28.12.05

வந்தேன் வருவேன்

எழுதாமல் விட்டு மூண்டுமாசம் ஆகவில்லைத்தான் எண்டாலும், மெல்பேணில இருந்து வசந்தன் 'எழுதும், எழுதும் இல்லாட்டி தூக்கிப் போடுவாங்கள்' எண்டு பயப்பிடுத்திக் கொண்டிருந்தார். சரி.. நானும் தான் எழுதி நாளாச்சு எண்டதாலை இந்தப் பதிவு! எழுதிக் கொண்டு போகேக்கையே விளங்கிட்டுது. உது பெரிசா நீளும் எண்டு. அதுதான் தொடராக்கிப் போட்டன். ஏற்கனவே பல தொடர்கள் தொடங்கி இடையில நிப்பாட்டியிருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி திரும்பவும் தொடங்கியிருக்கிறன். பாப்பம் எதுவரைக்கும் போகுது எண்டு!

முக்கிய குறிப்பு:- இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் எல்லாம் கற்பனையே!!! ஹி ஹி ஹி

'வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்' எண்டதை கொஞ்சம் வளைச்சு எழுத நல்ல வடிவா இருந்தது. 'சுப்பர் மச்சான் அந்த மாதிரி இருக்குது' எண்டான் வசந்தன். வாயில அவனுக்கு இங்கிலிஷ்தான் ஈஸியா வருமெண்டாலும் சங்கம் தமிழ்ச்சங்கமாம், ஆனாத் தலைவர் கதைக்கிறது இங்கிலிஷாம் எண்டு ஆரும் சொல்லுவினம் எண்டதுக்காக கஸ்ரப்பட்டு தமிழில கதைச்சுக் கொண்டிருந்தான் அவன்.

'டேய்.. உந்த எழுத்துக்களுக்குப் பின்னாலை ஏதாவது வாள், கேடயம் எண்டு ஏதாவதைப் போட்டால் இன்னும் நல்லாயிருக்குமடா..' எண்டு பக்கத்தில இருந்த மதன் சொன்னான். நாளைக்கே அந்த டிசைனை ஆரும் நல்லாயிருக்கு எண்டு சொல்லேக்கை தன்ரை பேரும் அதில இருக்க வேணும் எண்ட விருப்பம் அவனுக்கு.

'ச்சீ.. வாளை விட துவக்குப் படம் போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்' எண்டவன்ரை பேர் சரியாத் தெரியேல்லை. ஆனா அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கெடுக்காததை வைச்சுப்பாத்தால் ஒருத்தருக்கும் பிரச்சனைக்குள்ளை மாட்டுப்பட விருப்பம் இல்லையெண்டு விளங்கிச்சுது.
* * *
'டேய், ரிக்கெற் விக்கிறதுக்கு பெட்டையளையும் கூட்டிக்கொண்டு போ.. அப்பத்தான் சனம் வாங்கும் எண்டு சொன்னதை நினைக்க வசந்தனுக்கு வெக்கமாயிருந்தது. 'இதென்ன ரண்டு பேரும் சங்கத்தில இருக்கினம். பெடியனும் போகத்தான் வேணும். பெட்டையளும் போகத்தான் வேணும் எண்டு அவனாலை தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ள முடியேல்லை. போன கிழமை முழுக்க பெடியள் தான் ரிக்கெற் வித்தவங்கள். ஆனா ஒரு சனமும் ரிக்கெற் வாங்கிற மாதிரி தெரியேல்லை. அதுக்குப் பிறகு தான் வசந்தன் பெட்டையளையும் ரிக்கெற் விக்க போகச் சொன்னவன். ஆனா அவனோடை கதைச்ச அவன்ரை நண்பன் உதெல்லாம் உலகமயமாக்கலில சாதாரணம் எண்டு ஈஸியாச் சொல்லிப் போட்டான். எண்டாலும் பெட்டையள் ரிக்கெற் விக்கப் போன பிறகு சனமும் வாங்கத் தொடங்கிட்டுது எண்டதை இந்த ஒரு கிழமையில அவன் விளங்கிக் கொண்டான்.
* * *

'ஓய், நாடகம் போடாமல் ஒரு புரோக்கிராம் எப்பிடிச் செய்யிறது' மாலதி எப்பவுமே காட்டுக் கத்தல் தான் கத்துவாள். விசரன், கழுதை, எருமைமாடு எண்டதுகளோடை அரைகுறையில முடியிற சில இங்கிலிஷ் சொல்லுகளும் அவளின்ரை வாயில வரும். அநியாயத்துக்கு நாணிக் கோணி பெடியங்களோடை கதைக்க வெக்கப்படுற விசயமெல்லாம் அவளுக்கு தெரியாது. 'போங்கோடா லூசுப்பெடியன்களா, நீங்கள் என்னை மாதிரி ஆக்களோடை சிற்றி சுத்த மட்டும் தான் விரும்புவியள். கலியாணம் எண்டால் ஓடிப் போய் ஊரில தான் பொம்பிளை எடுப்பியள். உங்களை மாதிரி நாங்களும் ஜில்மால் வேலையள் செய்திருப்பம் எண்டு பயம் உங்களுக்கு! பாவம் ஊரில இருக்கிற பெட்டையள்' எண்டு கத்திக்கொண்டிருந்த மாலதியை 'எடியே.. அண்டைக்கு நீ சாறி கட்டிக்கொண்டு க்ளப்புக்கு போக உன்னை உள்ளை விடேல்லையாம். பவுண்சர் தூக்கிக்கொண்டு வந்து வெளியில போட்டு விட்டானாம் ..உண்மையே' எண்டு சீண்டினான் ஒருவன்.

'உஷ்.. பிள்ளையள்.. இப்ப ட்ராமா பற்றிக் கதைப்பம்' எண்டு வாணி இடையில புகுந்தாள்.

தொடரும்!