17.6.07

ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள்

அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு.

1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.

இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள்.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.


நாள்: யூன் 3 1987

இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை நிலையம்.
நேரம்: காலை 5.30,

No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.
மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5 சிறப்பு அனுபவம் பெற்ற விமானிகள் வேறு விமானங்களிலும் பறப்பை ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு யெலஹங்கா (Yelahanka) விமானத் தளத்தில் தரையிறங்கும் படி அறிவுறுத்தப் பட்டது.

இரவு 9 மணியளவில் விமானிகள் தமது நடவடிக்கைக்கான அறிவுறுத்லை பெறும் வரையில் தமக்கான செயற்திட்ட விபரமெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போது சொல்லப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்களுக்கான உணவு மற்றும் உதவிப் பொருட்களை வானிலிருந்து விநியோகிக்க உள்ள An-32 விமானத்திற்கு துணையாக செல்ல இருக்கின்றனர்.

இதற்கிடையில் நாட்டின் வடக்கில் ஆக்ராவில் (Agra ) PTS (Paratroopers Training School) தளத்தில் ஐந்து An - 32 விமானங்களில் உதவிப் பொருட்களை நிரப்பும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பொதுவாக இங்கு பரா றெஜிமென்டில் (Para regiment) உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு பரசூட் பயிற்சியே வழங்கப் படுகின்ற போதும், இன்று காலை அஜித் பவ்னானி குழுவினர் பெற்றதைப் போன்ற எதிர்பாரா அறிவுறுத்தலுக்கமைய, அவர்கள் உதவிப் பொருட்களையும் முடிந்தளவான மரக்கறி வகைகளையும் அட்டைப்பெட்டிகளிலும் பொலீத்தீன் பைகளிலும் அடைத்து அவற்றை பரசூட்டுகளுடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

1971 போருக்குப் பின்னர் முதற் தடவையாக இன்னொரு நாட்டின் வான் பரப்பினுள் நுழைந்து நடாத்த இருந்த இந் நடவடிக்கைக்கு ஓபரேசன் பூமாலை என பெயரிடப்பட்டது.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.

கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின. தற்போதைய ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தின் கால்கோலாகவும் அது அமைந்தது.

யூன் 4

ஆக்ராவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றும் பணியாளர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் அதனை முடித்தனர். பொருட்களுடன் தயாராய் நின்ற An - 32 விமானம், பகல் வெளிச்சம் ஏற்பட்ட பின்னர் சுமார் 8 மணியளவில் பெங்களூரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. விமானத் தலைமையகத்திலிருந்து பெங்களூரிற்கு வந்திருந்த எயர் வைஸ் மார்ஸல் டென்சில் கீலொர் ( Air vice marshal Denzil Keelor) இறுதி நேர அறிவுறுத்தல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மதியம் தாண்டிய 3 மணி, புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் வெளிவிவகார அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். நான்கு மணியளவில் இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தில் ஈடுபடும் என்ற செய்தி திரு நட்வார் சிங் அவர்களினால் இலங்கைத் தூதுவருக்கு அங்கு வைத்துச் சொல்லப்பட்டது. கூடவே இந் நடவடிக்கை முழுமையாக செய்து முடிக்கப் படும் என தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கை இராணுவ தரப்பில் இருந்து வெளிப்பட்டால், அவை மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இராணுவ வழியில் எதிர் கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப் பட்டது.

ஆயினும் அந்த எச்சரிக்கை தேவையற்றதாக இருந்தது. இலங்கை விமானப் படை வசம் அப்போதிருந்த சியாமசெட்டி ரக விமானங்களால் இந்திய விமானங்களை வானில் வைத்து எதிர் கொள்வதென்பது சாத்தியமற்றதாயிருந்தது. அப்படி ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கைத் தரப்பிலிருந்து வருமானால் அது நிலத்திலிருந்து வரும் சூடுகளாகவே இருக்க முடியும்.

அதே நேரத்தில் பெங்களுரில் இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்திருந்தன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்களையும் An-32 விமானத்தில் அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டு 35 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவில் 7 நபர்களாக ஐந்து விமானங்களிலும் அவர்கள் ஏற்றப் பட்டனர்.

மாலை 3.55

முதலாவது An-32 விமானம் கப்டன் சுந்தர் மற்றும் ஸ்வாரப் ( Flt Lt SR Swarup ) ஆகியோரின் வழி நடத்தலில் மேலெழுந்தது.யாழ்ப்பாணம் சென்று மீளும் 900 Km தூரத்தைக் கொண்ட ஒரு சுற்றுப் பறப்பாக இது அமையும். இதற்கிடையில் நான்கு மிராஜ் விமானங்கள் பவ்னானி தலைமையில் பறப்பில் இருந்தன. இலங்கை விமானப் படைகள், வான் எதிர்ப்பில் ஈடுபட்டால் பயன்படுத்துவதற்காக இரண்டு மத்ரா மஜிக் II(Matra Magic) வானிலிருந்து வானுக்கான ஏவுகணைகள் அவற்றில் பொருத்தப் பட்டிருந்தன. ஆயினும் அவை தேவைப் படவில்லை.

பாக்கு நீரிணையை கடந்து முடித்த An-32 விமானங்களிலிருந்து 1000 அடி மேலே மிராஜ் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டன. ஐந்தாவது மிராஜ் இந்தியக் கரையோரமாக வான் அலைத் தொடர்புக்கான இணைப்புக்காக பறந்து கொண்டிருந்தது. தவிர இரண்டு An - 32 விமானங்களும் பெங்களூருக்கான றேடியோத் தொடர்பின் இடை இணைப்பிற்காக பறந்தன.

இந் நடவடிக்கையின் வழி நடத்தல் அதிகாரி கப்டன் சுந்தர் 4.47 அளவில் கொழும்பிற்கான றேடியோத் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்தார். அது கை கூடவில்லையாயினும் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது கொழும்பு ATC (Air-traffic control) றேடியோத் தொடர்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் பதிலெதனையும் தரவில்லை.

நேரம் மாலை 4.50

விமானங்கள் யாழ் குடாநாட்டின் வான் பரப்பைத் தொட்டன. An-32 தனது பறப்பின் உயரத்தை 1500 அடி வரை குறைத்தது. கட்டளைக்கு ஏற்ப கதவுகள் திறக்கப் பட்டு உதவிப் பொருட்கள் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று இறங்கின.

நடவடிக்கை பூரணப்படுத்தப்பட்டது. விமானங்கள் வடபகுதியில் அமைந்த இலங்கை விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறப்பில் ஈடுபட நேர்ந்தாலும் இலங்கை இராணுவப் படைகளிடமிருந்து நிலத்திலிருந்தோ வானிலிருந்தோ எதிர்ப்பெதுவும் வரவில்லை.

மாலை 6.13 அளவில் விமானங்கள் பெங்களூரில் சென்று தரையிறங்கின. விமான தளத்தில் விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பிரதமர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து செய்திகள் அனுப்பப் பட்டன.

இலங்கை இந்நடவடிக்கையை அரச மற்றும் இராணுவ வன்முறைச் செயல் என கண்டித்தது. அமெரிக்கா கவலை மட்டும் தெரிவித்தது. மேலதிக கருத்துக்களைச் சொல்ல மறுத்தது.

விநியோகிக்கப் பட்ட உதவிப் பொருட்டகள் 23 தொன்களை விட அதிகமில்லையென்பதோடு முழுமையானவையுமல்ல. ஆனால் வலுப்பெறும் சிவில் யுத்தத்தினை இந்தியா ஒரு போதும் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்காது என்ற செய்தியினை இலங்கை அரசுக்கு இந்த நடவடிக்கை சொன்னது.

If it was against the interests of the ethnic Tamil minorities, then it would be against Indian interests as well as there would be corresponding repercussions in its own indigenous tamil population.

அண்மைய செய்தி - யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
Sources: www.
bharat-rakshak.com

4 Comments:

Anonymous Anonymous said...

1987
கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின.

2007:
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்..

11:34 PM  
Anonymous Anonymous said...

ம்..
ம்..
ம்..

1:29 AM  
Anonymous Anonymous said...

ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேசம்
ஊரைத் தெரிஞ்சு கிட்டேன்...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் வேறு இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை..

4:33 AM  
Anonymous Anonymous said...

வல்ல்ரசுகளுக்கிடையேயான காய்நகர்த்தல்களில் சிவிலியன் இழப்பு என்பது எப்போதும் ஒரு Collateral damage தான்.

5:29 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home