19.11.05

போய் வருகின்றேன், நன்றி!

என் இனிய மெல்போண் நகரிலிருந்து விடை பெற்று சிட்னி நகர் குடி புகுகின்றேன். அதற்கென்ன ஒஸ்ரேலியாவில் இருக்கும் இரண்டு நகர்கள்தானே என இலகுவாக சொல்ல முடியாத படி, 1000 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் இருக்கின்றன இந்த இரண்டு நகரங்களும். காலநிலை மற்றும் சூழலியல் இவற்றிலும் இரண்டுக்கும் வேறு பாடுகள் இருக்கின்றன.

மெல்போணில் ஐரோப்பிய கலாசார தாக்கமும் சிட்னியில் அமெரிக்க கலாசார தாக்கமும் இருப்பதாக சொல்கின்றார்கள். காலநிலையில் மெல்போணின் குளிர் இந்த வருடம் Snow கொட்டுகின்ற அளவிற்கு அதிகமானது. சிட்னியில் சீதோஷ்ண நிலை சில சமயம் இலங்கையின் காலநிலையை நினைவு படுத்தும்.

சிட்னியில் சென்று தங்கியிருந்த காலங்களில் எல்லாம் நான் ஊரில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை பெற்றிருக்கின்றேன். ஒரு வேளை நான் அங்கு தங்கியிருந்த வீட்டுச் சூழல் அதற்கு காரணமாயிருக்கலாம்.

மெல்போணில் வந்து இறங்கிய போது, இருந்த தனிமைப் பயம் சிட்னி சென்று இறங்கும் போது இருக்கப் போவதில்லை என்னும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

மெல்போணில் இருந்த வரைக்கும், சுவாரசியமான நிறைய நினைவுகள் இருக்கின்றன. வலைப்பதிவு பற்றி யோசித்தால் நானும் வசந்தனும் ஏற்படுத்திய குழப்பங்கள் தான் நினைவில் வருகின்றன. என்ன காரணத்தினாலேயோ நானும் அவரும் ஒருவரே என்ற கருத்து உலவியதும் அதை நாம் ஏற்பது போலவும் ஏற்காதது போலவும் பல இடங்களில் விளையாடியமையை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

வசந்தன்! தென்துருவ வலைப்பதிவர் சங்க தலைமையை, நான் கண்ணாக கட்டி வளர்த்த அவ் வமைப்பை, என் கண்ணையே உமது கையில் தந்துவிட்டு செல்கிறேன். நீங்கள் தான் இனி எல்லாம்! உமது நடவடிக்கைகள் சிட்னியில் இன்னொரு தலைமையை தொடங்க வழி வகுக்கக் கூடாது.

தனித்தியங்கும் ஆற்றல் தந்த மெல்போணுக்கு நன்றி,

கலகலப்பான நண்பர்களாக இருந்த வசந்தன், அருணன் முதலானோர்க்கு நன்றி,

எனது கல்வியை சிட்னிக்கு மாற்ற அனுமதி தந்த பள்ளிக்கூடத்துக்கு நன்றி,

நான் ஒழுங்கா வேலை செய்வதில்லை என கூறிக் கூறியே.. கடைசிவரை என்னை வேலை செய்ய அனுமதித்த, Petrol Station முதலாளிக்கு நன்றி.

நன்றி நண்பர்களே, சிட்னியில் இருந்து சந்திப்பேன். தாமதமாய் என்றாலும்...

7.11.05

கறிக் கடை - குறும்படம்

ஒஸ்ரேலிய - மெல்போண் - monash பல்கலைக்கழக மாணவர்கள் கறிக்கடை என்னும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 9 நிமிடங்கள் வரை நீள்கின்ற இப்படத்தினை உங்கள் பார்வைக்கு இங்கே இடுகின்றேன்.

வலைப்பதிவில் பல குறும்பட ஜாம்பவான்களும் ஜாம்பவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படத்தினை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் உங்கள் கருத்தில் மேலும் பல புதிய குறும்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் படத்தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

மேலும் ஏதாவது குறும்பட போட்டிக்கு தகுதியானதா எனவும் சொல்லவும்.
இப்போ படத்தை பார்ப்பதோடு.. நீங்கள் அறிந்த யாராவது நடிக்கிறார்களா எனவும் பாருங்கள்..

இங்கே அழுத்தி தரவிறக்க.. (14 MB)