4.3.07

நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.

ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.

ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.

நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.

பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.

ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.

இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)

என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?

ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..

முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..

41 Comments:

Blogger வி. ஜெ. சந்திரன் said...

//ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..//

எனக்கு தெரிய அப்படி வீட்டுக்கு போய் பெண்பார்க்கும் பழக்கம் இருந்ததில்லை. இரு வீட்டுகாரரும் சாதகம் , இன்ன பிற பொருத்தங்களும் :) பாத்து இந்த திருமணம் கை கூடும் என்பதன் பிற்பாடு தான் விருந்து கொண்டாட்டம் எண்டு ஒண்டு நடக்கும். பொண்ணும் மாப்ப்பிளையும் ஒருவரை ஒருவர் பார்ப்பதாக இருந்தால் பொதுவா யாருக்கும் தெரியாம, எங்கயன் பொது இடம் நீங்க சொன்ன மாதிரி கோயிலிலை பாத்து லுக்கு விடுறதோட சரி :) பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் பொம்பிளை பாக்க கிடையாது.


ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி அப்ப முருங்கை நடுறதில்லை. அது நடுறது தாலிக்கு பொன்னுருக்கும் நாள் அன்று. பொன்னுருக்கியதன் பின் மாப்பிளை வீட்டை பொம்பிளை வீட்டு காரரும், பொம்பிளை வீட்டை மாப்பிளை வீட்டுகாரரும் முருங்கை மரம் நட்டு, நவதானியம் விதைப்பார்கள்.

கலியாண பேச்சை பேச்சு கால் எண்டும் சொல்லுறது. சம்பந்த கலப்பு எண்டால் திருமணம் நடத்த தீர்மானித்த பின் இருவீட்டு காரரும் விருந்து கொண்டாடுறது.

7:48 PM  
Anonymous Anonymous said...

//அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)//

:)))))

2:58 AM  
Blogger கானா பிரபா said...

//முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். //

முதற் பந்தி
வீடியோக்காரர்
நாள்கடை

3:01 AM  
Blogger சின்னக்குட்டி said...

//முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன்//

கால் மாறி போதல்
பேச்சுக்கால்
பொருந்திட்டுது
ஏழில் செவ்வாய்

4:22 AM  
Blogger Thillakan said...

//பொன்னுருக்கியதன் பின் மாப்பிளை வீட்டை பொம்பிளை வீட்டு காரரும், பொம்பிளை வீட்டை மாப்பிளை வீட்டுகாரரும் முருங்கை மரம் நட்டு, நவதானியம் விதைப்பார்கள்.//

அது முள் முருங்கை எண்டு நினைகிறன்.
மரம் முழுக்க சின்ன சின்ன முள் இருக்கும்.

அதல என்ன பிரயோசனம்???

4:41 AM  
Blogger சயந்தன் said...

//ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி அப்ப முருங்கை நடுறதில்லை.//

//அது முள் முருங்கை எண்டு நினைகிறன்.
மரம் முழுக்க சின்ன சின்ன முள் இருக்கும்.//

உது தான் தெரியாத விடயங்களை எழுதக் கூடாது எண்டுறது. ஓம்.. அது முள் முருக்குத் தான். அதுவும் சரி அதை வைச்சு என்ன செய்ய..?

எனக்கென்ன தெரியும்.. நாங்கள் சின்னப் பெடியள்..

7:02 AM  
Blogger சின்னக்குட்டி said...

//நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை//

ஹிஹி... ஏன் போவான்... தெரிஞ்ச விடயம் தான்... அவையும் அந்தமாதிரி. கட்ட போறவையும் அந்த மாதிரி தானே

7:17 AM  
Blogger இளங்கோ-டிசே said...

பஜ்ஜி சொஜ்ஜி செய்யத்தெரியாததால்தான் ஈழத்திலை பெண் பார்ப்பதில்லையோ?
.....
மூத்தவலைப்பதிவாளரான வசந்தன் அய்யா எங்கே போய்விட்டார்? யாருடைய வீட்டிலையாவது முள்முருங்கை மரம் நட்டுக்கொண்டிருக்கின்றாரா :-)?

7:42 AM  
Anonymous Anonymous said...

At 7:02 AM, சயந்தன்

//ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி அப்ப முருங்கை நடுறதில்லை.//

//அது முள் முருங்கை எண்டு நினைகிறன்.
மரம் முழுக்க சின்ன சின்ன முள் இருக்கும்.//

உது தான் தெரியாத விடயங்களை எழுதக் கூடாது எண்டுறது. ஓம்.. அது முள் முருக்குத் தான். அதுவும் சரி அதை வைச்சு என்ன செய்ய..?

எனக்கென்ன தெரியும்.. நாங்கள் சின்னப் பெடியள்..

உது தெரியாதோ தம்பி உதை வச்சு வேலிக்கு கதியால் நடலாம்:-))

9:42 AM  
Blogger சோமி said...

கலியாணம் கட்டின பெரியாக்கள் கதைக்க்கிற இடம் போலகிடக்கு.
நான் சும்ம வந்து உங்கட வாயப் பாத்துகொண்டு போறன்.

டேய் பெரியாக்கள் கதைக்கேக்க ஏன் வாயப் பாகிறய் எண்டு அம்ம பேசுறவா.(பொம்பிள மாப்பிளையை தனிய கதைக்க விடேக்க வாயப்பாத்த சொல்லுவினம்தானே)
சயந்தன் உங்களமாதிரி கலியாணம் கட்டினவை சொல்லுறதுகளை நாங்கள் கேட்கிறம்
எங்கடை ஊரிலையும் கோயிலிலதான் பெண்+மாப்பிள்ளை வீட்டுக்காரர் சந்திப்பது வழக்கம். பொம்பிளை பாத்து பிடிக்கேல்ல எண்டு சொல்லிப் போட்டு போறதும் நடக்கிறது.
சீதனச் சிறப்புமிக்க யாழ்ப்பாணச் சூழலில் பொம்பிளை பாத்த பிறகும் நிக்கிற கலியாணங்கள் எத்தினை.

11:31 AM  
Blogger வி. ஜெ. சந்திரன் said...

//அது முள் முருங்கை எண்டு நினைகிறன்.
மரம் முழுக்க சின்ன சின்ன முள் இருக்கும்.//

முள் முருங்கை தான்.

முருங்கை மரம் நடுறதை கன்னிகால் நடுறது எண்டு சொல்லுறது. ஆனா ஏன் கன்னிகால் எண்டுறது தெரியாது.

12:57 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
தமிழகத்தையும் ஈழத்தையும் இவ்விடயத்தில் ஒப்பு நோக்கக் கூடாது. நிலப்பரப்பில் தமிழகம் எங்கோ நிற்கிறது. அதனால் தெரியாத பழகாத மக்கள் அதிகம்...
ஈழத்து நம்மூர்களில் கலியாணத் தரகர் சலவைத் தொழிலாளர்கள்; நாவிதர்கள்;அத்துடன் கோவில் ஐயர்கள் கூட திருமணப் பேச்சை
ஆரம்பித்து வைக்கும் பழக்கம் இருந்தது.
அந்த நாளில் நாவிதர்கள்;கட்டாடிகள் தொழில் நிமித்தம் வீட்டுக்கு வரும் போது,வீட்டாரைக் கணக்கெடுக்கத் தவறமாட்டார்கள்;
அத்துடன் வீட்டாரும் பெண்ணிருந்தால்; ஒரு நல்ல மாப்பிள்ளை சொல்லும்படி கேட்கும் வழக்கம் உண்டு.
அதே வேளை இவர்களே!! இன்னார் மகன் ;நல்ல பையன் ,உங்கள் மகளுக்குக் கேட்கட்டா?, எனும் பழக்கம் உண்டு.
அத்துடன் கோவில் ஐயரிடம்;குறிப்புப் பார்க்கும் பழக்கம் இருந்ததால்; மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கோ? எனச் சொல்லிவைக்கும் பழக்கமும் உண்டு.அவர்களும் அதைச் செவ்வனே செய்து முடிக்கும் பழக்கமும் உண்டு.
இவற்றின் ஓர் அங்கமாக பெண்பார்க்கும் படலம் உண்டு. ஆனால் இது முற்றாக்கிய சம்பந்தத்துக்குரியதே!
பெரும் பாலும் சிறிய கிராமங்கள்;அடுத்தடுத்த கிராமங்கள்;ஆனதாலும் பெண்களும் கல்வி கற்கச் சென்றதாலும்; கோவில் திருவிழாக்கள்;கொண்டாட்டங்களாலும் அனேகமாக ஆண்;பெண் தெரிந்திருக்கச்
சந்தர்ப்பம் இருந்தது.

அப்படி கோவிலில் பார்க்குமேற்பாடு கூட; மணப்பெண்ணுக்குத் (மனம் நோகாமல்)தெரியாமல்
கன கச்சிதமாக நடக்கும்; இதை தரகர்மார் செவ்வவே முடிப்பார்கள்.
மாகாணங்கள் மாறி செய்யும் போது கூட பெண் பார்க்கக் கூட்டமாகப் போதல்; பாட்டுப் பாடச்சொல்லுதல்; போய் அறிவிக்கிறோம் என்பதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம்.
அப்படி ஒரு திருமணம் உருவாவதே!! எங்கோ கண்டோ; கேட்டதால் தான் ; அதனால் அந்தத் தேவைகள் இருக்கவில்லை.
அதிலும் இந்தப் பாடச்சொல்லும் பழக்கம் இல்லவே இல்லை.

ஏனேனில் நம்நாட்டில் பல ஐயர் வீட்டுப் பெண்களுக்கே இசை கற்பிக்க எண்ணுவதில்லை. விரல் விட்டெண்ணக் கூடியோரே!
அந்த தகமையுடையோர்.
எனவே நான் அறிந்த வகையில் ஈழத்தில் மிக அரிதாக நடக்கும் ஒரு சம்பவமே இந்தப் பெண் பார்த்தல்.
ஆனால் திரைப் படமூலமாக தமிழ்நாட்டுச் சம்பவங்களைப் பார்த்துள்ளோம்.
மேலும் ஈழத்தில் வரதட்சனைக் கொடுமையும்; மாமி;மைத்துணியும்;கட்டிய புரிசனும் எண்ணை ஊற்றிக்
கொழுத்தும் சம்பவமும் இல்லை.
காரணம் சிறிய நிலப்பரப்பானதால் ஒருவரை ஒருவர் தெரியப் பழக கூடுதலான ;வாய்ப்பு.அதனால்
பரஸ்பர புரிந்துணர்வு.
தமிழகத்தில் இப்புரிந்துணர்வுக்குச் சாத்தியம் குறைவு. காரணம் பரந்த நிலப்பரப்பு...

அடுத்து திருமணத்தில் நடுவது முள்முருக்கம் தடி; இதை வேலிக் கதியாலாகவும் நடும் வழக்கம் உண்டு. முருங்கு இலகுவாகவும் செழிப்பாகவும் வளருமென்பதால் நடுகிறார்களோ? தெரியாது.
தெரிந்தவர் கூறுங்கள்.
அடுத்து வீட்டுக்கு முன் கறிமுருங்கு நடும் பழக்கம் இல்லை.

1:23 PM  
Anonymous Anonymous said...

Ayya,

Kovai Gounder's ellam "Navithar" or Moraippukarar ( any person in the village who is also a gounder)intha mathiri connection seivarkal (not for money). Also there is no people will eat (except water) before conformation.

Also never ask any dowery in the girls house. Instead of asking dowery they judge the family situation and then try for any jathagam. If they are not as expected they will say the jathagam is not matched(even jatham matched). No one directly says not good or need money. Its status bridegroom. Also bridegroom (aan) should approach for bride(pen)....These are traditions (as of I know).

2:19 PM  
Blogger கானா பிரபா said...

கன்னிக்கால் நடுவதன் விளக்கம்

ஒருமுறை தேவேந்திரன், முனிவர் ஒருவரின் மனைவி மீது ஆசை கொண்டானாம். அதை அறிந்த அந்த முனிவர் உன் உடம்பெல்லாம் பெண் உறுப்பாக மாறவேண்டும் என்று சபித்தாராம். சாபமும் பலித்தது. முள் முருங்கை என்பது அதை நினைவு படுத்தும் விதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி / ஒருத்திக்கு ஒருவன் என்பதை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது. ஒருமுறை வானொலி நிகழ்ச்சியை நான் செய்யும் போது நேயர் ஒருவர் சொன்ன விளக்கம் அது. கோப்பாய் சிவம் தமிழர் சடங்கு பற்றிய அருமையான நூல் ஒன்றை நான் ஊரில் இருக்கும் போது வெளியிட்டது ஞாபகம் வருகுது.

2:41 PM  
Blogger கானா பிரபா said...

முள்முருங்கை நடுவதன் விளக்கம் கொடுத்து பின்னூட்டினேன் கிடைத்ததா?

3:24 PM  
Blogger Vasanthan said...

//மூத்தவலைப்பதிவாளரான வசந்தன் அய்யா எங்கே போய்விட்டார்? யாருடைய வீட்டிலையாவது முள்முருங்கை மரம் நட்டுக்கொண்டிருக்கின்றாரா :-)? //

எங்கயும் போகேல, கொஞ்சம் அசந்து போயிட்டன்.

ஆனா எங்களுக்கு முதலே குப்பைகொட்டத் தொடங்கி பழம் திண்டு கொட்டை போட்ட நீங்கள் உதைச் சொல்லிறது சரியில்லை.

இதோ இப்ப வாறன்

6:52 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

அண்ணை,
என்ர அலட்டல் கொஞ்சம் நீண்டு போச்சு.
அதால சொந்த வீட்டில போட்டாச்சு.
நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை

10:06 PM  
Blogger விருபா - Viruba said...

முள் முருங்கை மரத்தைத்தான் நடுவது வழக்கம், திருமணத்தன்று மணவறைக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மரத்தைத்தான் பின்னர் வளவில் நட்டு வளர்ப்பார்கள்.

எனது 15வது வயதில் எங்கள் வீட்டில் இருந்த முள்முருங்கை மரத்தை நான் வெட்டிச் சாய்க முற்படுகையில், எனது தந்தையார் தடுத்துவிட்டு, அம்மரம் தனது தாயாரின் கலியாணத்தின்போது நடப்பட்டதாக கூறினார், அதன்பின் நான் ஊரைவிட்டு கிளம்பும் வரையில் அம்மரம் தறிக்கப்டவும் இல்லை, பட்டுப்போகவும் இல்லை.

அதேபோல் 10 வருடங்களுக்கு முன் எனது தங்கையின் திருமணம் சென்னையில் நடந்தபோது, தென்றல் குடியிருப்பில் நான் நட்டுவைத்த மரமும் இன்னமும் செழிப்பாகவே உள்ளது.

10:14 PM  
Blogger Thillakan said...

//எனக்கென்ன தெரியும்.. நாங்கள் சின்னப் பெடியள்..//

நானும் சினன பெடி தான், இப்பதான் இருபதை கடந்திருக்கிறம்.

//உது தெரியாதோ தம்பி உதை வச்சு வேலிக்கு கதியால் நடலாம்:-))//

முருக்கு பருத்து (தூணூக்கு / ஒண்டுக்கும்) உதவாது எண்டு எதோ நியாகபம் இருக்கு இதுக்கு விளக்கம் தெரியுமோ??

பெரியக்கள் கதைக்கெக்க வாய் பார்த்து பொறுக்கினது.
-செவ்வாய் தோசம்
- செவ்வாய் குற்றம் குறைவு கூட
- பாவம் கூட /குறைய
- பொருத்த வீதம் 80%, 60% எண்டு கதைபினம்
-நாலம் சடங்கு
-மணவறை காரர்

11:43 PM  
Anonymous Anonymous said...

சயந்தன்ணா
உங்களுக்கு இரண்டு திருமணம் நடந்தது என வசந்தன் அண்ணாவும் கானா பிரபா அண்ணாவும் எழுதியிருந்தவை.
அப்ப உங்கள் வீட்டில மொத்தம் எத்தனை முள் முருக்கு..?

1:22 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//முருக்கு பருத்து (தூணூக்கு / ஒண்டுக்கும்) உதவாது எண்டு எதோ நியாகபம் இருக்கு இதுக்கு விளக்கம் தெரியுமோ??//

என்னண்ணை இப்பிடிச் சொல்லிப்போட்டியள்?
இருக்கவே இருக்கு கடலில கட்டுமரம்.

//சயந்தன்ணா
உங்களுக்கு இரண்டு திருமணம் நடந்தது என வசந்தன் அண்ணாவும் கானா பிரபா அண்ணாவும் எழுதியிருந்தவை.//

யோவ் அனானி,
நானெங்க எழுதினன்?

1:39 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

சயந்தன்,
நாங்களெல்லாம் மட்டுறுத்தலை நீக்கி எல்லாருக்கும் சுதந்திரம் குடுத்தாச்சு. நீர் எப்ப செய்யப்போறீர்ஃ

1:40 AM  
Blogger சயந்தன் said...

//உங்களுக்கு இரண்டு திருமணம் நடந்தது என வசந்தன் அண்ணாவும் கானா பிரபா அண்ணாவும் எழுதியிருந்தவை.//

வசந்தன் கானாபிரபா அண்ணையாக்கள். கொஞ்சம் விளக்கமா எழுதுங்கோ.. ஆளாளுக்கு தப்புத் தப்பா நினைக்கிறாங்க.

ஆனானி.. ரண்டு கல்யாணத்திலும்??முருக்கு வைக்கல்லை. அட.. முறுக்கே வைக்கல்லை..

2:14 AM  
Anonymous Anonymous said...

சயந்தன் உங்களுக்கு திருமணமாயிட்டுதா.. அடடா..

2:40 AM  
Blogger இராம.கி said...

அன்பிற்குரிய சயந்தன்,

உங்கள் பக்கத்து நாட்டார் வழக்கைச் சொல்லியிருக்கிறீர்கள்.

அந்தக் காலத் தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் பார்த்த காட்சிகள் பொதுவாய் பெருமானர் (brahmins) வழக்கும், பெருமானரை ஒட்டி அரைத்தோற்றம் காட்டும் மேட்டுக் குடியினரின் (semi-brahminized communities) வழக்குமே ஆகும். அவர்களின் கதையே 1970கள் வரை கூடத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டன. அதை தமிழகத்தின் பொது வழக்காகக் கொள்ளக் கூடாது.

எழுபதுகளுக்கு அப்புறம் மற்றவர் வழக்குகள் திரைப்படங்களில் ஓரளவு வந்தன; ஆனால் இன்னும் காட்டப்படாத வழக்குகள் ஏராளம். தவிர தமிழ்நாடு என்பது அகண்ட பரப்பு. இங்கே வட்டாரத்திற்கு வட்டாரம், குடிகளுக்குக் குடி, வழமைகள் மாறுபடும். எங்கும் நிலவக் கூடிய பொதுமை என்று சொல்லுவது கடினம்; ஒவ்வொன்றிற்கும் ஒரு புறனடை (exception) இருக்கலாம். அதே போது, நீங்கள் பார்த்த பெண்பார்க்கும் படலம் என்பது தமிழகத்தின் எல்லா வட்டாரங்களிலும் நடப்பதல்ல.

தென் தமிழகத்தின் பல இடங்களில் இரு குடும்பத்தாருக்கும் பொதுவானவர் கூறிய செய்திகளை வைத்து திருமண உறவு கொள்ளலாம் என்று எண்ணும் குடும்பத்தினர் பொது இடத்தில் (இது பெரும்பாலும் கோயில், ஓரோவழி மூன்றாமவர் வீடு) ஒருவரை ஒருவர் சந்திப்பது போல் பெண்பார்ப்பதை வைத்துக் கொண்டு, ஆணிற்கும் பெண்ணிற்கும் அறிவுறுத்தி, முகம் கோணாதவாறு செய்வார்கள். இந்த பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் கிடையாது. பாடச் சொல்லிக் கேட்பது, ஆடச் சொல்லிக் கேட்பது எல்லாம் கிடையாது. (அது தஞ்சைப் பெருமானரின் பழைய வழக்கு; அவரிடையேயும் அது பெரிதும் குறைந்துவிட்டது.) பெரும்பாலும் இப்படி ஒரு கோயிற் சந்திப்பிற்கு இருவீட்டாரும் நெருங்கி வந்துவிடாலே திருமணம் நடந்துவிடும் என்றுதான் பொருள். இந்தக் காலத்தில் கோயிலில் பெண்பார்த்த பிறகும் பேச்சு முறிவது ஓரோவழி நடக்கத் தான் செய்கிறது. [பொதுவாக, இந்தக் காலத்தில் திருமணம் செய்கின்ற ஆணும், பெண்ணும் வாழ்க்கையில் வளைந்து கொடுக்கும் போக்கு உள்ளவர்களாய் இருப்பது குறைந்து வருகிறது. ஏற்பாட்டுத் திருமணங்கள் (arranged marriages) உறுதியாகத் தமிழ்நாட்டில் குறைந்து வருகின்றன என்றே பட்டறிவு சொல்லுகிறது. காதற் திருமணங்களின் விழுக்காடு சிறிது சிறிதாகக் கூடிவருகிறது. பெற்றோரும் அவற்றை வேறு வழியின்றி ஏற்று வருகிறார்கள். தமிழ்க் குமுகாயத்தில் இந்த மாற்றம் மெதுவே ஏற்படுகிறது.]

தவிரவும் ஏற்பாட்டுத் திருமணங்களில் சீதனம் பேசிக் கொள்வது எல்லாம் இந்தக் கோயிற் சந்திப்பில் நடப்பது அல்ல. அது மூன்றாமவர் வழியே செய்யப் படுவது. ஒரு 40, 50 ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட பரிசம் போடுவது (ஆண் பெண்ணுக்கு முலைப்பணம் கொடுப்பது) தான் தமிழரிடையே பரவலாய் இருந்தது. இது வரதட்சணைக்கு முற்றிலும் எதிரிடையானது. வரதட்சனை என்ற பழக்கம் அண்மைக் காலமாய்த் தான் கொடிய நோயாய்ப் பரவி விட்டது. இப்பொழுது சட்டம் கடினப் பட்டதால் மாற்றம் வரும் என்று பலரும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். (வரதட்சனையும் சீதனமும் வெவ்வேறு அடிப்படை கொண்டவை. சீதனம் என்பது பெண்ணுக்கு மட்டுமே அவள் பெற்றோர் கொடுப்பது; வரதட்சணை என்பது மாப்பிள்ளையின் பெற்றோருக்கு பெண்வீட்டார் தங்கள் பெண்ணை ஏற்பதற்காகக் கொடுப்பது.)

முள்முருங்கை நடுவது பற்றிய செய்தி நான் கேள்விப்படாதது. மேற்கொண்டு விவரங்கள் நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் ஆர்வமாய்க் காத்து நிற்கிறேன். இங்கு வந்த பின்னூட்டுக்களைப் படித்து நான் ஊகிப்பது இதுதான்.

முள்முருங்கை என்பது முருக்க மரமாய் (flame of forest) இருக்கும் எனில், கீழே உள்ள செய்தி பயன்படும் என்று எண்ணுகிறேன்.

Common name : Flame of the forest
Botanical name : Butea monosperma (Lam.) Tanbert
Local name : Purasu
Hindi name : Dhak
Sanskrit name : Palasa
Religious association : It is sacred to both Hindus and Buddhists. The flowers are offered to Goddess Kali.
Ecological zone : Terrestrial
Distribution : Throughout India in deciduous forests
Status : Not threatened
Uses : The leaves are useful in treating pimples, tumourous piles, ulcers and swellings. The wood is soft and durable and is used for making boats.

முருக்கம் பூ சிவந்த பூ; சிவப்பும், மஞ்சளும் மங்கலத்தின் அடையாளங்கள். (குங்குமம், மஞ்சள் ஆகியவற்றின் உள்ளடக்கத்தை எண்ணிப் பாருங்கள்.) சிவ என்ற தமிழ் முன்னொட்டு சு என்ற வடமொழி முன்னொட்டாய்த் திரியும். (இதை எழுதப் போனால் அதே ஒரு கட்டுரையாய் விரியும்; எனவே தவிர்க்கிறேன்.) சிவ மங்கலி சுமங்கலி ஆவாள். முருகனுக்கான மரம் முருக்கு தான். [கடம்பு முருகனின் இளைய தண்டபாணித் தோற்றத்திற்காகச் சொல்லப் படுவது. அது வேறுகூள்ளார்ந்த பொருளில் வரும்.] வள்ளிக் கொடியும் முருக்க மரமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. முருகன் / வள்ளி பற்றிய குறியீடு தமிழர் வரலாற்றில் நெடுகவும் உண்டு.

சென்னையில் உள்ள புரசை வாக்கம் இந்த முருக்க மரத்தை நினைவு படுத்தும்; அங்குள்ள சிவன்கோயிலின் தலமரம் முருக்க மரமே.

அன்புடன்,
இராம.கி.

2:55 AM  
Anonymous Anonymous said...

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முருக்கு அல்லது முள்முருக்கு என அழைக்கப்படுவது, ஃபேபேசியே (Fabaceae) தாவரவியற் குடும்பத்தில், எரித்ரைனா (Erythrina) சாதிக்குள் அடங்கிய ஒரு தாவரம் ஆகும். இது எரித்ரைனா இந்திகா (Erythrina indica) என்னும் தாவரவியற் பெயரால் குறிக்கப்படுகின்றது. இதன் கடும்சிவப்பு நிறப் பூவைக் குறித்துப் போலும், இது இந்தியப் பவள மரம் (Indian coral tree) என அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் தீவக் குறைப் பகுதிக்கு உரியவற்றில் அழகிய நிறப்பூக்களைக் கொண்ட தாவரங்களில் இதுவும் ஒன்று. மார்ச் மாதமளவில் பூக்கத்தொடங்கும் இத் தாவரங்கள் மே மாதம் வரை பூக்களைத் தாங்கியிருக்கும்.

முருக்க மரம், சிறியது முதல் நடுத்தர அளவு வரை வளரக்கூடியது. பொருத்தமான நிலம் அமையும்போது சுமார் 15 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டதாக வளரும். இதன் கிளைகள் முட்கள் நிரம்பியவை. முதிர்ந்த கிளைகளில் முட்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஓரளவு பெரிய இதன் இலை ஒரு கூட்டிலையாகும். நீண்ட காம்பில் மூன்று சிற்றிலைகள் அமைந்து இருக்கும். காம்பின் நுனியில் ஒரு சிற்றிலையும், அதற்குச் சற்றுக்கீழே இருபக்கங்களிலும் இரண்டு இலைகளும் அமைந்து இருக்கும். நடுச் சிற்றிலை, ஏனைய இரண்டுடனும் ஒப்பிடும்போது அளவில் குறிப்பிடத்தக்க அளவு பெரியது.

இத் தாவரத்தை விதை மூலமாகவோ அல்லது பதியமுறை (Vegitative) மூலமாகவோ வளர்க்க முடியும். கிளைகளை நட்டு வளர்ப்பதே பொதுவாகக் கையாளப்படுவதும் இலகுவானதுமான முறையாகும்.

முள் முருக்கைப் பூப் படத்தினை விடுதலைப் புலிகளின் அருச்சுனா இணையத்தில் காண இங்கே அழுத்தவும்.

3:20 AM  
Blogger U.P.Tharsan said...

அதெல்லாம் சரி இதற்கு விளக்கம் யாராப்பா தருவாங்கள்?

முதற் பந்தி
வீடியோக்காரர்
நாள்கடை
கால் மாறி போதல்
பேச்சுக்கால்
பொருந்திட்டுது
ஏழில் செவ்வாய்

3:45 AM  
Blogger செல்லி said...

சயந்தன்

//ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை.//
இன்னும் இருக்கிறது.பரவலாக நடக்காததால் யாருக்கும் தெரிய வாய்ப்பிலாமல்ப் போயிருக்கலாம் என நினைக்கிறேன்.
ஆனா, பஜ்ஜி சொஜ்ஜி அப்பிடி எல்லாம் ஒன்றுமில்லை.

4:00 AM  
Anonymous Anonymous said...

//இன்னும் இருக்கிறது.//

செல்லி.. திருமணம் நிச்சயிக்கப்பட முன்பே செல்வார்களா..? அதாவது பெண் வீட்டுக்குச் சென்று பார்த்துப் பேசி முடிவெடுப்பார்களா..?

4:04 AM  
Blogger சயந்தன் said...

//சயந்தன் உங்களமாதிரி கலியாணம் கட்டினவை சொல்லுறதுகளை நாங்கள் கேட்கிறம்//

சோமி.. இது மாதிரி பதிவுக்குச் சம்பந்தமில்லாமல வரும் பின்னூட்டங்களை இனிமேல் நான் அனுமதிக்க மாட்டேன்.
புரிந்துணர்வுடனான உங்கள் ஒத்துழைப்பை வேண்டி
சயந்தன்.

6:48 AM  
Anonymous Anonymous said...

//அதெல்லாம் சரி இதற்கு விளக்கம் யாராப்பா தருவாங்கள்?

முதற் பந்தி
வீடியோக்காரர்
நாள்கடை
கால் மாறி போதல்
பேச்சுக்கால்
பொருந்திட்டுது
ஏழில் செவ்வாய//

முதற் பந்தி: சாப்பிடுவதற்காகவே கல்யாண வீட்டுக்கு வருபவர்கள் அமரும் பந்தி

கால் மாறி போதல்: தெரியாத் தனமாக ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்தல்.

பேச்சுக்கால்: பேச்சுக்கால் செயல் முக்கால்

11:07 AM  
Anonymous Anonymous said...

மொய் எழுதுவது ஈழத்திலும் பரவலாக நடக்கும் விடயம். அதுவும் புலம் பெயர்ந்த தமிழன் அதற்காகவே பிறந்த நாள் கொண்டாடுகிறான்.

ஆனால் மொய் எழுதியவரின் பெயரையும் பணத்தொகையையும் ஒலிபெருக்கியில் அறிவிக்கும் வழக்கம் தமிழகத்து நடைமுறையா..(படங்களில்த் தான் பார்த்தோம்.)
ஈழத்தில் அப்பிடி இல்லை. இருந்திருந்தால் சோக்காக இருக்கும்.

1:31 PM  
Blogger சயந்தன் said...

இராம.கி ஐயா வரவுக்கும் தரவுக்கும் நன்றி. உங்களுக்கு அடுத்ததாக பின்னூட்டம் இட்டிருப்பவர் முருக்கு தொடர்பான விபரங்களைம் அதன் படத்தையும் இணைத்திருக்கிறார்.

முள் முருக்கை நடுவதற்குரிய புராணக் கதையொன்றினை கானா பிரபா தந்திருக்கிறார்.

3:49 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சயந்தன்,

தமிழ்நாட்டில்..

ஆடச்சொல் பாடச்சொல்லிக் கேட்பது எல்லாம் திரைப்படங்களில் மட்டும் தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில இனத்தார் வீடுகளில் கேட்கலாம். அவ்வளவு தான். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்கப்படலாம் :)

சீர் வரிசை, வரதட்சணை குறித்து நேரடியாகவோ இடையில் உள்ள ஆள் மூலமாகவோ உறவினர்கள் மூலமாகவோ பேசி முடித்துக் கொள்வார்கள்.

பல தடவை பெண் பார்க்க வரலாம். முதலில் மாப்பிள்ளைக்கு வேண்டப்பட்டவர் ஒரு சிலர் வீட்டுக்கும் வரலாம். இல்லை,உறவினர் வீடுகள், கோயில் ஆகியவற்றில் இருந்தும் பார்க்கலாம். ஓரளவு நிச்சயமாகும் என்ற நிலையில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து நிறைய பேர் பெண் பார்க்க வருவார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி இல்லாவிட்டாலும் ஏதேனும் விருந்து இருக்கும். அப்புறம், நிச்சயம் தடபுடலாக பெண் வீட்டில் அல்லது மண்டபத்தில் நிறைய பேர் சூழ நடக்கும்.

4:29 AM  
Anonymous Anonymous said...

சுவாரசியமான பதிவு. தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

1:27 PM  
Anonymous Anonymous said...

பேச்சுக்கால்.. என்றும் ஒரு சொல் உண்டு.

இரு பகுதியினரையும் ஒன்று சேர்க்கும் தரகர் அல்லாத நல்ல உள்ளத்தை "இன்னார் தான் பேச்சுக்கால்" என்பார்கள்.


கயல்விழி.


நீங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லையோ?? யார் அடக்க ஒடுக்கமாய் ஆம்பிளைப்பிள்ளையாய் அப்பா அம்மா பேசும் வரை காத்திருக்கிறியள். நீங்களாய் தேடிக்கொண்டால் பிறகென்ன பார்வை. நேரடியாகவே கெட்டிமேளம் தானே. )))

கயல்விழி

1:48 PM  
Blogger சயந்தன் said...

//நீங்களாய் தேடிக்கொண்டால் பிறகென்ன பார்வை. நேரடியாகவே கெட்டிமேளம் தானே. )))

கயல்விழி//

யாரப்பா இது நம்மளை நல்லாத் தெரிஞ்சவங்க..

2:13 PM  
Anonymous Anonymous said...

37 ஆச்சாம்.
ஒரு 3 ஐப் போட்டு அனுப்பி வைப்பம்.

2:43 PM  
Blogger கானா பிரபா said...

This comment has been removed by the author.

8:17 PM  
Anonymous Anonymous said...

ok last comment

11:37 AM  
Blogger Haran said...

வளமையாக நடுவது... "கல்யாண முருங்கை"... இது முள் முருங்கை போன்று தான் இருக்கும்... ஆனால் இலையில் இருக்கும் இரேகைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.. மற்றும்படி எந்த வித்தியாசமும் இல்லை... ஊரில் எமது வீட்டில் இந்த மரம் நின்றது... அக்கம் பக்கத்தில யாருக்காவது கல்யாணம்... பொன்னுருக்கு என்றால் வீட்டை ஆக்கள் வந்து ஒரு கிளை எடுத்துப் போவினம்.

ஆயினும்... கல்யாண முருங்கை பெற வசதி அற்றவர்கள்... முள் முருங்கையினை வைக்கலாம் என்பதனை ஒரு ஐயர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்... (நல்ல காலம் முன் ஏற்பாடாய் முருங்கக்காய் முருங்கையைச் சொல்லேல)

கரன்

1:15 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home