15.3.05

மடத்தனமாய்..

எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு.

இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன.

இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு.

எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும் வெறுப்பே எஞ்சி நிற்கிறது.

தினக்குரல் பத்திரிகையில் வெளிவருகின்ற சிங்கள நாளேடுகளில் இருந்து என்னும் ஒரு பகுதி!

அதனை ஆரம்ப காலங்களிலிருந்தே வாசிப்பது வழமை. தமிழர் போராட்டம் அது சார்ந்த நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள இனவாதப் போக்கு என்ன கருதுகிறது என்பதனை அறிய அந்தப் பகுதி வழியாயிருந்தது.

சிங்கள இனவாத பத்திரிகையில் எழுதுபவர்கள் எதுவும் தெரியாத மடையர்கள் என்கிற கருத்து எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி இப்பொழுது முழுவதுமாக உறுதியாகி விட்டது.

அண்மைக் கால உதாரணங்கள் சிலவற்றைப் பாருங்கள்.

சுனாமியின் தாக்குதலுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தியொன்று கிளம்பியிருந்தது.

அத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது!

எல்லா இனவாத சிங்கள பத்திரிகைகளும் உள்ளிருந்து பார்த்தது போல எழுதத் தொடங்கின.

கருணாவின் தகவலின்படி புலிகளின் தலைவர் இருக்கின்ற இடம் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான இடம் தான். அவர் மீண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவை எழுதின.

புலிகளும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட அந்த இனவாதக் காகிதங்களுக்கு குஷி தாங்க முடியவில்லை. தாம் என்ன நடக்க வேணும் என்று எதிர் பார்க்கிறார்களோ அது நடந்தது போலவே எழுதிக் கிழித்தன.

அந்த மேசைப் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எங்கோ முல்லைத் தீவில் நடந்திருக்க கூடிய சம்பவத்தை பக்கத்தில் நின்று பாத்து எழுதினர்.

சில காலத்தின் பின்னர் சுனாமி மீள் கட்டுமானம் குறித்து புலிகளின் தலைவர் வெளிநாட்டு தமிழ் அறிஞர்களைச் சந்தித்தமை குறித்த செய்தியும் படங்களும் வெளிவந்த போது உண்மையில் அந்தப் பத்திரிகைகள் ஆற்றாமையினால் வெம்பியிருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவே இல்லை!

அந்தப் புகைப்படத்தில் இருப்பது பிரபாகரன் இல்லை. அவர் போலத் தோற்றமுடைய இன்னொருவர். என்று அவை செய்தி எழுதின.

இனி இல்லை என்று சொல்லக்கூடிய மடத்தனத்தில் அந்தச் செய்திக்கு அவை சொல்கின்ற காரண காரியங்கள் இருந்தன.

அதாவது

உண்மையில் பிரபாகரன் இறந்து விட்டார். கிட்டத் தட்ட அவரைப் போல இருக்கின்ற 6 பேரை பொட்டம்மான் தெரிவு செய்து பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து உரு மாற்றியிருக்கிறார். வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் வரும் போது அவர்களோடு எப்படி பேசுவது என்பதை பொட்டம்மான் நெறிப்படுத்துகிறார்.

இதனாலேயே அடிக்கடி பிரபாகரன் மீசையோடும் மீசையற்றும் தோன்றுகிறார். அது தவிர இறந்து போன புலிகளின் தலைவருக்கு கையில் ஒரு பெருவிரல் இல்லை. ஆனால் தற்போதுள்ளவருக்கு அது இருக்கிறது. ஆக மொத்தத்தில் புலிகளின் தலைவர் சுனாமியில் இறந்து விட்டார்.
என அந்த பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இன்று வரைக்கும் அதையே எழுதி வருகின்றன.

உண்மையை சொல்லுங்கள். இது ஒரு மாற்றுக் கருத்து. அதனைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

அண்மையில் கௌசல்யன் கொலை குறித்த ஒரு கற்பனை ஆக்கத்திலும் தலைவர் இப்போது இல்லை. ஆகவே நீ எங்களோடு வந்து இணைந்து விடு என கருணா தரப்பிலிருந்து கௌசல்யனைக் கேட்டதாக எழுதியிருக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கும் மடத்தனமான கருத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இது இரண்டாவது வகை.

---மாற்றுக் கருத்துக்களை காது கொடுத்து கேட்கின்ற அதே வேளை அந்தக் கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களேயாதலால் அவையும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை உணர்ந்து கொள்கின்ற அதே வேளை அந்த கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்தக்களேயாதலால் அவற்றில் உள்ள நியாயத் தன்மையும் உணர்ந்து கொள்ளப் பட வேண்டும்---

நான் சொன்ன வடிகட்டின மடைத்தனமான கருத்துக்களை எழுதி தங்களையும் பேயன்களாக்கி வாசிக்கிறவர்களையும் விசரர் ஆக்க முயற்சிக்கிற பத்திரிகைகளை நினைத்தால் கோபம் வருகிறது.

அதை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்களை நினைத்தால் கவலை வருகிறது.

பின்குறிப்பு: நடப்பது யுத்தம்! இதிலே இவ்வாறான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. புலிகள் மட்டும் இப்படி எழுதியதே இல்லயா என்று யாராவது கேட்டுப் பின்னூட்டம் இடுவார்களோ தெரியவில்லை.

5 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

"நடப்பது யுத்தம்! இதிலே இவ்வாறான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. புலிகள் மட்டும் இப்படி எழுதியதே இல்லயா என்று யாராவது கேட்டுப் பின்னூட்டம் இடுவார்களோ தெரியவில்லை." நிச்சயமாகக இடப்பட வேண்டியப் பின்னூட்டமே. தாங்கள் அதை எவ்வாறு எதிர்க் கொள்வீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். இதே மாதிரிப் பின்னூட்டத்தை இலங்கை வானொலி ஒலிபரப்பு சம்பந்தமாக ஏற்கனவே இட்டுள்ளேன்.
அன்புள்ள,
டோண்டு ராகவன்

4:45 AM  
Blogger சயந்தன் said...

நன்றி டோண்டு! பத்தியிலேயே குறிப்பிட்டிருந்ததைப் போலவே மாற்றுக் கருத்து என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் நான் மேலே சொன்ன சிங்கள பத்திரிகைகளின் எழுத்து அந்த வகைக்குள்ளா அமைகிறது.

மற்றும் படி நடப்பது யுத்தம் அங்கே எதுவும் நடக்கும் .. மடத்தனமாகவும் எழுதுவார்கள்.. பொய்யும் புரட்டும் சொல்வார்கள் இதெல்லாம் சகஜம் என்றால்.. வேறு சிலவும் நடக்கும்.. அதெல்லாம் சகஜம் என்று விட்டுவிட முடியுமா?

இன்னுமொரு பின்குறிப்பு : அந்த பின்குறிப்பு உங்களை மனதில் வைத்துத் தான் எழுதப்பட்டது.

5:36 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

"இன்னுமொரு பின்குறிப்பு : அந்த பின்குறிப்பு உங்களை மனதில் வைத்துத் தான் எழுதப்பட்டது"
அதை உடனடியாகப் புரிந்துக் கொண்டதால்தான் நானும் இப்பின்னூட்டம் இட்டேன். அது இருக்கட்டும், புலிகள் அவ்வாறு செய்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி ஒன்றும் கூறவேயில்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்

8:14 AM  
Blogger சயந்தன் said...

கொள்கை ரீதியாக புலிகள் தங்கள் போராட்டத்தினை நியாயப் படுத்தி எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் சிங்களப் பத்திரிகைகள் போல பேய்த்தனமாக புலிகளும் சரி அவர்கள் சார் ஊடகங்களும் சரி எழுதியது இல்லை.

சத்திர சிகிச்சை கதை போன்ற வெருளிக் கதைகளெல்லாம் அவர்கள் கதைப்பதில்லை

11:38 AM  
Anonymous Anonymous said...

சயந்தன், முன்னைய குடில் முகப்பு நல்லா இருந்தது. இயற்கை அழகுடன் கூடிய முகப்பையே மீண்டும் போடுங்கள்.

மதன்

3:22 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home