8.2.07

வலைப் பதிவு நுட்பம், படிக்கலாம் வாங்கோ

இதுவரை நுட்பக் கட்டுரைகளோ, வழிகாட்டற் குறிப்புக்களோ எழுதி எனக்குப் பழக்கமில்லை. பாடசாலையில் விஞ்ஞான மலரில் கருந்துவாரங்கள் (Black Holes) என்ற ஒரு அறிவியல் ? சிறுகதையை எழுதியது தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லையாயினும் இனி எனது வலைப்பதிவில் ஆகக் குறைந்தது வலைப் பதிவு நுட்ப விபரங்களையாவது எழுத முயலலாம் எனத் துணிந்தமைக்கு சில காரணங்கள் உள்ளன.

அண்மையில் அற்புதன் என்னும் ஒரு பதிவர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்களின் (அவர் ஈழப் பதிவர்கள் என குறிப்பிட்டிருந்தார்) இடுகைகள் இறந்த காலத்தைப் பற்றிப் பேசுவனவாக, நனவிடை தோய்தல்களாக இருப்பதனை அவர் சுட்டியிருந்தார். நான் உட்படப் பலர் அதையே செய்து கொண்டுடிருந்தோமாயினும் இயல்பாகவே அதில் ஒரு ஈடுபாடின்மை எனக்கு ஏற்பட்டுவிட்டதன் பிரதி பலிப்பே அண்மைக் காலமாக நான் இட்டு வந்த மீள்பதிவுகள் மற்றும் மீள் மீள் பதிவுகள்.

ஆயினும் வலைப் பதிவில் உள்ள நுட்பச் சிக்கல்களுடனும், நுட்ப விபரங்களுடனும் அண்மைக் காலமாக மல்லுக் கட்டுவது ஒரு வித ஈர்ப்பைத் தந்ததினால் அதன் காரணமாகவே என்னால் மீண்டும் புதிய ஈடுபாட்டுடன் வலையில் செயற்பட முடிந்தது.

தமிழ் வலையுலகில் துறை சார்ந்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நிதி, மருத்துவம், அறிவியல், நுட்பம் போன்ற பதிவுகள் சீரான வீச்சுடன் வருவதில்லை. தமிழில் உள்ள 1000 பதிவுகளில் எத்தனை வீதம் துறை சார் பதிவாக இருக்கும் என்பது மகிழ்ச்சி தராத விடையினைத் தான் தரும்.

வலைப் பதிவுகளில் பொழுது போக்கு என்பதற்கும், பொழுது போக்குவதற்காக வலைப் பதிவு என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென சில பதிவர்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.

இத்தகைய வரலாற்றுப் புறச் சூழ்நிலையில்.. (நல்லாத் தானே எழுதிட்டிருந்தான்..? திடீர்ன்னு ஆரம்பிச்சிட்டான்) அண்மைக் காலமாக நான் புளொக்கரில் குடைந்து, கடைந்தெடுத்த சமாசாரங்களைச் சொல்வதும், எழுதுவதும் என்னை இன்னொரு ஈடுபாட்டுடன் தொடர்ந்து இயங்க வைக்கும் என நம்புகின்றேன்.

என்னுடைய சாரல் வலைப்பதிவு புதிய புளொக்கருக்கு மாறி விட்ட போதும், இன்னமும் அது கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துகிறது. (அதிலிருந்தும் அடித்துக் கலைக்கவோ, ஆட்டோ அனுப்பித் தூக்கி ஏற்றவோ மாட்டார்கள் என நம்புவோமாக) ஆக அடிப்படையில் அது பழைய புளொக்கர் தான். புதிய Layout முறையிலான வார்ப்புருவின் மூலம் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்த முடியாது என சொல்லப் படுகின்ற கிளாசிக் வார்ப்புருவில் இருந்து கொண்டே நான் அமைத்துக் கொண்ட வசதி வாய்ப்புக்கள் இவை
  1. பதிவுகளுக்கு லேபிள் இடும் வசதி : இது புளொக்கர் தரும் லேபிள் இடும் வசதியைப் பயன்படுத்தாது வேறு வழியில் பதிவுகளைத் திரட்டுகிறது. புளொக்கர், Search முறையில் லேபிள் குறிச் சொற்களை வைத்து பதிவுகளைத் தேடித் திரட்டுவதோடு, திரட்டப்படும் ஒரே வகையான மொத்தப் பதிவுகளையும் அவற்றின் உள்ளடக்கத்துடன் ஒரே பக்கத்தில் காட்டுகின்றது. இது பக்கத் தரவிறக்கலுக்கு சாதகமானதல்ல. சாரலில் பயன்படுத்தப் படும் முறை நேரடியாக பதிவுகளைத் திரட்டுவதோடு, முதலில் ஒரே வகையான பதிவுகளின் தலைப்புக்களை மட்டுமே, தருகிறது. அவற்றிலிருந்து பயனர் தனது தேர்வினைச் சுட்டி, முழுப் பதிவிற்கும் செல்லலாம். சாரலில் இவ் வகையான வகைப்படுத்தல் Drop down menu முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை லேபிள்கள் இட்டாலும், நமது பக்கத்தில் இடத்தினைப் பிடிக்கும் அடாத்து வேலையினைச் செய்யாது. பார்க்க சாரலின் பெரும் பிரிவுகள்


  2. கடந்த காலப் பதிவுகளை Drop down menu இல் காட்டுதல் : இது இதற்கு முன்பும், பலரால் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு வருடங்களைத் தாண்டிய நிலையில் மொத்தம் 24 மாதப் பதிவுகளை இது உள் வைத்திருந்து, தேவைக்கு ஏற்பத் தரும். சாதாரண முறையில் 24 மாதங்களும் பதிவில் எத்தனை இடத்தினைப் பிடிக்கும் என்பது தெரியும் தானே..? (இது ஒரு அழகுணர்ச்சி ஏற்பாடே தவிர பெரிய அளவில் நுட்பப் பயன் இல்லை) பார்க்க காலம் எழுதிய கதை


  3. நமக்குப் பிடித்த வேறு பதிவுகளைத் திரட்டல் : நாம் விரும்பிப் படிக்கும் வேறு பதிவர்களுக்கு நமது தளத்தில் ஏற்கனவே இணைப்புக் கொடுத்திருப்போம். ஆனால் இந்த நுட்பத்தின் மூலம், அவர்கள் எழுதிய, எம்மைக் கவர்ந்த பதிவுகளுக்கு மட்டும் தனியாக இணைப்பினைக் கொடுக்கலாம். வேறு வலைப்பதிவுகளின் செய்தி ஓடையைப் பயன் படுத்தி கூகுள் றீடர் இந்த வசதியைத் தருகிறது. நமது பதிவர்கள், புதிதாக ஒரு பதிவு எழுதி, அது நமக்குப் பிடித்திருந்தால் (பிடிக்காவிட்டால் கூட எனக்குப் பிடிக்காத பதிவுகள் எனத் திரட்டலாம்;))கூகுள் றீடரில் ஒரு சின்னக் கிளிக் மூலம் அதைத் தெரிவித்தால் போதும். உங்கள் பக்கத்தில் அது திரட்டப்படும். ஒப்பீட்டு அடிப்படையில் இலகுவான நுட்பம். பார்க்க எனக்குப் பிடிச்சிருக்கு


  4. இறுதிப் பின்னூட்டம் இட்டவர்களையும் பின்னூட்டங்களின் சில வரிகளும் : இதன் மூலம் எமக்கு இறுதியாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், இப் பின்னூட்டங்களின் ஒரு சில வரிகளையும், நமது பதிவின் அனைத்துப் பக்கங்களிலும் காட்சிப்படுத்தலாம். எத்தனை பின்னூட்டங்களை வெளியிடலாம் என்பதனையும், பின்னூட்டத்தில் எத்தனை சொற்கள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாமே முடிவு செய்யலாம். புளொக்கர் கூட இவ்வாறான ஒரு வசதியைத் தருகின்றது. பின்னூட்டமிட்டவரின் பெயர் மற்றும் நேரம் என்பவற்றை நமது பக்கத்தின் முகப்பில் காட்டும் வசதியே அது (முகப்பில் உள்ள பின்னூட்டங்களை மட்டுமே). ஆனாலும் முகப்பிலிருந்து தனியான ஒரு பதிவிற்குள் நுழைந்தீர்களாயின், பின்னர் இறுதிப் பின்னூட்டங்கள் காட்டப் படாது. சாரலில் நீங்கள் எந்தப் பக்கத்தில் எப்படி நின்றாலும் இறுதியாக சாரலுக்கு வந்த (அல்லது நானாகவே இன்னொரு பெயரில் போட்ட ;))பின்னூட்டங்கள் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும்.பதிவர்களின் பெயர்கள் மேலே கிளிக்கினால் மூலப் பதிவுக்குப் போக முடியும். பதிவுகள் வழியாகப் பின்னூட்டங்கள் என்பதை விடுத்து முதலில் பின்னூட்டங்கள் பின்னர் அது வழியாகப் பதிவுகள் என்ற புதிய புரட்சியை இது தோற்று விக்கும்;) பார்க்க இப்போ கருத்து இட்டவர்கள்


  5. இது தவிர சாரலுக்கெனத் தனியான Flash Audio player: திருப்தி தரக் கூடிய வகையில் இது இயங்குகிறது. நமது MP3 கோப்பையும் ஒரு சிறிய flash (2kb) கோப்பையும் அதனுடன் ஒரு xml கோப்பையும் bandwidth பிரச்சனை வராத இடத்தில் ஏற்றும் வசதி இருக்குமாயின் இதுவே போதும் இதனைப் பயன் படுத்த. பார்க்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஒலிப்பதிவு
தொடர்ந்தும் இவை பற்றித் தனித்தனியாக நிறுவுதல் முதற்கொண்டு பயன்படுத்துவது வரை முடிந்தவரை இலகுவாக எழுத உள்ளேன். நிறைய ஆர்வமும் கொஞ்சூண்டு திறமையும் இருந்தால்ப் போதும். இவற்றை நீங்களும் உங்கள் வலைப் பதிவில் பயன் படுத்தலாம். பதிவுகளை எழுதும் போதே பரிசோதனை முயற்சியாக நீங்களும் முயற்சிக்கலாம். இவற்றை முயற்சிக்க புதிதாய் ஒரு புளொக்கரைத் தொடங்குவதும் அல்லது இருப்பதையே பயன்படுத்துவதும் உங்கள் தெரிவு. ஆனால் இத்தனை வசதிகளும் கிளாசிக் வகை வார்ப்புருவிலேயே அமைந்ததென்பதால் நீங்கள் அந்த வார்ப்புருவுக்கு மீண்டு வர வேண்டியிருக்கும்.

யுத்தம் முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகும். விரைவில் யுத்தம் முடிய ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக;)

30 Comments:

Blogger வி. ஜெ. சந்திரன் said...

வாத்தியார் வகுப்பை தொடங்கேக்க காட்டாயம் பாடம் படிக்க நானும் வருவன்.
வரலாம் தானே... ;)

4:46 PM  
Blogger -/பெயரிலி. said...

நல்ல வேலை

5:03 PM  
Anonymous Anonymous said...

வகுப்புகளைத் தொடங்கிறதுக்கு யுத்தம் முடியோணுமெண்டு ஏன் காத்திருக்கிறீர்?

5:20 PM  
Anonymous Anonymous said...

நல்ல வேலை.எனக்கும் பல வற்றில் தெளிவில்லை.விபரமாகச் சொல்லுங்கோ வசந்தன்.

5:23 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நீங்களும் களத்தில நிக்கிறீங்கள் போல? ;)

கடகடெண்டு வகுப்புகளைத் தொடங்குங்கப்பா!

-மதி

7:58 PM  
Blogger Tulsi said...

இதுக்கெல்லாம் நம்ம மக்கள்ஸ்க்கு இப்ப நேரம் இல்லைப்பா.(-:
எல்லாரும் 'வேற இடத்துலே' இருக்காங்க. பா ர(த்)தப்போர்.

9:29 PM  
Anonymous Anonymous said...

உந்த அஞ்சு நுட்பத்துக்கும் தனித்தனிய விரிவான பதிவுகள் போடுவீர் தானே?

எனக்கும் கிளாசிக்கை விட்டுப் போற எண்ணமில்லை.
அதுக்குள்ளயே நிண்டு ஏதாவது செய்தா மகிழ்ச்சி.
உந்தத் துலைவாருக்குச் செய்து காட்ட வேணும்.

9:32 PM  
Blogger Gurusamy Thangavel said...

நன்றி சயந்தன், மிக அருமையான பதிவு. நானும் புதிய பிளாக்கருக்கு மாறிவிட்டாலும் இன்னும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறேன். உங்களது பதிவை எனது கூகிள் டூல் பாரில் சேமித்து வைத்திருக்கிறேன். விரைவில் எனது வலையையும் அழகுபடுத்தலாம் என் இருக்கிறேன். அப்பொழுது உங்களது இப்பதிவு பயன்படும். உங்களது வலை மிக எளிமையாகவும், அழகுணர்ச்சியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

//தமிழ் வலையுலகில் துறை சார்ந்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நிதி, மருத்துவம், அறிவியல், நுட்பம் போன்ற பதிவுகள் சீரான வீச்சுடன் வருவதில்லை. தமிழில் உள்ள 1000 பதிவுகளில் எத்தனை வீதம் துறை சார் பதிவாக இருக்கும் என்பது மகிழ்ச்சி தராத விடையினைத் தான் தரும்.//
உங்களது கருத்து சரியே. பெரும்போலோர் (நான் உட்பட) தங்கள் துறை சார்ந்த விசயங்களை எழுதுவதில்லை. விரைவில் இதுமாறும் என நம்புவோமாக.

"நனவிடை தோய்தல்களாக" - இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. விளக்கவும்

10:25 PM  
Blogger Ram Ravishankar said...

மற்ற பதிவுகளில் தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது என்று சொன்னால் நல்லது!

10:46 PM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உண்மையில், என் 'வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்? இடுகை உங்கள் மற்றும் அற்புதன் கட்டுரைகளை பார்த்த பின் எழுதப்பட்டது தான். நீங்கள் என் இடுகையை பார்த்து அடுத்து நுட்ப வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டீர்கள். நல்ல வினைகள் ஒரு சங்கிலி போல் தொடரும் என்று நம்பிக்கையை தருகிறது. நான் கூட classic templateல் சொல்லிக் கொடுத்து என்ன பயன் என்று நினைத்தேன். ஆனால், அதில் இருந்து மாறாமல் இருக்க ஏன் இத்தனை பேருக்க விருப்பம் என்று புரிய வில்லை. எப்படியும் புது பிளாக்கருக்கு மாறினால் முன்பிருந்து பல நிரல்கள் காணாமல் போய்விடுகின்றன தானே. எனக்கென்னவோ, layout-page elements வடிவமைப்பு அருமையான வசதியாகப் படுகிறது. ஒரு வேளை பழைய பிளாக்கரில் இருந்து இந்த layout வடிவமைப்பில் செய்ய முடியாதது ஏதும் இருந்தால் சொல்லித் தாருங்கள். இணையம் முழுக்க blogger hacks நிரம்பி இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் நிறைய ஆர்வம் இருந்தால் கற்றுக் கொள்ளலாம்.

11:57 PM  
Blogger மலைநாடான் said...

வந்தேன் ஐயா!

எனக்கும் உந்தப் புது வீடு, பிடிக்கேல்ல. இந்த நுட்பச்சிக்கல்தான் அங்கால இங்கால என்டு ஓடவைக்குது. உப்பிடி நீங்கள் விலாவாரிய சொல்லித்தாறதெண்டாப் பேந்தென்ன..நானும் அங்கதான்.

1:39 AM  
Blogger சயந்தன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும். பெருந் தலைகள் வந்தமை பெரும் மகிழ்ச்சி.
//வரலாம் தானே...//
கட்டாயம்.. ஆனால் Home work எல்லாம் ஒழுங்காச் செய்யவேணும். சரியோ..?

//யுத்தம் முடியோணுமெண்டு ஏன் காத்திருக்கிறீர்?//
என்ன செய்ய.. கொஞ்சமெண்டாலும் வியாபாரம் ஆனால்த் தானே சந்தோசம். சனம் அல்லோலகல்லோலப் படேக்கை நான் கடையை விரிச்சு என்ன பிரியோசனம்..?

//நீங்களும் களத்தில நிக்கிறீங்கள் போல? ;)//
அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசியில என்னைச் சுத்துது. இதுவும் கடந்து போகும்;)போகா விட்டாலும் பிரச்சனையில்லை.. அரசியலில இதெல்லாம் சகஜம் என்று போட்டு இருக்க வேண்டியது தான்..

4:52 AM  
Anonymous Anonymous said...

உள்ளேன் ஐயா

5:43 AM  
Blogger கானா பிரபா said...

கலவன் பாடசாலை எண்டால் தான் வருவன்

6:03 AM  
Blogger இளங்கோ-டிசே said...

பிரபாவை வழிமொழிகின்றேன்.
....
உம்மடை குரலைப்போல எப்படி பாடுவது என்டும் சொல்லித் தருவீரா?

6:47 AM  
Anonymous Anonymous said...

கிளாசிக் வார்ப்புருவைப் பயன்படுத்தி இவற்றை செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக உள்ளது. நானும் வருகிறேன்.

7:31 AM  
Anonymous Anonymous said...

me too

7:32 AM  
Anonymous Anonymous said...

வலைப்பதிவில் துறைசார்ந்த பலர் உள்ளார்கள். ஆனால் எழுதுவதில்லை. ஜல்லியடிப்பதே இலகு என நினைத்திருக்கிறார்கள் போலும்.

விளக்கப் படங்களுடன் எழுதினால் மிகவும் பயனுடையதாக இருக்கும்

7:34 AM  
Blogger சயந்தன் said...

//எல்லாரும் 'வேற இடத்துலே' இருக்காங்க. பா ர(த்)தப்போர்.//
ஒரு நாள் ஓயும். திரு நாள் மீளும்.

//எனக்கும் பல வற்றில் தெளிவில்லை.விபரமாகச் சொல்லுங்கோ வசந்தன்.//
நற நற நற.. ப்ளீஸ் ஒரு தடவையாவது நான் வசந்தனில்லை. சயந்தன் எண்டதை ஏற்றுக் கொள்ளுங்கோ..

//எனக்கும் கிளாசிக்கை விட்டுப் போற எண்ணமில்லை.//
எனக்கும் தான் வசந்தன். அதை விடும். மேலை பாரும் நான் மினக்கெட Credit உமக்குச் சேருது.. என்ன கொடுமை இது வசந்தன்..?

2:20 PM  
Anonymous Anonymous said...

சயந்தன்இஉண்மையில் நீங்கள் வசந்தனில்லையா?இந்தக் கறுப்பி வேற நீங்கதான் வசந்தன் எண்டு மல்லுக்கட்டி உண்மையைச் சொன்னமாதியும் கிடக்கு...
சரி பறுவாயில்லை.நீங்கள் இரட்டையர்களாக இருங்கள்!

அப்படியே தலைப்புக்குச் சாரல் என்று போட்டுள்ளீர்கள்.அந்தத் தலைப்பை எப்படிச் செய்கிறீர்கள் எழுதுகிறீர்கள்.

வடிவான எழுத்து.என்னெண்டு இவற்றைச் செய்வது?

2:55 PM  
Blogger அற்புதன் said...

இப்ப தான் பாத்தன் இந்தப் பதிவை.
நல்ல முயற்சி, எல்லோருக்கும் பயன் அழிக்கும்.மற்றும் இந்த சாரல்பதிவை எப்படி வடிவமைச்சீர் எண்டும் எழுதும். நீர் பதிவில தந்திருந்த தொடுப்பில போய்ப் பாத்தன், நல்ல நல்ல டெம்ப்லேட்டுக்கள் இருக்கு. அதில ஒண்டைக் கொப்பி பன்ணி என்ர எச்டிஎம்லில ஒட்டிப்பாத்தான் வேலை செய்யேல்ல.

உந்த இடியட் கயிட் மாதிரி விளக்கமா படம் போட்டு எழுதினா என்னைப்போல சின்னக்குட்டியைப் போல வயாசானைவைக்கும் பயன் உள்ளதா இருக்கும். ;-)

3:29 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நான் பின்னூட்டேக்க அந்த அனானியின்ர பெயர்மாற்றப் பின்னூட்டம் வரேல.

உங்க பாரேன் கதைய!
கறுப்பி நிரூபிச்சவவாம்.
அவ சொன்ன ஒரேயொரு காரணம் என்ன தெரியுமோ?
ரெண்டு பேருக்கும் 'ந்தன்' எண்டு பேர் முடியிறதால ரெண்டு பேரும் ஒண்டுதான் எண்டா.

அண்ணை, கொம்பியூட்டரில வடிவான எழுத்தாத்தான் தெரியும். ஏனெண்டா அது கையால எழுதிறேல.
___________________________
சரிசரி,
எவ்வளவு நாளுக்குத்தான் இந்தப்பதிவின்ர பின்னூட்டத்தை வைச்சே யாவாரம் பாக்கிறது.
உடன பதிவைப்போடும்.

5:28 PM  
Blogger சயந்தன் said...

நன்றி தங்கவேல், நனவிடை தோய்தல் எனில் கடந்த கால நினைவுகளில் மூழ்குதல் எனப் பொருளெடுக்கலாம். மற்றும் உங்கள் பாராட்டுக்கு நன்றி

//மற்ற பதிவுகளில் தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது//
ராம். உங்க கேள்வி எனக்குப் புரியவில்லை. எனது பதிவில் நீங்கள் தமிழில் பின்னூட்டமிட்டிருக்கின்றீர்களே..

//ஒரு வேளை பழைய பிளாக்கரில் இருந்து இந்த layout வடிவமைப்பில் செய்ய முடியாதது ஏதும் இருந்தால் சொல்லித் தாருங்கள்.//
ரவிசங்கர்.. நான் இதுவரை புதிய வார்ப்புருவில் எந்தச் சோதனைகளையும் செய்ய வில்லை. ஆனால் கிளாசிக் வார்ப்புருவில் நான் செய்திருக்கும் வசதிகள் பெரும்பாலும் hacks வகைகள்தான். குறிப்பாக லேபிள் இடும் வசதி புளொக்கர் சேவையை விட நன்றாக இருப்பதாக உணர்கிறேன்.

12:30 AM  
Anonymous Anonymous said...

எனக்கும் கூட நீங்க விரும்பற இப்பதிவு
ரொம்ப பிடிக்கும்.

3:31 AM  
Anonymous Anonymous said...

பயிற்சிக்காக ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து கொடுக்கப்படும் விளக்கங்களை அதில் செயல்முறையில் காட்டினால் இன்னும் பிரியோசனமா இருக்குமெல்லோ.. என்ன நான் சொல்லுறது..?

3:45 AM  
Blogger சயந்தன் said...

கானா பிரபா , குறும்பு..

//உம்மடை குரலைப்போல எப்படி பாடுவது என்டும் சொல்லித் தருவீரா?//
டிசே.. நான் பாடிக் கேட்டிருக்கிறீங்களா.. சரி ஒரு பாட்டுப் பதிவு போட்டுட வேண்டியது தான்.

ஒரு மாணாக்கன் வரவுக்கு நன்றி..மாணா(ம)க்கன் எண்டு நீங்க சொல்லக்கூடாது;)

//எவ்வளவு நாளுக்குத்தான் இந்தப்பதிவின்ர பின்னூட்டத்தை வைச்சே யாவாரம் பாக்கிறது.//
வசந்தன்.. கண்டுக்க வேணாம் ;)

டோண்டு..சிரமங்களிடையே வரவுக்கு நன்றி

அறிவாளி.. நல்ல அறிவுரை.. அது போலவே செய்கின்றேன். நன்றி..

8:28 AM  
Blogger சயந்தன் said...

இப்போ கருத்து இட்டவர்கள் பகுதிக்குள் எப்போதோ இட்ட கருத்துக்கள் எல்லாம் வருவதால் ( ஒருவ அந்த ரகசியத்தைக் கேட்டு அதை அனுப்பி முடித்த அடுத்த நிமிடம் நடந்தது. ) இது ஒரு பரிசோதனைப் பின்னூட்டம்.

1:19 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
என்னைப் போல வலு சக்கட்டையான ஆக்களுக்கும் வகுப்பெடுப்பீங்களா?பையப் பைய ஒன்னோண்ணாச் சொல்லித் தருவீங்கதானே!சந்தேகம் கேட்கலாம் தானே!
மிக நல்ல வேலை உடனே தொடங்குங்கள்.

2:05 PM  
Blogger சயந்தன் said...

யோகன் கட்டாயம் சந்தேகம் கேளுங்க.. முடிந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டமாக அனுப்புங்க.. உங்கடை வலைப்பதிவை ஒரு வழி பண்ணுவம்..

2:53 PM  
Anonymous Anonymous said...

இதை எல்லாம் எப்படி செய்வது என படிப்படியக சொன்னால் பெரும் உதவியாக இருக்கும்..நன்றி

3:29 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home