15.1.08

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு சோபா சக்தியின் இரு புத்தகங்களும் தமிழ்க்கவியம்மாவின் ஒரு சில புத்தகங்களும் வாங்கிச் சென்றிருந்தேன். ( விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் புத்தகத்தை கொழும்பில் வாங்கியது புதிய அனுபவம் )

அப்போதைய நிலையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் குறித்த கதையாடல்கள் நிறையவே நடந்ததால் சோமிதரனிடம் இந்தியாவில் அதைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தேன். ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அவனும் மறந்து போயிருந்தான். பிற்பாடு நானும் மறந்து போயிருந்தேன். பின்பொரு காலம் ஒரு தொடராக ஈழப்போராட்டத்தில் எனது பொய்ச் சாட்சியம் என்ற கட்டுரையைப் படித்தேன்.
000 000 000

ண்டார வன்னியன் என்னும் நாடகத்தினை எனது ஐந்தாவது வகுப்பில் எழுதி, அதில் காக்கை வன்னியனாகவும் நடித்திருந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பண்டார வன்னியனாக பிரபாகரன் நடித்திருந்தார். (யாரைய்யா அங்கே புருவம் உயர்த்துவது. இது என்னுடைய வகுப்புத் தோழன் த.பிரபாகரன். பின்னாளில் 2003 களில் பல்கலைக்கழக மட்டத்தில் சோமிதரனிடம் பழக்கமாகியிருந்த, இவரைச் சந்திப்பது குறித்து நண்பர்களிடத்தில் பேசும் சோமிதரன், வெகு இயல்பாக, மச்சான் ஒருக்கா கிளிநொச்சி போக வேண்டியிருக்கு. அப்பிடியே பிரபாகரனையும் சந்திச்சிட்டு வரவேணும் என்பார்.)

1996 இல் முல்லைத்தீவில் கற்சிலைமடு அல்லது கரிப்பட்ட முறிப்பு சரியாக நினைவில்லை அங்கு பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு வரக் கிளம்பினோம். அங்கே ஒரு நடுகல்லில் ஆங்கிலத்தில் டிறபேக் என்பவரால் பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் என எழுதியருந்தது. அது டிறபேக்கினால் நடப்பட்ட நடுகல் என்று சொன்னார்கள். ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.

கலைஞர் கருணாநிதி பாயும் புலி பண்டார வன்னியன் எனும் ஒரு புத்தகத்தினை எழுதியிருக்கிறார் என்ற செய்தி பின்னாளில் எனக்குத் தெரிய வந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் (அதிலும் அரசியல் பிரமுகர்) எழுதியிருக்கும், ஈழ வரலாற்று நூல் என்ற ஒரு விடயத்தில் (மட்டும் என்றும் சொல்லலாம் ) அப்புத்தகம் மீதான ஆர்வம் தொடங்கியது. ஏற்கனவே முல்லை எனத் தொடங்கும் ஒருவர் (யாராவது அறியத்தரலாம் ) எழுதியிருந்த இலங்கையில் தடை செய்யப்பட்ட பண்டார வன்னியன் எனும் நாடக நூலினை வாசித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எழுதிய நாடகத்திற்காக அந் நூலில் இருந்து வரிக்கு வரி சுட்டும் இருக்கின்றேன்.
000 000 000

எஸ் பொ என்பவர் யாரென அறியும் முன்னமே அவரது சடங்கு நூலினை வாசித்திருக்கின்றேன். வீட்டின் ராணி முத்து வாசகர்கள் விபத்தாக, அவர்கள் பாசையில் தெரியாத்தனமாக, எடுத்து வந்துவிட்ட சடங்கு நாவலை, இலங்கைத் தமிழ் நாவல்கள் மேல் இயல்பாக இருந்த விருப்பில், யாழ்ப்பாணத்துப் பதின்ம வயதுக்குரிய பதை பதைப்புடனும் ஒருவித அதிர்வுடனும் வாசித்து முடித்தேன். (சடங்கு ராணி முத்து வெளியீடாக வந்திருந்தது. இதில் விசுக்கோத்து என்பதற்கு நேரே அடைப்புக் குறிக்குள் பிஸ்கட் என.. இவ்வாறு பல சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். )

பின்னர் பாடசாலையில், டேய் அந்தப் புத்தகத்தில இப்பிடியெல்லாம் எழுதியிருக்கடா.. இப்பிடியெல்லாம் செய்வினமடா.. என நான் விபரித்த பாங்கு கண்டு நண்பர்கள் அந்த புத்தகத்திற்காய் ஆலாயப் பறந்தார்கள். அப்போதைய வயது 14 ற்கும் குறைச்சல்தான்.
000 000 000

பொதுவாகவே நூலகம் செல்லுதல் எனது விருப்பிற்குரிய விடயங்களில் ஒன்று. கிராமத்தின் வாசகர் வட்ட நூல் நிலையத்தில், வீட்டின் உறுப்பினர்கள் வேலை செய்த காரணத்தால் அங்கு சென்றிருப்பதுவும் புத்தகங்களைத் துருவுவதும் வழக்கில் வந்திருக்க வேண்டும்.

ஒஸ்ரேலியாவின் சிட்னியில் ஒரு முறை கரன் ஒரு முகவரியில் தமிழ் நூல் நிலையம் இயங்குவதாகச் சொல்லக் கேட்டு ஒரு மாலை முழுதும் தேடி இறுதியில் அவ்வாறான ஒரு நூல் நிலையமே அங்கு இல்லையெனத் தெரியவந்தது. (ஆனால் பல காலங்களுக்கு முன்னர் இயங்கியிருந்தது.)

பின்னர் அங்குள்ள ஒரு அவுஸ்ரேலிய நூல் நிலையத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதாக கேள்விப்பட்டுச் சென்றால்.. ரமணிச் சந்திரனும் லக்ஸ்மியும் தான் நிறைந்திருந்தார்கள். இவற்றுக்கு எதற்காக அங்கத்துவராக வேண்டும் எனத் திரும்பி விட்டேன்.

இங்கே சுவிசில் உள்ள நமது மாநில நூல் நிலையம் ஒன்றில் வேர்ஜினியா அங்கத்துவராக இருக்கின்றார். ஆரம்ப காலங்களில் ஜெர்மன் மொழியில் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்களைப் பெற, அவர் பெற்ற அங்கத்துவம் அப்படியே இருந்தது. அங்கே தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்ற செய்தியும் எனக்குத் தெரியும். ஆனாலும் ரமணிச் சந்திரன்களும், லக்ஸ்மிகளும்தானே என்ற முடிவில் அந்தப் பக்கம் போக வேண்டும் என்ற ஆவல் மேலிட்டதில்லை.

இன்று மாலை வேறொரு தேவைக்காக அங்கு சென்ற போது வாசலிலேயே ஒரு அறிவித்தல், புதிய தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என ஜெர்மன் மொழியில்..

போய்த்தான் பார்ப்போமே என அப்பகுதிக்குச் சென்றால்.. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சோபா சக்தி, எஸ் பொ என்ற கணக்கில் புத்தகங்கள்.. பெரிய பெரிய குண்டுப் புத்தகங்கள்.. நான் வாசிக்க வேண்டும் என விரும்பிய புத்தகங்கள்..

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலையும், பாயும் புலி பண்டார வன்னியனையும் எடுத்துக்கொண்டேன். கூடவே சடங்கினையும்..

இன்னும் இருக்கிறது.

அந்த நூலகத்திற்கான தமிழ்மொழி இணைப்பாளர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் சாதாரணமானவரில்லையெனப் புரிகிறது

6 Comments:

Anonymous Anonymous said...

//ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.//

ஆ.. அப்போ அது போலியா.. ?

2:38 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுவிஸ் நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள்.
மிகச் சந்தோசமான செய்தி.
இங்கே இரு தமிழ்ப் புத்தக விற்பனை
நிலையங்கள் உள்ளன.
ரமணி சந்திரனுடன் பல நல்ல புத்தகங்களும் உண்டு.
விலை மிக அதிகம்.

3:37 PM  
Blogger கானா பிரபா said...

//கூடவே சடங்கினையும்//

mkum mkum ;-)

4:32 PM  
Anonymous Anonymous said...

முதலில வேர்ஜினியா ஆரெண்டு சொன்னாத்தான் வாசகர்களுக்குக் குழப்பமில்லாமலிருக்கும்.

பண்டார வன்னியன் நாடகத்தை எழுதினது முல்லைமணி எண்டு நினைக்கிறன்.

பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட சேதிகூறும் நடுகல் இருப்பது கற்சிலைமடுவில்தான். கற்சிலைமடுச் சந்தியிலிருந்து முத்தையன்கட்டுக் குளத்துக்குப் போற பாதையில இருக்கு.

6:41 PM  
Blogger கானா பிரபா said...

//பண்டார வன்னியன் நாடகத்தை எழுதினது முல்லைமணி எண்டு நினைக்கிறன்.//

avar thaan

2:19 AM  
Anonymous Anonymous said...

தம்பி சயந்தன்,சுவிசிஸ் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் இருபது போன்று சுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிய விற்றன் நகரிலுள்ள நூலகத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைச் சேகரித்த எனக்குத் தெரிந்த அருமை நண்பன்(...) செயலானது மிகவும் பாராட்டத்தக்கது!அது,பலதுறைப் பரிணாமங்கொண்ட நூல்களை நமக்கு வாசிக்கத் தந்தது.இதைவிட நமது மொழியின் மிகப் பழைய ஓலைச் சுவடிகள்கூட ஜேர்மனிய நகரான முனிக்கிலுள்ள(முன்ஞ்சன்)நூலகத்தில் ஆய்வாளர்கள் சேகரித்து வைத்துள்ளார்கள்.

இப்போது சுவிசுக்கு வந்து பட்டப் பின் படிப்பைச் செய்கிறீர்கள்.உங்களுக்கு ஜேர்மனிய மொழி புரிய ஆரம்பித்திருக்கும் கூகிளில் தேடிப் பாருங்கள் பல புதையல்கள் வரும்.அதைவிடத்"தமிழ்"Tamilischஎன்று கொடுத்துப்பாருங்கள் நமது மொழி 5.000.ஆண்டு பழமையுடையதென்றும் இராண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கியக் கட்டுக்கோப்பும்,இலக்கணமும் உடையதென்று ஜேர்மனியர்கள்,அவர்களின் பேராசிரியர்கள் சொல்வது கண்ணில் படும்.உலகத்தில் எந்த மொழிக்கு இத்தகைய சிறப்புகள் இருக்கிறது?இத்தகைய சிறப்புடைய இலத்தீன் அழிந்துள்ளது.தமிழும்?

12:36 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home