4.2.07

என் சிறுகதைகள் பற்றிய செய்திகள்

அர்த்தம். எனது சிறுகதைத் தொகுதியின் பெயர். சரிநிகர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைக் கொண்டு நிகரி என்னும் பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவந்தது. அந்த நிகரி வெளியீடாகவே எனது அர்த்தமும் வெளிவந்தது.

1998 இல் தினக்குரல் பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதையான எங்கடை மக்கள் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் எனக்கு எவரையுமே அறிமுகம் இல்லாதிருந்த காலத்தில் அச் சிறுகதை வெளிவந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காணாமல் போன ஒரு மகனின் தாயின் உணர்வுகளை பேசிய அச்சிறுகதை எனது அச்சில் வெளிவந்த முதற் கதையாயினும் கடந்த வருடம் நின்று திரும்பி பார்த்த போது எனக்கு அது பிடிக்கவில்லை. அதனாலேயே அக்கதை என் தொகுப்பில் இடம் பெறவும் இல்லை.

என் சிறுகதை அச்சில் வெளிவந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த கதைகளை எழுதத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 20 நாள் இடை வெளியில் கூண்டு என்னும் அடுத்த சிறுகதை வெளிவருகிறது. வெளிநாடு செல்ல வெளிக்கிட்டு இடைநடுவில் பிடிபட்டு திரும்ப இலங்கை வந்து மீண்டும் வெளிநாடு போகவே மாட்டன் என்றிருந்த வேளையில் இராணுவத்தால் கைது செய்யப் பட்டு விசாரணையின் பின் விடுதலையான பின்னர் மீண்டும் வெளிநாடு போக விரும்புகின்ற ஒரு பெண்ணின் கதை. கதையோட்டத்தில் எனக்கு திருப்தி தந்த சிறுகதை அது.

இவ்வேளை சில சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். நான் கதை எழுதுவதையும் அவை பத்திரிகைகளில் வருவதையும் எனது பாடசாலை நண்பர்கள் நம்பத் தயாராய் இருக்க வில்லை. கதிர் சயந்தன் எண்ட பெயரில வேறை யாரோ எழுதுகினம். நீ பொய் சொல்லாதே என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் அவர்களை நம்ப வைப்பதற்காக நான் எழுதிய கதைகளின் பாத்திரங்களின் பெயர்களுக்கு என் நண்பர்களின் பெயர்களை இட்டேன். அதன் பின்பே அவர்கள் ஒருவாறு நம்பத் தொடங்கினார்கள்.

அக்கரை என்று நான் எழுதிய ஒரு சிறுகதை எனது இந்திய படகு பயண அனுபவத்தை மையப் படுத்தியது. சிறுகதைகளை விரும்பி வாசிப்பவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த அந்த சிறுகதையே இலகுவாக வழி சமைத்தது.

அது வரை காலமும் தினக்குரலில் மட்டுமே எனது சிறுகதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தில் தான் உயிர்ப்புவை நாங்கள் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்தோம். கொழும்பில் இயங்கிய தமிழாலயம் என்னும் அமைப்பின் ஊடாக அது வெளிவந்தது. (பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சந்தித்த கருத்து முரண்பாடுகள், கொள்கைப் போரிடல்கள், மனஸ்த்தாபங்கள் என்று எல்லாவற்றையும் நாங்கள் அப்போதே சந்தித்தோம் என்பது வேறு விடயம்)

பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பி விட்டு எப்ப வரும் என்று எதற்காக பார்த்து கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுது தான் நம்மிடமே பத்திரிகை இருக்கிறதே. அதிலேயே என் சிறுகதைகளை வெளியிடலாமே என்ற எண்ணத்தில் அதன் பின்னர் தினக்குரலுக்கு கதைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

முதலாவது உயிர்ப்பில் வந்த சிறுகதை ஐயோ சயந்தா நீயுமா என்று என்னை நானே கேட்க வைக்கின்ற கதை. முழுக்க முழுக்க பாலகுமாரன் பாதிப்பில் அது கிடந்தது. காதலை வெளிச்சொன்ன ஒரு இளைஞனுக்கு காதலிக்க வேண்டாம். கல்யாணம் கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகின்ற ஒரு பெண் தொடர்பான கதை அது. இளைஞன் தமிழனாயும் பெண் சிங்கள இனத்தை சேர்ந்தவளாயும் இருந்தார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி ஒரு கதையை நான் எழுதியிருக்கத் தேவையில்லை என்று தோன்றினாலும் அதுவே எனக்கு பல பெண் நண்பர்களை தேடித்தந்தது என்பது உண்மை... உண்மை... உண்மை...

அடுத்த உயிர்ப்பு இதழில் எனக்கு மன நிறைவு தந்த அர்த்தம் வெளிவந்தது. போராளிகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் சாதாரண மனித உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லிய அந்தச் சிறுகதையின் பெயரிலேயே என் தொகுப்பு இருந்தது. லீவில் வீடு வந்திருந்த போராளி முன் வீட்டில் இருந்த அவனோடு படித்த பெண் பற்றி கேட்பதும் அவளுக்கு கல்யாணம் முடிந்து அவள் வெளிநாடு போய் விட்டாள் என தாய் சொல்வதும் மெல்லிய இதய சுவரோரம் கூரிய முள் ஒன்று லேசாய் கீறிச் செல்வது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்படுவதும் இப்படியாக பல விடயங்களை அச் சிறுகதை தொட்டது.

அந்த போராளி எழுதி வைத்திருந்ததான

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா
ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும் இரு விழிகள்

என்ற கவிதை என்னை மிகக்கவர்நத எனது வரிகளில் ஒன்று.

சில விதி முறைகளை மீறிய காரணத்திற்காக நானும் எனது நண்பன் சேயோனும் உயிர்ப்பு ஆசிரியர் குழுவில் இருந்து நீக்கப்பட்டோம். (பலர் செய்வது போல நானும் அவனும் புதிய உயிர்ப்பு என்ற பெயரில் பத்திரிகை தொடங்குகின்ற முட்டாள்த் தனமான காரியத்தை செய்ய வில்லை. நானும் அவனும் விளம்பர பிரிவுக்கு நியமிக்கப் பட்டோம். அக்கால கட்டத்தில் தான் தமிழ் வெப் றேடியோ மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஆகியவற்றின் விளம்பரங்கள் தாங்கி உயிர்ப்பு வெளிவந்தது என்பதனை எங்களுடைய திறமை குறித்து உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இங்கே எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன பண்ணுவதாம்.)

அக்கால கட்டத்தில் நான் எந்த சிறுகதையையும் உயிர்ப்புக்கு எழுத வில்லை. எங்கே எனது கதைகள் புறக்கணிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குட்டி குட்டி கவிதைகள் எழுதி வந்தேன்.

மீண்டும் உயிர்ப்பின் ஆசிரியர் குழுவில் நான் இடம் பெற்றேன்.(தண்டனைக் காலம் முடிவடைந்ததும்?????). அதுவே கடைசி வெளியீடு என்பது எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. பேசாமல் இதழின் கடைசி பக்கத்தில் கை கூப்பி நன்றி சொல்லும் பெண்ணின் படம் போட்டு நீங்கள் இது வரை காலமும் தந்த ஆதரவுக்கு நன்றி என்று போட்டு விடலாமா என்றும் யோசித்தேன்.

அந்த இதழில் ஒரு பெண்ணின் புனை பெயரில் நான் எழுதியிருந்த முகங்கள் கதையும் எனக்கு பிடித்தது.

கேள்விகள் என்கின்ற ஒரு சிறுகதை திருமறைக் கலாமன்றம் வெளியிட்ட கலைமுகம் என்னும் இதழில் வெளிவந்தது. அக்காலப் பகுதியில் கலைமுகத்தின் ஆசிரியராக இருந்தவன் எனது நண்பன் சோமிதரன். கிட்டத் தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே அக் கதையை என்னிடமிருந்து வாங்கி இந்தா வருது அந்தா வருது என்று கொண்டிருந்தான். உது வேலைக்காவாது என்று கருதி விட்டு அச்சிறுகதையை நான் சுடரொளிக்கு அனுப்பியிருந்தேன். பிறகும் பல காலத்தின் பின் ஒருவாறு கலைமுகம் திருமுகம் காட்டியது எனது கதையோடு . நல்ல வேளை சுடரொளியில் வரவில்லை என்று ஆசுவாசப் பட்டபோது அட.. அடுத்த வார சுடரொளியில் அச்சிறுகதை வெளிவந்தது. சோமிதரனிடம் நான் நன்றாகவே வாங்கி கட்டிக்கொண்டேன்.

2003 ஏப்ரல் 20 மீண்டும் தினக்குரலில் எனது சிறுகதை வெளிவருகிறது. கலக்குறே சயந்து என்று என்னை நானே பாராட்டிக் கொள்கின்ற சிறுகதை அது. போர் மையம் கொண்டிருந்த காலத்தில் வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த இளைஞன் ஒருவன் போர் ஓய்ந்த பின் மீண்டும் வன்னிக்கு போகின்றான். அவனது நினைவுத் தடத்திலிருந்த ஒரு பெண் தொடர்பான கதை தான் அது. வெட்கம் என்ற பெயரில் அது வந்தது. (ஆட்டோகிராப் படம் வெளிவர முன்னமே அது வந்து விட்டது என்பதை இத்தால் அறிய தருகிறேன்.) அதுவே இது வரைக்கும் என்னுடைய இறுதிக் கதை.

(இவை தவிர காதலை வித்தியாசமான கோணத்தில் அணுகுதல் என்ற பார்வையில் அல்லது போர்வையில் கண்ட கேட்ட ஒரு காதல் பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு வித்தியாசமான தீர்வு கொடுத்து கதையாக்கி நான் எழுதுகின்ற சிறுகதைகள் சஜீ என்ற பெயரில் சுடரொளியில் அவ்வப்போது வெளிவரும். அம்மாவுக்கு கூட தெரியாமல். அம்மாவுக்கு தெரிஞ்சா படிக்கிற வயசில என்ன காதலும் கத்தரிக்காயும் என்று பேசுவா)
September 29, 2004

Labels:

3 Comments:

Anonymous Anonymous said...

சயந்தன்.. உனது அர்த்தம் சிறுகதைத் தொகுதி பற்றிய என் பார்வையை எழுத வேண்டுமென்றிருந்தேன். ஒரு காலத்தைப் பதிவு செய்த வகையில் அத முக்கியமானது. எழுத முயல்கிறேன்.

1:47 PM  
Blogger சினேகிதி said...

annai periya aalathan.engalukum oru book anupina vasipam ello.

4:05 PM  
Blogger சயந்தன் said...

சினேகிதி.. இலங்கையில கடையளில புத்தகம் 3 வருசமாயும் விக்காமல் கிடக்கு.. உங்கடை பின்னூட்டம் பாத்த பிறகு ஒரு நம்பிக்கை வருது.. :)

ஒரு சில கதைகள் இந்த புளொக்கிலும் உள்ளது. பக்கத்தே பெரும் பிரிவுகள்..(ஆமா ரொம்பப்பெருசு..) உண்டல்லவா.. அதில் சிறுகதைகள் பிரிவை கிளிக்குங்கள். சிறுகதைகள் திரட்டப்படும்.. படித்து விட்டு முடிவெடுங்கோ.. புத்தகத்தை அனுப்பச் சொல்லுறதோ இல்லையோ எண்டு.. ::))

4:59 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home