1.8.07

பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்

2002 இன் பெப்ரவரியில் ஒரு நாள்!
தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கின்றேன். வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் நிகழும் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற நிகழ்வொன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. இலங்கை அரச படைகளால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் அங்கு வைத்து புலிகளிடம் கையளிக்கப்பட, புலிகள் தம் வசமிருந்த இலங்கை அரச படையினரை பதிலுக்கு விடுதலை செய்தார்கள்.

துளிர் விட்டிருந்த சமாதான நம்பிக்கைகளின் பொருட்டு நல்லெண்ண அடிப்படையில் இருதரப்பும் இவ்வாறான ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தார்கள்.

கமெரா அவ்விடத்தை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது. இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், புலிகளின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவினர், விடுவிக்கப் படுகின்ற இருதரப்புக் கைதிகள், அவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோர் நிறைந்திருந்தனர்.

விடுவிக்கப்பட இருப்போரில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசமிருந்தவர்கள். இன்னும் சிலர் இறந்துவிட்டதாகவே கணிக்கப்பட்டவர்கள். தொலைக்காட்சி அவ்வப்போது அவர்களை மிக அருகில் உள்வாங்கிக் கொள்கிறது. ´´அவர்தான் கெனடி´´ என்றான் பக்கத்திலிருந்த நண்பன். 93இன் இறுதிகளில் பலாலித் தளத்தினில் புலிகள் நடாத்திய கரும்புலித் தாக்குதல் ஒன்றில் பங்கு பற்றியவர் அவர். அப்போதைய தொடர்பாடல் காரணங்களால் தாக்குதலில் வீரச்சாவடைந்த புலிகளின் வரிசையில் அவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆயினும் பல காலங்களிற்கு பின்னரே அவர் கொழும்புச் சிறையொன்றில் இருப்பது தெரியவந்தது.

கமெரா அவரைக் கடந்தும் செல்கிறது. எல்லோருடைய முகங்களிலும் ஒருவித அமைதி கலந்த மகிழ்ச்சி படிந்திருந்தது.

இப்போது விடுவிக்கப் பட்டவர்கள் தமது உறவினர்களோடு அளவளாவினர். மகனை உச்சி மோர்ந்து கொஞ்சும் தாய், அண்ணனை அரவணைக்கும் தம்பி, ஆனந்த கண்ணீர் உகும் தந்தையென உணர்ச்சிகளின் கலவைகளால் நிறைந்திருந்தது அவ்விடம்.

அதோ அந்த சிங்களத் தாயின் மகிழ்வும், அவர்களுக்கு அருகிலேயே நின்று தன் அண்ணனின் தோள்களில் தொங்கிய தமிழ்த் தம்பியின் சந்தோசமும் எனக்குள்ளும் உருவானதாய் உணர்ந்தேன் -

இந்த மகிழ்வுகளின் பின்னால் இவர்கள் எத்தனை வேதனைகளை, துயரங்களை கடந்து வந்திருப்பார்கள் ? எத்தனை வருடங்கள் இவர்களைத் தனிமையில் விழுங்கியிருக்கும்..?
= = =

ட்டாம் பூச்சி - கென்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன் - 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூலினை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்த போது மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே - அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ஆசிரியர்) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.

அடுத்த 13 ஆண்டு காலத்திற்கு அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பித்துக்கொள்கிறார். தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.

கதையில் விவரிக்கப் படுகின்ற வகையிலான கொடும் சிறைகளில் 13 ஆண்டுகள் என்பது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. சாதாரணமாக செய்திகளில் 20 வருடம் தண்டனை, 30 வருடம் தண்டனை எனும் போது ஏற்படாத உணர்வலைகள் அத்தனை வருடங்களையும் வரிக்கு வரி விவரிக்கும் போது அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பிரெஞ்சுக் கயானாவின் தனித்தீவுச் சிறைகளின் கொடூரத்திற்குச் சற்றும் குறைந்தனவல்ல நமது சிறைகள்!
= = =

ரவு நேர ஜெர்மன் மொழி வகுப்புக்கள் - சற்றே அவசரமான தேவையென்பதால் தினமும் நான்கு மணிநேரம் - முதல்நாள் வகுப்பிற்குள் நுழைந்த போதே அவரைக் கண்டு கொண்டேன்.

இடைவேளையின் போது வழமையான குசல விசாரிப்புக்கள் - அண்ணை தமிழோ என்பதிலிருந்து ஆரம்பித்தது. ´´எப்ப வந்தனியள்..?´´

´´ஒரு வருசமாகுது´´

------

தொடர்ந்த உரையாடலில் என்னுடைய ஏதோ ஒரு கேள்விக்கு அமைதியாய் அவர் சொன்னார். ´´ 19 வயசில இருந்து 31 வரை கிட்டத்தட்ட 12 வருசம் வெலிக்கட நாலாம்மாடியெண்டு கன இடங்களில சிறையில இருந்தன்.´´

பட்டாம்பூச்சி படிக்கும் போதிருந்த படபடப்பு எனக்குள்.

அவர் தொடர்ந்தார். ´´பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் போது இழுபறிப் பட்டு என்ரை பெயரையும் சேத்தாங்கள்´´

பிறிதொரு நாள் அவர் காட்டிய 96ம் ஆண்டுத் தமிழ்ப் பத்திரிகையொன்றில் அவர் இறந்து போனதாய்ச் செய்தியொன்று வந்திருந்தது.
= = =

ண்மைக்காலங்களில் இணையத்திலும் சரி எங்கினும் சரி ஈழத்தின் செய்திகளைக் காணும் போதெல்லாம் ஒரு வித வெறுமையும் இறுக்கமும் தொற்றிக்கொள்கிறது.

இதை நான் எழுதும் கணத்தில் நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்.

இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகி இணையத்தில் பாடல்கள் ஒலிபரப்புவதிலும் படங்கள் காட்டுவதிலும் ஒரு சோர்வு நிலை உருவாகி விட்டது.

நண்பரின் 12 வருட கால சிறை அனுபவங்களை அருகிலிருந்து கேட்டு வந்திருக்கிறேன். அவருக்கு இதில் ஈடுபாடு எதுவும் இல்லையென்றாலும் ஒரு பதிவுக்காக அவை இங்கே தொடரும்..

சிறை அனுபவம் என்பது அவர் ஏன் சிறைக்குச் சென்றார் என்பது அல்ல !

முன்னுரை முற்றிற்று

17 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

//அவர்தான் கெனடி´´ என்றான் பக்கத்திலிருந்த நண்பன். 93இன் இறுதிகளில் பலாலித் தளத்தினில் புலிகள் நடாத்திய கரும்புலித் தாக்குதல் ஒன்றில் பங்கு பற்றியவர் அவர். அப்போதைய தொடர்பாடல் காரணங்களால் தாக்குதலில் வீரச்சாவடைந்த புலிகளின் வரிசையில் அவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. //

ஒரு தகவலுக்காக:
கெனடி என்ற நிலவன் தலைமையில் பலாலியில் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியது சரியாக பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இதேநாளில்தான்.
அதாவது 02.08.1994 இல்.
உம்மை அறியாமலே பொருத்தமான நாளில் இடுகை இட்டுள்ளீர்.

4:16 PM  
Blogger Ramani said...

நல்ல ஆவணமாகுமென்று நம்புகிறேன்

4:36 PM  
Blogger செல்வநாயகி said...

அருமையான இடுகை சயந்தன்.
ஒரு ஈழத்தவராய் இங்கு எழுதப்படும் உங்கள் நாடுசார்ந்த எண்ணங்கள்மீது உங்களுக்கு ஏற்படும் வெறுமைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதைத் தணித்துக்கொள்ள நீங்கள் பாடல்கள், படங்கள் இட்டுவந்தபோதும் அவை எனக்குப் பிடித்தே இருந்தன. இப்போது நீங்கள் எழுதயிருப்பதாய்ச் சொல்லும் தொடர் எனக்கு இன்னும் பிடித்தமானதாயிருக்கிறது. எழுதப்படவேண்டும் எல்லாப்பிரச்சினைகளும், அனுபவங்களும். அதை அதுசார்ந்த இடத்தில் இருப்பவர்கள் செய்ய அவர்களுக்கு மேலும் பலமடங்கு உரிமை இருக்கிறது. தொடருங்கள்.

5:23 PM  
Blogger மோகன்தாஸ் said...

சயந்தன் நானும் ராகிராவின் அந்த பட்டாம்பூச்சி நாவலைப் படித்திருக்கிறேன். என்னுடைய நட்சத்திர வாரத்தில் கூட அதைப் பற்றி எழுதிய நினைவு.

உண்மைதான் 20, 30 ஆண்டுகள் சிறை எனும் பொழுது நாம் உணரமுடியாத ஒரு விஷயத்தை இந்தப் புத்தகம் கொடுக்கும்.

நல்ல பதிவு.

10:03 PM  
Blogger அய்யனார் said...

/நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்./

அழுத்தமான வரிகள் ..மிக நல்ல இடுகை சயந்தன்

2:09 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகி இணையத்தில் பாடல்கள் ஒலிபரப்புவதிலும் படங்கள் காட்டுவதிலும் ஒரு சோர்வு நிலை உருவாகி விட்டது.//

நாயமான கூற்று.
பல நாளாளாகக் காணவில்லை. ஆனால் கனமான விடயத்துடன் வந்துள்ளீர்.

2:28 AM  
Blogger சயந்தன் said...

அய்யனார் ஈழத்தில் தின நிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்து கொள்ள துயரத்துடன் இதை பதிகிறேன் -

//நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்//

இது நேற்று இரவு எழுதியது -

இன்றைய காலைச் செய்தி வழமைபோலவே ஒப்பித்த செய்தியை பாருங்கள் -

//திருநெல்வேலி தரங்காவில் பிள்ளையார் கோவிலுக்கும் முடமாவடிச் சந்திக்கும் இடையில் உள்ள வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் ஈருருளியில் சசிரூபன் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த துணை இராணுவக் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

பலாலி வீதியை அண்மித்ததாக இருக்கும் இந்த பகுதி சிறிலங்கா இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதுடன் அடிக்கடி அப்பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட சசிரூபன், திருநெல்வேலி தொழிநுட்பக் கல்லுரியின் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று வந்தார்.//

முடிவற்ற வெளியை வெறிப்பதுவே இப்போதைக்கு முடிகிறது -

2:37 AM  
Blogger சுல்தான் said...

//நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்//
//இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகி இணையத்தில் பாடல்கள் ஒலிபரப்புவதிலும் படங்கள் காட்டுவதிலும் ஒரு சோர்வு நிலை உருவாகி விட்டது.//
ஏதாவது ஒன்றின் பின்னால் மட்டுமே போனால் விரைவில் சோர்வாகி விடுவோமோ? இவை இரண்டுமே சேர்நததுதானே வாழ்க்கை.
அழகாய் தொடங்கியிருக்கிறீர்கள்.
தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

4:32 AM  
Anonymous Seelan said...

kaiyakalaatha nilaiyil naam.. :((

4:49 AM  
Blogger சினேகிதி said...

ஜெயிலிலிருந்து திரும்பிவந்தவர்களிடம் சொல்வதற்கு நிறைய விடயங்களிருக்கும்.யாழ் களத்திலும் மாப்ஸ் தன்னுடைய அனுபவங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்.

எனது மாமாவொருவரும் இப்படி இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை எந்தத்தகவலுமில்லை.

இதில் வேதனை என்னவென்றால் உங்கட தம்பி (மகன்) போல ஒராளை வன்னில ஒரு தே்ததண்ணீக்கடையில கண்டனான் என்று சொல்பவர்களும் வெற்றிலைல மை போட்டுப்பார்த்தனான் வெலிகட சிறையில் கால்தொடைல கட்டோட உயிரோட இருக்ககிறார் என்று சொல்லும் சாத்திரிகளையும் நம்பி ஊர் ஊராத்திரிஞ்சு பணத்தையும் செலவழித்து இறுதியில் உயிரையும் விடும் சொந்தங்களின் நிலைதான்.

6:19 AM  
Anonymous Anonymous said...

எழுத்துக்கு ஆயுள் அதிகம்!
வலைப்பதிவென்பது வானொலி தொலைக்காட்சி வரிசையில் இன்னுமொரு பொழுது போக்கு ஊடகமாக மாற்றப்பட்ட நிலையில் ஆங்காங்கே காலத்தை பதியும் இவ்வாறான இடுகைகள் நம்பிக்கையளிக்கின்றன.

6:24 AM  
Blogger டிசே தமிழன்/ DJ said...

சோர்ந்துவிடாமல் இச்சம்பவத்தை விரிவாகப் பதிவு செய்யவும்.

9:20 AM  
Blogger நண்பன் said...

சயந்தன்,

ஒரு படைப்பு வாழ்க்கை நிலையைப் புரிந்து கொண்டு, அதன் பல்வேறு பரிமாணங்களையும் வெளிக் கொண்டு வந்தால் மட்டுமே அங்கீகாரம் பெறுகிறது. ராகிராவின் பட்டாம்பூச்சி நாவலை நானும் படித்திருக்கிறேன். பின்னர் ஆங்கிலத்திலும் அதற்கும் பின்னர் திரையிலும் கண்டிருக்கிறேன்.

நாளை மரணிக்கப் போகிறோம் என்ற அறிதலில்லாமல், நிம்மதியாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை மறுநாள் காலை சிதைந்து போகும் பொழுது - அதுவும் அறியப்பட்டவராக இருக்கையிலே அது நம் மனதை அழுத்தமடையச் செய்வதுவும், சோர்வடையச் செய்வதுவும், எதிலும் பற்றில்லாமால், பிடிப்பில்லாமல் செய்வதுவும் உண்மை தான்.

ஆனால் அதற்காக வாழாமலும் இருந்து விட முடிவதில்லை, அல்லவா? ஒரு போராளியின் கனவு நாளைய விடுதலையாக இருக்கும் பட்சத்தில், அவரது மரணம், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அடி அல்லவா? வன்முறை கூடாது என்பது உண்மை தான். ஆனால், அதற்காக ஒரு மண்புழு போல புதைந்து போவதும் முறையல்ல அல்லவா?

நீங்கள் கூறிய பட்டாம்பூச்சியின் கதையின் ஆழத்தில் எப்பொழுதுமே, ஒரு வன்முறையும், லஞ்ச லாவண்யமும், துரோகமும், பழி வாங்கும் குரூரமும், ஆவேசமும் இருக்கும் - கதாநாயகனிடத்திலேயே தான்!!! ஆனாலும், அவன் எல்லோராலும் விரும்பப்படுகிறவனாகவே இருக்கிறான். ஏனென்றால் - செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டோம் - அதனால் நான் விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்ற துடிப்பு தான் அந்த மனிதனை எல்லோருக்கும் பிடித்தவனாகச் செய்தது. விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு குழுவுமே மக்களிடையே ஆதரவு பெற்ற குழுவாக விளங்கும் - சமயங்களில், அந்த குழுவினர் தவறு செய்தாலுமே, எல்லோருடைய நலனும் கருதி அவை மன்னிக்கப்படக்கூடும். அல்லது மறக்கப்படக் கூடும். ஆனால், ஒருவன் எத்தகைய நல்லவனாக இருந்தாலும், தன்னையும் தான் சார்ந்தவர்களையும் அடிமைத்தளை பிணைக்கும் பொழுது அது குறித்தான அக்கறை சற்றேனும் இல்லாது இருப்பான் என்றால், எவருடைய விருப்பத்திற்கும் உரியவனாக அவன் மாறமாட்டான்.

உங்களுடைய பதிவில் காணப்படும் ஒரு மெல்லிய சோர்வும் தளர்வும் நீக்குங்கள் நண்பரே!

எல்லாம் நல்மாக முடியும் நாள் வெகுதொலைவில் இல்லை என நம்பிக்கை கொள்ளுங்கள்.

அன்புடன்,
நண்பன்

12:30 PM  
Blogger சயந்தன் said...

நண்பன் நீண்ட உங்கள் மறுமொழிக்கு நன்றி ! பதிவு செய்தல் மட்டுமல்ல அது பலரிடத்தில் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.

3:07 PM  
Anonymous Anonymous said...

avathanamaga ezhuthavum. ragasiyankal kakkapada vendiyavai

9:40 PM  
Blogger மலைநாடான் said...

/நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்./

ம்..நேற்றும், நேசித்த ஒருவன் செத்துப் போனான்..

4:34 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நான் முதலாவது பின்னூட்டம் இட்டபோது, குறிப்பிட்டவரின் அனுபவத்தைத் தொடராக எழுதப்போவதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன்.
எனவே அதுதொடர்பில் எனது வாழ்த்தை இப்போது தெரிவிக்கிறேன்.

முன்பு போலன்றி, இம்முறை சொன்னதைச் செய்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

6:56 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home