25.3.05

ஒஸ்ரேலியாவில் வலைப்பதிவர் சந்திப்பு

ஒரு மூன்றாவது கண் பார்வை!

'குறு' குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாலும் நேரத்திட்டமிடலில் ரொம்பவே சொதப்புகின்ற சயந்தனாலும் இன்று ஒஸ்ரேலியாவில் இடம் பெற்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சரியாகவோ, முறையாகவோ அறிவிக்க இயலவில்லை.

இன்று வெள்ளிக்கிழமையான விடுமுறை நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றது. குறுகிய கால இடைவெளியில் ஒழுங்கு செய்யப் பட்டிருப்பினும் ஒஸ்ரேலியாவில் இருந்து வலைப்பதிகிற இரண்டு மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

சந்திப்பு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரத்தியேக இடத்தில் நடைபெற்றது. மதியத்திற்கு நிறையப் பின்பாக முதலாவதாக வந்து சேர்ந்தார் வசந்தன். வசந்தனின் பக்கம் என்னும் வலைப்பதிவில் தெரியாத, அறியாத பழஞ்சொல்லுகளைப் பற்றி பதிந்து வருபவர் அவர்.

முதலாவதாக வந்து சேர்ந்த வசந்தனின் பின்னர் வருவதற்கு எவருமில்லாததால் சந்திப்பு ஆரம்பமானது.

கொஞ்ச நேரம் பலதும் பத்துமாக பேசிக்கொண்டிருந்த சந்திப்பு 'எழுதுவது என்றால் என்ன' என்ற சயந்தனின் கேள்வியின் பின்னர் சூடு பிடித்தது. அதற்கு வசந்தனின் பதில் திருப்தியாக அமையா விட்டாலும் வசந்தனுக்கு தெரிந்தது அவ்வளவும் தான் என நினைத்த சயந்தன் அடங்கிக் கொண்டார். அதே போல இணையத்தில் இலக்கியம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அவை பெரும்பாலும் அண்மைக்கால பின்னூட்டங்களில் இருக்கிறது என வசந்தன் சொன்னார்.

இடையில் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் பற்றி பேசப் போவதாக சயந்தன் சொல்லி எழுந்தார். கூடவே அவர் சில புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார். அவை ஒஸ்ரேலிய இந்துக் கோவில்களில் பயன் படுத்தப் படுகின்ற தேவார திருவாசக புத்தகங்கள். தமிழ்த் தேவார திருவாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.

அப்பமுப்பளம் என்பது Appamuppalam என எழுதப்பட்டிருந்த அந்த புத்தகங்களை காட்டி மொழி பெயர்ப்புக்களின் அவசியம் பற்றி சயந்தன் பேசினார். தமிழ் தெரியாத குழந்தைகள் எப்படியாவது தேவாரங்களைப் பாடி அருள் பெற வேண்டும் நோக்கில் இவ்வாறான நிறைய மொழி பெயர்ப்புக்கள் பிரெஞ்சில் ஜேர்மனில் எல்லாம் வர வேண்டும் என சயந்தன் சொன்னார்.

ஆனால் இடையில் குறுக்கிட்ட வசந்தன் இவை மொழி பெயர்ப்புகள் இல்லை என்றும் இவை ஒலி பெயர்ப்புக்கள் எனவும் சொன்னார். ஒரு மாதிரியாகப் போய்விட்ட சயந்தன் இவை மொழி பெயர்ப்புக்கான நல்ல ஆரம்பம் என சமாளித்தார்.

வரும் போது வசந்தன் பினாட்டு கொண்டு வந்திருந்தார். வசந்தன் மறந்து போன விடயங்களை, பழக்க வழக்கங்களை, உணவு முறைகளை எழுதுவது மட்டுமல்லாது செயலிலும் காட்டுவார் என்பதற்கு அவர் பினாட்டு கொண்டு வந்தது ஒரு உதாரணம்.

நெடுநாள் திட்டமிடலுடன் தொடங்கியிருந்தால் பினாட்டுப் போலவே குரக்கன் பிட்டு, பருத்தித்துறை வடை, ஆலங்காய் இவற்றை ஏற்பாடு செய்திருக்கலாம் என வசந்தன் கூறினார். (இவை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் தொடர்ச்சியாக வசந்தன் பக்கம் பார்க்கவும். அங்கு தான் வழக்கொழிந்த சொற்கள் எல்லாம் ஆராயப்படுகிறது)

மீண்டும் சந்திப்பு தொடர்ந்தது. சிறுவர் பாடல்கள் பற்றிப் பேசிய வசந்தன் 'கத்தரித்தோட்டத்து மத்தியிலே' என்னும் பாடலை ஒஸ்ரேலியாவில் வாழும் ஒரு சிறுவனைக் கொண்டு பாடி ஒலிப்பதிவு செய்ய எடுத்த முயற்சி பற்றி சொன்னார்.

அப்பாடலை முழுதுமாக ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்து 'கத்தரி' என்றால் என்ன 'வெருளி' என்றால் என்ன என அச் சிறுவனுக்கு விளங்கப்படுத்தி ஒலிப் பதிவை முடித்த போது அது வெள்ளைக் கார குழந்தை பாடியதை விட மோசமாக இருந்தபடியால் அத் திட்டத்தை கைவிட்டு விட்டதாக கவலையுடன் சொன்னார்.

கத்தரித்தோட்டத்து மத்தியில் என்ற பாடலில் 'வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடுது வெள்ளைப்பசு' என்ற வரி வருவதாகவும் அப்பாவி வெள்ளைப் பசுவிற்கு பய உணர்வைத் தருவதும், அச்சத்தை ஊட்டுவதும், அப்பாவி வெள்ளைப் பசுவின் புல்லுத் தின்னும் உரிமையை மறுக்கின்றதுமான இவ்வரிகள் ஒரு விதத்தில் வன்முறையை ஊட்டுகின்றன. ஆகவே இப்பாடல் தடை செய்யப் பட வேண்டும் என சயந்தன் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து வசந்தன் 'ஜாவா' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய பக்கங்களில் இணைக்கக் கூடியதான ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். இச் செயலியை வலைப் பதிவுகளில் இணைப்பதனால் வலைப் பதிவிற்கு வரும் ஒருவர் கண்டிப்பாக பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் அனைவரும் கட்டாயம் பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என வசந்தன் மேலும் சொன்னார்.

ஆனால் பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்க முடியுமென்றால் பதிவினைப் படிக்க முடியாமல் எப்படி பின்னூட்டம் இடுவது என சயந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு வசந்தன் இப்போதெல்லாம் பதிவுகளிற்கும் பின்னூட்டங்களிற்கும் பெரிதும் சம்பந்தமில்லையாதலால் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றார்.

சந்திப்பு தமிழ்மணம் குறித்து திரும்பியது. வலைப் பதிவுகளின் எண்ணிக்கை மகிழ்வடையக் கூடிய அளவிற்கு அதிகரித்திருப்பதனால் ஒரு பதிவினை அனுப்பி விட்டு தமிழ் மணத்திற்கு வந்து பார்த்தால்... அதற்கிடையில் பத்து பதிவுகள் வந்து எழுதிய பதிவினை பின்னுக்கு தள்ளி விடுகிறது.

ஆகக் குறைந்தது இரு மணி நேரத்திற்காவது பதிவு, தமிழ் மண முதற் பக்கத்தில் இருந்தால் போதும் என அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னார்கள். ஆனால் 5 நிமிடமாவது இருப்பதே அதிசயம் என வசந்தன் சொன்னார்.

ஒரு ஆறுதலாக பின்னூட்டம் இடப்பட்ட பதிவுகளின் பட்டியலில், பதிவுகள் வருவது சந்தோசமாக இருக்கிறது என சயந்தன் சொன்னார். இருப்பினும் பின்னூட்டம் எதுவும் இடப்படாதவிடத்து அந்தப் பட்டியலிலிருந்தும் பதிவுகள் ஓடுவதால் வேறு பெயர்களில் வந்து பின்னூட்டங்கள் இட வேண்டிருக்கும் என சந்திப்பில் கலந்து கொண்ட சிலர் தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

இதற்கு ஒரு நல்ல மாற்றாக, பின்னூட்டங்கள் இடப்பட்ட பட்டியலிலிருந்து பதிவுகள் ஓடினால், பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கு நன்றி என ஒரு பின்னூட்டம் இடுவது நல்லது என வசந்தன் சொன்னார்.

இருப்பினும் இது குறித்து ஆகக்குறைந்தது பதியப்பட்ட 25 பதிவுகளையாவது காட்டுவது நல்லது என்ற சந்திப்பில் கலந்த கொண்டவர்களின் கருத்தினை தமிழ்மணம் காசியின் கவனத்திற்கு கொண்டு செல்வது தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக அடுத்த ஒஸ்ரேலிய வலைப்பதிவர் சந்திப்பை சிட்னியில் நடாத்துவது எனவும் அதற்கான ஏற்பாடுகளை (மெல்பேணிலிருந்து சிட்னிக்கான விமான பயண சீட்டு உட்பட) சிட்னியிலிருந்து வலைப்பதியும் வலைபதிவாளர்கள் செய்வார்கள் எனவும் 'இரு' மனதாக முடிவு செய்யப்பட்டது.

சந்திப்புக் குறித்த இன்னுமொரு பதிவு வசந்தனின் பக்கத்தில் வர இருக்கிறது. இரண்டையும் அடுத்தடுத்ததாக படிக்கவும். விருமாண்டி படம் பார்த்தது போல இருக்கும்

14 Comments:

Blogger சயந்தன் said...

//பின்னூட்டங்கள் இடப்பட்ட பட்டியலிலிருந்து பதிவுகள் ஓடினால், பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கு நன்றி என ஒரு பின்னூட்டம் இடுவது நல்லது என வசந்தன் சொன்னார்.//

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

7:08 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: டிசே

சயந்தன், நானும் ஏதோ சிங்கையில் நடந்த சந்திப்புபோல ஆஸ்திரேலியாவிலும் சந்திப்பு நடந்துவிட்டதே என்ற கடுப்பில் வந்தால், நன்றாக சிரிக்க வைத்துவிட்டீர்கள். பதிவு மிக நன்றாகவிருந்தது. நன்றி.

11.1 25.3.2005

8:05 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சீலன்

ஹா..ஹா..ஹா எப்போதையா அந்த ஜாவா நுட்பத்தை பொதுமக்கள் பாவனைக்கு விடப்போகிறீர்கள்? அது வந்த பின்னர் நானும் ஒரு வலைப் பதிவு தொடங்க இருக்கிறேன்.

5.3 26.3.2005

10:06 AM  
Anonymous Anonymous said...

நல்ல மா/நாடு தான்!

12:30 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: நவன்

//ஆனால் பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்க முடியுமென்றால் பதிவினைப் படிக்க முடியாமல் எப்படி பின்னூட்டம் இடுவது என சயந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு வசந்தன் இப்போதெல்லாம் பதிவுகளிற்கும் பின்னூட்டங்களிற்கும் பெரிதும் சம்பந்தமில்லையாதலால் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றார்.//

:)))))))))))

16.44 25.3.2005

1:48 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

யோவ் சயந்தன்!
நான் தான் முதலில பதிவு எழுதிறதெண்டும் பிறகு நீர் எழுதிறதெண்டும்தானே கதைச்சுப் போட்டு வெளிக்கிட்டனாங்கள். நான் வீட்ட வந்து எழுதிப் போடுறதுக்குள்ள உம்மட விளையாட்டக் காட்டிப்போட்டீர். நீர் எழுதினது தெரியாமல் என்ர பதிவில சயந்தன் எல்லாம் விவரமாச் சொல்லுவார் எண்டு எழுதிப்போட்டன். அது சரி படம் ஏன் போடேல?

வாசகர்களுக்கு ஒரு செய்தித் திருத்தம். அந்த ஜாவா தொழில்நுட்பம் எழுதினது நானில்ல. என்ர நண்பன் ஒருவன் செய்திருக்கிறான் எண்டுதான் சயந்தனுக்குக் காட்டினனான். அந்தாள் என்ர பேரப்போட்டிட்டுது.

2:37 PM  
Blogger Thangamani said...

அப்படியே வலைப்பதிவர்கள் ஊர்வலமாய்ச் சென்றதைக்குறித்து புகைப்படத்துடன் எழுதியிருக்கலாம்.
:))

3:59 PM  
Blogger சயந்தன் said...

//யோவ் சயந்தன்!
நான் தான் முதலில பதிவு எழுதிறதெண்டும் பிறகு நீர் எழுதிறதெண்டும்தானே கதைச்சுப் போட்டு வெளிக்கிட்டனாங்கள்//

வசந்தன் என்ன இருந்தாலும் முதலில எழுதினது நீங்கள் தான். சந்திப்புக்கு வரும் போதே உமது வலைப்பதிவில் நீர் வெளியிட்ட சந்திப்பு குறித்த பதிவை எழுதி வந்து காட்டியதை நான் மறந்து போட்டன். ஆர்வக் கோளாரிலை ஒரு ஷோ காட்டுவம் எண்டு நான் முதலிலை எழுதி போட்டுவிட்டன். முதலே எழுதி வைச்சிருந்த உமக்குத்தான் முதல் வாய்ப்பு தந்திருக்க வேணும். அடுத்த முறை சந்திப்புக்கு முதலே பதிவைப் போட்டு விட்டு சந்திப்புக்கு வந்தீரெண்டால் உம்மை ஆராலும் முந்தேலாது

5:12 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Thadcha

புகைப் படங்கள் எப்போது வெளிடப்படும் ?

16.54 26.3.2005

9:56 PM  
Blogger kirukan said...

:-))))

2:06 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சயந்தன்

பின்னூட்டம் விடுறவங்க கொஞ்சம் இஞ்ச கவனியுங்கோ... நீங்க புனைபேரில எழுதிறது பரவாயில்லை. அது உங்கட விருப்பம் என்டு விட்டிடலாம். ஆனால் பாருங்கோää வேற ஆக்கட பேரில (எனக்கு நல்லாத் தெரிஞ்சவங்கட பேரில) எழுதிறீங்களாம் எண்டும் இது வேணுமென்டு தான் செய்யுப்படுதாம் என்டும் என்ர காதில ரண்டுää மூண்டு பேர் போட்டு வைச்சிருக்கினம். இதை நிப்பாட்டப் பாருங்கோ. என்ன கவலையெண்டா சிலபேர் என்னையே சந்தேகப்படுகினம். அதால... தயவுசெய்து இப்படிச் செய்யாதீங்கோ....


17.3 26.3.2005

3:12 AM  
Blogger சயந்தன் said...

அட..மேல் உள்ளவாறான ஒரு பின்னூட்டம் நான் எழுதவே இல்லையே..

இணையத்தில் எழுதுவதில் உள்ள சிக்கல்களில இதுவும் ஒன்றாக்கும். :)

யாரோ யாருடையதோ பெயரில் வந்து எழுதுகினம். அதுக்கு அந்த யாரோ என் பெயரைப் போட்டு பதில் சொல்லுகினமாக்கும்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

6:47 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ShiyamSunthar

உங்கடை தளத்திலை படங்கள் வருமென்று வசந்தன் தளத்திலை போட்டிருக்கிறார். நானும் இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் என்று வந்து வந்து பார்க்கிறன். என்ன அடிக்கடி உங்கடை தளத்துக்கு வர வரவைக்கிறதுக்காக ரண்டு பேரும் பிளான் பண்ணி விளையாடுகிறீர்களா? முடிவாச் சொல்லுங்கோ! எப்ப வரும்?

18.55 27.3.2005

1:00 AM  
Anonymous Anonymous said...

//ஆனால் பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்க முடியுமென்றால் பதிவினைப் படிக்க முடியாமல் எப்படி பின்னூட்டம் இடுவது என சயந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு வசந்தன் இப்போதெல்லாம் பதிவுகளிற்கும் பின்னூட்டங்களிற்கும் பெரிதும் சம்பந்தமில்லையாதலால் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றார்.//

இத்தால் சகலருக்கும் அறியத் தருவது யாதெனில் என்னுடைய பெயர் இத்தளத்தில் பிறரால் பாவிக்கப்படுவதால் சயந்தனது எந்தவொரு ஆக்கத்திற்கும் பின்னூட்டம் எழுத முடியாத துர்ப்பாக்கியமான... பரிதாபகரமான நிலை (???..) எனக்கு ஏற்பட்டுள்ளது. இடப்படும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்ற சயந்தனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில் சயந்தனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். :-)
ஆகவே இந்நிலையை மாற்றுமுகமாக இன்று முதல் என்னுடைய பெயரை லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி (ம்.. அப்பாடா…) என்று மாற்றி பின்னூட்டம் இடலாமென எண்ணியுள்ளேன்.

வெகு விரைவில் அதனையே சட்டரீதியாக மாற்றிக் கொள்ளும் உத்தேசமும் உள்ளது.

பி.கு: நான், நீ என்ற பெயர்களில்(??) எழுதுபவர்கள் கவனிக்க
நான் மாற்றிக் கொண்ட பெயரைப் போலவே சிறந்த பல பெயர்கள் கைவசம் உள்ளன. விரும்பின் சயந்தன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

1:22 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home