30.7.05

என்னத்தை சொல்ல - இலங்கையில் 3

'உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்' எண்டு அம்மம்மா கேட்டா.

'தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான்.

அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. 'என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை.

ஆனா உண்மையா நான் அவரோடை தனகுப்படேல்லை. அவருக்கும் எனக்கும் சாதாரண சம்பாசனைதான் நடந்திச்சு. எண்டாலும் அவர் ஒண்டு சொல்லுறதும் அதுக்கு நான் நக்கலா அல்லது கொஞ்சம் குத்தலா பதில் சொல்லறதும் எங்களுக்குள்ளை நடந்து கொண்டிருக்க, அதை அம்மம்மா நானும் அவரும் தனகுப்படுறம் எண்டு விளங்கி கொண்டாவோ தெரியேல்லை.

அந்த அவர் லண்டனில இருந்து இரண்டு சின்னப்பெடியள் மற்றும் மனைவியோடை வந்திருந்தவர்.

2002 இலிருந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் இலங்கைக்கு வந்து போறவர். அதுக்கு முதல் ரண்டு மூண்டு வருசம் இந்தியாக்கு வந்து போனவராம். ஏனெண்டால் 2002 க்கு பிறகு தானே இலங்கையில் சண்டை நிண்டது. அதுக்கு முதல் வாறது பயம் தானே!

அவற்றை ரண்டு பெடியங்களும் சரியான cute ஆக இருந்தாங்கள். கிராமத்து வீடு அவங்களுக்கு ஒரு புது உலகம் மாதிரி இருந்திருக்க வேணும். ஆனால் வெயில் தான் அவங்களை கஸ்ரப்படுத்திப்போட்டுது. அவங்களாலை வெயிலை தாங்க முடியேல்லை. அடிக்கடி எரிச்சல்ப் பட்டுக்கொண்டிருந்தாங்கள். உண்மையாகவே அவங்களாலை அந்த வெயிலை தாங்க முடியாது தான். உண்மையில வெளிநாடுகளிலேயே பிறந்து வளந்தவங்கள் சுட்டெரிக்கும் வெயிலைக் கண்டு எரிச்சல்ப்படுறது ஒரு பிழையே இல்லை.

ஏனெண்டால் ஏழெட்டு வருசத்துக்கு முதல் கலியாணம் பேசி வெளிநாட்டுக்கு போன ஆக்கள் எல்லாம் திரும்பி இலங்கைக்கு வந்து நிக்கேக்கை 'இதென்ன கண்டறியாத வெயில். மனிசரை இருக்க விடுகுதில்லை. உடம்பெல்லாம் நச நச எண்டு ஒரே வியர்வை. ச்சீ. இதுக்கை என்னெண்டு இருக்கிறது' எண்டு சொல்லும் போது, பாவம் அந்தப் பெடியள் சொல்லுறது ஒரு தப்பே இல்லை.

லண்டன் காரர் நல்லா அரசியல் மற்றும் ராணுவ விசயங்கள் கதைப்பார். அவரிடம் அம்பிட்டால் ஒரு அரசியல் வகுப்பு எடுக்காமல் விடமாட்டார் போல எண்டு நான் நினைச்சன். அவரின்ரை கதைப்படி தமிழருக்கெண்டு ஒரு தனிநாடு வலுகெதியில கிடைக்க வேணும் எண்டு விரும்பிறார் போல எனக்கு தோன்றிச்சு.

'உந்தக் கிளைமோர் மட்டும் வெடிச்சு அதுல போன எங்கடை 40 பெடியளுக்கும் ஏதாவது நடந்திருக்க வேணும், பிறகு நடந்திருக்கிறதே வேறை' எண்டு அவர் ஆவேசமா ஒரு நாள் சொன்னார். 'நடந்திருக்கிறதே வேறை எண்டு அவர் சொன்னாலும் எனக்கென்னமோ 'நடக்கிறதே வேறை' எண்ட தொனியிலதான் அவர் சொன்ன மாதிரி இருந்திச்சு.

ஒரு நாள் அவர் கிளிநொச்சியில நந்தவனம் எண்ட இடத்துக்கு போனார். போகும் போதே நிறைய றிசீற்றுக்களையும் துண்டுக் காகிதங்களையும் எடுத்துக்கொண்டு போனவர். பிறகொரு நாள் அவர் ஆரோடையோ கதைச்சுக் கொண்டிருக்கேக்கை நான் பக்கத்தில இருந்து கேட்டனான்.
'நான் கட்டேல்லை. நான் வலு புத்தியா அங்கை கட்டுற துண்டுகளையும் றிசீற்றுக்களையும் கொண்டு போய்க் காட்டினான். மற்றது அவங்களிட்டை நாங்கள் காசு கட்டுற பதிவவெல்லாம் இருக்கு. அங்கை கட்டுற படியாலை இங்கை குடுக்க தேவையில்லை'

அவருக்கு கடவுள் பக்தி கொஞ்சம் கூடப்போலை. அப்பிடியில்லாட்டி எங்கடை ஊரில இருக்கிற ஒரு கோயிலுக்கு தேர் ஒண்டு செய்ய வேணும் எண்டு சொல்லுவாரே?. ஆனா தேரிழுக்கிறதுக்கு கோயிலைச் சுத்தி நிலமில்லாத படியாலை முதல்ல அதை வாங்க வேணும் எண்டவர். அவரின்ரை மனிசிக்கும் நல்ல கடவுள் பக்தியாக்கும். இல்லாட்டி பத்து நாள் திருவிழாக்கும் பத்துச் சீலை கட்டிக்கொண்டு போக வேணும் எண்டு சொல்லுவாவே?

அவவின்ரை தம்பியார் ஒரு நல்ல pulzer மோட்டச்சைக்கிள் வைச்சிருக்கிறான். அவதான் அது வாங்கிக்குடுத்தவவாம். 'அக்கா வாங்கித்தந்தது என்று பெருமையாச் சொல்லுவான். பெற்றோலுக்கும் அக்கா தான் அனுப்பிறவ போலை. அதுக்கும் அவன் ஒரு தத்துவ விளக்கம் சொல்லிப்போட்டு ஒரு பார்வை பாத்தான்..

'அக்காக்கு ஒரு அம்பது பவுண்ஸ் எண்டுறது பெரிய காசில்லையென. ஆனா.. அதையே இங்கை அனுப்பினா கிட்டத்தடட 6000 ரூபா என்ன..அவுஸ்ரேலிய டொலர் எவ்வளவு போகுது!? எழுபதாக்கும்.. லண்டன் பவுண்ஸ் நூற்றம்பது போகுது'

எனக்கு சோமிதரன் ஒரு விசயம் சொன்னான். ஒரு நாட்டின்ரை பணவீக்கம் கூடுறதெண்டுறது அந்த நாட்டுக்கு கெடுதியான, அந்த நாட்டின்ரை பொருளாதாரம் அடிபடப்போகுது எண்டதுக்கான ஒரு கவலையளிக்கிற விசயம். ஆனால் பணவீக்கம் கூட, வெளிநாட்டுக் காசுகளின் பெறுமதியும் கூடும் எண்டதுக்காக சந்தோசப்படுற ஒரே சனம், யா.. இல்லையில்ல, வெளிநாட்டில சொந்தக்காரர் இருக்கிற தமிழ்ச்சனம் தானாம்.

(யாழ்ப்பாணத்தில பெற்ற விசயங்களை வைச்சு சோமிதரன் ஆங்கிலத்தில எழுதின கட்டுரையொன்றை அவர் தன்ரை பதிவில எழுதியிருக்கிறார். உண்மையில எங்கடை பிரச்சனைகளை இப்பிடி எங்களுக்குள்ளேயே நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறதை விட வெளியாட்களுக்கும் சொல்ல வேணும் எண்டது தான் என்ரை விருப்பம். எனக்கு ஆமி அடிச்சது, எனக்கு ஆமி சுட்டது எண்டத நாங்கள் இன்னொரு ஆமி அடிச்சவனுக்கும், இன்னொரு ஆமி சுட்டவனுக்கும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறம் நான் உட்பட. சோமிதரன் நல்ல விசயம் செய்யிறார். வாழ்த்துக்கள். - சோமிதரன் நீர் கள்ளுக்குடிச்ச விசயத்தை வெளியில சொல்ல வில்லை-)

'அக்காக்கு என்ன வெறும் ஐம்பது பவுண்ஸ் தானே' எண்டு அவன் சொல்லவும் என்ர மனசு கட கடவெண்டு கணக்குப் போட்டுது. அம்பதெண்டால் ஒரு ஐஞ்சு மணித்தியாலம் வேலை செய்ய வேணும். ஐஞ்செண்டால் அது விடியக்காலமை 4 மணிக்கு தொடங்குதோ அல்லது பின்னிரவு 2 மணிக்கு முடியுதோ ? அதெல்லாம் அவனுக்கு தெரியுமோ தெரியாது!

அவனோடை ஒரு நாள் ரவுணுக்கு ஒரு சொந்தக்கார வீட்டை போனனான். தன்ரை pulzer மோட்டச்சைக்கிளை தந்து 'நீர் ஓடும்' எண்டான். உண்மைய சொல்லப்போனால் எனக்கு க்ளச் மொடல் சைக்கிள்கள் ஓடிப் பழக்கமில்லை. அதை விட முக்கியமான விசயம் யாழ்ப்பாணத்து தெருக்களில் ஓடுறதுக்கு ஒரு விசேட பயிற்சியும் தற்துணிவும் வேணும்.அது என்னட்டை இல்ல.

யாழ்ப்பாணம், வீதி ஒழுங்கைக் கூட ஒழுங்காக் கவனிக்க ஆக்கள் இல்லாமல் கிடக்கு.

நான் சிரிச்சுக்கொண்டே 'இல்ல நீரே ஓடும் எண்டன். சீற்றில அவனுக்கெண்டு இருக்கிற இடத்தில இருக்காமல் நல்லா பின்னாலையா இருந்து என்னையும் இன்னும் பின்னுக்காக தள்ளிக் கொண்டு முதுகை வளைச்சு அவன் ஒரு வித்தியாசமாத்தான் ஓடினான். அவ்வப்போது பொம்பிளைப்பிள்ளையளை கடக்கேக்கை horn அடிச்சான்.

என்ன தான் நேருக்கு நேரை நிண்டு கதைச்சாலும், ஒண்டா இருந்து பம்பல் அடிச்சாலும், சண்டை பிடிச்சாலும் இப்பிடித்தள்ளித் தள்ளி நிண்டு கவன ஈர்ப்புக்களை செய்யிறது எண்டுறது ஒரு தனிச்சுகம் தான்.

அவவை கடந்து போகேக்கை ஒருக்கா குரலை செருமுறதும் (மோட்டச்சைக்கிள் வைச்சிருக்கிற ஆக்கள் horn அடிக்கலாம்) ஏன் நேற்று கோயிலுக்கு வரேல்லை என்று எங்கேயோ பாத்துக் கேக்கிறதும் அதுக்கு அவ அந்தக் கேள்வி பிடிச்ச மாதிரியும் அதே நேரம் பிடிக்காத மாதிரியும் முகத்தை வைச்சுக்கொண்டு சொண்டுக்குள்ளை சிரிக்கிறதும், அவர் அவவை முந்திக்கொண்டு போறதும் பிறகு ஸ்லோப் பண்ணுறதும் , அவ பக்கத்தில வாற தன்ரை சினேகிதியப் பாத்து 'இப்ப என்னவாமடி இவருக்கு' எண்டு கேக்கிறதும்... ஓ.. அது ஒரு அழகிய உலகம்......

Track மாறிட்டன் எண்டு நினைக்கிறன். எழுத வந்த விசயத்தை மட்டும் எழுதும். எல்லாத்தையும் போட்டு பிசையாதையும் எண்டு வசந்தன் சொல்லுறது.

அவனுக்கு பின்னாலை இருந்து போகேக்கை சும்மா பேச்சுக் கொடுத்தன். 'இங்கை என்ன மாதிரி கார்கள்? என்ன மொடல்கள் ஓடுது?' எனக்கு ஒரு மொடலுகளின்ரை பெயரும் தெரியாட்டிலும் சும்மா கேட்டன்.

அதுக்கு அவன் 'காரை மனிசன் ஓடுவானே. உள்ளை இருந்து ஓடினால் ஆர் பாக்கப் போறாங்கள். மோட்டச்சைக்கிள் எண்டாத்தான் முறுக்கிக் கொண்டு ஓட ஒரு நாலைஞ்சு மடியும்' எண்டான். 'அதென்ன நாலைஞ்சு மடியும்' எண்டு யோசிச்சுக்கொண்டேயிருக்க அவன் என்னை கொண்டு போய் சொந்தக்கார வீட்டை நிப்பாட்டினான்.

அந்த வீட்டில இருந்த ஒரு அக்கா அவனைப்பாத்து 'என்ன ஐசே.. 'இந்தப்' படத்தில 'இன்ன' ஹீரோ 'இந்தக்' கட்டத்தில 'இப்பிடி' வாற மாதிரி வாறீர் எண்டு கேட்டா. அதுக்கு அவன் இல்லயக்கா, இது அப்பிடியில்லையெண்டு விட்டு இன்னொரு படத்தில இன்னொரு ஹீரோ இன்னொரு கட்டத்தில இன்னொரு மாதிரி வாறதெண்டு விளக்கம் குடுத்தான்.

அதுக்கு அவ, ம்.. அந்த மாதிரியும் கிடக்கு இந்த மாதிரியும் கிடக்கு எண்டா. உவங்கள் படத்தை பாக்கிறவங்களோ இல்லாட்டி பாடமாக்கிறவங்களோ எண்டு நான் மனசுக்குள்ளை பிரமிச்சுக்கொண்டிருக்க, அவ என்னைப்பாத்து என்ன ஆள் சரியா கறுத்துப் போய் முகமெல்லாம் வாடி ஆளே மாறிப்போய் வந்திருக்கிறீர் எண்டு கேட்டா. அதைக் கூட என்னாலை பொறுக்க முடியும்!

ஆனா அவவின்ரை அம்மா என்னைப் பாத்து காச நோய் வருத்தக்காரன் வந்த மாதிரி இளைச்சுப் போய் வந்திருக்கிறீர் எண்டு கேட்டாவே ஒரு கேள்வி ! அதை நான் ஆயுளுக்கும் மறக்க மாட்டன் எண்டு அப்பவே முதலாவது சத்தியம் பண்ணிக்கொண்டன். ரண்டாவது சத்தியமும் பண்ணினனான். அதுக்கு பிறகு வாறன்.

'ஒஸ்ரேலியாவில கிட்டத்தட்ட யாழ்ப்பாணச் சுவாத்தியம் தான். அதுவும் கோடை காலத்தில சரியா யாழ்ப்பாணம் மாதிரித்தான் இருக்கும். இப்ப தான் அங்கை குளிர் தொடங்குது. போன முறை அங்கை சரியான வெயில்! அது தான் இப்பிடி எண்டு நான் வெதர் மேலை பழியைப்போடடன்.

'அப்ப அங்கை இனி ஸ்நோ கொட்டுமோ' எண்டு அவ தன்ரை பொது அறிவை வளக்கப்பாத்தா.

'இல்ல எங்களுக்கு ஸ்நோ இல்லை. அது எங்கையோ மலைப்பக்கம் கொட்டுதாம். நான் போனதில்லை' எண்டு நான் சொன்னன்.

'எட.. அப்ப அங்கை ஸ்நோ இல்லையே? என்ரை மகன்ரை வீட்டு முத்தத்தில நிறையக் கொட்டுமாம் என்ன.? வீடியோ கொண்டு வந்து போட்டுக் காட்டினவன். நல்ல வடிவாத்தான் இருந்தது.' அவவின்ரை கதையைப் பாக்க ஏதோ ஸ்நோ இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டுமாப்பொலை இருந்தது. அப்ப தான் நான் ரண்டாவது சத்தியம் செய்தன். ஒஸ்ரேலியா திரும்பினவுடனை பக்கத்தில எந்த இடத்தில ஸ்நோ கொட்டுதோ அங்கை போய் நானும் ஒரு படம் எடுத்து அனுப்புறதெண்டு.

இத்தனைக்கும் இடையில அந்த லண்டன் காரர் எனக்கு கன தரம் அரசியல் வகுப்புக்கள் எடுத்திட்டார். ' உது சரிப்பட்டு வராது. சிங்கள அரசுகளை நம்பி ஒரு பிரியோசனமும் இல்லை. பொடியங்கள் என்ன செய்ய வெணுமெண்டால் சண்டையைத் தொடங்கிப்போட்டு பத்துப்பதினைஞ்சு குண்டுகளை கொழும்பில வைக்க வேணும். அப்பிடியே அரசாங்கத்தை திணறடிக்க வேணும். அப்ப தான் அவங்களுக்கு புரியும் எங்களைப் பற்றி.' எண்டு ஒருநாள் அவர் சொன்னார்.

நான் ஒண்டும் பதில் சொல்லவில்லை. உண்மையில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லை.

இதெல்லாம் முடிஞ்சு அடுத்த நாளோ அதற்கடுத்த நாளோ லண்டனில் குண்டு வெடிச்சது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கள் செத்தவை. அவருக்கு அந்தச் செய்தியை நான் தான் முதலில சொன்னனான். கேட்ட மாத்திரத்திலேயே பேயறைஞ்சவர் மாதிரி போனார்.

'எங்கை எந்த இடத்தில எண்டு அந்தரப்பட்டு கேட்டார். உண்மையில எனக்கு லண்டனில இடம் வலம் எதுவும் தெரியாத படியாலை 'எனக்கு தெரியா லண்டன் எண்டுதான் சொன்னது எண்டு சொன்னன்.

அவர் உடனையே தன்ரை செல்போனில இருந்து லண்டனுக்கு போன் பண்ணி ஆரோடையோ தமிழில கதைச்சார். கதைக்க கதைக்க முகத்தில அறைஞ்ச பேய் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. கதைச்சு முடிச்சார்.

'அது லண்டனில. நாங்கள் இருக்கிறது வெம்பிளிதானே. அந்த இடத்தில எங்களுக்கு பிரச்சனை ஒண்டும் இல்லை. எல்லாம் ஸ்மூத்தாம்.'
நான் அவரைக் கொஞ்ச நேரம் பாத்துக்கொண்டிருந்தன்.

'ம் உண்மைதானே! வெம்பிளி தவிர்ந்த வேறை எந்த இடத்தில குண்டு வெடிச்சாலும் அவருக்கு பிரச்சனை இல்லைத்தானே..! '

இந்த பதிவை எழுதி வசந்தனுக்கு அனுப்பி விட்டு ஒரு தலைப்பு சொல்லும் எண்டன். அவர் என்னத்தை சொல்ல எண்டார்.
அதுக்கு நான் இஞ்சை இப்பிடிச் சொல்லாமல் நல்ல ஒரு தலைப்பு சொல்லம் எண்டன். அவரும் நிறைய தலைப்புக்கள் சொன்னார். ஒண்டும் சரிவரேல்லை. கடைசியா திரும்பவும் ஒருக்கா என்னத்தை சொல்ல எண்டார். நான் உடனை அட.. இதையே தலைப்பா வைக்கலாமே எண்டன். அட நாசம் கட்டினவனெ அதைத்தனேடா அப்போதையிருந்தே சொல்லிக்கொண்டு வாறன் எண்டார். நான் தான் விளங்கி கொள்ள வில்லை.

12 Comments:

Anonymous Anonymous said...

என்னத்தை சொல்ல?
உலகம் போறபோக்க பாத்து.

8:45 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: என்னத்தை கன்னயா

என்னத்தை சொல்ல!

6.51 31.7.2005

1:53 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

இந்த லண்டன்காரர் மாதிரிக் கனபேர். பதில் சொல்ல வாய் துறு துறுக்கும் பாரும்...என்னண்டு அடக்கிறதெண்டு தெரியாம, பிஸ்கற்றையோ, தேத்தண்ணியையோ வாய்க்க செலுத்திறதுதான். எனக்கு இந்தச் சனத்தைப்பாத்து அலுத்துப் பொய்ட்டுது! கதைச்சும் பிரியோசனமில்லை இவங்களோட. :o(

//அவவின்ரை கதையைப் பாக்க ஏதோ ஸ்நோ இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டுமாப்பொலை//

சரியாச் சொன்னீர்!

5:18 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Answer me

//அவ அந்தக் கேள்வி பிடிச்ச மாதிரியும் அதே நேரம் பிடிக்காத மாதிரியும் முகத்தை வைச்சுக்கொண்டு சொண்டுக்குள்ளை சிரிக்கிறதும், அவர் அவவை முந்திக்கொண்டு போறதும் பிறகு ஸ்லோப் பண்ணுறதும் , அவ பக்கத்தில வாற தன்ரை சினேகிதியப் பாத்து 'இப்ப என்னவாமடி இவருக்கு' எண்டு கேக்கிறதும்... //

I thing u really enjoyed it. is it?

19.59 31.7.2005

3:00 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kumaran.thavady.jaffna

சுய புராணம் பாடாமல் போடா மடையா!

21.27 1.8.2005

8:29 AM  
Anonymous Anonymous said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். யாழ்ப்பாணத்தினை ஒரு சோம்பேறி நகரம் ஆக்கியதில் வெளிநாட்டு நம்மவருக்கு (நான் நீங்கள் உட்பட) முக்கிய பங்கு உள்ளது)

5:04 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Naan thaan

உது கொஞ்சம் ஓவர்!

20.46 2.8.2005

3:47 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: son

அம்ம அப்பா நான் விலையடப்பொரேன்

18.16 4.8.2005

1:17 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Son

கையில் அன்புடன் பட்சனம் தந்தனுப்பென்னய்

12.7 5.8.2005

7:14 PM  
Anonymous Anonymous said...

சதியமா இரன்டாவதா வந்த மகன் நானில்ல.யெவொனொ ஒருவன் அவன். sari nan velaiyadapporeen

9:03 PM  
Anonymous Anonymous said...

சயந்தனுகு அடுத்த மாதம் திருமனமாம் கேல்விப்பட்டேன்.

9:18 PM  
Blogger சயந்தன் said...

அப்பிடியா..? நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்..!!

1:29 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home