23.6.07

கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்

அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் படுத்துகின்ற, இன்னும் சொல்லப்போனால் சாதிய வர்க்கப் பிரிப்பின் நீட்சியாக இது அமைகிறது. இன்னொரு வழியில் வெளிநாடுகளுக்கு படித்தவர்கள் மட்டுமே செல்லலாம், ஆகவே படித்த நாங்கள் மட்டுமே செல்லலாம் என்ற அவர்களின் மன ஓட்டத்தின் வெளிப்பாடாகவும் இவை அமையலாம்.

அவையெல்லாவற்றையும் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் படித்த எங்களால் கொள்ள முடியாத தனி மனித பொருளாதார வளர்ச்சியை, கோப்பை கழுவுகிறவர்களும், தூசி தட்டுபவர்களும் எளிதில் கொண்டு விடுகிறார்களே என்ற ஒரு வித தாழ்வுச் சிக்கலும் இவ்வாறான கருத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம்.

உண்மையில் இவ்வாறு தொழில் முறையில் இழிவு படுத்துகின்ற, சாதியம் சார்ந்த பழக்கவழக்கம் உள்ள ஒரு (எனது அனுபவத்திற்கு உட்பட்ட வகையில் யாழ்ப்பாண) சமூகம், ஒட்டுமொத்தமாக பிறிதொரு இடத்திலிருந்து இவ்வாறான பார்வைகளைப் பெறுதலென்பது ஒரு வகை முரண் நகைதான். ஆங்காங்கே படித்தவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஈழத் தமிழர்களிடமிருந்து கூட இவ்வாறான கருத்துக்கள் வெளியாவதுண்டு.

யுத்தத்திற்கு பிந்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, தனியே படித்தவர்கள் என்றில்லாத ஒரு சமூகத்தின் மொத்த இடம்பெயர்வினாலும், அறிந்தேயிருக்காத மொழி பேசும் நாடுகளில் தஞ்சமடைவதாலும், வாழ்வதற்கான உந்துதலில் கிடைத்ததை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் ஏற்படக் கூடிய இந்த நிலை, சிந்திக்கும் அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளக் கூடியது. சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புலம் பெயர் தேசங்களில் இதோ அடுத்த தலைமுறை உருவாகி விட்டது. தனியே டொக்டர், எஞ்சினியர், அக்கவுண்டன் என்பவையே உயர் படிப்புக்கள் என்றிருந்த யாழ்ப்பாண சமூக நிலையிலிருந்து விடுபட்டு ஆடை வடிவமைப்பாளர்களாக, உணவுத் தயாரிப்பாளர்களாக, விமானமோட்டிகளாக என பல்வேறு துறைகளில் பரிணமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இங்கே சுவிற்சர்லாந்தில் எனது மாநிலத்தின் பாராளுமன்றில் இருபத்தைந்து வயது நிரம்பிய ஈழ தமிழ் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதே போல இன்னுமொரு மாநிலத்து பாராளுமன்றிலும் இளைஞர் ஒருவர் உள்நுழைந்திருக்கிறார். எனது அறிதலுக்குட்பட்ட வகையில் சுவிசின் லுகானோ மாநிலம் தன் சார்பில் அனுப்பும் செயற்கைக் கோளுக்கான செயற்திட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இணைந்திருக்கிறார். சுவிஸ் இராணுவத்தில் கப்டன் தரத்தில் உள்ள தமிழர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்.

இவ்வாறான நிறைய உதாரணங்கள் பிற நாடுகளிலும் உண்டு. இதிலே ஒரு விடயம் கவனத்திற்குரியது. புலம்பெயர் தேசங்களில் வாழ்வினைத் தொடங்கும் தமிழ்த் தலைமுறையிடம் பெரிய அளவில் தம் மக்கள் மீதான கரிசனை இருக்கப் போவதில்லை என்று (அது இயல்பானதே என்ற ரீதியில்) எதிர்பார்க்கப் பட்ட ஒரு எண்ணத் தோற்றம் நடைமுறையில் முறியடிக்கப் படுவதே அது. மனிதர் மீதான கரிசனை என்ற அளவிலாவது அவர்கள் தம் தேசத்தில் துயருறும் மக்கள் குறித்து சிந்திக்கிறார்கள்.

சமாதானத்திற்கான காலங்களில் பெருமளவில் தமது தாயகப் பிரதேசங்களுக்கு வந்து அங்கே நிர்வாக கட்டமைப்புக்களுக்கும் தொழிற்துறை முயற்சிகளுக்கும் இராணுவ கட்டமைப்புத் தேவைகளுக்காகவும் தமது அறிவு அனுபவ பகிர்தலை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இளையவர்கள் தானே ஆங்காங்கே குழுத் தாக்குதல்களிலும் தெருச்சண்டைகளிலும் ஈடுபடுகிறார்கள் எனில் ஆம். அதுவும் உண்மைதான். ஏனெனில் இது ஒரு ஒட்டுமொத்தமான இனத்தின் இடப்பெயர்வு. ஆகவே சகல கூறுகளையும் கொண்டிருக்கும். அதுவே இயல்பானதும் கூட.

--அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?
--அது சும்மா ஒரு எதுகை மோனைக்கு வைத்தது..
--என்ன மோனை..

17 Comments:

Anonymous Anonymous said...

"புலம்பெயர் தேசங்களில் வாழ்வினைத் தொடங்கும் தமிழ்த் தலைமுறையிடம் பெரிய அளவில் தம் மக்கள் மீதான கரிசனை இருக்கப் போவதில்லை என்று எதிர்பார்க்கப் பட்ட ஒரு எண்ணத் தோற்றம் நடைமுறையில் முறியடிக்கப் படுவதே அது".
உண்மை தான் ,
இதுவே எமது சமூகத்தில் தலைமுறைகளைக் க்டந்தும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கருத்தொற்றுமை நிலவவே செய்யும் என்பதற்கான எதிர்வுகூறலின் அடித்தளம்.

4:47 PM  
Blogger பிருந்தன் said...

அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?

எங்கப்பன் குதிருக்குள்ல இல்ல என்று உதத்தான் சொல்லுறதோ?:-)

5:52 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

//எங்கப்பன் குதிருக்குள்ல இல்ல என்று உதத்தான் சொல்லுறதோ?:-)//

ஓம். :)))))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

9:43 PM  
Blogger வரவனையான் said...

நட்சத்திரவாரத்தை அருமையான பதிவுகள் மூலம் நிறைவு செய்துள்ளீர்கள் சயந்தன். வாழ்த்துக்கள். சாதரணமாய் வாழ்த்து சொல்லுவதா அதனால் கட்டி "கொழுவி" தழுவி வாழ்த்துக்கள்.

பதிவின் உட்பொருளோடு உடன்படுகிறேன். ஒரு முறை என் பதிவிலும் தட்டுகழுவுபவர்கள் என்கிற பதம் ஒரு அனானி மூலம் எழுதப்பெற்றது. நானும் அவரசத்தில் வெளியிட்டு பின் நண்பன் செல்லில் அழைத்து சுட்டிக்காட்டி கடிந்தபின் நீக்கிவிட்டு அனைவர் இடத்திலும் மன்னிப்பு கேட்டேன்.

11:16 PM  
Anonymous Anonymous said...

/எனது அறிதலுக்குட்பட்ட வகையில் சுவிசின் லுகானோ மாநிலம் தன் சார்பில் அனுப்பும் செயற்கைக் கோளுக்கான செயற்திட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இணைந்திருக்கிறார்./

யார் யார் யாரவர் யாரோ?
ஊர் பேர்தான் தெரியாதோ? :-)

11:38 PM  
Blogger சயந்தன் said...

நன்றி பூ.ம.பொ
யார் யார் யாரவர் யாரோ?
ஊர் பேர்தான் தெரியாதோ? :-)
என்பதன் மேலுள்ள இணைப்பை கிளிக்கி வீடியோவைப் பார்வையிடலாம்.

11:44 PM  
Blogger சயந்தன் said...

பிருந்தன் எங்கப்பா அவ்வப்போது கதிரையில் இருப்பதுண்டு.. குதிரையில்.. இல்லையே..

11:46 PM  
Blogger கொண்டோடி said...

என்னப்பா! கொழுவிக்கு மோனை கண்டுபிடிச்ச மாதிரி கொண்டோடிக்கும் ஏதாவது கண்டுபிடிச்சு ஒரு வசனம் போட்டுவிடும்.
அதுசரி, வார்ப்புருவில உவ்வளவு விளையாட்டுக் காட்டுறிர், உந்த இணைப்புக்களைத் தெரியப்பண்ண ஏலாமல் நிக்கிறீரே?

12:22 AM  
Blogger பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் படுத்துகின்ற, இன்னும் சொல்லப்போனால் சாதிய வர்க்கப் பிரிப்பின் நீட்சியாக இது அமைகிறது.//


தமிழர்களின் மனநிலையில் எனக்கு தெரிந்த வரையில் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக சொல்லிக்கொள்கிற ஒரு வக்கிர மனநிலையை எல்லா இடத்திலும் காணலாம்....

உதாரணமாக
1. தமிழகத்திலிருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களாக சென்ற தமிழர்களை இலங்கை, மலேசியாவில் இருக்கிற தமிழர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள்... எவ்வாறு கேலி செய்கிறார்கள் என்பதும் முக்கியமானது...

2. தற்பொழுதும் தமிழகத்திலிருந்து சிங்கைக்கு கூலித்தொழிலாளர்களாக வருகிறவர்களை சிங்கப்பூர் தமிழர்கள் எவ்வாறு கிண்டலும்,கேலியும் செய்கிறார்கள் என்பதை நான் நேரிடையாக கண்டு மனம் வெதும்பி கொண்டுருக்கிறேன்...

3. தற்பொழுது வெளிநாடுகளில் நல்ல பணிகளில் வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் பலர் தமிழக தமிழர்களை அறிவிலிகள்... என்கிற மனநிலையில் தான் எண்ணவோட்டங்களை கொண்டுடிருக்கின்றனர்... அதன் நீட்சிகளை வலைபதிவுகளில் கூட காணலாம்...

ஓட்டுமொத்தமாக தன்னை மற்றவர்களை விட மேம்பட்ட மனிதனாக காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலே செயல்படுவதால்.... 'சாதி' சொல்லி தாழ்த்துவது... அல்லது ஒருவருடைய பொருளாதார நிலையை வைத்து தாழ்த்துவது... கடைசியாக பார்க்கிற வேலையை வைத்து கேவலப்படுத்துவது என்று தொடர்கிறது...

என்ன வேலை(தொழில்) செய்தாலும் அவர் சமூகத்தில் சம மதிப்புடனே நோக்குகிற மனநிலை வளர வேண்டும்...

நன்றி

1:09 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சயந்தன், அது குதிரை இல்ல..குதிர் ;)

பொதுவாக ஈழத் தமிழர் தொட்டுச் செல்லாத விசயங்களை நட்சத்திர வாரத்தில் தெரிவித்து வருகிறீர்கள். நன்று.

நெதர்லாந்து மாவீரர் நாள் கூட்டத்துக்குச் சென்ற போது இங்கேயே பிறந்து மருத்துவப் படிப்பு படிக்கும் ஈழப் பெண் ஒருத்தியைப் பெருமையுடன் நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார். பல ஆண்டுகளாகச் செய்யும் தொழில் காரணமாக இழிவுபடுத்தப்பட்ட வந்த சமூகத்தின் தலை நிமிர்வாக அதைப் புரிந்து கொண்டேன்.

இன்னொன்று, நம்ம ஆட்கள் தான் இப்படி தொழிலை வைத்து இழிவு படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளில் பல நாட்டவரும் சொந்த நாட்டவரும் கூட இந்த வேலைகளில் பகுதி நேரமாக ஈடுபடுவதால், இவற்றை இழிவாகக் கருதுவதில்லை என்று நினைக்கிறேன். நெதர்லாந்து போன்ற நாடுகளில் தட்டு கழுவுபவருக்கும் பேராசிரியருக்கும் ஊதிய அளவில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அளவுக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

2:42 AM  
Blogger சோமி said...

சயந்தன் ஏனப்பு இப்பிடி அநியாத்துக்கு விளங்காத மொழி நடையில எழுதுறியள் சாதாரணமாக எழுதினால் இதைவிட சிறப்பாக எழுதியிருபியள் எண்டு நினைக்கிறன்.உங்கட எழுத்தாழுகை இதில் மிஸ்ஸிங்.....

3:30 AM  
Blogger சயந்தன் said...

இவை தவிர சொந்த ஊரில் தம்மை விட கீழ்நிலையில் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மேம்படுவதை ஜீரணிக்க முடியாத சிலரிடமிருந்தும் இவ்வாறான கருத்துக்கள் வருகின்றன. அண்மையில் ஒரு நண்பர் சொன்னார் ஊரில மாடு மேய்த்தவை எல்லாம் கனடாவில போய் கலர்ஸ் காட்டுகினம் என்று.. அவரை நினைத்து சிரித்து கொண்டேன்..

6:03 AM  
Anonymous Anonymous said...

சயந்தன் நீங்கள் குறிப்பிட்டது போல அனைத்து நாடுகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டிய வண்ணமே உள்ளார்கள்.

இங்கும் கூட அண்மையில் உயர் பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞான போட்டியில் தமிழ் மாணவர் ஒருவர் கனடாவில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.... இது அண்மைய உதாரணம்.

//யுத்தத்திற்கு பிந்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, தனியே படித்தவர்கள் என்றில்லாத ஒரு சமூகத்தின் மொத்த இடம்பெயர்வினாலும், அறிந்தேயிருக்காத மொழி பேசும் நாடுகளில் தஞ்சமடைவதாலும், வாழ்வதற்கான உந்துதலில் கிடைத்ததை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் ஏற்படக் கூடிய இந்த நிலை, சிந்திக்கும் அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளக் கூடியது.//


ஆம் இந்த சூழல் சில சந்தர்பங்களில் பெற்றோரது அந்த நாடுகளின் போட்டுமான மொழி புரிதலின்மை, அவர்களது பிள்ளைகளின் கல்வி சார் நடவடிக்கைகளில் ஊக்குவிக்க முடியாமல் போகும் சந்தர்பங்களையும் ஏற்பபடுத்தியிருக்கிறது. இருந்தும் தமக்கு கிடைக்காத வாய்ப்பை தமது பிள்ளைகள் தவறவிட்டுவிடக்கூடாதென்பதில் பல பெற்றோர் மிக காரிசனையாய் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் விசயம்.

7:56 AM  
Blogger பகீ said...

////அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?
--அது சும்மா ஒரு எதுகை மோனைக்கு வைத்தது../////

ஒமோம் எதுகை மோனைதான்.

10:15 AM  
Blogger சின்னக்குட்டி said...

பொண்டி பொண்டி வாழ்ந்து ஒருசம் ஒருசம் பார்த்து வாழ்ந்து விருந்தோம்பலே தெரியாத விரும்பாத வைற் கொலர் தமிழர்களுக்கு வாழ கற்றுக்கொடுத்தவர்களே 83 பின் வந்த அகதித் தமிழன் தான்.

10:19 AM  
Blogger சினேகிதி said...

பொண்டி பொண்டி என்டாலென்ன?

9:06 PM  
Blogger லக்கிலுக் said...

//எங்கப்பன் குதிருக்குள்ல இல்ல என்று உதத்தான் சொல்லுறதோ?:-)//

நிறைய மர்மங்கள் வெளிவரும் போலிருக்கே? :-)

10:17 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home