9.2.06

குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பது எப்படி

ஆட்லறி

நெடுந்தூர எறிகணை

குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த படியாக சனம் கிலியடைஞ்சு போயிருந்த உயிர் கொல்லும் ஆயுதம்.

விமானக் குண்டு வீச்சுக்களின் போது எங்கு வருகிறது? எங்கு வீசப் போகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது.

எறிகணை வீச்சுக்கள் எங்கு விழப் போகிறன என்பது எவருக்கும் தெரியாது. உண்மையில் அதனை எறிந்தவர்களுக்கு கூட அது தெரியாது. எறிகணைகள் விழுந்ததன் பின்பே இறந்தவர்கள் நீங்கலாக மற்றவர்களால் அது விழுந்த இடம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆட்லறிகள் எனக்கு நினைவு தெரிய முன்னமே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. ஓர் இரவு எங்கள் ஊரை நோக்கி 3 ஆட்லறிகள் ஏவப்பட்டனவாம். பாயில் படுத்திருந்த சிறு குழந்தையான என்னை அம்மா பாயுடன் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடினாவாம். அதன் பின்னரான காலங்களில் நிகழ்ந்த சில ஆட்லறி வீச்சுக்கள் எனக்கு லேசாக நினைவிருக்கிறது.

அப்புறம் இந்திய ராணுவ காலத்தில் இவை பயன் படுத்தப் பட வில்லை.

மக்களும் ஆட்லறியை மறந்து விட்டார்கள்.

மீண்டும் இலங்கை அரசுடன் யுத்தம் ஆரம்பிக்கிறது. ஆட்லறிகள் ஊர் புகத் தொடங்குகின்றன.

வடபகுதியில் பலாலி என்னும் இடத்திலிருந்த இராணுவ தளம் ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்தின் எந்த பகுதிக்கும் சென்று வெடிக்கக் கூடிய தகுதி?? ஆட்லறிக்கு இருந்தது.

ஆரம்பத்தில் சிறிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்கும். அது ஆட்லறி புறப்பட்டு விட்டது என்பதற்கான அறிகுறி. குத்திட்டானடா என்று கத்திக்கொண்டு உடனே எல்லோரும் குப்பிற விழுந்து படுத்து விட வேண்டும். விரும்பியவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளலாம். முடிந்தால் கந்த சஷ்டி கவசமும் செபமும் படிக்கலாம். வயது போன பழசுகள் கடவுளே எங்களை சாகடிச்சுப்போட்டு வாழ வேண்டிய வயசுள்ள இளசுகளை விட்டு விடப்பா என்று பெருங்குரலில் கத்தலாம்.

ஏதுமறியா குழந்தைகள் சத்தம் தாங்க முடியாமல் வீல் என்று கத்தக்கூடும் என்பதனால் தாய்மார்கள் குழந்தைகளின் காதுகளில் பஞ்சு அடைந்து விடுவது முக்கியம்.

பலத்த இரச்சலில் கூவுகின்ற சத்தமும் தொடர்ந்து வானத்தில் மீண்டும் ஒரு வெடிப்புச் சத்தமும் கேட்கும். இந்தச் சத்தம் உங்கள் தலைக்கு நேர் மேலே கேட்டால் நீங்கள் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். ஆட்லறி உங்களை தாண்டிச் சென்று வெடிக்கப்போகிறது. ஆகவே நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு அடுத்த ஆட்லறிக்காக காத்திருக்க வேண்டும்.

வானத்தில் கேட்கின்ற இரண்டாவது வெடிப்புச் சத்தம் தொலைவினில் கேட்டால் மன்னிக்கவும் ஆட்லறி உங்கள் தலையிலும் வந்து விழலாம் என்பதனால் தொடந்தும் நீங்கள் படுத்தே இருக்க வேண்டும் அது தரையில் விழுந்து வெடிக்கும் வரை.

சிறு காயமடைகின்ற பலருக்கு உடனடியாக வலி தெரிவதில்லை. இரத்த ஓட்டத்தை கண்ணுற்ற பின்னரே தாம் காயமடைந்திருக்கிறோம் என அவர்கள் பெரும்பாலும் அறிந்து கொள்கிறார்கள். ஆகவே உங்கள் உடம்பில் எங்காவது இரத்த ஓட்டம் இருக்கிறதா என்பதனையும் பரிசோதிக்க வேண்டும்.

எல்லாம் முடிந்து உங்களுக்கு எதுவும் ஆக வில்லை என்றால் உங்களுக்கான சாவுத் திகதி இன்றில்லை என்றறிந்து கொண்டு (ஒரு வேளை அது நாளையாயிருக்கலாம்) வழமையான காரியங்களில் இறங்கலாம்.

அடடா நல்ல வேளை மணிமேகலைப் பிரசுரம் ஈழத்தில் இருந்திருந்தால் ஆட்லறியில் இருந்து தப்புவது எப்படி என்று புத்தகமே அடித்திருக்கும்..?

1995 இல் புலிகள் மண்டைதீவு என்னும் இராணுவமுகாம் ஒன்றை தாக்கினார்கள். அங்குள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக பலாலியில் இருந்து படையினர் ஆட்லறிகளை ஏவினார்கள். இரவு 1 மணி முதல் 250 க்கும் மேற்பட்ட ஆட்லறிகள் நகரப்பகுதியில் இருந்த எங்கள் வாழிடங்களுக்கு மேலால் சென்று வெடித்தன. இப்படியான ஷெல் வீச்சுக்களின் போது கொங்கிறீட் கட்டடங்களுக்குள் இருப்பதென்பது உயிருக்கே உலை வைக்கும் என்பதனால் நாம் மாட்டுக் கொட்டகைக்குள் விடியும் வரை தஞ்சமடைந்திருந்தோம்.

ஆக இப்படியான ஒரு ஆயுதம் புலிகளிடம் ஏன் இல்லை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. இன்னும் சிலர் சற்றே மிகைப்படுத்தி ஆட்லறி ஒன்று புலிகளிடம் இருந்தால் தமிழீழம் கிடைத்தது போலத்தான் என்றும் சொன்னார்கள்.
புலிகளின் ஆயுதக்கப்பல் வந்ததாம் என்று செய்திகள் கசிந்தால் கூடவே இந்த கேள்வியும் எழும். அப்ப ஆட்லறியும் கொண்டந்திருப்பாங்களோ?

வெளிநாட்டு ஆயுதச் சந்தைகளில் வாங்கி ஆயுதக் கப்பல்களில் ஏற்றி கடற்பகுதியினூடாக கொண்டு வந்து சேர்த்த ஆயுதங்களில் கடைசி வரை ஆட்லறி வரவே இல்லை.

இறுதியில் யாழ்ப்பாணத்தையும் இழந்தாயிற்று. பின்னர் மொத்த யாழ் குடா நாட்டையே இழந்தாயிற்று. ஆக ஆட்லறிக் கனவு அவ்வளவும் தானா..?

மீண்டும் முல்லைத்தீவில் வாழ்வு துளிர்க்கிறது.

ஒரு காலை விடியலே குண்டுச் சத்தங்களுடன் விடிகிறது. மீண்டும் இராணுவம் முன்னேறுகிறதா? இந்த மண்ணையும் இழக்கப் போகிறோமா? அரசு சொன்னது போல உண்மையிலேயே புலிகளை முற்றாக தோற்கடிக்கப் போகிறதா?

காலை புலிகளின் வானொலி செய்தி கேட்கின்றோம். எதுவும் சொல்ல வில்லை. அந்த நேரம் புலிகள் மீது ஒரு கடுப்பு வரும் பாருங்கள். கண்டறியாத றேடியோ நடத்திறாங்கள்.

நேரம் ஆக ஆக செய்திகள் வரத் தொடங்குகின்றன. முல்லைத் தீவில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வந்த புலிகள் நீண்ட கால இடைவெளியின் பின்னர் நடாத்திய இத் தாக்குதலுக்கு புலிகளின் தலைவர் ஓயாத அலைகள் 1 என்று பெயர் சூட்டுகின்றார்.

அடுத்த நாள் மாலைதான் அந்த செய்தி வருகிறது. சனத்தை எல்லாம் சந்தோசப் பட வைத்தது. அது தாங்க!

ஆட்லறி ரண்டு நம்ம வசமாச்சு.

என்னை ஆயுத வெறியன் என்று சொன்னாலும் பரவாயில்லை.(பாரதியாரே ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியிருக்கிறார் தானே?) எங்கள் உச்சி குளிர்ந்து போனது உண்மை தான்.

ஒரு வாரமாக தொடர்ந்த சண்டையில் 1500 படையிரைக் கொண்டிருந்த அம்முகாமினை புலிகள் கைப்பற்றிய கையோடு சண்டை முடிவுக்கு வந்தது.

சில நாட்களின் பின்னர் ஒரு நாள் பாடசாலை முடிந்து சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு ட்ராக்டர் பச்சை இலைகளால் உரு மறைப்புச் செய்யப்பட்ட ஒரு பெரிய உருப்படியை கட்டி இழுத்துக் கொண்டு வருகிறது. நீண்டிருந்த குழல் பெரிய சில்லு

வீதியெல்லாம் ஒரே ஆரவாரம்...

அந்த உருப்படி தான் ஆட்லறி.

Image hosting by Photobucket

அந்தக் காலங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்திருந்த பாடல் இது தான்

நந்திக் கடலோரம் முந்தை தமிழ் வீரம்
வந்து நின்று ஆடியது நேற்று - இன்று
தந்தனத்தொம் பாடி பொங்கி நடமாடி
இங்கு வந்து வீசியதே காற்று

கையில் வந்து சேர்ந்தது ஆட்லறி - அதை
கொண்டு வந்த வேங்கையை போற்றடி

(2000 களில் அரசும் புலிகளும் பல்குழல் பீரங்கி என்னும் ஒரு வகை ஆயுதத்தை பயன்படுத்தினார்கள். இது பற்றி எனக்கு நேரடி அனுபவம் எதுவும் இல்லை. ஆயினும் செக்கனுக்கு 10 க்கு மேற்பட்ட குண்டுகளை ஓரேயடியாக ஒரே இடத்திற்கு வீசும் இந்த வகை ஆயுதமே வடபகுதியின் சாவகச்சேரி என்னும் நகரினை இன்னுமொரு ஹிரோசிமா ஆக்கியது.

6 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: குண்டு

சிலருக்கு இதெல்லாம மறந்து போச்சு.. ஏனென்றால்.. வெளிநாடுகளுக்கு வீழாது தானே..

14.11 10.2.2006

7:14 PM  
Anonymous Anonymous said...

I UNDERSTAND YOUR FLEENGS AND PRAY FOR YOUR FUTURE

12:48 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: nothing

கெல்லொ,இட் நச் ஒக்.

16.51 9.2.2006

2:00 AM  
Anonymous Anonymous said...

//கெல்லொ,இட் நச் ஒக்.//

why did you publish this..? you need more comments...??

8:40 PM  
Blogger கொழுவி said...

பாவம் சின்னப்பிள்ளை.. எங்கையன் ஒளிஞ்சிருக்கும்.. சரி சரி விட்டுத் தள்ளுங்கோ.. இனியாவது தகவல்களை சரியா தெரிஞ்சு போட்டு கதைக்கட்டும்..

10:32 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சமா

கொழுவி, கொண்டோடி, சயந்தன்....
நல்ல சமாதான்.

19.31 13.2.2006

12:34 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home