19.3.05

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.

தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.

தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன் என்றாலும் (யாழ்ப்பாணத்தில் அவை தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!!) அவற்றில் வரும் பேச்சு மொழி வழக்கு பெரிய அளவில் என்னளவில் கவனத்துக்குரியதாக இருந்திருக்கவில்லை.

(ஆயினும் உண்மையான சென்னைத் தமிழிற்கும் படங்களில் பேசப்படுகின்ற சென்னை சார்ந்த மொழிப் பேச்சு வழக்கிற்கும் என்னால் வித்தியாசம் உணர முடிகிறது. நேரடியாக தமிழக தமிழரோடு பேசும் வேளையில் நாம் பிறிதொரு பேச்சு வழக்கினை உடைய ஒரு நபரோடு பேசுகிறோம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்கிற உணர்வு வருகிறது. ஆனால் திரைப்படங்களில் அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை)

யாழ்ப்பாணத்து தமிழ் என பொது மொழியினூடு பேசினாலும் யாழ்ப்பாணத்திலும் வட்டார வழக்குகள் இருந்தன.

எங்கள் கிராமத்திற்கு அருகிருந்த ஒரு கிராமம்!

முழுதும் வேறுபாடாக கதைப்பார்கள்.

பேசும் போது ஒரு சுருதியில் பேசுவார்கள். (சில வேளை நாம் பேசுவதும் அவர்களுக்கு அப்பிடித்தான் தெரிகிறதோ என்னவோ?)

ஐம்பது சதம் என்பதை அம்பேயம் என்பார்கள். அது எங்களுக்கு சிரிப்பாயிருக்கும். (நாங்கள் அம்பேசம் என்று சொல்வது ஏதோ சரி என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கும்)

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.

வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!

மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.

நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் தமிழக ஊர்களின் பேச்சு வழக்கு மொழியினை அறிந்து கொண்டேன். அப்போதும் அவர்களை நையாண்டி செய்வதற்காகத் தான்.

அவர்கள் ஏதாவது சொன்னால்.. அப்படியா என்று இழுக்க ஓமோம் அப்பிடித்தான் என்பார்கள் அவர்கள்.

(இந்த ஓமோம் என்ற சொல்லை தெனாலியில் ஜெயராம் ஓமம் என்பார்)

எங்கள் பேச்சு வழக்கில் தேனீர் குடிப்பது என்றே பழகி வந்ததால் அவர்கள் அதை சாப்பிடுவதாய்ச் சொல்கின்ற போது அதையும் கிண்டலடிப்பேன்.

தேத்தண்ணி சாப்பிட்டு விட்டு சோறு குடிக்கிறீர்களா?

அவர்களும் ஏதாவது நாம் பேசும் போது திடீரென பேந்தென்ன (பிறகென்ன) என்பார்கள்.

அவர்களிடம் பேசியதும் பழகியதும் எனக்கு இந்தியாவில் பயன்பட்டது.

மண்டபம் முகாமில் எமக்கான பதிவுகள் முடிந்து 'நம்ம ரூம் எங்கேருக்கு சார்" என்று அங்கிருந்த ஒரு அதிகாரியைக் கேட்ட போது அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

நீ ஆல்ரெடி இந்தியாக்கு வந்திருக்கியா?

ஐயோ இது வேறை பிரச்சனையளைக் கொண்டு வந்துவிடும் எண்டதாலை இல்லையில்லை.. இப்பதான் முதல்த்தரம் வாறன் என்று என் வாலைச் சுருட்டிக்கொண்டேன.

ஆனாலும் திருச்சியில் கடைகளில் வலிந்து தமிழக வழக்கில்த்தான் பேசுவேன். (ஒரு பாதுகாப்பிற்குத்தான்.)

அங்கு மாற்றிக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களை திரும்பவும் வழமைக்கு கொண்டு வர எனக்கு சில காலம் எடுத்தது. (உதாரணங்கள்: சேர் (Sir) வோட்டர் (Water) சொறி (Sorry) இவற்றை சார், வாட்டர் சாரி என தமிழகத்திற்கு ஏற்றால்ப்போல மாற்ற வேண்டியிருந்தது.)

இப்பொழுதும் தமிழக வழக்கு என் பேச்சில் அவ்வப்போது இருக்கும். என்னால் அவதானிக்க முடிந்த ஒரு மாற்றம் இது. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கேள்விகளின் இறுதியில் ஓ சேர்த்து முடிப்பார்கள். அதாவது அப்பிடியோ உண்மையோ என்பது போல. ஆனால் எனது வழக்கில் அவை அப்படியா உண்மையா என்றே வந்து விழுகின்றன. இது தமிழக பாதிப்பாகத்தான் இருக்கும்.

மீண்டும் கொழும்பு வந்து பள்ளியில் சேர எங்கேயும் கேட்டிராத இன்னுமொரு வழக்கு கேட்க கிடைத்தது. அது என்னோடு படித்த இஸ்லாமிய நண்பர்களினது. இருக்கிறாரா இருக்கிறாரோ இருக்காரா என்பது போலவே அவர்கள் ஈக்காரா என்பார்கள்.

சதிலீலாவதி படம் பார்த்த காலத்தில் அந்த கோயம்புத்தூர் தமிழ் அப்படியே பற்றிக் கொண்டு விட கொஞ்சக் காலம் அது போலவே நண்பர்களோடு பேசித் திரிந்தேன்.

என்ட்ரா பண்ணுறா அங்க..? ஆ... சாமி கும்பிர்றன் சாமி..

இப்பவும் அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். அது போலத் தான் திருநெல்வேலி வட்டார வழக்கில் ஏலே என்னலே சொல்லுற என்பது போலவும் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறேன்.

தெனாலி வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயம்! கமல் யாழ்ப்பாணத்து தமிழில் பேசுகிறாராம் என்ற போது சந்தோசமாகத் தான் இருந்தது. அதே நேரம் இது புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கான வர்த்தக குறி என்ற எண்ணமும் வராமல் இல்லை.

தெனாலி பார்த்து சிரித்தேன். மற்றும் படி அந்த யாழ்ப்பாணத் தமிழை நான் யாழ்ப்பாணத்தில் கேட்டதே இல்லை. இலங்கை வானொலி நகைச்சுவை நாடகங்களில் கேட்டிருக்கிறேன்.

காற்றுக்கென்ன வேலி என்னும் ஒரு படம். அதில் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லாரும் இலக்கண பாடம் நடாத்தும் தமிழாசான்கள் போல எடுத்திருந்தார்கள்.

கன்னத்தில் முத்தமிட்டாலில் நந்திதாவோடு வருகிற பெண்கள், அம்மாளாச்சி காப்பாத்துவா என்று சொன்ன அந்த முதியவர் இவர்கள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழில் பேச வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றினார்கள்.

நளதமயந்தியில் பேசிய குடிவரவு அதிகாரி மௌலி மிக அழகாக பேசினார்.

ஆக இந்த தமிழ் கேட்பவர்கள் எல்லாம் இதில் தேன் ஒழுகுகிறது, பால் வடிகிறது என்னும் போது இது கொஞ்சம் மிகையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்? பேசும் லயத்திலா? ஒரு வேளை இருக்கலாம். எங்களுக்கும் கோயம்புத்தூர் தமிழ் ஒரு லயத்தில்த் தானே கேட்கிறது.

ஒன்றைச் சொல்ல முடியும்!

இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.

அதாவது "Do you know something? yesterday நான் கோயிலுக்கு போனன். I couldn't Believe it.. என்னா நடந்திச்சின்னா wow.. what a surprise" என்ற மாதிரி..

இப்படி பேசுபவர்கள் குறித்து நான் அடிக்கும் ஒரு கருத்து! அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அதனால்த்தான் அடிக்கடி தமிழ் கலந்து கதைக்கிறார்கள்.

அது போலவே தமிழ் தெரிந்த இன்னொருவரோடு தமிழில் பேசுவது தாழ்வானது என்ற எந்தச் சிக்கலும் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இல்லை.

இலங்கையில் தொடர்ந்து இந்த நிலை சாத்தியப் படக்கூடும். வெளிநாடுகளில் இப்போது பிறந்து வளரத் தொடங்கிவிட்ட இலங்கையைச் சேர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையிலும் இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால் உதட்டைப் பிதுக்கிக் கொள்வேன்.

20 Comments:

Blogger Vaa.Manikandan said...

This comment has been removed by a blog administrator.

1:45 AM  
Blogger Vaa.Manikandan said...

எனக்கு இலங்கைத்தமிழ் பற்றி எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை!
ஆனால் புலம்பெயர்ந்த எழுத்தாள்ர்களின் எழுத்துக்களை படிக்கும் போது,ஒரு விவரிக்க இயலாத மகிழ்ச்சி வந்துகொண்டுதான் இருக்கிறது.

மற்றபடி இங்கு தமிழகத்தில்,தமிழ் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

என்னிடம் கொங்குத்தமிழ் அவ்வளவாக கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்னும் நினைப்பு மிக நீண்ட காலமாக இருந்து வந்தது.ஆனால் அங்கு உள்ளவர்களிடம்,குறிப்பாக படிப்பறிவில்லாத "கவுண்டர்"
(அந்த பகுதிகளில் கவுண்டர்கள் அதிகம்) இன பெண்கள் ஆங்கிலம் கலந்து பேசினால் பெருமை என எண்ணிக்கொண்டு ஆங்கிலம் கலந்து பேசுவது சகிக்க இயலாததாய் இருக்கிறது.

பண்பலை வானொலி வந்த பிறகு பொழுது போகமல் இருப்பவர்கள் தொலை பேசியில் பேசி வானொலி கேட்ப்போரையும்,தமிழையும் கொல்கிறார்கள்.

யார் வரப்போகிறார்கள் என தெரியவில்லை காப்பாற்ற!

வா.மணிகண்டன்

1:49 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

சயந்தன்! நல்ல விசயமொண்டு துவக்கி வச்சிருக்கிறியள். நானும் இந்தப் பேச்சு வழக்கு பற்றி அறியிறதில சுவாரசியமான ஆள்தான். நீங்கள் சொன்ன ஐம்பேசம்-ஐம்பேயம் திரிபு தமிழில் மிக இயற்கையானது. யகர சகர மாற்றம் தமிழுக்குக் கை வந்த கலை. தேவநேயப் பாவாணர் இது பற்றிச் சொல்லியுள்ளார். தேசம் என்பது வடமொழி என்ற கருத்துக்கு, தேயம் என்பதிலிருந்துதான் தேசம் வந்தது என்று விளக்கப்படுவதுண்டு. இச் சகர யகர மாற்றத்துக்கு நிறைய எடுத்துக் காட்டுக்களை எமது அன்றாட மொழிப்பாவனையிலிருந்து காட்டலாம்.
உயிர்-உசிர்
மயிர்-மசிர்
இப்படி சொல்லிக் கொண்டு போகலாம்.

2:18 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Thadcha

கொழும்பிலையும் பண்பலை வானொலிகளில் ஒரு தமிழ் கதைப்பார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் சயந்தன்.

0.38 20.3.2005

5:40 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தமிழினி

நான் கூட இந்தியா சென்று திரும்பியபின் இந்த தாக்கம் இருந்தது. இப்பவும் இருக்கு என்று தான் சொல்லோனும். அதுவும் ஐயர் ஆத்துப்பாசை றொம்ப பிடிச்சிட்டுது. இப்ப கிட்டடியில ரீவியில ஒரு தொடர் தொடங்கிப்போகுது. அது கொழும்பில நடப்பதாய் தான் கதை வைத்திருக்கிறார்கள் பாதிப்பேர் இந்தியத்தமிழும் ஒரு பாதிப்பேர் இலங்கைத்தமிழும் கதைக்கிறார்கள். அவர்கள் கதைப்பதைக்கேக்க அந்தரமாய் இருக்கு நாங்கள் அப்படிக்கதைப்பதாய் கதைத்ததாய் எனக்கு நினைவில்லை. அப்படி ஒரு மாதிரி இழுத்துக்கதைக்கிறார்கள். தெனாலி கூட அப்படித்தான். நான் அடிக்கடி நினைப்பதுண்டு சிங்களவர்கள் தமிழ் பேசினால் அல்லது வேறு வேறு இடங்களில் இருப்பவர்கள் கதைப்பதைப்பார்த்தால் எங்களுக்கு சிரிப்பு வரும். அப்படித்தான் நாங்கள் ஆங்கிலம் பேசும் போது இப்படித்தான் அவர்களிற்கு சிரிப்பு வருமோ என்று. ஆனால் தமிழகத்தில் பேசும் தமிழ் கொஞ்சம் வேறை மாதிரித்தான். அவர்களுடன் பேசும் போது அவர்களிற்கு ஏற்ற மாதிரி நாங்கள் மாறுவது என்ன நியாயம். :P

14.33 19.3.2005

6:53 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: டிசே

சயந்தன், சுவாரசியமான பதிவு.
நீங்கள் பலவிடங்களுக்குச் சென்றதால்,ஒவ்வொரு பிரதேசத்து வட்டார வழக்குப் பற்றியும் சரியாக அவதானித்திருக்கின்றீர்கள். எனக்கும் கோயம்புத்தூர் தமிழில் போல திருநெல்வேலி (எல என்று சேர்த்து அழைப்பது அங்கைதானே?), மதுரைத்தமிழ நன்கு பிடிக்கும்.
//இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.

அதாவது "Dஒ யொஉ க்னொந் சொமெதிங்? யெச்டெர்டய் நான் கோயிலுக்கு போனன். ஈ cஒஉல்ட்ன்'ட் Bஎலிஎவெ இட்.. என்னா நடந்திச்சின்னா நொந்.. ந்கட் அ சுர்ப்ரிசெ" என்ற மாதிரி.//
சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். சுத்தத் தமிழில் எல்லாம் ஈழத்தமிழர்கள் கதைப்பதில்லை.ஆனால் அதற்காய் ஆங்கிலத்தை வேண்டுமென்று திணிப்பதுமில்லை.
....
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்


10.19 19.3.2005

7:33 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam

அப்ப யாழ்ப்பாணத்தமிழ் சுத்தமில்லை என்றீங்க!!

7.3 20.3.2005

12:05 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஒருவன்

யாழ்ப்பாணத்தமிழின் அழகினை பிறர் போற்றுகின்ற போது அதனை சரியான தமிழ் இல்லை என்கிற உம்மை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

16.57 20.3.2005

10:06 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

மிகவும் நல்ல பதிவு. நல்ல கருத்தை தெளிவாக சொல்லியிக்கிறீர்கள். தொடர்ந்தும் இவ்வாறான நல்ல பதிவுகளை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என விரும்புகிறேன்.

சமூகத்துக்கு தேவையான விடயங்களை எழுதுங்கள். அது எப்போதும் நிலைத்து நிற்கும்.

வாழ்த்துகள்

19.11 20.3.2005

12:23 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சீலன்

பேசுதல் என்பதை யாழ்ப்பாணத்தில் பறைதல் என்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் பறைதல் என்ற சொல்லையே பயன்படுத்துவார்கள். பறைதல் மலையாளத்துச் சொல். மலையாளத்திலிருந்து பக்கத்து தமிழ் நாட்டிற்கு செல்லாத பல மலையாளச் சொற்கள் யாழ்ப்பாணத்தில் பேசப்படுகின்றன. நன்றி

23.18 20.3.2005

4:30 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

'பறைதல்' என்பது தமிழ்ச்சொல். மிகப் பழைமையான சொல்லுங்கூட. ஆனால் மலையாளத்திலும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போலவே படுகிறது.

4:41 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சீலன்

வசந்தன் யாழ்ப்பாணத்தவர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்கள் என்று ஒரு ஊகம் இருக்கிறது. சில உணவுப் பழக்கவழக்கங்கள் மொழி வழக்குகள் இரண்டுக்குமிடையிலான ஒரு தொடர்பைச் சொல்கின்றன. ஏதாவது ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறதா?

0.0 21.3.2005

5:04 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வாழ்ந்து வந்தது தான் வரலாறு. அவர்களின் வரலாறு நீண்ட காலத்தைக் கொண்டது. ஆனால் கேரளாவிலிருந்து வந்தார்கள் என்பது பற்றி யாருமே கதைக்கவில்லை. அப்படியே வந்திருந்தாலும் மிகமிக வரலாற்றுக்கு முட்பட்ட காலமாகவே இருக்க வேண்டும். ஆனால் கேரளம் பிந்திய காலம் வரை தமிழ் நாடாகவே இருந்தது. அங்கு பேசப்பட்டது தமிழ் மொழிதான். இன்றும் மலையாளத்தை 'சேரத்தமிழ்' என்று சொல்பவர்கள் உளர். பிந்திய தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் நடப்பது கூட இன்றைய கேரளாவான சேர நாட்டில் தான்.

7:03 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஒருவன்

//யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்?//

சயந்தன் நீங்கள் என்ன சொல்ல வர்றீங்கள்? தமிழக தமிழுக்கும் யாழ்ப்பாண தமிழுக்கும் வித்தியாசம் இல்லை என்கிறீர்களா?

6.39 21.3.2005

11:44 AM  
Blogger சன்னாசி said...

அப்படியே இந்த மெட்ராஸ் தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தையும் பார்த்துவிடுங்கள்.

4:31 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: கீரன்

உங்கள் பேச்சு வழக்கு குரலைக் கேட்டபோது நினைத்தேன். என்ன இது எல்லாவற்றினதும் கலவையாக இருக்கிறதே என்று. கட்டுரை நன்று. சுவாரசியமாய் இருந்தது.

18.51 21.3.2005

11:53 PM  
Blogger Chandravathanaa said...

சயந்தன்
தெனாலி படத்தைப் பார்த்து நானும் கொஞ்சம் அலுத்துக் கொண்டேன்.
அதில் வந்தது எங்கள் தமிழ் அல்ல.

யாழ்ப்பாணத்தமிழ்தான் சுத்தத்தமிழ் என்பது எனது மனதில் பதிந்து விட்டது.
வேறு எந்தத் தமிழையும் சுத்தத்தமிழ் என்று என் மனது ஒப்புதில்லை.
தமிழகங்களில் இருந்து வரும் ஓரளவு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தமிழகப்
பேச்சுத் தமிழை ஒத்ததாக இருப்பதில்லை. கிட்டத்தட்ட எங்கள் யாழ்ப்பாணத்தமிழையே ஒத்துள்ளன.
பேச்சுத்தமிழ்தான் கூடிய பங்கு மாற்றங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ் கிட்டத் தட்ட
ஒத்ததாகவே உள்ளன.

ஆனாலும் இப்போதெல்லாம் பேச்சுத்தமிழே எழுத்தாவதும் ஒரு ஸ்ரைல் ஆகி விட்டது.

1:54 AM  
Anonymous Anonymous said...

ஆஹா. இன்னாபா சொல்ட்ட இப்டி! அல்லாத்தயும் கண்டுகுனு மெட்ராசு தமிய டீல்ல வுட்டயேபா. சரி வுட்டுத் தள்ளு.

அப்பாலிக்கா இன்னொன்னு சொல்லிர்ரேன். இந்த டீலு, குஜாலு, லெப்டு, ரைட்டு, பஸ்ஸு, டமாசு, ரீஜண்ட்டு இது மேரி அல்லா வார்த்திங்களும் மெட்ராசு டிஸ்னரி ஆப்பு தமியுல சேத்துகுனு எம்மா நாளாச்சு, தெர்யாதா?

"நம்ம ரூம் எங்கேருக்கு சார்"ங்கறத எங்க தாய் மொயில "இன்னாபா, மேட்ரு எங்க கீது"ம்போம். "மேட்டர்"ன்னா குறிச்சொல். எல்லா மேட்டர்க்கும் கரீட்டா, ஆனா சுகரா போட்டு கல்க்கி கல்க்கி அடிக்கணும். உசாரா இல்லாங்காட்டி உன்னிய நொங்கு எட்த்ருவானுங்கோ புள்ளிங்கோ.

சென்னைத் தமியு சோக்கா என்ன மேரியே பேசற்து ப்ரபுதேவாதாம்பா. அப்படியே பக்கா லோக்கலா பேசுவார்பா, என்ன மாரியே.

இலங்கைத் தமியுல தேனு வடீலயா? மவனே! புவனலோஜனை பேசிக்கேட்டுக்குறியா நீயீ? "புவனலோஜனை, வணக்கம்"னு சைன் ஆஃபு பண்ணுவாங்கோ. "உங்கள் அன்பு அறிவிப்பாளர் அப்துல்...ஹமீஈஈத்!"னு சொல்வாரு பாரு ஒரு சாரு. அதுங்காட்டியுமே அப்டியே ரெண்டு பேருக்கும் சொத்து எய்தி குட்த்ரலானு தோணும்பா.

இன்னொன்னுபா. 'வாபா, போபா'ன்னு சொல்றேன்னு ஃபீல் ஆகி திட்டிடாதா. ஏழை, பணக்காரன், சிறியவர், பெரியவர்ன்னு அல்லாரும் சென்னைல ஒரே மேரிதான் கூப்டுப்போம்.

வர்ட்டா!

7:37 AM  
Anonymous Anonymous said...

இலங்கையில் இருக்கும் நண்பரொருவர் ஒரு முறை தொலைப்பேசியில் அழைத்தார் என்னை. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, நானும், "என்ன, சாதாரணமாதானே பேசறீங்க? என்னமோ இலங்கைத் தமிழ் புரியவே கஷ்டமா இருக்கும்ணு நெனச்சேன்"ன்னு சொன்னேன்.

உடனே, "உங்களுடன் பேசுவதால் சற்று நிதானித்துப் பேசுகிறேன். பொதுவாக நான் பேசுவது போல் பேசினால் மிக வேகமாக இருக்கும்"ன்னு சொன்னார்.

"ச்சே, சே. அதெலாம் இல்லை. நீங்க பேசறது நல்ல புரிகிறது"ன்னு சொல்லி வைத்தேன்!

அவ்வளவுதான்! அப்பறம் பேசினார் பாருங்க ஒரு வேகத்தில்! அம்புட்டுதேன். நான் அப்பீட்!

இலங்கைத் தமிழில் நீங்களாவது அடிக்கடி பேசி வலைக்குரல் பதிங்க. :-)

கேரள & சோழ நாடுகளின் தொடர்பு பற்றிய சில சுவையான செய்திகள் (பழுவேட்டரையர்கள் காலம்) "பழுவூர்ப்புதையல்கள்" மற்றும் "பழுவூர்" ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன. பழுவூர்ப்புதையல்கள் இப்பொழுது ஒரு தொடராகவும் வந்து கொண்டிருக்கிறது இணையத்தில்.

http://www.varalaaru.com/Default.asp?articleid=116

இதில் பழுவூர்ப்புதையல்கள் மட்டும் இன்னமும் நான் முழுதாக முடிகவில்லை. ஈழப்படைகள் பொதுவாகவே சோழநாட்டுக்கு எதிரணியிலேயே நின்றிருப்பதைப் பார்க்கும் பொழுது, நிச்சயம் கி.பி. 900க்கு முற்பட்ட காலத்தில்தான் சேரத்தமிழர்கள் இலங்கைக்குச் சென்றிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

7:50 AM  
Blogger சினேகிதி said...

Jaffna ila koda vithayasama thamil kathikiravithane;utharanama matakalappu thamil,Matale illa irukira Jaffna akkal solluvinam 'appuram vango',Ukkarunga','paniya potinam'

Snegethy

10:47 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home