11.3.05

சுதந்திர வேட்கையும் 800 டொலரும்

மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும்.

பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை.

ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும்.

பொதுவாக அந்த வேலை ஒப்பீட்டளவில் இலகுவானது தான். ஆனால் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக இரவுகளில்!

மொத்தமாக எரிபொருள் நிரம்பும் 30 இயந்திரங்கள் இருக்கின்றன. உள்ளே உட்கார்ந்திருந்து எந்த இயந்திரம் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானிக்க வேண்டும்.

அப்படி பயன்படுத்தியவர்கள் எல்லோரும் உள்ளே வந்து கட்டணம் செலுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஏதாவது சந்தேகத்திற்கிடமானவர்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தால் அவர்களது வாகனத்தின் இலக்கத்தை குறித்துக் கொள்ள வேண்டும். (சந்தேகத்திற்கிடமானவர்களை எப்படி அடையாளம் காண்பது என எனக்கு இன்னமும் தெரியவில்லை)

எரிபொருள் நிரப்பி விட்டு உள்ளே பணம் செலுத்த வருபவர்களிடம் மகிழ்ச்சியாக நாலு வார்த்தை பேசி விட்டு கணணித் திரையில் காட்டப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டணத்தை பணமாகவோ Cards மூலமாகவோ அறவிட்டு விட்டு see ya சொல்லி அனுப்பி விட்டு Next please சொல்ல வேண்டியது தான்.

வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்திலேயே ஒஸ்ரேலியாவில் திருடர்கள் தான் அதிகம் என ஒஸ்ரேலியரான Boss சொல்லி விட்டார். அது என்னை அவதானமாக இருக்க சொல்லிய அறிவுறுத்தல்.

இருப்பினும் குட்டி குட்டியாக தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அந்தப் பெரியயய தவறு நடக்கும் வரை!

ஆரம்பத்தில் 40 டொலர் செலுத்த வந்த ஒருவரின் கடன் அட்டையிலிருந்து இலக்கம் அழுத்துகையில் தவறுதலாக 400 டொலரினை அறவிட அந்த வாடிக்கையாளர் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்.

தவறு என்னுடையது தான் மிகுதி மேலதிக தொகையை பணமாக தந்து விடுகிறேன் என சொல்லியும் அந்த நண்பர் என்னை விடுவதாகவில்லை.

கடந்த வாரத்துக்கு முந்திய வாரத்தின் புதன் கிழமை. அது எனது இரவு வேலை நாள்.

இரவு பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. பொதுவாக 12 மணிக்கு பின்னர் அதிகாலை 4 மணிவரை அமைதியாக இருக்கும். பெரியளவில் யாரும் வர மாட்டார்கள்.

முடிந்த நாளுக்கான வரவு செலவுகளை கணணி முடித்துத் தர எல்லாம் கிட்டத்தட்ட (மிகச் சரியாக எனக்கு ஒரு போதும் அது இருந்ததில்லை) சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு.....

விட்டு..... நான் அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கையை (இரண்டாம் தரம்) வாசிக்க தொடங்கினேன்.

தமிழகத்துடன் இந்தியாவுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தொடர்புகள் அரசியல் வாதிகளின் உதவிகள் என அது ஆர்வமாய்ச் சென்றது.

ஒரு 30 நிமிடம் கழிந்திருக்குமோ?

எதேச்சையாக கணணித்திரையை நோக்கினேன். எரிபொருள் நிரப்பும் இயந்திரங்கள் 27 மற்றும் 29 இலிருந்து மொத்தம் 800 டொலருக்கு டீசல் அடிக்கப்பட்டிருப்பதாக அது சிவத்த எழுத்தில் சொன்னது.

அப்பவே சின்னதாக ஒரு பதட்டம் மனதில் குடி கொண்டு விட்டது.

விழுந்தடித்துக் கொண்டு எழுந்து இயந்திரங்களைப் பார்த்தேன்.

அங்கு எவருமோ எந்த வாகனமுமோ இல்லை.

கடவுளே.. 800 டொலர்!! எப்போதாவது யாராவது இருபதோ முப்பதோ டொலரிற்கு எரிபொருள் நிரப்பி விட்டு பணம் தராமல் ஓடக்கூடும் என்று ஏற்கனவே எண்ணியிருக்கிறேன். ஆனால் அது இப்படி 800 டொலர்களாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.

800 டொலர்களிற்கு டீசல் அடித்துச் செல்வதென்றால் அது சிறிய வாகனமாக இருக்காது. ஏதாவது பார ஊர்தியாகத் தான் இருக்கும். அப்படியான ஒன்று வந்து செல்லும் வரை சுரணை அற்று இருந்திருக்கிறேனே என்று என் மேலே கோபம் வந்தது.

காலை 7 மணிக்கு Boss வந்தார். பொதுவாகவே கலகலப்பாக பேசுபவர். இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் தொண்டை வரள வரள தண்ணி குடித்து குடித்து நடந்ததை விபரித்தேன்.

நித்திரை கொண்டு விட்டதாகத் தான் சொன்னேன். (சுதந்திர வேட்கை! மூச்!)

எவ்வளவு காசு என்று அவர் கேட்கும் வரை இயல்பாகத் தான் இருந்தார். ஒரு வேளை 20 அல்லது 30 ஆக இருக்க கூடும் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

800 டொலர் என்று சொன்னேன்.

மனிசன் தலையிலை கை வைச்சிது. நான் முழிசிக் கொண்டு நிண்டன்.

என்ன செய்யப் போகிறாய்?

எனக்கு எங்கேயிருந்தோ அவசரமாக பதில் வந்தது. என்னிலை தான் பிழை. ஆகவே எனது சம்பளத்திலை இருந்து எடுத்துக் கொள்ளுங்கோ.

எனக்கென்னவோ அப்பிடிச் சொல்வது தான் எனக்கு மரியாதையாகப் பட்டது.

சொல்லி விட்டேனே தவிர மனசுக்குள் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. கண்முழித்து (சுதந்திர வேட்கை படித்து??) உழைத்த சம்பளம். அநியாயமாய்ப் போயிட்டுதே என்ற கவலை.

அதன் பின் கடந்த வாரம் எனக்கு பதில் இன்னுமொருவரை அனுப்பி வைத்து விட்டு நான் வேலைக்கு லீவு போட்டிருந்தேன்.

நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு! boss பேசினார். நீ இன்னும் சம்பளம் எடுக்க வில்லையா?

எனக்கு சம்பளம் வங்கிக் கணக்கிற்கெல்லாம் போவதில்லை. (அதெல்லாம் Tax சம்பந்தப் பட்ட விடயங்கள். கண்டு கொள்ள வேண்டாம்) எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தோமோ அதற்கேற்றவாறு சம்பளம் அங்குள்ள ஒரு இடத்தில் வைக்கப் படும். வாரா வாரம் அதிலிருந்து எடுக்க வேண்டியது தான்.

இல்லை என்றேன் நான்.

சரி நான் வைத்திருக்கிறேன். வந்து எடுத்துக் கொண்டு போ... என்று துண்டித்து விட்டார் அவர்.

ஆஹா...

5 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Thadcha

//சரி நான் வைத்திருக்கிறேன். வந்து எடுத்துக் கொண்டு போ... என்று துண்டித்து விட்டார் அவர்.//

இதற்குப் பின்னால் முதலாளித்துவ வர்க்க அடிமைப் படுத்தும் மனப்பான்மை இருக்க கூடுமோ

5.18 12.3.2005

10:20 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: தங்கமகன்

800 டாலரா? ஆத்தாடியோவ்...படிச்ச எனக்கே BP ஏரிடுச்சு. உங்களுக்கு எப்படி இருந்துருக்கும்னு என்னால உணரமுடியுது...உங்க Boss மறந்துவிட்டாரா இல்லை மன்னித்துவிட்டாரா?

23.43 11.3.2005

10:26 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: HaRi

அமெரிக்காவிலெல்லாம் பணம் செலுத்தாமல் எரிபொருள் நிரப்ப இயந்திரம் அனுமதியாதே?
ஆ(ஒ)ஸ்த்திரேலியாவில் அந்த டெக்னாலஜி இல்லையா?

10.16 11.3.2005

10:36 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NONO

நல்ல வேளை 800 றோட முடிஞ்சு....

22.16 11.3.2005

1:26 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Nirenjen

கவனம் கத்தி துவக்கு எல்லாம் கொண்டு வந்தும் சில நேரம் மிரட்டுவார்கள்.

9.56 12.3.2005

2:57 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home