சோமிக்கு சொல்லியிருந்தான். அதாவது நிஜமாகவே நான் தான் கடிதம் எழுதியதாகவும் அகப்பட்ட நேரத்தில் அதனை பரந்தாமன் தலையில் கட்டிவிட்டதாகவும் அவன் சோமிக்கு சொல்லியிருந்தானாம். சோமி பாவம் . சந்தர்ப்ப சூழ்நிலைகள் சோமியை நம்ப வைத்திருக்கின்றன.

9 Comments:

Anonymous matharasi said...

என்னா ரம்பம் பெரிசா அடிச்சுக்கிறீங்க. மூனாம் தரத்திலை சம்பந்தர் அது இது என்று. இந்த நாலாம் கிளாசிலையே டீச்சருக்கே லெட்டர் கொடுத்தவங்களே இருக்காங்க

12:40 PM  
Anonymous Anonymous said...

//சோமி பாவம் . சந்தர்ப்ப சூழ்நிலைகள் சோமியை நம்ப வைத்திருக்கின்றன//

சோமி பாவம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சோமியை இப்பவும் எத்தனை எத்தனையை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன....

12:49 PM  
Blogger ரவிசங்கர் said...

எனக்கென்னவோ, சோமி அறிந்த வரலாறு தான் உண்மை எனவும் பிற தான் திரித்து கூறப்பட்டது எனவும் தோணுது ;)

2:58 PM  
Anonymous Anonymous said...

//எனக்கென்னவோ, சோமி அறிந்த வரலாறு தான் உண்மை எனவும் பிற தான் திரித்து கூறப்பட்டது எனவும் தோணுது ;)//

ரிப்பிட்டு

10:02 PM  
Blogger கானா பிரபா said...

சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது சயந்தன் தான் குற்றவாளி என நம்பப்படுகிறது.

இப்படிக்கு கடைசி வாங்கான்


(கானா பிரபா மனதுக்குள்) நானெண்டால் பரந்தாமனுக்குப் பதில் என்ர பெயரைப் போட்டுக் கொடுத்திருப்பன்

10:08 PM  
Anonymous - நீதி said...

//சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது சயந்தன் தான் குற்றவாளி என நம்பப்படுகிறது.//

- நாட்டாமை தீர்ப்பை மாத்து

10:28 PM  
Anonymous Anonymous said...

சோமி அறிந்தது தான் உண்மை உண்மை உண்மை

4:10 AM  
Anonymous Anonymous said...

கடைசி வரை அந்தப்பெண் யார் என்று சொல்லவே இல்லையே. பாமினியா ராதிகாவா?

உறவுக்காரி

7:07 AM  
Blogger சயந்தன் said...

//நானெண்டால் பரந்தாமனுக்குப் பதில் என்ர பெயரைப் போட்டுக் கொடுத்திருப்பன்//

கொடுக்க விட்டானா கண்ணதாசன்..

10:42 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home