27.3.05

கிட்டண்ணை பூங்காவும் நானும்

என்னை உங்கள் எல்லாருக்கும் காட்டுறதுக்காக ஒரு படம் ஒண்டு போட்டன் தானே! அதிலை ஈழநாதன் நல்லூர் கிட்டு பூங்காவில பாத்த மாதிரி கிடக்கு எண்டு ஒரு பின்னூட்டம் விட அதை வாசிக்க எனக்கு மனசெல்லாம் பின்னுக்குப் போட்டுது.

95 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில வலிகாமம் மேற்கு பக்கமா இலங்கைத் தேசிய ராணுவம் சண்டை பிடிச்சுக்கொண்டு முன்னேறி வந்தது. அதுக்கு முன்னேறிப் பாய்ச்சல் எண்டு அதுக்கு பேர் வைச்சிருந்தவை. (முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.. நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா எண்ட பாட்டு எனக்கு நினைவுக்கு வருது.. முழுக்க எழுதோணும் போல கிடக்கு.. பிறகு ஆரும் குழந்தையள் இதைப் படிச்சு வன்முறையாளர்களானால் எனக்கு ஏன் சோலி)

அந்த நேரம் நிறைய சனமும் செத்துப் போட்டுதுகள். அதுவும் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திலை புக்காரா எண்டொரு பிளேன்.. ஒரே நேரத்திலை எட்டு ரொக்கட்டுக்களை அடிக்க அங்கை இடம் பெயர்ந்து வந்து கொஞ்சம் களைப்பாறிக்கொண்டிருந்த சனத்திலை 200 பேருக்குக் கிட்ட செத்தவை.

உப்பிடி எல்லா இடத்திலையும் அடி! ஒரு மாதிரி ஆமி முன்னுக்கு வந்து இடங்களையெல்லாம் பிடிச்சிட்டுது. நாங்களும் யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ளை வந்து ஒரு சொந்தக்காரர் வீட்டிலை இருந்தம். பிறகு ஒரு ஐஞ்சு நாளிலை ஆமி திரும்பி போட்டுது. புலிகள் தான் அடிச்சு கலைச்சவை.

நாங்களும் ஒரு பத்து நாளில வட்டுக்கோட்டைக்கு போனம். (போற வழியிலை கொஞ்சம் கிட்டப் பாதை நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தைக் கடந்து தான் போகும். நாங்களும் அதாலை தான் போனம். அங்கை கட்டட குவியலுக்குள்ளையிருந்து மீட்க முடியாத உடல்த்துண்டுகளை அப்பிடியே எரிச்சுக் கொண்டிருந்தவை. அந்த நேரம் என்ரை சைக்கிள் காத்துப் போக இறங்கி அடுத்த சைக்கிள் கடை வரையும் உருட்டிக் கொண்டு போனன். அதே மாதிரி இன்னும் கொஞ்சம் பேருக்கு அந்த அந்த இடத்திலை காத்துப் போக அது ஒரு கதையாக கொஞ்சக் காலம் உலாவிச்சு. )

ஊரிலை இருந்தாலும் ஒரு பயமாத்தான் கிடந்தது. அதுவும் நான் சரியான பயந்தாங்கொள்ளி. எங்கையும் பிளேன் அடிச்சா ஒருத்தரும் என்னோடை வர வேண்டாம் எண்டிட்டு தனிய எங்கையாவது வயல்வெளியளுக்குள்ளை ஓடிப் போய் படுத்திருந்து கத்துவன். (ஆக்களோடு எண்டால் கூட்டத்தை கண்டு விட்டு குண்டு போடுவான் எண்டு பயம்.)

சரியெண்டு ஒரு கொஞ்ச நாளுக்குப் பிறகு நாங்கள் ரவுணுக்குள்ளை ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்தம்.
அது யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு கிட்ட, கிட்டு பூங்காவிற்கு பின்னாலை இருக்கிற சேர்ச்சுக்கு பக்கத்திலை ஒரு ஒழுங்கைக்குள்ளை இருந்தது.

அதே மாதிரி யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் அரண்மனை வாயில், யமுனா ஏரி இதெல்லாம் எங்கடை வீட்டுக்கு கிட்டத்தான் இருந்தது. (இவ்வாறாக எனது வாழ்வின் பெரும் பகுதியை (4 மாசம்) ஆண்ட தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்களுடனேயே கழித்திருக்கிறேன் என்பதனை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.)

நாங்கள் வரேக்கை கிட்டு பூங்கா கட்டி ஒரு வருசம் இருக்கும். எனக்கெண்டால் சந்தோசம் தாங்க முடியேல்லை. ராட்டிணத்தை அவ்வளவு நாளும் படங்களிலை தான் பாத்திருக்கிறன். அங்கை தான் நேரை பாத்தன். மனித வலுக் கொண்டு தான் இயங்கினது எண்டாலும் சுப்பர். அது போலத் தான் தொங்குபாலம் ஒண்டு இருந்தது.

அதுவரைக்கும் கலியாண, சாமத்திய வீட்டுச் சடங்கு வீடியோ கசெற்றுக்களிலை சிங்கப்பூரை காட்டேக்கை இப்படியான தொங்கு பாலங்களை சின்னச் சின்ன அருவியளை பாத்திருப்பம். நேரை பாக்கிறம் எண்டால் சந்தோசம் தானே.

அதுவும் அந்த நேரம் நல்லூர்த் திருவிழா நடந்தது. நல்லூர்த் திருவிழா பற்றி யாழ்ப்பாணத்திலை இருந்தவைக்கு சொல்லத் தேவையில்லை. ஐஸ்கிரீம் கடையள், விளையாட்டுச் சாமான் கடைகள் எண்டு சும்மா களைகட்டும். அதோடை விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் (எல்லாருக்கும் இந்தச் சொல்லு விளங்குது தானே) கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்துறது.

உண்மையா உள்ளை போனா ஆசையாத் தான் இருக்கும். ஒரு தனி நாடு எப்பிடிக் கட்டமைக்கப் பட வேணும்.. எப்பிடி வளங்கள் பகிரப் பட வேணும்.. அதின்ரை நிர்வாக அலகுகள் எப்பிடியிருக்கும்.. அதின் பொருளாதார கட்டமைப்பு எப்பிடியிருக்கும்.. எண்டெல்லாம் அங்கை காட்சிகளோடும் தரவுகளோடும் விளங்கப் படுத்துவினம்.

அதே போல புலிகளும் ஆயுதக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கினம் பிறிம்பாக! ஒரு மாசத்துக்கு முதல் நவாலியில குண்டு போட்டு 200 பேரைச் சாகடிச்ச புக்காரா ரக விமானம் ஒன்றை அதே கிழமை புலிகள் சுட்டுவிழுத்தினவை. அந்தப் பிளேனையும் அங்கை காட்சிக்கு வைச்சிருந்தவை. அதை நான் பார்த்தன். (நான் நினைக்கிறன் புலிகளை காரசாரமா விமர்சிக்கிறதுக்கு தகவல்கள் தேடுற ஆட்களுக்கு - அதாவது எப்பிடியாவது கடுமையாத் தாக்கிறது எண்டு முடிவெடுத்த பிறகு அதுக்கு தரவுகள் தேடுறாக்களுக்கு - நான் ஒரு தகவல் வழங்கியிருக்கிறன் எண்டு. அதெப்படி ஆலயங்களிலை ஆயுதக் கண்காட்டி வைக்க முடியும் எண்டு.)

சனமெல்லாம் திருவிழா முடிய அப்பிடியெ திரண்டு கிட்டு பூங்காக்கு வரும். பிறகென்ன நல்லுர்த் திருவிழாக்குப் போனால் கிட்டு பூங்காவிற்குப் போறது எண்டிறதும் ஒரு சம்பிரதாயமாப் போச்சு.

திருவிழா இல்லாத நாட்களிலையும் நான் அங்கை போறனான். அங்கை ஐஸ்கிறீம் வாங்கலாம். அதுக்குத் தான் பின்னேரங்களிலை அங்கை போறனான். (யாழ்ப்பாணத்திலை ஜஸ்கிரீம் சுவை கொஞ்சம் வித்தியாசமாத் தான் உணருகிறன். வேறு யாருக்கும் உந்த எண்ணம் இருக்கோ?)

கிட்டு பூங்கா வாசலில சங்கிலிய மன்னனின் சிலை ஒண்டு இருக்கு. அவர் தான் யாழ்ப்பாணத்தின்ரை கடைசி மன்னன். அதே மாதிரி உள்ளை கேணல் கிட்டுவின் சிலை ஒண்டு இருக்கு. நிறைய பூச்செடிகள், நீரேந்துப் பகுதிகள் எண்டு கனக்க உள்ளை இருக்கும்.

யாழ்ப்பாணத்தைப் பிடிக்கிறதுக்கு ஆமி ஒப்பரேசன் யாழ்தேவி எண்டொரு சண்டையைத் தொடங்கி பிடிக்க முடியாமல் தோத்தது. அந்த சண்டையிலை புலிகள் ஒரு ராணுவ ராங்கியை கைப்பற்றியிருந்தவை. அந்த ராங்கியும் கிட்டு பூங்காவிலை நிண்டது. நான் நினைக்கிறன் அது பழுதாப் போயிருக்க வேணும். (குழந்தையள் விளையாடுற இடத்திலை ராங்கிக்கு என்ன வேலை எண்டு ஆரும் கேட்கப்போகினமோ?)நான் அங்கை தான் ராங்கியை முதலில பார்த்தன்.

மற்றது.. யாழ்ப்பாணத்தாக்கள் கூடுதலா தங்கடை வீட்டில நடக்கிற கலியாண வீடுகள், சாமத்திய வீடுகள் இப்பிடியானதுகளை வீடியோ எடுக்கிற பழக்கம் உள்ளவை. கிட்டத்தட்ட அவையின்ரை கலாச்சாரம் மாதிரி இது. நான் நினைக்கிறன் இது ஏன் வந்ததெண்டால் அவையளில குடும்பத்திலை ஆகக்குறைஞ்சது ஒராளாவது வெளிநாட்டிலை இருக்கிற படியாலை (பெரும்பாலான குடும்பங்களில்) அவையளுக்கு அனுப்பத் தான் எடுக்கினம் எண்டு.

அப்பிடி வீடியோ எடுக்கேக்கை இடைக்கிடை சிங்கப்பூர் மாதிரியான நாடுகளிலை எடுத்த சில வீடியோ காட்சிகளை செருகிறவை. கிட்டு பூங்கா வந்த பிறகு நேரை அங்கேயே போய் எடுக்க தொடங்கி விட்டினம். அதுவும் வீடியோக்கு நல்லாத்தான் இருந்தது.

பேந்தென்ன.. 95 ஒக்ரோபர் இடப்பெயர்வு வந்திட்டுது. அதோடை யாழ்ப்பாணத்திற்கு ஆமியும் வந்திட்டுது. கிட்டு பூங்காவின் ஆயுட்காலம் ஒரு ரண்டு வருசம் தான் இருக்கும். ஆனா அந்தக்கால சிறுவர்களின் மனசுக்கு அது கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்.

யாழ்ப்பாணம் ஆமி பிடிச்சாப்பிறகு அந்தப் பூங்காவை ஆமி சிதைத்து விட்டது. காரணம் அது கிட்டுவின் பேரில இருந்த படியாத்தான் எண்டு நினைக்கிறன். கிட்டுவின் சிலையையும் உடைச்சிட்டினம். அதே மாதிரி முன்னாலிருந்த சங்கிலியனின் சிலையையும் உடைச்சுப் போட்டினம்.

கிட்டுவின் சிலையை உடைச்சதை விடுவம். தங்கடை எதிரியின்ரை ஒரு தளபதி எண்ட சினத்திலை அதை உடைச்சிருக்கலாம். சங்கிலியனின் சிலையை ஏன் உடைச்சவை? அது தமிழரின் மன்னன் எண்ட படியாலை தானே!

இல்லாட்டி சங்கிலியனையும் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி எண்டு நினைச்சினமோ தெரியாது.

11 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

நல்லாருக்கு

2:55 AM  
Blogger Thangamani said...

//இல்லாட்டி சங்கிலியனையும் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி எண்டு நினைச்சினமோ தெரியாது.//

பெங்களூரில் ஒருமுறை ஒரு ஆட்டோ ட்ரைவர் எங்களிடம் துணிப்போட்டு மறைத்துக் கட்டி வைக்கப்பட்டிருந்த திருவல்ளுவர் சிலையைக்காட்டி ஏன் மூடப்பட்ட்டிருக்கிறது என்று கேட்டதற்குச் சொன்னார், 'அது யாரோ விடுதலைப்புலியோட சிலையாம்' என்று. அது நினைவுக்கு வந்தது.

(திருவள்ளுவர் சிலை, பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டு, அது கன்னட வெறியர்களின் எதிர்ப்பால் திறக்கப்படாமல் மூடப்பட்டே உள்ளது)

நன்றி

3:53 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: fgzthghz

னபகபாhமதமடைமöடööட

14.8 27.3.2005

4:10 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நீங்கள் கையைத் தூக்கிக்கொண்டு நிண்டது சங்கிலியன் நிண்டாஅதிரி இருந்தது அதுதான் அப்படிச் சொன்னேன்.
எண்டாலும் சிங்கப்பூர் ஐஸ்கிறீம் கூட யாழ்ப்பாணத்து ஐஸ்கிறிமை அடிக்கேலாது பாருங்கோ

6:26 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: டிசே

//அதுவும் நான் சரியான பயந்தாங்கொள்ளி. எங்கையும் பிளேன் அடிச்சா ஒருத்தரும் என்னோடை வர வேண்டாம் எண்டிட்டு தனிய எங்கையாவது வயல்வெளியளுக்குள்ளை ஓடிப் போய் படுத்திருந்து கத்துவன். (ஆக்களோடு எண்டால் கூட்டத்தை கண்டு விட்டு குண்டு போடுவான் எண்டு பயம்.)// பரவாயில்லை, இவ்வளவு காலமும் என்னை மாதிரி வேறொருத்தரும் இல்லையென்டு நினைச்சுக்கொண்டிருந்தன், துணைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் சயந்தன்.
கிட்டு பூங்காவிற்கு அது நன்றாக இருந்த காலத்தில் ஒருபோதும் போனதில்லை. சென்றவருடம் போனபோது சிதைந்தநிலையில் பார்த்திருக்கின்றேன்.//எண்டாலும் சிங்கப்பூர் ஐஸ்கிறீம் கூட யாழ்ப்பாணத்து ஐஸ்கிறிமை அடிக்கேலாது பாருங்கோ.// என்று ஈழநாதன் சொன்னதுடன் கனடாவையும் சேர்த்துவிடுகின்றேன். வன்னியில் சேரனிலும், பாண்டியனிலும் சுவைபார்த்த ஐஸ்கிறிமை இப்போது நினைத்தாலும் வாயூறுது.



11.55 27.3.2005

9:13 AM  
Blogger சயந்தன் said...

தற்போது உடைக்கப்பட்ட சங்கிலியன் சிலைக்கு பதிலாக தற்போது அதில் ஒரு சழல இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முன்னைய சிலையில் இருந்த கம்பீரம் தற்போது இல்லை. ஏதோ பொம்மை போல இருக்கிறது. யாராவது பார்த்திருக்கிறீர்களா?

தங்கமணி.. அந்த திருவள்ளுவர் சிலையைத் தானே திறக்கும் படி வீரப்பன் ராஜ்குமாரை கடத்தினான்? அது பற்றி ராணியில் படித்த நினைவு இருக்கிறது.

4:02 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சீலன்

சயந்தன் தற்பொழுது திருநெல்வேலியில் பூங்கனிச் சோலை என்ற ஒரு பூங்கா இருக்கிறது. கிட்டு பூங்கா போல வராது. ஆயினும் வீடியோ கலாசார யாழ்ப்பாண மக்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. போயிருக்கிறீர்களா அங்கு?

17.3 28.3.2005

11:10 PM  
Anonymous Anonymous said...

எனக்கும் கிட்டு பூங்கா சிதைக்கப்பட்ட பிறகே பூங்கா இருந்த பரப்பை பார்க்க கிடைத்தது. அதில ஒரு செக் பொயின்ற் இருந்ததால யாழ்ப்பாணத்திற்கு போறவங்க இறங்கி நடக்க வேணும். அந்த நேரத்தில பாத்தது தான்…

இப்ப பூங்காவைப் பாக்கிறபோது, சரியாக இருக்கேக்க போக முடியலையே என்ற ஏக்கமும் இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது கோபமும் வந்தது. கோபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடீயும்?? பூங்காவை மட்டுமா???...

இப்பிடித்தான் வடமராட்சியிலயும் ரஞ்சன் பூங்கா என்டு ஒண்டு இருந்தது. அதுவும் பெடியள் தான் நடத்தினவங்கள். இராணுவம் எல்லாத்தையும் உடைச்சு போட்டுது. இப்ப அது ஒரு லொறி பார்க் ஆக இருக்குது. பூங்கா இருந்ததுக்கு அடையாளமாக ஒரு பெஞ்ச் மட்டும் இருக்கு பள்ளிக்கூடம் போறப்போ ஒவ்வொருநாளும் அதைப் பாக்க பாக்க ……….. ம்…ம்…. (நான் பாத்தது 99ல.. இப்ப என்ன நிலையோ?)

எத்தனையோ விதம் விதமான ஐஸ்கிறீம் அருந்தியிருந்தாலும் யாழ்ப்பாணத்து ஐஸ்கிறீமின் சுவை வேறு எங்கையும் கிடைக்கவில்லை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதுவம் கோயில் திருவிழாக்களில் ஐஸ்கிறீம் குடிக்கும் சுகமே ஒரு தனி தான். (பெரும்பாலும் ஓசியில் ஐஸ்கிறீம் கிடைப்பது தான் காரணமோ தெரியவில்லை… சென்ற வருடம் யாழ் போன போது குடிச்ச ஐஸ்கிறீமோ…. அஞ்சு பத்தில்ல… ஆனா..ஒரு சதம் என்ட கையால போகல…)

1:24 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

யாழ்ப்பாணத்தின் இன்னும் பல இடங்களைப் பற்றி யுத்தம் அழித்த நினைவுச் சின்னங்கள் குறித்து எழுதலாமே.. உங்களுக்கு தெரிந்ததை..(தெரியாததை எழுதினால் கண்டு பிடிச்சிடுவேன்.)

--இதனை வாசித்தபோது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லமும் அதற்கு நேர்ந்த கதியும் நினைவுக்கு வந்தன--

23.40 29.3.2005

5:52 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: punsathi

undefined

22.9 30.3.2005

8:13 AM  
Blogger சினேகிதி said...

Nan muthnmuthala malai pambu parthathu kittanna pongavillathan.ore nall ila 8 ice cream kudichanan.லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி neenga Vada hindu ilaya padichaniga?Ranjan sithappa poongavilla ponavadiya ketanan.

Snegethy

11:26 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home