24.2.07

வாழ்வினூடு பயணிக்கும் புதுவையின் கவிதைகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ) ஈழப் போராட்டப் பாடற்களத்தில் புதுவை இரத்தினதுரைக்கு பெருமளவு பங்கிருக்கிறது.

பாடற்களம் தவிரவும் கவிதைப் பரப்பிலும் இவர் அறியப் படுகிறார். புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பே இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கின்றார் என அவரது முன்னைய கவிதைகள் சொல்கின்றன. பிற்காலங்களில் கூட தனது சில பல கவிதைகளில் என் ஜேவிபி தோழனே என விளித்திருக்கிறார். தனது மே தின கூட்டங்கள் குறித்து நினைத்திருக்கின்றார்.

ஆயினும் எது கவிதை என்ற சுழலில் அவரும் சிக்காமல் இல்லை. விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வியாசன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதைகளை, அவர் தற்போதைய எண்ணக் கருக்களுக்கேற்ப அவை கவிதைகளா என தனக்குத் தெரியாதெனவும், ஆனால் அவற்றை உரைச் சித்திரங்கள் எனத் தன்னால் கூற முடியும் எனவும் சொல்கிறார்.

உலைக் களத்தில் வெளியாகும் புதுவையின் உரைச்சித்திரங்கள் நிறைந்த வீச்சைக் கொண்டவை. சம காலத்தின் மீதான அவரது பார்வையைச் சொன்னவை. அவரது கோபங்களைக் கூறியவை. (புலம் பெயர் தமிழர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய இரண்டு வரிகள் அண்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமாதானத்திற்கான காலத்தில் அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்திருந்த போது அவரை விமர்சிக்க அது பெருமளவு பயன்பட்டது.)

94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்
நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்
கதையற்ற கலைப்படைப்பு என்பதால்
பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்
நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.
இடை வேளையுடன் திரை விழுந்தது.
ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை
திருத்தியெழுதப்பட்டதை
அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை
குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.
கொட்டட்டும்.

95 ஒக்ரோபர் 30 யாழப்பாண இடப்பெயர்வின் பின்னர் துயர் சுமந்து இடிந்து போயிருந்த காலத்தில் அவரது படைப்புக்கள் சோகத்தைச் சுமக்கின்றன.

இடைவெளியற்று இடி விழுகிறது எமக்கு
அவலம் அன்றாட வாழ்வாச்சு
கறிக்கு உப்பானது கண்ணீர்
நாசித்துவாரங்கள் காற்றையல்ல
கந்தகத் துகள்களையே சுவாசிக்கின்றன.
அடுத்த நேர உணவு எந்த அகதி முகாமில்..
யாரறிவார்..

அதே நேரம் பொதுமக்களை நோக்கிய நம்பிக்கை அறைகூவல்களாக இருந்திருக்கின்றன.

எரியுண்டு போகுமா எம்மண்
நடவாது
பூவரசு பூக்கும் பூமிக்கு
வெள்ளரசு வந்தா விலங்கிட முடியும்..
மழை நீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது
அசையாதென்பதறிக
எந்நாட்டு மக்களையும் எம் தேசம் வரவேற்கும்
படையோடு வருபவர்க்கு எம் தலைவாசல் மரமிடிக்கும்.
குமாரணதுங்காவின் குடும்பத் தலைவிக்கு
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.

அவரது கவிதைகளில் எள்ளலும் கேலியும் ஆங்காங்கே தொனிக்கிறது. 96 இல் யாழ் குடா நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு நகருக்குள் வாழச்சென்ற சில பிரபலங்கள் மீதான தனது எள்ளலை இப்படிச் சொல்கின்றார்.

புராதன வாழ்வின் பெருமை அறியாது
நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென
எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி
புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.
சிங்கக் கொடியேற்றும் போது
நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?
கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்
உள்ளே வந்துள்ளான்
கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.
வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை
இங்கு காணவில்லை.
சந்தக் கவிஞர்களல்லவா
உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.
வாசலில் நிற்க வைக்கவும்.
சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.
குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய
காட்டாற்று வேகக் கதைக்காரன்
வீட்டுக்கு வந்தள்ளார்.
பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்
பழைய பேப்பர் வழங்குக
அவர் பாடநூல் அச்சிடட்டும்..
பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே
உமக்கு என்ன நடந்தது
உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை
உமக்குச் சொல்லித்தந்தது யார்.?

பொதுவாக இவரது இத்தகைய உரைச் சித்திரங்களில் பிரதேச பேச்சு வழக்குக் கதையாடல்களும், பழமொழிகளும் நிறைந்திருக்கும். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றைச் சொல்லும் போது

காற்றுக்கொதுங்கிய போர்த்துக்கீசனின்
கண்ணிலெம் தாயகம் தெரியும் வரை
தலையில் கட்டிய தலைப்பாகையை
முதுகில் தொட்டுப் போவதென
உயர்ந்த வாழ்வுக் குரியவராய் இருந்தோம் நாம்.
எம்மை நாமே எழுதினோம்.
வெடிமருந்துடன் வந்தவனை
வேலும் வாளும் வெல்ல முடியவில்லை
வேற்றொருவனின் காலில் விழுந்தோம்.
கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்தோம்.
யானைகள் மிதிக்கும் சேனைப்புலவாய்
மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்
நாறிக் கிடந்தது நம் வாழ்வு
வெள்ளைக் காரன் வெளியெறிய போது
சேனநாயக்காவிற்கு சிம்மாசனம் கிடைத்தது.

குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயம் புதுவை இரத்தினதுரை, தான் தேர்ந்தெடுத்த போராட்டப் பாதையினூடு தன்னோடு பயணித்த சக தோழர்களின் பிரிவுகளையும் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரித்த திலீபனை அவர் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளையெனப் பாடுகின்றார்.

சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு
அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.
திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.
வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை
அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!
அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது
இமயம் உயரமெனும் அகம்பாவம்.
'கந்தன் கருணை' யிலிருந்துன் கால் நடந்த போது
கோயில் வீதியே குளிர்ந்து போனது.
கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி
வீற்றிருந்தாள் முத்துமாரி.
பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி
நீ உருகியபோது
வெள்ளை மணல் வீதி விம்மியது.
உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது
குற்றவுணர்வு எம்மைக் குதறியது.
வரண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது
திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.

இவர் ஈழப் போரில் நிகழ்ந்தேறிய சகல சமாதானப் பேச்சுக்களையும் ஒரு வித எச்சரிக்கையுணர்வுடனே அணுகியிருக்கிறார். வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை முன்னிறுத்தியே அவை பற்றிப் பேசுகிறார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு மாவீரர் தினத்தில் அவரது உணர்வுகள் இவ்வாறு இருந்திருக்கின்றன..

இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும் போதே
என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்..?
சம்பூ கொணர்ந்தோம்
சவர்க்காரம் கொணர்ந்தோம்
சீமெந்தும் முறுக்குக் கம்பியும்
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்ல முடியுமா அவர்களுக்கு

2004 இறுதியில் சுனாமிக்கு உறவுகளைத் தின்னக்கொடுத்ததெம் தேசம். அந்த வலியின் அவலங்களை அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

முள்முடி சூடி
முதுகிற் பாரச் சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.
இயேசுவே
எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி
ஆலமுண்ட நீல கண்டனே
எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு
அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்தபெருமானே
வெள்ளம் வருகுதென்றாயினும்
சொல்ல வேண்டாமா..?
எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்
நாம் தான் தனித்துப்போனோம்

நிகழ்காலத்திலான அவரது கவிதைகள் சமாதான மாயையில் சிக்கிப்போன நிலைபற்றிச் சொல்கின்றன. சலிப்பினையும் விரக்தியினையும் ஏமாற்றத்தினையும் அவை பேசுகின்றன.

இந்தத் தடவை வானப் பயணம் போனவர்
வந்து இறங்கியதிலிருந்து
ஆவியாய் வெளியேறிக் கரைகிறது
மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..
மேசையிலமர்ந்து பேசுவதென்பது
பூதகியிடம் பால் குடிப்பதைப் போன்றதே
உறிஞ்ச வேண்டும்
விழுங்கக் கூடாது
சிரிக்க வேண்டும்
சிக்குப்படக்கூடாது

சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை

நெஞ்சுக்குள் அலையெற்றிய
மாயக்கனவுகள் வெளியேற
நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.
மினுங்கிய மின்சாரமற்று
தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று
செப்பனிடப்பட்ட தெருவற்று
மாவற்று - சீனியற்று - மருந்தற்று
ஏனென்று கேட்க எவருமற்று
கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.
கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்
வீட்டு மூலையில் வீசிவிட்டு
மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்
விறாந்தையின் தரைவிரிப்புகளையும்
மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்
அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு
பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.
விடுவிக்கப்பட்ட ஊர்களை
விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து
ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல
மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.
இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து
மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.
இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி
தாய்நிலம் வாய்திறந்து பாடும்
விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.
மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி
எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி
கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

ஒரு உண்மையான பிற்சேர்க்கை:
2002 இல் நானும் நண்பர்களும் ஆரம்பித்த எழுநா என்னும் இணையத்திற்காக புதுவை இரத்தினதுரை அவர்களிடம் பெற்ற வாழ்த்து இது தனிப்பட என் சேமிப்பில் இல்லையாயினும் மினிவெளியில் ஏதோ ஒரு மூலையில் இருந்தது.

இன்று புது உதயம் எழுகிறது.
இணையமதை
வென்று நிலைத்து விடும் விருப்பில்
எழுநா எனும்
கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது.

நன்றென்று வாழ்த்தி
நான் மிதந்து கொள்கின்றேன்.

நீளக்கிடக்கின்ற நிலமெல்லாம்
நெடிதுயர்ந்து
ஆளும் நிலை தமிழுக்காகுமெனும்
நம்பிக்கை சூழ்கிறது.

எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..
உங்கள் தொண்டு மிக நெடிது.
வாழ்வீர்.
புதிய தொரு வரலாறு உமக்காகும்.

எழுநாவால் எழும் உலகு.
இனித்தமிழ்
தொழுதுண்டு வாழாதெனச் சொல்லி
நீ துலங்கு..

இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. ஆரம்பத்தில் இணையத்திற்கு உயிர்ப்பு எனத்தான் பெயரிட்டோம். புதுவையின் கவிதை கூட உயிர்ப்பு என்ற பெயரை மையப்படுத்தியே இருந்தது. (உயிர்ப்பால் உயிர்க்கும் உலகு என்றவாறாக..) ஆனால் சடுதியாகச் சில காரணங்களால் அதனை எழுநா என மாற்ற வேண்டியேற்பட்டது. கவிதையையும் மாற்ற வேண்டும். அவரும் மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வில சரியான பிசி.. வேறை வழியில்லாமல் ஆங்காங்கே நானே கை வைக்க வேண்டியதாய்ப் போனது. ஆயினும் அது அவருக்கு அறிவிக்கப் பட்டது.


ஒரு உண்மையற்ற பிற்சேர்க்கை:
தம்பி சயந்தா உன் சாதனை மிகப்பெரிது என்று கூட ஒரு வரியைச் சேர்க்கலாம் என்றிருந்தேன். ஆனா சோமிதரன் தன்ர பேரையும் போட வேணுமெண்டான். சோமி உன் ஆற்றலைக் காமி என்றோ சோமி நீ எங்க குல சாமி என்றோ போட்டிருக்கலாம் தான். எண்டாலும் போடேல்லை ;)

12 Comments:

Blogger வி. ஜெ. சந்திரன் said...

சயந்தன் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகளுக்கு நானும் ரசிகன். அவரது கவிதைகள் எந்த சஞ்சிகை/ பத்திரிகையில் வந்தாலும் தேடி வாசிப்பேன்.

அவரது கவிதைகள் போருடு/ ஈழத்து வாழ்வூடு பயணிப்பவை. அதை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு விளங்கும். நீங்களும் அதை அழகாக தொகுத்துள்ளீர்கள்.

7:04 PM  
Anonymous Anonymous said...

நல்ல தொகுப்பு

1:52 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன்.//
உடன்படுகிறேன். ஆனால் கொஞ்சம் தெளிவிக்க வேணும். போர் நடக்கும் களத்தைவிட்டு வெளியில் ரசனையை ஏற்படுத்தும் அவாவில் தடம் மாறுகிறார்கள் என்பதே என்புரிதல்.
//இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். //
உடன்படவில்லை. தனியொரு வசனமாக இது பிழையான கருத்தைத் தருகிறது. இவர்களின் வருகை ஆரோக்கியமாகவே இருந்தது. இளையவர்கள் என்பதால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் ஏதாவது புதுசா செய்யவேணும் என்ற ஆர்வம் இருக்கிறது. சிலவேளை எல்லைதாண்டுவதால் பிழைக்கிறது.
//அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். //
இதிலும் உடன்படுகிறேன். அதைவிட குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒலிப்பேழைகள் வெளியிட்டுக்கொண்டிருக்க வேண்டுமென்ற அவா அல்லது கட்டாயத்தாற்கூட இந்தத் தடுமாற்றம் வருகிறதென்று நினைக்கிறேன்.

தேவைக்கு மட்டும் பாட்டுக்கள் வந்தால் போதுமென்பதே என் விருப்பம்.

2:30 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
இவை நல்ல உரை வீச்சுக்களாகத் தான் ;நான் கொள்வேன்.இதுவரை படிக்கக் கிடைக்காதவை!
நன்கு செட்டாகத் தொகுத்துள்ளீர்கள்.
எள்ளல் மிக்க எழுத்து நடை!
பதிவுக்கு நன்றி

3:49 AM  
Blogger மலைநாடான் said...

இத விட்டிட்டு..:)

சயந்தன்!

உம்மிடம் இயல்பான ஒரு எள்ளலும், ரசனையும் , இணைந்தேயிருப்பதை வெகுவாக அவதானித்துள்ளேன். அதனாற்தான் சொல்லுகின்றேன், நீங்கள் ஆற்றுவதற்கு இன்னமும் உண்டு.

அருமையான பதிவு. புதுவையின் ஆரம்பகாலக் கவிதைகளில் உணர்சிகரமும், தற்போதையகவிதைகளில், அனுபவ வெளிப்பாடும், கவிந்திருப்பதை, புதுவையின் படைப்புக்களை முன்ன்ன்ன்பிருந்து படிப்பவர்களுக்குப் புரியும்.
பதிவுக்கு நன்றி.

9:17 AM  
Anonymous Anonymous said...

புதுவையின் பல கவிதைகளைப் படிக்க இங்கு அழுத்தவும்.

12:14 PM  
Anonymous Anonymous said...

//என்னைப் பற்றி ஏதாவது எழுதுவதற்காக இவ்விடம் ஒதுக்கப்பட்டுள்ளது.//

ராசா இந்த இடம் எத்தினை நாளைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.

2:04 PM  
Blogger சயந்தன் said...

நன்றி VJ சந்திரன்
வசந்தன் Rap இசையில் பாடல்களை விடுதலைப்போரில் (Rap தவறென சொல்லவில்லை)இசைப்பிரியன் போன்றவர்கள் முயற்சித்தமையில் அவர்களது இளமையையும் அந்த முயற்சியில் இருந்த ஜனரஞ்சகத்தையும் இணைத்துப் பார்த்தேன்.

2:09 PM  
Anonymous Anonymous said...

நல்ல அறிமுகம். புலம் பெயர்ந்த பின்னர் அவரது கவிதைகளை தேடிப் பெற முடியவில்லை. அவரது இணையத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி

3:34 PM  
Anonymous Anonymous said...

good post

9:46 PM  
Anonymous Anonymous said...

www.puthuvai.com

3:31 PM  
Anonymous Anonymous said...

நல்ல கவவிதை அருமை

10:32 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home