23.2.06

சுஜித்-ஜீயின் வானொலிச் செவ்வி

பெரியண்ணன் டிசே தனது பதிவொன்றில் சுஜித்-ஜீ பற்றி எழுதியிருந்தார். சுஜித்-ஜீ யாரென கேட்பவர்களுக்காக டிசேயின் வார்த்தைகளை இங்கே கடன்பெற்றுத் தருகிறேன்.

இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem's lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. 'அன்புக் காதலி'யும், 'பயணமும்' மிகவும் பிடித்த பாடல்கள். 'ஒரு சில பெண்களின்...' பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.

சுஜித்-ஜியை கடந்த வாரம் ஒஸ்ரேலிய இன்பத்தமிழ் ஒலி வானொலியின் சிறகுகள் நிகழ்ச்சிக்காக செவ்வி கண்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவினை இந்த வேளையில் வெளியிடுவது பொருத்தமாயிருக்கும்.

செவ்வியென்றால் பெரிதாக நற்சிந்தனைகள், அறிக்கைகள் எதுவும் இருக்காது. அதிலும் குறிப்பாக இயல்பில் பேசுவது போலவே இருக்க வேண்டும் எனவும் கவனமெடுத்துக்கொண்டேன். பேட்டியின் இடையிடையே சுஜித்-ஜியின் பாடல்களும் இடம் பெறுகின்றன. கேட்டுப்பாருங்கள்


14.2.06

ஜோதிடசிகாமணி ஜோதிகா சாமி

நீங்கள் திரிஷா ஜாதகக் காரரா..? அல்லது நயன்தரா ஜாதக காரரா..? உங்களுக்குரிய இந்த அண்டிற்கான பலாபலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..? சரி.. கீழே வீடியோவில் ஜோதிட சிகாமணி ஜோதிகா சாமி காத்திருக்கிறார். கெட்டு தெரிந்து கொள்ளுங்கோ..

இதுவும் கனடாவில் ஒளிபரப்பானதென்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இதுவும் டிசேக்காகத் தான்! டிசே.. நீங்கள் என்ன ராசி?




12.2.06

டிசே யிற்கான படம்!

இதுக்கு முதலில ஒரு குறும் படம் ஏற்றியிருந்தனான். ஆனால் அதுக்கு பதில் எழுதின டி சே அதில ஒரு பொம்பிளைப் பிள்ளையளும் நடிக்க வில்லையாம். அதனாலை என்னை மண்டையில போடுற அளவுக்கு போயிட்டுது ஆள்.

அதனாலை பொம்பிளைப் பிள்ளயள் நடிச்ச இந்த படத்தை அவருக்கு போட்டுக் காட்டுறன்.. அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு.. ஒரு வேளை அவர் பார்த்திருக்கவும் கூடும்.. எண்டாலும் பாக்கட்டும்.. சரி மற்றாக்களும் பாருங்கோ..


11.2.06

என்ர குறும் படம்..??

இஞ்சை சிட்னியில அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில இடம் பெற்ற நடன நிகழ்ச்சிக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றினை நான் தயாரித்திருந்தன். இது அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பதாக பார்வையாளர்களுக்கு திரையில் காட்டப்பட்டு பின்னர் வீடியோவின் தொடர்ச்சியாக மேடையில் நடனம் ஆரம்பமானது..

இது ஒரு குட்டிப் படம் எண்டதால இதை குறும்படம் எண்டு சொல்லலாம் தானே.. இந்தக் குறும்படத்தின்ரை இயக்குனரும் படத்தொகுப்பும் நான் தான்.. இப்ப பதிவேற்றியிருக்கிற இந்த வீடியோ எந்த அளவிற்கு எல்லாருக்கும் தெரியும் எண்டு எனக்கு தெரியா.. எனக்கு தெரியுது.. இன்னும் சிலருக்கும் பாக்க கூடியதாக இருக்காம்.. பார்க்க முடிந்தவர்கள் ஒரு + வும்.. பாக்க முடியாத ஆக்கள் ஒரு - வும் குத்திட்டுப்போங்கோ... ஹிஹிஹி.. முடிஞ்சால் பின்னூட்டமும் .....


9.2.06

குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பது எப்படி

ஆட்லறி

நெடுந்தூர எறிகணை

குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த படியாக சனம் கிலியடைஞ்சு போயிருந்த உயிர் கொல்லும் ஆயுதம்.

விமானக் குண்டு வீச்சுக்களின் போது எங்கு வருகிறது? எங்கு வீசப் போகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது.

எறிகணை வீச்சுக்கள் எங்கு விழப் போகிறன என்பது எவருக்கும் தெரியாது. உண்மையில் அதனை எறிந்தவர்களுக்கு கூட அது தெரியாது. எறிகணைகள் விழுந்ததன் பின்பே இறந்தவர்கள் நீங்கலாக மற்றவர்களால் அது விழுந்த இடம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆட்லறிகள் எனக்கு நினைவு தெரிய முன்னமே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. ஓர் இரவு எங்கள் ஊரை நோக்கி 3 ஆட்லறிகள் ஏவப்பட்டனவாம். பாயில் படுத்திருந்த சிறு குழந்தையான என்னை அம்மா பாயுடன் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடினாவாம். அதன் பின்னரான காலங்களில் நிகழ்ந்த சில ஆட்லறி வீச்சுக்கள் எனக்கு லேசாக நினைவிருக்கிறது.

அப்புறம் இந்திய ராணுவ காலத்தில் இவை பயன் படுத்தப் பட வில்லை.

மக்களும் ஆட்லறியை மறந்து விட்டார்கள்.

மீண்டும் இலங்கை அரசுடன் யுத்தம் ஆரம்பிக்கிறது. ஆட்லறிகள் ஊர் புகத் தொடங்குகின்றன.

வடபகுதியில் பலாலி என்னும் இடத்திலிருந்த இராணுவ தளம் ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்தின் எந்த பகுதிக்கும் சென்று வெடிக்கக் கூடிய தகுதி?? ஆட்லறிக்கு இருந்தது.

ஆரம்பத்தில் சிறிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்கும். அது ஆட்லறி புறப்பட்டு விட்டது என்பதற்கான அறிகுறி. குத்திட்டானடா என்று கத்திக்கொண்டு உடனே எல்லோரும் குப்பிற விழுந்து படுத்து விட வேண்டும். விரும்பியவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளலாம். முடிந்தால் கந்த சஷ்டி கவசமும் செபமும் படிக்கலாம். வயது போன பழசுகள் கடவுளே எங்களை சாகடிச்சுப்போட்டு வாழ வேண்டிய வயசுள்ள இளசுகளை விட்டு விடப்பா என்று பெருங்குரலில் கத்தலாம்.

ஏதுமறியா குழந்தைகள் சத்தம் தாங்க முடியாமல் வீல் என்று கத்தக்கூடும் என்பதனால் தாய்மார்கள் குழந்தைகளின் காதுகளில் பஞ்சு அடைந்து விடுவது முக்கியம்.

பலத்த இரச்சலில் கூவுகின்ற சத்தமும் தொடர்ந்து வானத்தில் மீண்டும் ஒரு வெடிப்புச் சத்தமும் கேட்கும். இந்தச் சத்தம் உங்கள் தலைக்கு நேர் மேலே கேட்டால் நீங்கள் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். ஆட்லறி உங்களை தாண்டிச் சென்று வெடிக்கப்போகிறது. ஆகவே நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு அடுத்த ஆட்லறிக்காக காத்திருக்க வேண்டும்.

வானத்தில் கேட்கின்ற இரண்டாவது வெடிப்புச் சத்தம் தொலைவினில் கேட்டால் மன்னிக்கவும் ஆட்லறி உங்கள் தலையிலும் வந்து விழலாம் என்பதனால் தொடந்தும் நீங்கள் படுத்தே இருக்க வேண்டும் அது தரையில் விழுந்து வெடிக்கும் வரை.

சிறு காயமடைகின்ற பலருக்கு உடனடியாக வலி தெரிவதில்லை. இரத்த ஓட்டத்தை கண்ணுற்ற பின்னரே தாம் காயமடைந்திருக்கிறோம் என அவர்கள் பெரும்பாலும் அறிந்து கொள்கிறார்கள். ஆகவே உங்கள் உடம்பில் எங்காவது இரத்த ஓட்டம் இருக்கிறதா என்பதனையும் பரிசோதிக்க வேண்டும்.

எல்லாம் முடிந்து உங்களுக்கு எதுவும் ஆக வில்லை என்றால் உங்களுக்கான சாவுத் திகதி இன்றில்லை என்றறிந்து கொண்டு (ஒரு வேளை அது நாளையாயிருக்கலாம்) வழமையான காரியங்களில் இறங்கலாம்.

அடடா நல்ல வேளை மணிமேகலைப் பிரசுரம் ஈழத்தில் இருந்திருந்தால் ஆட்லறியில் இருந்து தப்புவது எப்படி என்று புத்தகமே அடித்திருக்கும்..?

1995 இல் புலிகள் மண்டைதீவு என்னும் இராணுவமுகாம் ஒன்றை தாக்கினார்கள். அங்குள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக பலாலியில் இருந்து படையினர் ஆட்லறிகளை ஏவினார்கள். இரவு 1 மணி முதல் 250 க்கும் மேற்பட்ட ஆட்லறிகள் நகரப்பகுதியில் இருந்த எங்கள் வாழிடங்களுக்கு மேலால் சென்று வெடித்தன. இப்படியான ஷெல் வீச்சுக்களின் போது கொங்கிறீட் கட்டடங்களுக்குள் இருப்பதென்பது உயிருக்கே உலை வைக்கும் என்பதனால் நாம் மாட்டுக் கொட்டகைக்குள் விடியும் வரை தஞ்சமடைந்திருந்தோம்.

ஆக இப்படியான ஒரு ஆயுதம் புலிகளிடம் ஏன் இல்லை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. இன்னும் சிலர் சற்றே மிகைப்படுத்தி ஆட்லறி ஒன்று புலிகளிடம் இருந்தால் தமிழீழம் கிடைத்தது போலத்தான் என்றும் சொன்னார்கள்.
புலிகளின் ஆயுதக்கப்பல் வந்ததாம் என்று செய்திகள் கசிந்தால் கூடவே இந்த கேள்வியும் எழும். அப்ப ஆட்லறியும் கொண்டந்திருப்பாங்களோ?

வெளிநாட்டு ஆயுதச் சந்தைகளில் வாங்கி ஆயுதக் கப்பல்களில் ஏற்றி கடற்பகுதியினூடாக கொண்டு வந்து சேர்த்த ஆயுதங்களில் கடைசி வரை ஆட்லறி வரவே இல்லை.

இறுதியில் யாழ்ப்பாணத்தையும் இழந்தாயிற்று. பின்னர் மொத்த யாழ் குடா நாட்டையே இழந்தாயிற்று. ஆக ஆட்லறிக் கனவு அவ்வளவும் தானா..?

மீண்டும் முல்லைத்தீவில் வாழ்வு துளிர்க்கிறது.

ஒரு காலை விடியலே குண்டுச் சத்தங்களுடன் விடிகிறது. மீண்டும் இராணுவம் முன்னேறுகிறதா? இந்த மண்ணையும் இழக்கப் போகிறோமா? அரசு சொன்னது போல உண்மையிலேயே புலிகளை முற்றாக தோற்கடிக்கப் போகிறதா?

காலை புலிகளின் வானொலி செய்தி கேட்கின்றோம். எதுவும் சொல்ல வில்லை. அந்த நேரம் புலிகள் மீது ஒரு கடுப்பு வரும் பாருங்கள். கண்டறியாத றேடியோ நடத்திறாங்கள்.

நேரம் ஆக ஆக செய்திகள் வரத் தொடங்குகின்றன. முல்லைத் தீவில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வந்த புலிகள் நீண்ட கால இடைவெளியின் பின்னர் நடாத்திய இத் தாக்குதலுக்கு புலிகளின் தலைவர் ஓயாத அலைகள் 1 என்று பெயர் சூட்டுகின்றார்.

அடுத்த நாள் மாலைதான் அந்த செய்தி வருகிறது. சனத்தை எல்லாம் சந்தோசப் பட வைத்தது. அது தாங்க!

ஆட்லறி ரண்டு நம்ம வசமாச்சு.

என்னை ஆயுத வெறியன் என்று சொன்னாலும் பரவாயில்லை.(பாரதியாரே ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியிருக்கிறார் தானே?) எங்கள் உச்சி குளிர்ந்து போனது உண்மை தான்.

ஒரு வாரமாக தொடர்ந்த சண்டையில் 1500 படையிரைக் கொண்டிருந்த அம்முகாமினை புலிகள் கைப்பற்றிய கையோடு சண்டை முடிவுக்கு வந்தது.

சில நாட்களின் பின்னர் ஒரு நாள் பாடசாலை முடிந்து சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு ட்ராக்டர் பச்சை இலைகளால் உரு மறைப்புச் செய்யப்பட்ட ஒரு பெரிய உருப்படியை கட்டி இழுத்துக் கொண்டு வருகிறது. நீண்டிருந்த குழல் பெரிய சில்லு

வீதியெல்லாம் ஒரே ஆரவாரம்...

அந்த உருப்படி தான் ஆட்லறி.

Image hosting by Photobucket

அந்தக் காலங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்திருந்த பாடல் இது தான்

நந்திக் கடலோரம் முந்தை தமிழ் வீரம்
வந்து நின்று ஆடியது நேற்று - இன்று
தந்தனத்தொம் பாடி பொங்கி நடமாடி
இங்கு வந்து வீசியதே காற்று

கையில் வந்து சேர்ந்தது ஆட்லறி - அதை
கொண்டு வந்த வேங்கையை போற்றடி

(2000 களில் அரசும் புலிகளும் பல்குழல் பீரங்கி என்னும் ஒரு வகை ஆயுதத்தை பயன்படுத்தினார்கள். இது பற்றி எனக்கு நேரடி அனுபவம் எதுவும் இல்லை. ஆயினும் செக்கனுக்கு 10 க்கு மேற்பட்ட குண்டுகளை ஓரேயடியாக ஒரே இடத்திற்கு வீசும் இந்த வகை ஆயுதமே வடபகுதியின் சாவகச்சேரி என்னும் நகரினை இன்னுமொரு ஹிரோசிமா ஆக்கியது.

7.2.06

பதுங்கு குழியும் நானும்

யுத்த காலத்தில் நடந்தவையாயினும் சில சம்பவங்கள் சுவாரசியமாயும் நகைச்சுவையாயும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான நான் அனுபவித்த அல்லது கேட்ட சில சம்பவங்களை அடுத்தடுத்து தரமுடியும் என்று நம்புகின்றேன்

இலங்கை அரசு தன்னுடைய ஆயுத வளத்தை காலத்திற்கு காலம் நவீனப்படுத்த அப்பாவிகளாகிய பொது மக்களும் தங்களுடைய காப்புக்களை நவீனப்படுத்தி கொண்டு வந்தார்கள்.

ஆரம்பத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் சாதாரண குண்டு வீச்சுக்களின் போது வீடுகளின் சீமெந்து சுவர்களே போதுமாயிருந்ததாம். எங்கள் வீட்டு சமையறை கட்டப்பட்ட போது பாதுகாப்பினை மனதில் வைத்தே மிகத் தடிப்பிலான சீமெந்து தட்டுக்கள் கட்டப்பட்டனவாம்.

காலம் கடந்தது. சாதாரண துப்பாக்கி சன்னமே சீமெந்து சுவரை சின்னாபின்னப்படுத்தும் அளவுக்கு அரசு நவீனமடைந்தது. இனி சுவரை நம்ப முடியாது. வீட்டுக்கொரு பதுங்கு குழி அமைக்க வேண்டும்.

வீட்டு வளவில் நின்ற இரண்டு பனை மரங்களும் தறிக்கப் பட்டன. நிலத்தை நீள் சதுர வடிவில் கிடங்காக்கி அதன் மேலே சிறு சிறு துண்டுகளாக்கப் பட்ட பனையை அடுக்கி அதன் மேல் மணல் மூடைகளை போட்டு மணல் பரவி பதுங்கு குழி தயார். தூர நின்று பார்த்தால் அண்மையில் புதைத்த சடலத்தின் சமாதி போல இருக்கும். (வேறு உதாரணமே இல்லையா)

விமானச் சத்தம் கேட்டாலோ ஷெல்லடியில் முதலாவது சத்தம் கேட்டலோ உடன் ஓடிப்போய் சிறிய வாசல் வழியாக அந்த இருட்டுக் குகைக்குள் புகுந்து விட வேண்டும். உள்ளை பாம்பு நிக்குமோ வேறேதாவது நிக்குமோ என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

ஒரு வழியாக எங்கள் வீட்டு பதுங்கு குழியும் கட்டிமுடிக்கப்பட்டாலும் இன்னும் குடிபூரல் நடத்துவதற்கான நாள் கிட்ட வில்லை. அட ஒருத்தரும் வந்து குண்டு போடவில்லை. ம்.... (ஆசையாசையாய் பார்த்திருந்த) அந்த நாளும் வந்தது. அது வரையும் கேட்டிராத விமானச் சத்தங்களோடு வனைக் கிழித்து வந்தன விமானங்கள்.

(விமானச் சத்தங்கள், துப்பாக்கிச் சத்தங்கள் இவற்றை கேட்டே அவை எந்த விதமான விமானங்கள் என்ன வகைத் துப்பாக்கிகள் என்றெல்லாம் சொல்லும் அசாத்திய திறமை எங்கடை குஞ்சு குருமன் எல்லாத்துக்கும் இருந்தது.)

இரைச்சல் காதைக் கிழிக்குது. ஒண்டில்லை. ரண்டு மூண்டு பிளேன். இண்டைக்கு எல்லாரும் சமாதி தான்

என்ரை கையை பிடிச்சுக் கொண்டு அம்மா பதுங்கு குழிப் பக்கம் ஓடுறா.. ஹே...ஹ... இண்டைக்கு எங்கடை பங்கருக்கு குடிபூரல். அதுக்கு முன்னரும் கள்ளன் பொலிஸ் விளையாடேக்கை நான் பங்கருக்குள்ளை ஒளிஞ்சிருக்கிறன் எண்டாலும் இண்டைக்குத்தான் அதிகாரபூர்வ விஜயம் எண்டு சொல்லலாமோ?

நான் அம்மா அம்மம்மா எல்லாரும் மெழுகுவர்த்தியை கொழுத்திப் போட்டு உள்ளை இருக்கிறம். சத்தம் விடேல்லை. என்ன நடக்குதே எண்டு தெரியேல்லை. ஆனால் ஒரு அதிசயம் குண்டு சத்தம் ஒண்டும் கேட்கேல்லை. ஏன் இன்னும் குண்டு போடேல்லை.

வந்தமா குண்டைப் போட்டமா என்றுவிட்டு போக வேண்டியது தானே. புலிக்கு மட்டும் தான் குண்டு போடவேணும் எண்டு அரசு ஒருக்காவும் யோசித்ததில்லையே. அது ஆடோ மாடோ சுப்பனோ சுப்பியோ ஆரிடையாவது தலையிலை தள்ளிப்போட்டு செய்தியிலை மட்டும் புலியை போட்டுத் தள்ளினன் எண்டு போடும்.

அப்ப இன்னும் ஏன் குண்டு போடவில்லை. எனக்கெண்டால் வெறுத்துப் போச்சு. மெதுவா அம்மா வெளியிலை வந்து பார்த்தா. அட மேலை பிளேன் அறம்புறமாச் சுத்துது எண்ட எந்த சிந்தனையும் இல்லாமல் சனம் றோட்டுகளிலை கூலாக ஓடித்திரியுது. இதென்ன அதிசயம். சாகத்துணிதல் எண்டிறது இதைத்தானோ

அப்ப தான் ஒரு அன்ரி வந்தா- உங்களுக்கு விசயம் தெரியுமே.. நான் றேடியோவிலை இப்ப தான் கேட்டன். இந்தியா பிளேனிலை வந்து சாப்பாடு போடுதாம். சனத்தை பயப்பிட வேண்டாமாம். எண்டு அவ சொன்னா

நான் வானத்தை ஆ வெண்டு பாத்தன். அப்ப இனி ஒவ்வொரு நாளும் சாப்பாடு போடுமோ பள்ளிக்குடத்திலை போடுறது மாதிரி

அதுக்கு பிறகு அந்த பதுங்கு குழிக்குள் நான் குண்டு வீச்சுக்காக போனதில்லை. கொஞ்ச நான் கவனிப்பாரற்று அது கிடந்தது. பிறகு அதை மூடி விட்டம். உண்மையில் அதற்கான தேவையும் இருக்க வில்லை. பதுங்கு குழி என்பது எங்கிருந்தோ வீசும் ஷெல்களிலிருந்தும் எட்ட நின்று பொழியும் குண்டுகளிலிருந்தும் மட்டும் காப்பாற்றவே.